எறும்பும் ஒழுங்கும்!-கவிதை-பா.சிவகுமார் (அறிமுகம்)

எறும்பும் ஒழுங்கும்!

பா.சிவகுமார்

காலையும் மாலையும்
எறும்பு புற்றிலிருந்து கிளம்பும் செவ்வெறும்புகளாய்
நகரமெங்கும் விரையும்
மாநகரப் பேருந்துகள்!
எறும்புப்புற்றில்
வெந்நீர் ஊற்றியது போல
பதறி சிதறி இருசக்கர வாகனங்களில் கிளம்பும்
அலுவலக சிற்றெரும்புகள்!
ஒலியெழுப்பியபடி அவசரமாக விரையும்
சாமியெரும்பு
அவசர ஊர்திகள்!
தாய்விலங்கின் பின்னே செல்லும் குட்டிகளைப் போல
அவசர ஊர்தியின் பின்னே
வால்பிடித்து விரையும்
அவசரத்தில் பிறந்த
அவலட்சண எறும்புகள்!
சுற்றியிருப்போரை கொடுக்கால் கொட்டியபடி
கிடைக்கும் இடைவெளிகளில் முன்னேறிச் செல்லும்
மஞ்சள் ஆட்டோ நச்செறும்புகள்!

எறும்புகள் போல்
சுறுசுறுப்பாய் நடித்தாலும்
போக்குவரத்தில்
எறும்புகளின் ஒழுங்கை
கடைப்பிடிக்காமல்
எறும்புகளை விட
சிறுத்துப் போகிறார்கள்
அவசரயுக மனிதர்கள்!
ஒழுங்கை கடைபிடிப்பதில்
வாமனனாய் உயர்ந்து நிற்கின்றன சிற்றெறும்புகள்!

000000000000000000000000000

கேட்பாரற்றக் கடவுள்!

சுருக்கத்தோல்களைக் கண்டதும் சுருங்கிக் கொள்கிறது மனம்!
தலையணை மந்திரம் ஓதப்பட்டவுடன்
கடவுள்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்!
இளகிய மனம் கொண்டவர்கள் ஒப்பந்தம் இயற்றுகிறார்கள்
மூன்று மாதங்கள் அங்கும்
மூன்று மாதங்கள் இங்கும் சஞ்சாரிக்கலாமென.
இறுகிய மனம் படைத்தவர்களால்
வசதியான கடவுள்கள்
முதியோர் இல்லங்களுக்கும்;
வசதியற்ற கடவுள்கள்
தெருவோரங்களுக்கும்
இடம் பெயர்கின்றனர்

ஐம்புலன்களை மூடிக்கொண்டு
சங்கீதம் இரசிப்பவர்களுக்கு
நிகழ்கால கடவுளின் குரல்
என்றுமே கேட்பதில்லை.
கேட்பாரற்றக் கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் தேசமெங்கும்
அமாவாசை பண்டிகையை கண்ணுற்றவாறே…..

பா.சிவகுமார்-இந்தியா

பா.சிவகுமார்

(Visited 51 times, 1 visits today)
 
பா.சிவகுமார்

சப்தமும் நிசப்தமும்!-கவிதை-பா.சிவகுமார்

சப்தமும் நிசப்தமும்! இறைந்துக் கிடக்கும் பொருட்கள்! கலைந்து கிடக்கும் துணிமணிகள்! வீட்டின் சுவரெங்கும் ஓவியத் தீற்றல்கள்! நிற்காமல் சத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி! மகள் மகன் சண்டைக் காட்சிகள் டாம் & […]