நூல்விமர்சனம்-கோமகனின்’தனிக்கதை’- ஆலா

ஆலா பாரிஸில் வசிப்பிடமாக கொண்ட கோப்பாயை சேர்ந்த  தியாகராஜ ராஜன்  எழுதிய சிறுகதை தொகுப்பாகும் ‘கோமகனின் தனிக்கதை’. இரண்டாவது பதிப்பும் வெளிவந்துள்ளது. தனது புத்தகத்தைத், தன் சொந்த தேசம் ஈழத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் களப்பலியான எல்லா இயக்க போராளிகளுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

விநாசித்தம்பியார் என்ற தமிழனின் வன்மத்தால், குமணனின் தலைமையில் வந்த போராட்டக்குழுவிற்கு ஒரு நேரத்தைய உணவு கொடுத்தார் என்ற காரணத்தால் இந்திய ராணுவத்தால் அநியாயமாக கொல்லப்பட்ட  ராமசாமி குருக்களில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

சின்னராசா என்ற முதியவர்,  ஈழத் போரில் மாண்ட தன் மகள் வழிப் பேரனை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியில் தனது நிலைத்தை விற்று அந்த தொகையில் கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்து  ஈழத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பும் விறுவிறுப்பான நிகழ்வுகளும் பேரனினின் திகில் மிகு பயணத்தையும் சுவாரசியமாக விவரித்துள்ளார் கதையாசிரியர்.

தனது  தகாத உறவில் பிறந்த மகன் இளம்பிறையனின் கையால் கொல்லப்படும் அட்வகேட் பேரம்பலம் அவலம். இந்த கதையூடாக போராளிகள் மக்களுக்கு வழக்கிய தண்டனைகளையும் அறிந்து கொள்கிறோம்.

வயதாகியும் திருமணம் நடவாது இருந்த இனிமையான, பாசமான சந்திராவதனா அக்கா, பிற்பாடு கல்யாணம் ஆகிய அடுத்த நாளே கணவனால் கைவிடப்பட்டு வாழ்ந்த நிலையில் நகைக்காக கொல்லப்பட்ட  துயர்மிகு நிகழ்வையும்  கனத்த இதயத்துடனே வாசிக்க இயலும்.

மிகவும் பண்பாளரான, இயக்கத்தில் உயர்பதவியிலிருந்த உண்மையான போராளி ‘கிளி அம்மான்’ மனப்பிறள்வால் தெருவுகளில் வாழ்ந்து, யாரும் அற்ற நிலையில் இறந்த போராளியை கையொழிந்த இயக்கத்தையும் நேர்மையான  மனிதர்களின் அவல நிலையையும் நெகழ்ச்சியான கதையாக வாசகர்களுக்கு கொடுத்துள்ளார்.

பாண் தொழில் செய்து வந்த நரேன் வாழ்க்கை முழுதும் எதிர்கொண்டு வரும் மன உளச்சல், பண்ணையாரால் அவமதிப்பிற்கு உள்ளான பறையடிக்கும் சின்னாட்டி,பண்ணையாரின் மரனத்திற்கு பறை இசைக்க  சின்னாட்டியின் எதிர்பாரா மரணம் , தனது மனைவி   மனோரஞ்சிதம் மரணத்தில் மகன்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த ஆறுமுக வாத்தியார்,  வர இயலாத சூழலில் குட்டியும்,  வர விருப்பாத மனநிலையில்  ரமணன் என்ற மகனும் இருக்க , கனத்த மனதுடன் பெண் பிள்ளை சுகுணா மனைவி சிதைக்கு கொள்ளிவைப்பதுடன் கதை முடிகிறது.

புரோக்கர் சவரி முத்து வழியாக  தம்பையா மகள் செவ்வந்திக்கு வந்த வெளிநாட்டு வரனை , தம்பையாவின் சொந்த சகோதரரான விநாசித்தம்பியர் சூழ்ச்சியாக தன் மகள் வரனாக அமைப்பதும், மனிதம் செத்த சூழ்ச்சி பிடித்த மனிதர்களை காட்டிய கதையாசிரியர்; வெளிநாட்டில் இருந்து வந்த கண்ணன் தனது நண்பன் குமார் தங்கை பாமினியை சந்திப்பதும், அவர்கள் தங்கள் துயர்களை பகிர்வதும் கொஞ்சம் பணம் கொடுத்து பாமினியை  உதவ விரும்பும் கண்ணன், நண்பனான குமாருக்கு செய்யும் நட்பின் கடனாக மனிதத்தை வாழ வைக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து வந்த வர்ணன், சிறுவனாக இருந்த போது   தனக்கு முடி திருத்தம் செய்த வந்த  குட்டி பாபருக்குமான உணர்ச்சிபூர்வமான உறவும்,  நிகழ்வுகளும் அவரை சந்திக்க வருகையில்  பாபர் இறந்த செய்தியை கனத்த மனதுடன் கேட்டு திரும்பும் துயரான கதை.

குகனுக்கு குடியுரிமை சீட்டை நேர்மையாக பெற நினைத்ததால் தன் உயிர் நண்பனையே பிரியும் சூழல் ஏற்பட்டது. ஆனால்  மனைவி ரூபிணியோ கணவர் இருக்கையிலே விதவை என்ற பெயரில் குடியுரிமை பெற்றதும்,  மனைவி குழந்தைகளுடன் வாழும் போதும் தன் அடையாளம் மறைக்கப்பட்டு பொய்மையான பெயருடன்,  பொய்மையான வாழ்க்கையுடன் பொருந்தி  வாழ இயலாத  கதையுடன் அடுத்த கதைக்குள் அழைத்து செல்கிறார் கதையாசிரியர்.

தன் அம்மா வளர்த்த  றொனியன் என்ற நாயும், நாயின் பார்வை தன் அம்மாவை நினைவுப்படுத்துவதும் , தொண்டையில் கேன்சர் நோயால் அவதியுற்ற நாயை கருணைக்கொலை செய்ய வேண்டி வந்த அவலநிலையேயும்  அடுத்த  கதையில் சொல்கிறார்.

வேள்விக்கிடாயாக  அம்மாக்களால் மாற்றப்படும்  மகன்களின் கதை சொல்லவும் கதாசிரியர் தயங்கவில்லை.

நண்பன் ஆதியில் பரிந்துரையின் பெயரில், குடியுரிமை பெற மனைவி என்ற பொய் தகவலுக்காக  விலைக்கு எடுக்கப்பட்ட   நோர்மண்டியை சேர்ந்த சண்டிறினுடன் பேண வேண்டி வந்த உறவும் அதை  விசாகன் கடந்து சென்ற விதவும் சொல்லப்பட்டுள்ளது.  மனிதர்கள் சூழலுக்கு  எவ்வாறாக இரையாகின்றனர்.  நல்லவர் நேர்மையானவர்  கெட்டவர் என்பது எல்லாம் சூழலுக்கு தகுந்து மாறுவதும் அதில் மனிதர்கள்  உறவு சிக்கல்களை  உணர்வு தளத்திற்கு எடுத்து செல்லாது கடந்து செல்லும் நிலையேயும் சொல்லப்பட்டுள்ளது.

கடைசி கதையாக எல்லா வசதிகள் இருந்து ஒரு குழந்தைக்கு பெற்றோராக  இயலாத நிவேதிதா- நரேன் தம்பதிகளின் துயர்மிகு கதையுடன் முடிகிறது.

ஈழத்தின் கதை என்பது போரும் அரசியலும் மட்டுமல்ல. போரில் எதிர்கொண்ட வெற்றியும் தோல்வியும் மட்டுமல்ல.  சாதாரண மனிதர்களின் இயல்பாக வாழ வேண்டி, கிடைக்காது போன  சூழலையும் துயர்களையும் எடுத்து சொல்கிறார் கதையாசிரியர். உலகில் பல நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்து மக்களின் பகிட்டான வாழ்க்கையை மட்டுமே கண்டு வந்த சூழலில், அந்த வெளிநாட்டு பகிட்டு வாழ்க்கைக்கு பின் நிறைந்து நிற்கும் துயர்களும் மனிதர்களின் கண்ணீரும் மனபிறள்வுகளையும் சொல்லி சென்ற கதைகள் இவை.

பொதுவாக பிரதான தலைவர்கள், வீரர்கள், ஆண்வர்கள், ஆளுமைகள் பக்கம் நின்று கதை சொன்ன இடத்திற்கு பதிலாக சாதாரண மனிதனின் வாழ்க்கையை  நினைவுப்படுத்துகிறது ’கோமகனின் தனிக்கதை’. மகாபாரதப் போரில் கண்டது போல யார் போரில் வெற்றி பெற்றார்கள் என்பதையும் கடந்து மனதால் உடலால் உணர்வால் தோல்விகளை சந்தித்த மனிதர்களை பற்றி சொல்லிய கதை.  வரலாற்றை ஒரு சிலர் எழுதும் போது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் மறுக்கப்பட்ட மனிதர்களின் உரிமைகளையும் துயர்களையும் சொன்ன கதை இப்புத்தகம். காலத்தால் அழியாத நினைவுகளுடன் வாழ்ந்து வரும் நிகழ்கால  அதி சாதாரண ஈழத்து மனிதர்களின் வரலாற்று பெட்டகம் இது. மொத்ததில் மனிதத்தை பேசிய புத்தகம். கிடைக்கும் இடம் புலம் பதிப்பகம் சென்னை.

ஆலா-இந்தியா  

 

(Visited 119 times, 1 visits today)