போரொன்றின் வன்சொல்-கவிதை-சப்னாஸ் ஹாசிம்

போரொன்றின் வன்சொல்

சப்னாஸ் ஹாசிம்

கொலையுண்ட
உடல்களின்
சகதிகளில்
ரத்ததக்களரிகள்
குளிருகின்றன…

ஆயுதப் புகையின்
திருத்தி அழிக்கப்பட்ட
வன்சொற்களை
போர்வடுக்கள்
உயிர்மெய்
மாறுதலோடு
வெளிப்படுத்துகின்றன…

துண்டு பட்ட
மனித சிதிலங்கள் நடுவே
அவள் நடக்கிறாள்..

எப்போதுமே முடியாத
சண்டையில்
காதலை பணயம் வைத்த
அபலை அவள்..

கால் விரலில்
அப்பிய ஈரல்துண்டை
காதுச் சோணையை
உற்றுநோக்கிய படி
அவள் களமாடுகிறாள்…

அவளிடமில்லாத
அவனிடம் தஞ்சம்
போன கற்புக்கு
ஒரு உயிருண்டான
ஒரு இரவில்
பகல்களை
போர்மேகங்களை
அவள் வெறுத்து விட்டிருந்தாள்…

தூரத்தில் பிணங்கள்
கதைத்துக் கொண்டன..
குற்றுயிரில் உரிமை கீதம்
பாடின…

அவன் செத்திருக்கமாட்டான்.
அவன் சரணடையும் கோழையுமல்ல.
எப்படியும் அவனை
கைதியாய்
அபகரித்து இருப்பர்…

அவள் சஞ்சலம்
மெதுவாக கமுக்கமாகிறது..
நாவரண்ட நீட்சியில்
அவன் பெயரை கத்துகிறாள்..

ஓலமாகிய
களமொன்றை
அவள் ஆற்றலை
இன்னுமொரு குண்டொன்றின்
வெடிப்பு நிசப்திக்கிறது…

அவளும்
அவள் மகனோ மகளோ அதுவும்
சரிந்து விழுந்த அகழிப்புதைவில்
அவனும்
மல்லாந்து படுத்த படி
கனவு வாழ்வில்
ஒரு மாத்திரையை
கடந்து விட்டிருந்தனர்…

அவள் மகனோ மகளோ
அல்லது இருவருமோ கரைந்தோடி
கல் அகழியை நிரப்பிக்கொண்டிருந்தனர்..

0000000000000000000000

ஃபுஜைராவின் கவிதை

எறிந்து விட்டு
வந்து விட்டேன்…
நான் கிழித்த
நான்கு கவிதைகளை
அந்த மலைகள் புதுப்பித்தன…
எனக்கு கொப்பளித்த
எல்லா இடங்களையும்
ஒத்தடங் கொடுத்தன..
காற்றுடன்
என்ன பகையோ
செம்மணலின் பாலை வெளிகளில்
ஒற்றை மரநிழலில்
நான் அள்ளுண்டு கிடந்தேன்…
அயர்ந்த எல்லா நொடிகளிலும்
எனக்குள் மலைக்குகையொன்று
பின்னோக்கி ஓடுகிறது…
நீர் வற்றிய
கணவாய் இறக்கமொன்றில்
பாதை முடியும் கத்தரிப்பில்
நான் தலைகீழாக
தொங்குகிறேன்…
என் பின்புறத்தில்
ஆடுகள் மேய்கின்றன..
மலைகளும்
தோட்டந்துரவுகளும்
நீலப்பூச்சியாய்
எல்லாக் கோணத்திலும்
வந்து புகைப்படம் எடுக்கின்றன..
ஃபுஜைராவின் பெண்களே.!
என் பெயரில் கவிதை
செய்யுங்கள்…
உங்கள் சட்டிகளில்
மாவுருண்டைகளாய்
நான் பொறிந்து கிடப்பேன்…
உங்களுக்கு கீழும் மேலுமான
கற்குவியலில் சிதைந்து
பல நூற்றாண்டாய்
மறைந்துபோன
என்னை
கண்டெடுங்கள்…
இந்த மலைகளின்
திமிரில் என்னை
அடிக்கடி ரசிப்பீர்கள்…

சப்னாஸ் ஹாஷிம்-இலங்கை

சப்னாஸ் ஹாஷிம்

(Visited 126 times, 1 visits today)