சப்தமும் நிசப்தமும்!-கவிதை-பா.சிவகுமார்

சப்தமும் நிசப்தமும்!

பா.சிவகுமார்
ஓவியம் : டீன் கபூர்

இறைந்துக் கிடக்கும்
பொருட்கள்!
கலைந்து கிடக்கும்
துணிமணிகள்!
வீட்டின் சுவரெங்கும்
ஓவியத் தீற்றல்கள்!
நிற்காமல் சத்தமாக
ஓடிக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சி!
மகள் மகன்
சண்டைக் காட்சிகள்
டாம் & ஜெர்ரி சண்டையாக
நேரலையில்
குற்றச்சாட்டுகள்
எப்பொழுதும்
பஞ்சாயத்துகள்
ஏற்றுக் கொள்ளப்படாத தீர்ப்புகள்
வெளிநடப்புகள்
சமாதானங்கள்
என்றிருந்த வீடு…….
பேரமைதியாக
காட்சியளிக்கிறது
குழந்தைகள்
இல்லா தருணத்தில்
பேரமைதி
பயமுறுத்துகிறது
வெறுமையாக..

00000000000000000000000000000

வண்ணத்துப்பூச்சியின் இசை!

இறைவன் படைப்பில்
அற்புத ஓவியங்கள்!
வாழ்வை இரசனையாக்கும்
புதிர் காவியங்கள்!
சிறகில்லா தேவதைகள்!
சிறப்பான கவிதைகள்!

சிறகடித்துப் பறந்தாலும்
நேரத்தே கூடடையும்
கூட்டுப் புழுக்கள்!
திரும்பாமலே ஆடைகளைத்
திருத்தும்
தருணங்களில்
காணக் கிடைக்கும்
முதுகில் கூட
உணர்நீட்சிகளை சுமக்கும்
வண்ணத்துப்பூச்சிகளை!

காகிதப் பூக்களே
பரிசாகக் கிடைக்கிறது
வண்ணப் பூக்களை தேடியலையும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
சோலைகளில் கானமிசைக்கவரும்
வண்ணத்துப்பூச்சிகள்
திட்டமிட்டு
விரட்டியடிக்கப்படுகின்றன
சமையலறைக்கு

அழகான
வண்ணங்களின் மேல்
அடுக்கடுக்காக படிந்துள்ளது
அடுப்புக்கரி!
பல வண்ணத்துப் பூச்சிகளின் இசை
குக்கர் விசில் சத்தத்தில்
எவருக்கும் கேட்பதேயில்லை!

பா.சிவகுமார்-இந்தியா

பா.சிவகுமார்

(Visited 86 times, 1 visits today)
 
பா.சிவகுமார்

எறும்பும் ஒழுங்கும்!-கவிதை-பா.சிவகுமார் (அறிமுகம்)

எறும்பும் ஒழுங்கும்! காலையும் மாலையும் எறும்பு புற்றிலிருந்து கிளம்பும் செவ்வெறும்புகளாய் நகரமெங்கும் விரையும் மாநகரப் பேருந்துகள்! எறும்புப்புற்றில் வெந்நீர் ஊற்றியது போல பதறி சிதறி இருசக்கர வாகனங்களில் கிளம்பும் அலுவலக […]