மூக்கும் முழியுமாக இறுதி மூச்சுவரை வாழவே பிறந்த நாங்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? கட்டுரை-ஆலா

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. தற்கொலை என்பது ஒருவரின் தன்னுடைய வாழ்க்கையை தானேகவே  வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக வரையறுக்கப்படுகிறது. இந்த வார்த்தையின் பிறப்பிடம் லத்தீன் மொழி. இதன் பொருள் “தன்னைக் கொல்வது” என்பதாகும்.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும்  தற்கொலை குறித்து  வெவ்வேறு பொருளைக்கொண்டு இருப்பினும் பொதுவாக  பல நாடுகளில் தற்கொலை என்பது ஒரு கிரிமினல் குற்றமாகவே பார்க்கப்படுகின்றது. தற்கொலை செய்து  கொள்வதை பல நாடுகள் பெரும் குற்றமாகப் பாவச்செயலாகக் குறிப்பிடுகின்றன. சில விடுதலை இயக்கங்கள் தற்கொலை/தற்கொடைத் தாக்குதல் என்பதை வீரத்துடனுனும் நாட்டுப்பற்றுடனும் இணைத்து பார்க்கின்றனர். இன்னும் சில அமைப்புகள் மதநம்பிக்கையில் தற்கொலை செய்து கொள்வதை கடவுளிடம் போகும் பாதையாகவே கருதகின்றன.

ஆலாஒரு சிலரைப்பொறுத்தவரை தற்கொலை என்பது தன்  சொந்த மரணத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தும் வெற்றிகரமான செயல் ஆகும். மருத்துவத்துறையில் கூட ஒரு சர்ச்சைக்குரிய ’அசிஸ்டட் தற்கொலை’ என்பது ஒரு தனிநபருக்கு அந்த நபரின் நன்மையை கருதி தற்கொலை செய்து கொள்ள உதவது ஆகும். தற்கொலை இன்ன இன்ன நாட்டில் என்றில்லை; அதற்குக் காரணங்கள் வேறுபட்டிருக்கலாம் ஆனால்  உலகம் முழுக்க இந்த  சமூகம் எதிர் கொள்ளும் பாரிய சமூகவியல் பிரச்சினை எதுவென்றால் தற்கொலை மரணங்கள் தான்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆகையால் உடல் உபாதகைளுக்கு மருத்துவம் எடுப்பது போலவே மன நலனுக்கும் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும். தேவை எனில் மருத்துவர்களின் உளவள ஆலோசனை  உதவியையும்  நாடவும் பரிந்துரைக்கிறது உலக சுகாதார அமைப்பு.

இந்தியாவை பொறுத்தவரை தேசிய குற்ற பதிவு பணியகம் வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் தகவல்கள்களின்படி: தினசரி சராசரியாக 381 தற்கொலை இறப்புகள் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் 1,39,123 பேர் தற்கொலை செய்து மாய்ந்துள்ளனர், கடந்த 2018 ஆம் ஆண்டை  ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளதை காணலாம். தற்கொலை செய்து கொண்டவர்களில் 90,000-க்கும் மேற்பட்டவர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களில் கணிசமாக தற்கொலைக்கு காரணமாக மனநோய் என்கின்றனர்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பியின் புள்ளிவிவரங்களின்படி: கிராமங்களின்  தற்கொலை விகிதம்  10.4 சதவீதம் என்றால்  நகரங்களில் அதன் உயர்வு விகிதம் 13.9 சதவீதம் அதிகமாகவே இருக்கிறது.

தற்கொலை மரணங்களை  மேற்கொள்வோர் தமது உத்திகளாக: தூக்கில் தொங்குதல் ” (53.6 சதவீதம்), “விஷத்தை உட்கொள்வது” (25.8 சதவீதம்), ” நீரில் மூழ்குவது ” (5.2 சதவீதம்) மற்றும் ” தீயிட்டுக்கொள்வது ” (3.8 சதவீதம்) என பல வழிகளில் வரையறை செய்கின்றனர். பெரும்பாலான தற்கொலைகளுக்குக்  குடும்ப பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சினைகள் 55 சதவீதம் முழுமுதல் காரணமாக இருந்தன. தற்கொலையால் தங்கள் முடிவைத் தேடிக்கொள்ளுவோர் பெருவாரியானோர்  திருமணமானவர்கள். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் 62.5 சதவீதம் பெணகள் என்கிறது தரவு .

இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையிடத்திலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம், கர்நாடகா என்று முறையே வருகிறது. இந்த இடத்தில் இலங்கையின் நிலவரத்தை பற்றியும் கொஞ்சம் அவதானிப்போம். WHO கூற்றுப்படி  உலக நாடுகளில் இலங்கை, உலகில் 4 ஆவது மிக உயர்ந்த தற்கொலை விகிதத்தை அதாவது 100,000 க்கு 28.8  பேர் தற்கொலை செய்து வந்துள்ள நாடாக திகழ்கிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் தற்கொலை இறப்புகளில் ஒப்பீட்டளவில் குறைந்த சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது, இது நாட்டின் மொத்த தற்கொலைகளில் 3.9 சதவீதம் மட்டுமே.

குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழ்நாடு முதலிடத்திலும் தொடர்ந்து, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் , மற்றும் ராஜஸ்தான் வரிசையில் உள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை, தற்கொலை செய்தவர்களில் கல்வி கற்காதோர் 12.6 சதவீதம் மட்டுமே.  மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ வயதினர் தான் அதிக தற்கொலைகளில் ஈடுபடுகின்றனர். சமீபத்திய ஒரு தரவுப்படி 2019 ல் மட்டுமே 90,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று  என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட  1.39 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில்  67 சதவீதம் இளைஞர்கள் ஆவார்கள்.

ஊடகங்கள் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் போது அதன் காரணத்தை தேடி  முழு நாட்டையும் உலுக்கும் அக்கறை சாதாரண மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது இந்தியாவில் இருப்பது இல்லை. ஓரிரு நாட்கள் இதைப்பற்றி உரையாடிவிட்டு ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை சொல்லி விட்டு கடந்து போய் விடுவார்கள். ஒரு நபரை தற்கொலைக்குத் தூண்டும் காரணங்களாக  குடும்ப பிரச்சினைகள், காதல் விவகாரங்கள், போதைப்பொருள் பாவனை, மன நோய் போன்றவை முக்கிய காரணி யாக உள்ளது.

சில நாடுகளில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் போதுமான அளவு எச்சரிக்கையோ, விழிப்புணர்வோ இதுதொடர்பாக  இருந்தது இல்லை.

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என  WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். “இதில் பெரும் சோகம்  தற்கொலைகள் தடுக்கக்கூடியவை என்பதாகும். தற்கொலை தடுப்பு உத்திகளை தேசிய சுகாதார மற்றும் கல்வித் திட்டங்களில் சேர்ப்பது வழியாக வளரும் போதே மாணவர்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டியது மிகவும் அவசியமாகும்..

பொதுவாக தற்கொலையின் பிரதான காரணம் மனநிலையில் உள்ள குறைபாடாகும். இது பாரம்பரியமாகவோ சில ஹார்மோனுகளின் தாக்கத்தாலோ உருவாகக்கூடியது. இதை புரிந்து மருத்துவரை அணுகுவதையே மிகவும் அச்சத்துடன் வெட்கத்துடன் காணும் சமூகம் நம்முடையது. மனநோய் உள்ளோரை உறவினர்களே புரிந்து கொள்வது இல்லை. அதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கி வைக்கவே துணிவார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இதன் நிலைமை இன்னும் மோசமாகவே காணப்படுகின்றது. இதனால் கிடைக்கின்ற  தனிமையும் ஒரு நோயாளியை தற்கொலைக்குள் தள்ளி விடும்.

தற்கொலைகளுக்கு அடுத்த பெரும் காரணியாக ஒருவர் தனது வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்கள்அமைகின்றன. நான் அறிந்த ஒரு இளைஞர் இருந்தார். இவன் குழந்தைப்பருவத்தில் தாய் தற்கொலை செய்து இறக்க தனது தகப்பனையும் குடும்பப்பகையால்  யாரோ வெட்டி ரோட்டில் போட்டுள்ளதை நேரில் கண்டுள்ளான். தமிழ சமூகம் உணர்ச்சி சார்ந்தது என்பதால் தனது 12 வது வயதில். தனது தாய் தன்னை அழைப்பதாகவும் தான் தயுடன் போகப்போறேன் என்ற மனக்குழப்பத்தில் இருந்து தனது 19 வது வயதில் விஷம் அருந்தி தன்னை மாய்த்துக்கொண்டான்.

அடுத்த காரணியாக இந்திய இலங்கை சமூகத்தில் இளைஞர்களின் முக்கிய தற்கொலை காதல் தோல்வி என்பதாகும். பெண்ணோ ஆணோ உறவுச்சிக்கலில் வீழ்ந்து தன்னை மாய்த்து கொள்ளும் அவலம் நிகழ்கிறது.

அடுத்து இந்தியா இலங்கை போன்ற சமூகத்தில் காணும் வறுமையால்  நிகழும்  அதீத பண நெருக்கடி இன்னுமொரு காரணம். கடன் வாங்கித்  தங்கள் அன்றைய தேவைகளை முடிக்க முயல்வதும் பின்னர் வாங்கிய கடனைத் திரும்பி கட்ட இயலாத சூழலில் அநேகர் குடும்பமாகத்  தங்களை மரணத்திற்கு அழைத்துக் கொள்கின்றனர்.

மேலும் ஒருவருக்கு வருகின்ற தீர்க்க இயலாத துன்பம் தனிமை ஆகியவையும் தற்கொலைக்கு அழைத்து செல்கிறது. தமிழகத்தில் கடந்த மாதம் தனது கணவர் நோயால் இறந்ததும் தனது பதின்ம மற்றும் இளம் மகள்களுடன் ஒரு தாய் தற்கொலை செய்து இறந்தார். கணவரை இழந்த பெண்களுக்கு வாழும் சூழலை இந்த சமூகம் , இந்த அரசு அமைத்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய எந்த உதவியும் கிடைக்காத பெண்கள் தங்கள் கௌரவமான வாழ்க்கைக்கு இழைக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க இயலாது தற்கொலை செய்து கொள்கின்றனர். அதில் முக்கிய இடமாக கணவனை இழந்த பெண்களின் நடத்தைகள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள பிற்போக்குத்தனமான சிந்தனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன .

போதை வஸ்து பயன்படுத்தலும் தற்கொலைக்கு மனிதர்களை அழைத்து செல்லும் ஒரு காரணியாக இருக்கிறது. தொடர்ந்த போதைவஸ்துப்  பயன்பாடு உள்ள மனிதனில் அது நோய் எதிர்ப்பு சக்தியை அழிப்பதால் மரணத்தை தழுபவர்களும் உண்டு. அதேவேளையில் இந்தியா போன்ற சமூக அமைப்பில் அதிகார வர்க்கமான போலிஸ், வங்கி போன்றவைகளால் பலர் தற்கொலையை துணை தேடுகின்றனர்.

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதன் இருக்க போவதில்லை.  ஒருவர் நகைச்சுவையை உணர்வுடன் வாழ்க்கையை இயல்பாக நோக்கி வாழ்வதன் மூலம் அவர்  மனஅழுத்தத்தில் இருந்து விடுபெறலாம். நல்ல நம்பிக்கையான நட்புகளிடம் தங்கள் துயர்களை பகிர்வதும், புத்தக வாசிப்பு, செடி கொடி வளர்ப்பு பிராணிகளை பாரமரிப்பது, சமூகத்தொண்டாற்றுவது, நல்ல மனிதர்களுடன் தொடர்புகளை  பேணுதல் போன்றவை தற்கொலை எண்ணத்தில் இருந்து உறுதியாக மனிதர்களை காக்கும். ஆகவே வாழ்க்கை என்பது வாழ்வதற்கே இயற்கையாக குரோசோம்களால் உருவாக்கப்பட்ட எமது உயிரை அழிக்க எமக்கு அதிகாரம் இல்லை. மனிதர்களிடத்தே தொடர்பாடல்கள் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலை உணர்வுகள் இல்லாது போய்விடும் என்றபோதிலும் எமது சமூகத்தில் இருக்கின்ற அறிவுசார்குழாம் ஓர் அமைப்பாக செயற்பட்டு தற்கொலை உணர்வுகளைக்  கொண்டுள்ள மனிதர்களை இனம் கண்டு அவர்களை மீட்டெடுப்பதும் அத்தியாவசியமாகின்றது.

ஆலா-இந்தியா

(Visited 121 times, 1 visits today)