அழைப்பொலி-கவிதை-எஸ்.பாயிஸா அலி

அழைப்பொலி

எஸ்.பாயிஸா அலி

பனிச் சீவல்களைப் போல
குளிரும் மெதுமையுமாய்
சில்லிடுகிறதா..
என் இதயச் சுவர்களில்
மரணத்தின் பயங்கர அழைப்பொலி.

உண்மையாய் ஒன்றுமேயில்லை…
அதி உன்னதமென நாம்
நம்பியிருந்தவைகளு க்குள் எல்லாம்.

சுழலும் மின் விசிறிக்குள்
கதகதக்கும் காற்று.
இளம் பச்சையாய் சுடருமிழும் மின்குமிழ்.

சன்னமான குறட்டையொலி…

இடுப்பைச் சுற்றிக் கிடக்கும்
அன்பின் விரல்களை
ஒரு பூவைப்போல
மிக மெதுவாய் தளர்த்தி எழுகிறேன்.

நீர் நிலையாய்
நின்று நிலைத்திடுமா..
ஒரு கப் பச்சைத் தண்ணீர்…

நிச்சயமற்ற இப்பூமியின்
சில நாள் விருந்தாளிதான்
நானும் எனில்…

எனக்கான எல்லாமுமே
சடுதியாய் பறிக்கப் படப் போகும்
அக்கணம் வரைக்கும் தானெனில்…
போதும்…

எனக்கு எல்லாமே போதும்.

0000000000000000000000000000000000

ஒளிநார் ஞாபகங்கள்

தூக்கத்தின் முன்பான
இரவுப் பிரார்த்தனைகள்
ஒவ்வொரு தடவையும்
விரல்களோடு முடிச்சுப் போட்டு விடுகிறது
ஒளிநார்கள் போன்ற மெல்லிய ஞாபகங்களை…

நீர்க்குவளை கண்களை விட்டும்
தூரப் பறக்கிற தூக்கத்தை
ஆகாயங் கூடத் துரத்தி விடுவதால்
வானுக்கும் பூமிக்கும் இடையிலான வளிப்படைகளை..
அது
ஒன்று…இரண்டு…மூன்று
என எண்ணத் தொடங்குகிறது.

எல்லாவற்றையும் இழந்து
தனித்துச் சோர்ந்த இக்கணத்தில் கூட
புரியவேயில்லை எனக்கு…
மிகை ஆழங்களுக்குள்
பதுக்கி வைத்த
மெல்லிய பலவீனங்களை
உணர்வுகள் செத்த
இவ்விழிகளுக்கூடாய்
நீ கண்டடையவில்லையெனில்…
பிறகெப்படி…?

எஸ்.பாயிஸா அலி-இலங்கை

(Visited 168 times, 1 visits today)
 
எஸ்.பாயிஸாஅலி

தேவதையின் பாடல்-சிறுகதை-எஸ்.பாயிஸாஅலி ( அறிமுகம் )

ஒரு மரணவீட்டுக்கான அடர் சோகங்களைத் தன் ஆழ்ந்த மெளனத்தினூடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது பாரம்பரியமும் ஒருவகையான தெய்வீகக் கலைநயமும் கலந்து நிறைந்த அப்பழையவீடு. பழைய எனச்சுட்டுவது அதனது நிர்மாணக் காலஅளவையும் வடிவமைப்பையுமே […]