துறவின் ஆயிரமாண்டு சொற்கள்-கவிதை-சப்னாஸ் ஹாஷிம்

துறவின் ஆயிரமாண்டு சொற்கள்

சப்னாஸ் ஹாஷிம்

அசைவற்று பிதுங்கும்
இவ்வடர்ந்த மரத்தினை
ஒரு அரபிய தங்ஙளைப் போல்
ஒரு சூஃபியைப் போல்
நிசப்தத்தின் கடைநுனி வரை
ஆழ்ந்து இழுக்கும்
போதை மயக்கமாய்
பிரக்ஞையற்று யாசிக்கிறேன்…..

இதற்கு முன்னரும்
ஆயிரம் வருடங்களாக
தவமிருந்தோரின்
தவப்பலன் களையும்
கானகமெங்கும்
அச்சுறுத்தும் அசரீரியாகிய
முன்னோர்களின் வேதவாக்கின்
சொற்களையும் வேண்டுகிறேன்..

மௌனத்தின்
கடைசிவாசற்கதவை
என் சிந்தையிலிருந்து
திறந்து விரியும் கடலை
அபயத்தின் மாயஜாலங்களை
என் பிச்சைப் பாத்திரத்தில்
கரைத்து வைத்திருக்கிறேன்.

பனியோடு பறந்தலையும்
என் செப மந்திரங்களும்
பரட்டையிலிருந்து கழன்ற
கறுகறுத்த சுருண்ட மயிரிழையும்
சாவக்கிடந்த செடியொன்றில்
ஒட்டி விடுகிறது….

அது நாளையொன்றில்
பின்வழித் தோன்றல்களின்
போதி யாகி பல துறவுகளின்
அகலிடமாய் அருந்தவமிட்ட
முதிர் சித்தனாகிவிடும்.

சபிக்கப்பட்ட மரத்தின்
கீழிருந்த முற்றான துறவு
புத்தனோ சித்தனோ சூஃபியோ
முழுப் பலனும் ஆற்றல்களும்
சற்றுத் தொலைவில்
அருவியை ஒட்டி
குட்டையொன்றின் நீரினடியில்
முதலை வளைக்கு பக்கத்தில்
அடுத்த ஆயிரமாண்டு தவத்தில்
கலியுகத்தை பிச்சைப்பாத்திரத்தில்
படுக்கவைத்திருக்கும் என்னிடம்
வந்து சேரும்…
என் கால்விரலிடை
பீறிட்டு நீர் சுரக்கும்.
என் துவாரங்களில்
அற்புத நண்டுகள் குடியிருக்கும்…..

என் அக்குளிலிருந்து வெளிப்பட்ட
ஹிமாலயத்தில்
நானே என்னை சிருஷ்டித்து
போஷித்து ஒரு அத்வைதம் அருளி
அனுகிரகிக்க வேண்டும்…

சப்னாஸ் ஹாஷிம்-இலங்கை

 

சப்னாஸ் ஹாஷிம்

(Visited 134 times, 1 visits today)