நேர்காணல் மொழிபெயர்ப்பு-இசபெல் ஃபார்கோகோல்-ஆன்டிரியா பிரியான்ட்-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

“மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழியைப் போலவே மொழிபெயர்க்க வேண்டிய மொழியிலும் உண்மையான புலமையும், ரசனையும் இருக்க வேண்டும்.”

இசபெல் ஃபார்கோகோல்

ஆன்டிரியா பிரியான்ட்: வெகுஜன கண்காணிப்புக்கு எதிரான எழுத்தாளர்கள் அமைப்புடன் நீங்களும் இணைந்து தொடங்கிய போராட்டத்தில் உங்களது ஈடுபாடு குறித்த கேள்வியுடன் எங்கள் கடைசி நேர்காணல் நிறைவுற்றது. உங்கள் நாவலான ‘பாதுகாப்பற்ற நிலப்பரப்பு’ (Ungesichertes Gelände) அரசியல் செயற்பாட்டாளர்களைச் சுற்றி வருவதை நான் அவதானித்தேன். தாஸ் கிஃப்ட் டெர் பயின் (Das Gift der Biene – தேன் தடவிய நஞ்சு) என்னும் நாவலில் வருகின்ற உங்கள் பாத்திரப்படைப்பில் அரசியல் செயல்பாடும் சம அளவில் முக்கியத்துவம் வகிக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா?

இசபெல் ஃபார்கோகோல்: இலக்கியப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களில் ஒருவர் அந்த புத்தகத்தை வெகுவாக ரசித்துப் படித்ததாகவும் ஆனால் அதில் வருகின்ற கதாபாத்திரங்கள் “அதிகளவில் அரசியல் மயப்படுத்தப்படாததையிட்டு” தாம் ஏமாற்றமடைந்ததாகக் கூறியதாகவும் என்னிடம் கூறினார். இந்த புத்தகம் கடந்தகாலத்தில் சட்டத்தை மதிக்காத ஒரு சமூகத்தினரை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது, எனவே தற்போது பெர்லினில் அதிக அளவில் இயங்கும் முற்போக்குச் சிந்தனையுடைய அரசிற்கு எதிராகச் செயற்படும் குழுக்கள் போன்றே அவர்களையும் அந்த மாணவர் தீவிர செயற்பாட்டாளர்களாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் பெர்லினில் 1990களில் அரசிற்கு எதிராகச் செயற்படும் கலாசாரமானது எப்பொழுதும் கொள்கைசார்ந்ததாக இருக்கவில்லை; அது அவ்வப்போது வெறுமனே மாற்று வாழ்க்கைமுறையாகவும் இருந்துள்ளது.

எனது கதாபாத்திரங்கள் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் இறுதியாண்டில் அரசிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புரட்சியாளர்கள். இப்போது புதிய, சமூக-ஜனநாயக அரசு கட்டிடத்தை புதுப்பித்து, மானிய வாடகையுடன் அவர்கள் மீளத் திரும்புவதற்கு வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே, இது ஒரு வகையான சுமாரான சிறிய கற்பனாவாதமாகும், அங்கு அவர்கள் மாற்று வாழ்க்கை முறையைப் பெற முடியும், அந்த வகையில் இது அரசியல்தான். ஆனால் இந்த மக்கள் அரசியல் சித்தாந்தங்களுடன் ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளனர், ஏனென்றால் தாம் வளர்ந்த சோசலிச அரசின் சரிவை அவர்கள் இப்போதுதான் அனுபவித்திருக்கிறார்கள், இது அவர்களை எல்லா அரசியல் முறைமைகளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவைத்திருக்கிறது, இருப்பினும், விடயங்களைப் புதிய கோணத்தில் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகளும் கருத்தியலும் கலந்திருக்கிறது. அவர்கள் அரசியல் குறித்து விவாதிப்பதில் நாட்டம் கொண்டுள்ளதுடன் பல்வேறு கண்ணோட்டங்களை வெளிக்கொணர்கின்றனர், இருப்பினும் அவர்களின் செயற்பாடு வேறுபடுகின்றது.

பிரியான்ட்: வொல்ப்காங் ஹில்பிக்கின் ஓல்ட் ரெண்டரிங் பிளான்ட் (Old Rendering Plant ) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக ஹெலன் மற்றும் கர்ட் வோல்ஃப்பின் மொழிபெயர்ப்பாளருக்கான பரிசைப் பெற்ற பிறகு, எழுதும்போது அதிக சுதந்திரம் இருக்கும் ஆனால் பாதுகாப்பு குறைவாக இருக்கும் என்று கூறி எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் விவரிக்கிறீர்கள் இதனை அவதானித்த என்னால் இதுகுறித்து உங்களிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது முழு நீள நாவலை ஜெர்மன் மொழியில் எழுதி முடித்த பிறகு உங்களது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா?

கோல்: இல்லை, அது விஷயத்தின் தன்மையிலேயே தங்கியுள்ளது. மொழிபெயர்ப்பதில் காணப்படுகின்ற பிரச்சினை வேறானது (இன்னும் சொல்லப்போனால் சாத்தியமில்லாததும்கூட) குறிப்பாக ஒரு பக்கத்தில் சொல்லப்பட்டுள்ள விடயத்தை மூலஆசிரியரின் தொனியிலும், அதனுடன் இணைந்துள்ளவற்றையும், மென்மைத்தன்மையையும், மொழிநடையயும் இன்னபிறவற்றையும் மூலத்தில் உள்ளபடியே மொழிபெயர்ப்பது சிரமமானது. இது பெரும்பாலும் மனஉளைச்சலையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும், ஆனால் நீங்கள் எழுதும் போது உங்களை வேகமாக உந்தித் தள்ளும் வெற்றுப் பக்கத்தை மொழிபெயர்ப்பின்போது நீங்கள் ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டீர்கள். என்ன நடக்கப் போகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையோ, அல்லது எண்ணங்களை உருவாக்கி அதற்கான தர்க்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேவையோ மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு இல்லை. அங்கு ஏற்கனவே இருக்கின்ற விடயத்துடன் வேலை செய்ய வேண்டியதுதான்.

பிரியான்ட்: ஒருவர் முதலாவது மொழியிலும் மூன்றாவது மொழியிலும் எழுதுகின்ற செயல்முறை வேறுபட்டதாக இருக்கும் என்று கூறுகிறீர்களா?

கோல்: வெற்றுப் பக்கம் என்பது வெற்றுப் பக்கம்தான், நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள் என்பது இங்கு விடயமே இல்லை. கதாபாத்திரங்கள், கதையின் ஓட்டம், பாத்திரங்களின் குணவியல்புகள்; போன்றவற்றை வளர்த்தெடுத்துச் செல்வது பெரும்பாலும் ஒரு மொழியில் தரம் குறைந்தோ (அல்லது அதற்கு மேலானதாகவோ?) நிகழ்கிறது. இருப்பினும் சொற்களைக் கண்டறிவது எண்ணக்கருக்களை உருவாக்குவது ஆகியவை மொழிக்கு மொழி வேறுபடுகிறது. சில நேரங்களில் எனக்கு எண்ணக்கருக்களை ஜெர்மனி மொழியில் உருவாக்குவது எளிதாக இருக்கும் சில வேளைகளில் ஆங்கிலத்தில் உருவாக்குவது இலகுவாக இருக்கும். இதற்கு சரியான தர்க்கரீதியான விளக்கம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பிரயான்ட்: மொழிபெயர்ப்பாளர்கள் ஜோடியாகவோ அல்லது குழுவாகவோ செயற்படுவது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கோல்: ஜோடியாக இணைந்து திறமையாகப் பணியாற்றுகின்ற சில மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பொதுவாக ஒரு மொழிபெயர்ப்பாளரினால் மொழிபெயர்க்கப்படுகின்ற பொழுது அது ஆங்காங்கே தொங்கி நிற்காமல் உறுதியான குரலில் அந்தப் பணியை முடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பிரியன்ட்: ஒரு எழுத்தாளரின் படைப்பை ஒரு குழுவாக மொழிபெயர்ப்பவர்களுக்கும் இது பொருந்துமா?

கோல்: ஒரு எழுத்தாளரின் படைப்பை வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் வித்தியாசமான மொழிநடையைக் கையாள்வதால் ஆசிரியரின் குரலில் வித்தியாசமான அம்சங்களை வெளிப்படுத்த முடியும் அதனால் அவரது படைப்பு மேலும் மெருகூட்டப்படும் என்று நான் கருதுகிறேன்.

பிரியன்ட்: உங்களது தாஸ் கிஃப்ட் டெர் பயீன் (Das Gift der Biene – தேன்தடவிய நஞ்சு) என்னும் ஜெர்மன் மொழி புத்தகம் புதிய புதிய ஜெர்மனிய புத்தகங்களினால், மொழிபெயர்ப்புக்கான நிதியுதவியைப் பெறுகின்றது. இந்த நூல் ஒரு ஆங்கில மொழி வெளியீட்டாளரால் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே அதற்கு இந்த உதவி கிட்டுகிறது. எனவே மொழிபெயர்ப்பு சம்பந்தமாக நாம் உரையாடுவதும் சாலப்பொருத்தமே. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய அதிமுக்கிய பண்புகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

கோல்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழியைப் போலவே மொழிபெயர்க்க வேண்டிய மொழியிலும் உண்மையான புலமையும், ரசனையும் இருக்க வேண்டும். வாசிப்பதில் கவனம் செலுத்துவதற்கும் கவனத்துடன் விளங்கப்படுத்துவதற்கும் அவர்களுக்குப் பொறுமை அவசியம். பலவற்றை வாசிப்பதன் ஊடாகவும் எழுதி எழுதி எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வதன் ஊடாகவும் மொழிபெயர்ப்புப் பணியை மகிழ்ச்சியாகச் செய்ய முடியும். அவர்களின் மொழிபெயர்ப்புக்கு அதன் மூலத்தின் நோக்கத்திலிருந்து விலகாமல், படைப்பை இடைநடுவில் தொங்கவிடாமல், அதற்கு உண்மையான உயிரோட்டத்தைக் கொடுப்பதற்கு அதன் ஓட்டத்தையும் வேகத்தையும் அவர்கள் அதிகரிக்க வேண்டும்.

பிரயன்ட்: மொழியை அனுபவித்து ரசிப்பதும் ஓட்டத்தின் வேகத்தை அதிகரிப்பதும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அனுபவங்கள் என்று நீங்கள் கூறுவதை நான் வரவேற்கிறேன். தாஸ் கிஃப்ட் டெர் பயீன் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் போகிறவர் இத்தகைய குணாம்சங்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்?

கோல்: பதிப்பகத்தார் விரும்பினால் அவர்கள் மனதில் யாரும் இல்லை என்றால் உண்மையில் நானே அந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பதாக இருந்தேன். எப்போதாவது நான் எனது படைப்புகளின் சிறுபகுதிகளை ஆங்கிலத்திற்கோ அல்லது ஜெர்மன் மொழிக்கோ மொழிபெயர்த்துள்ளேன் மேலும், எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பதற்கும் இடையில் அது சில இடங்களில் ஆர்வமான செயல்முறையும்கூட.  பிம்பங்களும் விளக்கங்களும் குரல்களும் அந்தந்த இடத்தில் மொழியைப் பொறுத்து வித்தியாசமாக வந்துவிழும் அதிலும் உங்களது படைப்பை நீங்களே மொழிபெயர்க்கும்போது கவிதைநடையையும் நீங்கள் அனுமதிப்பீர்கள்.

மேலும் ஆங்கில வாசகர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதற்கு கொஞ்சம் பின்னணி தகவல்களிலிருந்து நழுவிச் செல்வதற்கு அல்லது அங்கும் இங்கும் சில மாற்றங்களைச் செய்வதற்கு எனக்குச் சுதந்திரத்தை வழங்குகிறது இருப்பினும் அது மிகவும் நுட்பமாக இருக்க வேண்டும்.

நான் ஜெர்மன் மொழியில் எழுதுவற்கு எனது கருப்பொருள் ஜெர்மனியாக மாறியிருந்ததும் ஒரு காரணம். அத்தகைய விடயங்கள் குறித்து ஒரு ஆங்கில மொழி பேசும் வாசகருக்கு எழுதுகின்றபோது அதனை ஒரு மொழிபெயர்ப்பாக உணரத்தொடங்கியதுடன் அவர்களுக்கு மேலும் ஏராளமான பின்னணித் தகவல்களுமம் தேவைப்படுவதாக உணர்ந்தேன். அது எனது கண்ணோட்டத்திலிருந்து என்னை வெகுவாக பிரித்துவிடும் என்று தோன்றியது. நான் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கையில் 2001ஆம் ஆண்டு, பெர்லினில் நடைபெற்ற சம்பவத்தை மையமாக வைத்து அமெரிக்க எழுத்தாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் கதைசொல்ல முற்பட்டவேளையில், அவர்களில் ஏராளமானவர்களுக்கு கதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அது 1989ஆம் ஆண்டின் முக்கியத்துவத்துடன் பின்னிப் பிணைந்திருந்தது அந்தக் காலப்பகுதி அவர்களது கண்களுக்குப் புலப்படவேயில்லை. ஆனால் கதைசொல்லி கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். தனது கதையைப் புரிய வைப்பதற்காக “1989 ஆம் ஆண்டு ஜெர்மனியைப் பிரிக்கின்ற சுவர் வீழ்ந்தபோது” என்று அவர் மேலதிகத் தகவலைத் தெரிவித்தபோது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

இப்போது எனக்கு எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் அதிக அனுபவம் உள்ளது. அத்தகைய பிரச்சினைகளுக்கு நுட்பமான முறையில் தீர்வுகாணப்பதற்கான ஆற்றல் எனக்கு இருப்பதாக நான் உணர்கிறேன். தாஸ் கிஃப்ட் டெர் பயீன் நாவலின் கதைசொல்லி கிறிஸ்டினா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அவர் பெர்லினுக்கு 1990களில் குடியேறியவர். தனது கிழக்கு ஜெர்மனிய நண்பர்களின் கதைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டவர். அவரிடம் வெளிப்பார்வையாளரின் கண்ணோட்டம் இருந்தது ஆனாலும் அவர் ஜெர்மனிய சூழ்நிலையில் மூழ்கிப்போயிருந்தார். அவர் கதைசொல்கின்ற வேளைகளில் தானே தனது சொந்த மூளையைப் பயன்படுத்தி கதைசொல்வது போன்று சொல்ல முயற்சிப்பார். கேட்பவர்களுக்கு வீட்டிற்குத் திரும்புவது பற்றி விளங்கப்படுத்த மாட்டார். அவர்களுடன் இணைந்துள்ள ஜெர்மானிய வாசகர்களுக்கு உதவும் வகையில் சில விடயங்களில் சிறு நழுவல்களுடன் நானும் அந்தக் கண்ணோட்டத்தைப் பாதுகாக்க விரும்பினேன்.

மறுபுறத்தில் எனது முதலாவது நாவலான பசுமை எல்லை (die grüne Grenze) , முழுவதும் கிழக்கு ஜெர்மனியை களமாகக் கொண்டிருந்ததுடன் அது கிழக்கு ஜெர்மனியின் கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தது. (முக்கியமாக, இரண்டாவது புத்தகத்தில் கிறிஸ்டினாவின் நண்பர்களை நினைவூட்டும் சில கதைகளைக் கூறுவதால் அவர் இரண்டு நாவல்களின் அடிஆழத்திற்குச் செல்ல முயற்சிக்கிறார் – இரண்டு நாவல்களும் பண்டைய ரோமானிய மற்றும் கிரேக்க எழுத்துக்களின் சோடியை ஒரே மரப்பலகையை இரண்டாகப் பிரித்து அதில் பொதித்து பிணைச்சல் கொண்டு பிணைத்திருப்பதைப் போல பிணைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அவற்றை எந்த ஒழுங்கிலும் படிக்கப்படலாம்.) ஆகவே, மொழிபெயர்ப்பின் போது இடமாற்றுவதற்கும் கதைசொல்லும் உத்தியில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்குமான நம்பிக்கை தெரிகின்றது. குறிப்பாக இரு நாவல்களிலும் முக்கிய கருப்பொருள் ஒன்றாக இருக்கையில், வரலாற்று நிகழ்வுகளையும் விடயங்களையும் எப்படி கற்பனையோடு மீளுருவாக்கம் செய்து விபரிக்க முடியும் என்பது சிக்கலான விடயம். அது ஒருவரது சொந்த அனுபவத்திற்கும் அப்பாற்பட்டது.

பிரியன்ட்: தாஸ் கிஃப்ட் டெர் பயீன் நாவலை எழுதுகின்ற வேளையில் வரலாற்று கண்டுபிடிப்பின் எந்த தருணங்கள் மிகவும் மையமாக இருந்தன?

கோல்: எனது ஆராய்ச்சியில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்ற கதைகள் மற்றும் உண்மைகள் மற்றும் தத்துவங்களை நான் அடிக்கடி கண்டுபிடிப்பேன், தாஸ் கிஃப்ட் டெர் பயீன் எழுதும் போது நான் கண்டுபிடித்த ஒரு விஷயம் யூத மாயவாதத்தின் பாரம்பரியம். ஒரு அதிசய யூத மதத்தலைவர் அந்த புத்தகத்தில் ஒரு பாத்திரத்தை வகிப்பார் என்று எனக்குத் தெரியும், எனவே பெர்லினைச் சேர்ந்த கெர்ஷோம் ஷோலெம் என்னும் தத்துவஞானி எழுதிய யூத மதத்தைப் பற்றிய பல புத்தகங்களை வாசித்தேன். யூதத்தத்துவம் அநேகமாக புதிர்கள் நிறைந்ததாவே இருந்தது (தற்பொழுது அது சிறிது மங்கியுள்ளது), ஆனாலும் ஷோலெம் மொழி மற்றும் வரலாறு போன்ற பிரச்சினைகள் குறித்து தத்துவார்த்த ரீதியில் சிந்தனையைத் தூண்டும் பல விடயங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஷோலெம் வால்டர் பென்ஜமின்னின் நண்பராக விளங்கியவர், கப்பலா குறித்து அவரது எழுத்துகளால் அவர் தீவிரமாக ஆட்கொள்ளப்பட்டார். மேலும் அது தியோடர் அடோர்னோ போன்ற ஏனைய நவீன சிந்தனையாளர்களின்மீதும் செல்வாக்கு செலுத்தியது. அது இருபதாம் நூற்றாண்டின்மீதான சிந்தனையில் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தை வழங்கியது.

பிரியன்ட்: அவர்களுடனான விரிவான இலக்கிய அனுபவம் காரணமாகத்தான் இந்த காலங்களைப் பற்றி உங்களால் நன்றாக எழுத முடிகிறது என்று கூறுவீர்களா, அல்லது இந்த திறனுக்கு பங்களிப்பு செய்கின்ற வேறு ஏதேனும் அனுபவம் உள்ளதா?

கோல்: நல்லது. 1990களில் நான் அந்த நேரத்தில் அனுபவித்ததை அப்படியே வெளிப்படுத்தினேன். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசைப் பொறுத்தவரை நான் பெருமளவில் வரலாற்றுபூர்வ ஆய்விலும், தொல்பொருள் சின்னங்களிலும், மக்களின் தனிப்பட்ட நினைவுகூர்தல்களிலும் தங்கியிருந்தேன். ஜிடிஆரி(GDR )ல் நான் மேற்கொண்ட இலக்கியப் பணிகள் உண்மையிலேயே எனக்கு சூழலை அனுபவித்து உளவியல் ரீதியாக தெம்புடன் எழுதுவதற்கு வழிகோலின.

பிரியன்ட்: உங்களது தாய்மொழியான ஜெர்மனிய மொழியில் வெளிவந்துள்ள உங்களது படைப்பின் ஓட்டத்தைப் பார்க்கின்றபோது, உங்கள் எழுத்து முழுவதிலும் அரசியல் சூழல் மையமாக அமைந்துள்ளதை என்னால் அவதானிக்க முடியவில்லை: உங்கள் நாவலான பாதுகாப்பற்ற நிலம் ( Ungesichertes Gelände) இலிருந்து டை கிரேன் கிரென்ஸின் ( Die grüne Grenze)- பசுமை எல்லை வரை நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் தொடர்பினை ஆராயுமிடத்து, அவை 1950 க்கும் 1998க்கும் இடைப்பட்ட காலப்பகுதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. மேலும், உங்களது அண்மைய நாவலான ( Das Gift der Biene – தேன்கலந்த நஞ்சு) கிழக்கு பெர்லினில் 90 களின் பிற்பகுதியில் நடந்தவற்றைக் கருவாகக் கொண்டுள்ளது. ஒரு கதையின் வளர்ச்சிப்பாதையில் வரலாற்றின் வகிபாகம் யாது?

கோல்: வரலாற்றில் படிந்துள்ள பல்வேறு அடுக்குகள் எவ்வாறு நிகழ்காலத்தின்மீது தாக்கம் செலுத்துகிறது, அது எவ்வாறு ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையிலும் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகிறது என்பது பற்றியெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு வரலாற்றில் ஆழமான ஆர்வமுள்ளது.

பிரயென்ட்: வரலாற்றில் எந்தப் பகுதி உங்களைத் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கவர்ந்திழுக்கிறது?

கோல்: பசுமை எல்லை (Die grüne Grenze ), ஜெர்மன் ஜனநாயகக் குடியரவை மையமாக வைத்து எழுதப்பட்டது. மறைந்துபோன ஒரு நாட்டில் நான் வாழ்கிறேன் இதுதான் யதார்த்தம். இதுதான் வாழ்க்கை, என்பதில் சொக்கிப்போன நான் ஏனையோர்களின் கதைகளிலிருந்து கடந்தகாலத்தைப் பின்னோக்கிப் பார்க்க முயற்சிக்கிறேன். மறுபுறத்தில், பெர்லினில் 1990களில் நானே சிலவற்றை அனுபவித்தேன். ஆனால் அது ஒரு வித்தியாசமான சவாலாக இருந்தது – பெர்லினிலும் உலகிலும் நடப்பவற்றை நான் ஒன்றாகப் பார்ப்பதை உணர்ந்தேன். ஏனென்றால் என்னால் எப்போதும் என் நினைவுகளில் இருப்பதில் மட்டுமே நம்பியிருக்க முடியாதே. இரண்டு ஜேர்மனியும் மீண்டும் இணைந்தவேளையில், பெர்லின் ஜேர்மனியின் தலைநகராக மாறியிருந்தது. இதன்போது மோதல்களும் நடந்தன. இருநாடுகளும் இணைந்த பின்னர், பாரிய கட்டுமானப் பணிகளும் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பால்கன் குடாவில் வலதுசாரிகளால் தோற்றுவிக்கப்பட்ட யுத்தங்களின் காரணமாக அகதிகளும் வரத்தொடங்கியிருந்தனர். மொத்தத்தில் இது ஒரு கொந்தளிப்பான நேரம். எனக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், என் நினைவுகளை சூழலுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளவும் நான் 90 களில் பேர்லினைப் பற்றி அறிந்து கொள்வதற்கான புத்தகங்களைத் தேடியபோது, எனக்கு இணைப்பு பற்றிய காட்சிகளையும் அதனுடன் இணைந்த விடயங்கள் தொடர்பான விடயங்களை மட்டுமே உள்ளடக்கிய புத்தகங்களே எனக்குக் கிடைத்தன. அது வேடிக்கையானது. பெர்லினில் 90 களில் நிகழ்ந்தவை  அத்தகைய கட்டுக்கதை, எனவே அதற்கு எத்தகைய காரணமும் இருக்கவேண்டியதில்லை. ஆனால் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அன்றைய வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து முன்னேற்றங்களையும் தீவிரமாக ஆராய்வது கடினம்.

பொதுவாகப் பார்த்தால் 90 களில் நடைபெற்றவை உண்மைதான் – பனிப்போரில் முதலாளித்துவம் “வென்றது” என்ற உணர்வு மேலோங்கியிருந்தது, மேலும் நம்மில் பலர் என்ன நடக்கிறது என்பதன் இருண்ட பக்கங்களைப் புறந்தள்ளியபடி மனநிறைவுடனும் பார்வையற்றவர்களாகவும் இருந்தோம். எல்லாவற்றையும் விட மோசமானது, அப்போது காலநிலை மாற்றத்தின் அபாயத்தைப் பற்றி நாம் உரத்த குரலில் ஆனால் தெளிவாக எச்சரிக்கப்பட்டிருந்தோம். அப்போது உண்மையான நடவடிக்கை எடுத்திருந்தால் நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் முதலாளித்துவத்தின் இயக்கவியல் மிகவும் வலுவாக இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் என் மனதிலும் இருந்தன, ஆனால் அவை ஓரங்களில் மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 90களில் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்ந்த அதே உணர்வை மீண்டும் தெரிவிக்க விரும்பினேன்.

பிரயன்ட்: ஒவ்வொரு படைப்பிலும் கட்டமைப்பின் மூலம் எனக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சம்பவங்களைக் கோர்த்து 2000 களின் முற்பகுதியில் உருவாகக்கிய நாவலின் கட்டமைப்பை  பாதுகாப்பற்ற நிலப்பரப்பு ( Ungesichertes Gelände எடுத்துக்கொண்டால், டை க்ரேன் கிரென்ஸ் – பசுமை எல்லை தோராயமாக (Die grüne Grenze) காலவரிசைப்படி காணப்படுகிறது, 1950 கள் 1980 களின் நடுப்பகுதியில் வைக்கப்பட்டன. தாஸ் கிஃப்ட் டெர்-தேனில் நஞ்சின்( Das Gift der Biene) அத்தியாய தலைப்புகளில் இருந்து, 1990 களின் நடுப்பகுதியில் கிழக்கு பேர்லினில் இடம்பெற்றவற்றைக் காலம் குறிப்பிடப்படாமல் நினைவில் இருந்ததை வைத்து எழுதியதுபோல் தோன்றுகிறதே. இந்த வேறுபாடுகளுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

கோல்: ஒவ்வொரு படைப்பிலும் காலவரிசை கட்டமைப்பு வித்தியாசமாக அமைந்திருந்தது. பாதுகாப்பற்ற நிலத்தில்-(Ungesichertes Gelände) – நான் நெருக்கமான உறவைப் பேணக்கூடிய வடிவத்தை நான் விரும்பினேன். அது கண்காணிப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்தின் மீதான தலையீட்டுடன் சரியாகப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றியது. மேலும், இது சரியான கண்ணோட்டத்துடனும் காலவரையறையுடனும் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்கிறது, கதை சொல்லி எப்போதும் ஒருவரை நேரடியாகக் குறிப்பிடுகிறார், அவள் திரும்பிப் பார்த்து, இப்போது நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறாள். மற்றொரு கடிதம் கிடைக்கிறது, இதற்கிடையில் என்னவெல்லாமோ நடந்துவிடுகிறது. இது வெறுமனே கதை நகர்த்தல் உத்தியோடு நின்றுவிடுவதில்லை.

டை க்ரேன் கிரென்ஸில்(Die grüne Grenze ) , சாதாரண வாழ்க்கையின் ஒரு முகப்பின் பின்னால் மக்கள் அதிர்ச்சிகரமான நினைவுகளை அடக்கும்போது என்ன நடக்கிறது என்பதை ஆராய விரும்பினேன். 1970 களில் எல்லை மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் புதுமண வாழ்க்கையை விவரிப்பதன் மூலம் இது தொடங்குகிறது, கீழ்ப்பரப்பில் நிறைய பதட்டங்கள் உள்ளன. கணவரின் குழந்தைப் பருவம் மற்றும் இளம்பிராயத்தைப் பற்றிய கதையையும் அவர் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களையும் சொல்லும் வகையில் 1950களின் கடந்தகால நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உள்ளது, பின்னர் கதை 70 களுக்குத் திரும்புகிறது, எல்லா எலும்புக்கூடுகளும் மறைவிலிருந்து வெளியே வந்து விடயங்கள் திரைக்கதையாக மாற்றமடைகின்றன. கதையை நான் காலக்கிரமமாகச் சொல்லியிருந்தால், திரைக்கதையின் பதற்றம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். மேலும், நாவலுக்குள் மற்றொரு நாவல் பொதிந்து கிடக்கிறது. அது நடுத்தர வயது ஐரோப்பியர்களின் வரலாற்றுக்குள் நுழைந்து சரியான தகவல்களைத் திரட்ட முயல்கிறது. இந்த புத்தகம் வரலாற்றை அல்லது தனிப்பட்டவரின் கடந்த காலத்தின் வெவ்வேறு அடுக்குகளை ஆராய்வது பற்றியது, மேலும் காலவரிசை அதை பிரதிபலிக்கிறது.

தேன்கலந்த நஞ்சு (Das Gift der Biene)  நாவலைப் பொறுத்தவரை, இது ஒரு உன்னதமான நாவல் போன்றது என்று நான் நினைத்தேன், ஜெர்மன் காதல் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை நிறைய கிளைக்கதைகள் இல்லாமல் மிகவும் எளிமையான கதையாகவும் ஒரு “கேள்விப்படாத நிகழ்வு” – அதாவது, ஒரு விசித்திரமான அல்லது இறுதிக்கட்டத்தில் அற்புதமான திருப்பத்தைக் கொண்டிருப்பதாகவும் அமைந்திருக்கலாம். ஆகவே, இது ஒரு எளிமையான கால ஒழுங்குக் கதை. இருப்பினும் அது டை க்ரேன் கிரென்ஸ{டனும் அதன் நிகழ்வுகள் மற்றும் அத்தகைய கதாபாத்திரங்களின் தலைவிதிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ளார்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ளது.

பிரியன்ட்: தேனீ விஷத்தின் (Das Gift der Biene) தொடர்ச்சியை வாசகர்கள் எதிர்பார்க்க முடியாது என்று கூறுகிறீர்களா?

கோல்: இரண்டு புத்தகங்களுமே சில கேள்விகளை பகிரங்கமாக முன்வைக்கின்றன. சில கதாபாத்திரங்கள் உண்மைகளைத் தோண்டி எடுப்பதற்காக குறிப்பிட்ட தூரம்வரை முன்னேறிச் செல்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் தற்போது நான் சிறிது காலத்திற்கு கட்டுரைகளின் மீது கவனத்தைச் செலுத்த எண்ணியுள்ளேன். நான் கையாள வேண்டிய பிரச்சினைகளான அரசியல், சமூக மற்றும் சூழல் தொடர்பாக ஏராளமான விடயங்களை திரட்டிவைத்துள்ளேன்.

டிசம்பர் 2019

000000000000000000000000000000000000000000000

இசபெல் ஃபார்கோ கோல் பற்றிய சிறுகுறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்இசபெல் ஃபார்கோ கோல் நியூயோர்க் நகரத்தில வளர்ந்தவர், 1995ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளமானி பட்டம் பெற்றார் ஒரு எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் களமிறங்கிய நாளிலிருந்து பெர்லினில் வசித்து வருகிறார். அவரது மொழிபெயர்ப்பான உல்ஃப்கேங் ஹில்பிக்ஸ் ஓல்ட் ரென்டரிங் பிளான்ட் (Wolfgang Hilbig and Franz Fühmann ) 2018ஆம் ஆண்டு குர்ட் அன்ட் ஹெலன் உல்ஃப் (Kurt and Helen Wolff ) பரிசில் பெற்றது. அவரது ஏனைய மொழிபெயர்ப்புப் படைப்பான உல்ஃப்கேங் ஹில்பிக் அன்ட் ஃப்ரான்ஸ் ஃப்யுஹ்மான் (Wolfgang Hilbig and Franz Fühmann ) பல்வேறு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோல் 2005ஆம் ஆண்டுவரை ஜெர்மன் மொழியில் குறுநாவலையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது இரண்டாவது நாவலான டாஸ் கிஃப்ட் டெர் பெயின் (Das Gift der Biene) 2019ஆம் ஆண்டு நாவ்டிலுஸ் (Nautilus)பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. மேலும் லிடேரா டூர் நோட்க்காக 2019ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டது. இதற்கான விழாக்கள் 2020இல் நியூயோர்க்கில் நெயு லிட்ரேச்சரிலும் சிகாகோவிலும் நடைபெறவுள்ளன.

கோல் 2006 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் வெளிவந்த புதிய ஜெர்மன் இலக்கியத்திற்கான ஆட்களில்லா நிலம் என்னும் இணையதள சஞ்சிகையில் இணையாசிரியராகக் கடமையாற்றினார்.  2013ஆம் ஆண்டு “கூட்டமாகக் கண்காணிக்கப்படுவதற்கு எதிரான எழுத்தாளர்கள் அமைப்பு” (“Writers Against Mass Surveillance.” ) என்னும் அமைப்பில் இணை அமைப்பாளராகத் திகழ்ந்தார். இந்த உரையாடலில் அவரும் அன்டிரியா பிரியென்டும் இணைந்து வரலாற்றுச் சூழல், அமைவிடம், மற்றும் அவரது எழுத்தில் மொழிபெயர்ப்பின் தாக்கம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

அன்டிரியா பிரியன்ட் பற்றிய சிறு குறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்அன்டிரியா பிரியன்ட், ஜியார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில், ஜெர்மானிய மொழியில் கலாநிதி (முனைவர்) பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் ஒரு ஆய்வாளர். சொற்பொழிவை விமர்சன அடிப்படையில் பகுப்பாய்வு செய்தல், விமர்சன தள கோட்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிலைபேறான கற்பித்தல் ஆகியவற்றில் நுட்பமான ஆய்வினை மேற்கொண்டார். அமெரிக்காவில் ஜேர்மன் மொழி (கள்) மற்றும் இலக்கியம் (கள்) கற்பிப்பதில் காணப்படும் இருட்டுத்தன்மையும் பல்வகைத்தன்மை பிரதிநிதித்துவத்தின்மீதும் மரியாதையின்மீதும் செலுத்துகின்ற தாக்கம் என்பவற்றை அவரது ஆய்வுக் கட்டுரை விபரிக்கிறது.

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 109 times, 1 visits today)