மொழிபெயர்ப்பு நேர்காணல்-மையு அலி-தேசிகன் ராஜகோபாலன்

                        “துரதிஷ்டவசமாக இன்று நாம் எமது மொழியை இழந்துவிட்டோம்.”

                          மையு அலி

நீங்கள் தற்போது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்களுள் ஒன்றில் வசிக்கின்றீர்கள். தட்மடோ (பர்மியர்) இராணுவம் முகாம்களின் ஒரு புறத்திலும் வங்கதேசத்தின் இராணுவம் மறுகரையிலும் உள்ளன. இதுபோன்ற இடத்தில் இருந்துகொண்டு நீங்கள் எதனை எழுதவிரும்புகிறீர்கள்? எப்படிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்கிறீர்கள்?

நாவ் ஆறு மியான்மரையும் வங்கதேசத்தையும் பிரிக்கிறது. நாவ் ஆறு ஒரு சிற்றோடையின் ஊடாக மியான்மரில் பாய்கிறது. மியான்மரிலிருந்து புலம்பெயர்ந்து வங்கதேசத்திற்குள் பிரவேசத்ததிற்கும், றோஹிங்ஞ ஏதிலியாக இருக்கும் போதிலும், எனது தாய்நாட்டின் காற்றை வான்பரப்பினூடாக என்னால் இப்பொழுதும் சுவாசிக்க முடிகிறது. அராக்கனில் உள்ள பசுமை வனத்தை என்னால் காண முடிகிறது. அது என்மீது காதல்கொண்டு ஆரத்தழுவ அழைப்பதுபோல் உள்ளது. இவையே எப்பொழுதும் எனது இரத்தத்தில் ஊறிப்போயுள்ள மியான்மர் மீதான தேசிய உணர்வையும் என் தாய்நாட்டின் மீதும் தேசப்பற்றையும் உயிர்ப்புடன் வைத்திருக்கத் துணைபுரிகின்றன. மறுபுறத்தில், நான் எனது உயிரைவிடவும் பெரிதும் நேசிக்கும் எனது தாய்நாட்டின்மீதான எனது ஏக்கத்தையும் தாகத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மியான்மர் தரப்பில், பர்மியர்களான ‘தாட்மாடவ்’ இராணுவத்தினர் மியான்மரில் வசிக்கின்ற றொஹிங்ஞர்களுக்கு எதிராக மனிதஉரிமைகள் மீறல்களிலும் துஷ்பிரயோகங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் அந்நாட்டு இராணுவம் மியான்மர் கொலைக்களத்திலிருந்து தப்பிவந்த சுமார் ஒரு மில்லியன் றொஹிங்ஞ அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்துப் பராமரித்து வருகின்றது. அத்தகையவர்களில் நானும் ஒருவன். இத்தகைய இடத்தில் உயிருடன் இருப்பதானது ஒரே நேரத்தில் இருவேறு உலகில் சஞ்சரிப்பது போல் உள்ளது. ஒன்று மனிதநேயம் மரணித்துப்போன மியான்மர். மற்றது மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான வங்கதேசம். அத்தகைய சூழலில் இருக்கும் ஒரு றொஹிங்ஞனால் எழுதுவதென்பது உயிர்வாழ்தலுக்கும் உலகில் மறக்கப்பட்டவர்களின் வரிசையில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக குரலெழுப்புவதற்கும் இடையிலான பெரும்போராட்டமாகும்.

கொக்ஸ் பஸாரில் உள்ள அகதி முகாம் 1799ஆம் ஆண்டு படைத்தளபதி கொக்ஸினால் முதலாவதாக நிறுவப்பட்டது. அவர் ரமூவைச் சூழவுள்ள பௌநதியின் அருகில் “வீணாகவுள்ள காணிகளை” கேட்டிருந்தார். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். காலனித்துவ அடக்குமுறைக்கு பதிலளிக்கும் முகமாக நீங்கள் ஆங்கிலத்தில் கவிதை எழுத மேற்கொண்ட முயற்சி எந்த அளவிற்குப் பலனளித்துள்ளது? அத்துடன் றொஹிங்ஞருக்கு அவர்களது சொந்த கவிதைகளை றொஹிங்ஞ மொழியில் படைப்பது எவ்வளவு கடுமையாக இருந்தது?

றொஹிங்ஞர்கள் அரகனில் மன்னர்களாக இருந்தவர்கள். றொஹிங்ஞ மொழி அரகன் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டது. கல்வெட்டுக்கள் மற்றும் நாணயங்கள் போன்ற வரவாற்றுச் சான்றுகள் றொஹிங்ஞர்கள் அரகனில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்ற இனக்குழுமத்தினர் என்று பறைசாற்றுகின்றன. மேலும், அவர்கள் தமக்கென்று தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் புனிதநூல் என்பனவற்றைக் கொண்டிருந்தினர். ‘றக்கைன்’ ஆட்சிக்காலத்தில் அவ்வப்போது வன்முறைகளும் யுத்தங்களும் இடம்பெற்றன. பலதசாப்தங்களின் பின்னர், மியான்மர் ஒரு நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக காலனித்துவ அடக்குமுறையின்கீழ் வந்தது. 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி மியான்மர் சுதந்திரம் அடைந்தது. 1960ஆம் ஆண்டிலிருந்து அந்த நாடு இராணுவ அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுகிறது. காலனி ஆதிக்கத்தின்கீழ் மக்கள் தமது சொந்த கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கடைப்பிடிக்கும் உரிமையை இழந்திருந்தனர். இராணுவ அதிகாரிகளின் நிர்வாகத்தின்கீழ் மக்கள் குறிப்பாக றொஹிங்ஞர்கள் இலக்குவைக்கப்பட்டு அவர்கள் தமது நீண்டகால இருப்பையும் அடையாளத்தையும் இழந்து தவிக்கின்றனர். இவ்வாறு மியான்மரில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற அரச ஒடுக்குமுறைக்குட்பட்ட றொஹிங்ஞ பெற்றோருக்கு மகனாகப் பிறந்தேன். நான் முறையான எழுத்து வடிவமற்ற (அது இருநூறு ஆண்டுகள் பழமையானது என்பதுடன் அரேபிய எழுத்துருக்களின் ஒரு வகையைப் பயன்படுத்தியது) றொஹிங்ஞ மொழியையே கற்றேன். றொஹிங்ய மொழியை ஒரு மொழியாகக் கற்கையில், எனது மக்களின் கலாசாரமும் இலக்கியமும் சமூக ரீதியில் இலக்குவைக்கப்பட்டு நீக்கப்பட்டமையை உணர்ந்தேன். எனது வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த பாடத்தின்படி பல தசாப்தங்களாக ஏன் எனது மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாகவே நான் பர்மிய மொழியில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். இப்பொழுதும்கூட றொஹிங்யா எனது பாட்டனார் அறிந்த கலாசாரத்தையே பின்பற்றுகிறது. அவர் என்னை உறங்க வைப்பதற்காக எமது வட்டார வழக்கில் அமைந்த பாடல்களையும் கவிதைகளையும் அடிக்கடி பாடுவார். துரதிஷ்டவசமாக இன்று நாம் எமது மொழியை இழந்துவிட்டோம்.

உங்களது கவிதைகள் கடுமையானதாகவும், நேரடியாக விடயத்தைச் சொல்வதாகவும் செயற்துடிப்பு மிக்கதாகவும் இருக்கின்றன என்று நான் சொல்கிறேன். அண்மையில் நாங்கள் கவிதை எழுதுவதற்கான வழிமுறைகள் பற்றி பேசிவருகிறோம். நீங்களும் அந்த ஆவணத்தை நீங்களும் பார்வையிடலாம். றொஹிங்ஞர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் உங்கள் தெளிவான விருப்பத்தை இது எவ்வளவு தூரம் கடினமாக்கியுள்ளது தெரியுமா? ஒரே கவிதையில் செயற்பாட்டியலும் கற்பனை வளமும் இணைந்திருப்பது எந்த அளவிற்கு சாத்தியம்?

நான் ஏற்கனவே கூறியதுபோல, நான் மியான்மரின் மேற்கில் வளர்ந்ததினால், மனித உரிமையின் ஒவ்வொரு அம்சமும் எமக்கு மறுக்கப்பட்ட ஒரு உலகை நான் சந்திக்க நேர்ந்திருந்தது. நாம் (றொஹிங்யர்கள்) எவ்வாறு மதரீதியாகவும், சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை நான் அறிந்துகொண்டேன். இவைகளுக்கு மத்தியில் கிராமப்புர அரசினர் பாடசாலை ஒன்றில் எனது கல்வியை மேற்கொள்ள முடிந்தது. பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குத் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான மெட்ரிகுலேசன் பரீட்சையில் 2008ஆம் ஆண்டு தோற்றி தேர்ச்சிபெற்றேன். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை 2012ஆம் ஆண்டு ராகினி மாகாணம் பூராவும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதன் பிறகு, நூற்றுக்கணக்கான றொஹிங்ஞ மாணவர்கள் சிட்வே பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். “ஆங்கில சிறப்புப்பாடம்” (“English Specialization”) பட்டப்படிப்பின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டினை நான் அந்த பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருந்தேன். 2012ஆம் ஆண்டின் வன்முறையின் பின்னர் நான் படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. ராக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த றொஹிங்ஞனாக இருந்ததால் நல்ல நூல்களையும், பிரசித்தமான சஞ்சிகைகளையும் வாசிப்பதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே கிட்டின. எமது நடமாட்டம் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்வதுகூட கடினமான வகையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இளம் வயதிலேயே, எழுத்துத்துறையைத் தெரிவு செய்து கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதுவதற்கான பாத்திரத்தை மேற்கொண்டு எனது மக்கள் அனுபவிக்கும் வலியையும் வாழ்க்கையில் பிடிப்பின்மையையும் வெளிக்கொணரும் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்று எனது வாழ்க்கை எனக்கு பாடம் புகட்டியது. இவ்வாறாக, எழுத்து என்பது எனது இரத்தத்தில் ஊறிப்போனது. றொஹிங்ஞ மக்களுக்காக எழுதுவதென்பதே செயற்பாடுதான். என்னைப் பொறுத்தவரை, ஒரு றொஹிங்ஞனாக, மியான்மரில் மெல்ல எரிந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையில், கற்பனை என்பது செயற்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

நீங்கள் மியான்மரில் இருந்தபொழுது றொஹிங்ஞ கவிஞர்களில் உங்களால் அணுகக்கூடியவர்களாக இருந்த கவிஞர்கள் யார்? ஹிஸ்புல்லா இயக்கத்தினர்; (Khitsan (“testing the times”) ( மற்றும் ஹிட்போர் (“modern poetry”) போன்றவற்றினூடாக அவர்கள் பர்மிய கவிஞர்களுக்குச் செய்ததைப் போன்று உங்களுக்கும் உதவினார்களா?

றோஹிங்யர்கள் எவரும் உத்தியோகபூர்வமாக எழுத்தாளராகவோ கவிஞராகவோ கருதப்படுவதில்லை. எனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நான் ஊக்குவிக்கும் சக்திகளை அணுகுவது அவ்வளவு எளிதான விடயமல்ல. எனது பள்ளிப்படிப்பு காலப்பகுதியில் எனக்கு ஷேக்ஸ்பியர், லாங்ஃபெல்லோ, கிறிஸ்டினா றோஸெட்டி போன்ற சில கவிஞர்களைத் தெரியும். ஆனால் யதார்த்தத்தில் அவர்களில் ஒருவரும் நான் அணுகும் நிலையில் இல்லை. 2008ஆம் ஆண்டு எனது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சி அடைந்ததன் பின்னர், மியான்மரில் சிறந்த ஆங்கில சஞ்சிகைகளையும் எளிமையான ஆங்கில நடையில் அமைந்த சஞ்சிகைகளையும் கண்டுபிடித்தேன். நான் அவ்வப்போது சில கவிதைகளையும் அவர்களுக்கு அனுப்பினேன். அவற்றில் பதினாறு கவிதைகள் பிரசுரமாகியிருந்தன. இந்த சஞ்சிகைகள் மாதந்தோறும் வெளிவந்தன. 2012ஆம் ஆண்டு றக்ஹைன் மாகாணத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தபோது நகரத்தின் மையப்பகுதிக்குச் சென்று சஞ்சிகைகளை வாங்குவதற்கும் தபால் அலுவலகத்தினூடாக கவிதைகளை அனுப்புவதற்கும் தபால் அலுவலகத்தில் கையளிப்பதற்கும் அந்த அலுவலகத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. நான் பெரிதும் மகிழ்ந்திருந்த சஞ்சிகைகளைத் தொடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை, ஹிட்சான் மற்றும் ஹிட்பூர் போன்ற இயக்கங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கையிலேயே ஒரு றொஹிங்ய கவிஞனான என்மீதும் மியான்மரின் இனப்படுகொலை மனோபாவத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நீங்கள் இம்முறை அகதி முகாமிற்கு வருவதற்கு முன்னர், றாக்ஹைன் மாகாணத்தில் உங்கள் மனதைப் பாதித்த பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள். கடந்த சில ஆண்டுகளில், அகதி முகாம்களில் சமீபத்தில் யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள றொஹிங்ய இளைஞர்களின் மனவளர்ச்சி மையத்தில் நீங்கள் பிரசித்தி பெற்ற றொஹிங்ய மனிதாபிமானச் செயல்வீரர்களில் ஒருவராக உங்களை வளர்த்துக்கொண்டுள்ளீர்கள். அதற்குள்ளிருந்தே றொஹிங்யர்களுக்கு கல்வியறிவூட்டுவதிலும்  அவ்வப்போது அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் சுயநலன்களைத் தடுத்து நிறுத்துவதிலும் ஈடுபட்டுள்ளீர்கள். மியான்மரில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் தற்போது நீங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளுக்கு எந்த அளவில் முக்கியமானவையாக உள்ளன? மேலும் இளைஞர் வலுவூட்டல் மையத்தைப் பற்றி எங்களுக்கு சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

பல தசாப்தங்களாகவே றொஹிங்யர்கள் சுகாதார வசதிகளைப் பெறுவது, கல்வியைப் பெறுவது, சுதந்திரமான நடமாட்டம், சமூக செயற்பாடுகளில் பங்குகொள்ளுதல் போன்றவற்றிற்கு தடையேற்படுத்தப்பட்டிருந்தது. றொஹிங்யர்கள் மியான்மரில் வாழ்கின்ற சமூகத்திலேயே மிகவும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினராவர். அத்துடன், மியான்மரின் வடபகுதியில் அமைந்துள்ள றக்ஹைன் மாகாணமானத்தில் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் றொஹிங்யர்களே அந்த நாட்டின் இரண்டாவது ஏழைக்குடிமக்களாவர். அது உலக நாடுகளால் வழங்கப்படுகின்ற மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வலயங்களிலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும். எனது சமூகம் துன்பப்படுவதற்கும், நாம் விளிம்பு நிலையை அடைவதற்கும் மியான்மரே காரணம். இத்தகைய குற்றங்கள் ஒருபுறமிருக்க, மியான்மர் அரசாங்கம் றாக்ஹைன் மாகாணத்தில் அவ்வப்போது மனிதாபிமான உதவிகளையும் தொண்டு நிறுவனங்களினதும் அதன் முகவரகங்களினதும் தலையீட்டுச் செயற்பாடுகளையும் நிறுத்தி வருகிறது. வடக்கு றொக்ஹைன் மாகாணத்தின் பிரசவ இறப்பு வீதம் மியான்மரின் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்காகும். அதாவது ஒரு இலட்சம் குழந்தைகள் உயிருடன் பிறந்தால் இருநூறு குழந்தைகள் மரணித்துவிடுகின்றன. இது ஆசியாவிலேயே மிகவும் மோசமானதாக ஏற்கனவே பதிவாகியுள்ளது. போஹைதாங் மற்றும் மவுங்டாவ் ஆசிய பிரதேசங்களின் ஊட்டச்சத்து குறைபாடானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்காவின் சஹாரா புறநகர்ப் பிரதேசத்துடன் போட்டிபோடுமளவிற்கு மோசமாக உள்ளது. சிட்வே பல்கலைக்கழகத்தில் 2012ஆம் ஆண்டு எனது கல்விச்செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டதன் பின்னர், ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் களைவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் Action Contre la Faim (ACF) தொண்டு நிறுவனத்தில் இணைந்து றாக்ஹைன் மாகாணத்தில் பணியாற்றினேன். நான் அந்த நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது எனது கிராமம் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்ததுடன், நாங்கள் 25.08.2017அன்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களையடுத்து வங்கதேசத்திற்கு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டோம். நான் முன்னர் செயற்பட்டிருந்ததைப் போன்றே இங்கும் செயற்பட்டதனால் றோஹிங்ய சமூகத்தினரை வாழவைப்பதற்கான மனிதாபிமானப் பணிகளைச் செய்வது நெருக்கடியாக இருந்ததை தொடர்ந்தும் உணர்ந்துகொண்டேன். நீங்கள் கூறியதைப் போன்றே கடந்த வருடம் கொக்ஸ் பஜாரில் உள்ள பாலுக்ஹாலி முகாமில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் மையத்தைத் Youth Empowerment Centre (YEC)) தொடங்கினேன். அங்கு நாம் றோஹிங்ஞ இளைஞர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதிலும், வாழ்மைவிருத்தியிலும் கவனம் செலுத்தி  பயிற்சிப் பட்டறைகளினூடாகவும் பயிற்சிகளினூடாகவும் சமாதானத்தையும் இறைமையையும் கட்டியெழுப்புவது, தலைமைத்துவப் பண்பை வளர்ப்பது, முனாமைத்துவம், மற்றும் ஆக்கபூர்வமாக சிந்தித்தல் போன்றவற்றில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களை வலுவூட்டுவது மிகப்பெரிய தூணாக அமையும் என்று நாம் நம்பினோம்.

நாம் சமீபத்தில் றொஹிங்ஞர்களின் குரல்கள் How is the Rohingya voice able to mobilize, living in the camps? என்னும் தலைப்பில் ஒரு கல்லூரி கவிதையை வெளியிட்டிருந்தோம். முகாம்களில் வாழ்கின்ற மக்களை அணிதிரட்டுவதில் றொஹிங்ஞர்களின் குரல் எந்த அளவிற்கு உதவிபுரிந்தது? அவர்களின் அன்றாட வாழக்கைக்கே அவர்கள் முன்னுரிமை கொடுத்திருந்த நிலையில், அவர்கள் இதுவரை வாழ்ந்துவரும் வாழ்க்கையின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்களுக்குப் பதிலளிக்கும் நிலையில் இருந்தனரா? அவ்வாறில்லையெனில், எத்தகைய மாற்றம் அதனைச் சாத்தியமாக்கும்?

இங்குள்ள முகாம்களில் ஒவ்வொருவரும் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்காகப் போராடுகின்றனர். எமக்கு இங்கு எல்லாமே தேவையாக உள்ளது. அமைதியையும் நீதியையும் தேடிக்கொண்டிருக்கும் றொஹிங்ஞர்களைப் பொறுத்தவரை, அன்றாட வாழ்க்கை அவர்களது பிரதான கரிசணை என்ன என்பதைப் புரியவைக்கிறது. தமது பிள்ளைகளுக்கு முறையான கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்ற றொஹிங்ஞ பெற்றோர்களும் உள்ளனர். சமூக வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று விரும்புகின்ற றொஹிங்ஞ இளைஞர்களும் இருக்கின்றனர். தமது கல்வியைத் தொடரவேண்டும் என்று விரும்பும் மாணவர்களும் உள்ளனர். சமூக வலைத் தளங்களான முகநூல் போன்றவற்றில் றொஹிங்ஞ இளைஞர்கள் மக்கள் நலன்சார்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதுவதற்கு கடும் முயற்சி எடுக்கின்றனர். அவர்கள் தமது மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் வாழ்க்கையை மாற்ற எண்ணுகின்றனர். உலகின் ஏனைய பகுதிகளில் வசிக்கின்றவர்களைப் போலவே அவர்களுக்கும் கனவுகள் இருக்கின்றன. எனது நண்பர்களிடமும் உடன் பணியாற்றுகின்றவர்களிடமும் அவர்களது “திரட்டிய குரல்களை” பகிர்ந்துகொள்ளுமாறு நான் அவர்களிடம் வேண்டியபோது, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். அவர்கள் தமது குரல்கள் கேட்கப்படவேண்டும் என்று விரும்பினர். தங்களின் வலி உணரப்படவேண்டும் என்று விரும்பினர். நான் அவர்களை ஊக்கப்படுத்தியதுடன் மொழிபெயர்ப்பினூடாக உதவியும் செய்தேன். இறுதியில் அது நடைபெற்றது. இப்பொழுது அவர்கள் அனைவரும் தங்களது குரல்கள் சஞ்சிகைகள் மற்றும் வேறுவகைகளில் வாசிக்கப்படுவதையிட்டு உற்சாகமடைந்துள்ளனர்.

உங்களது கவிதைகளில் நான் முதன் முதலில் வாசித்த கவிதையான “தட்ஸ் மி, எ றொஹிங்ஞ”வில் ஒரு பந்தி எனக்கு ஞாபகம் இருக்கிறது.

“Even when I watch the sunrise,  
I’m not living like you are.
Without the fertility of hope I live,
Just like a sandcastle.”

“நான் சூரிய உதயத்தைப் பார்க்கின்றபோதும்
நான் நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வாழவில்லை.
நான் நம்பிக்கை எனும் உரமில்லாமலே
ஒரு மணல் கோட்டை போன்றே வாழ்கிறேன்.

அந்த கவிதை வரிகள் வாழ்க்கை எந்த அளவிற்கு நம்பிக்கையற்றதாக உள்ளது என்பதை எனக்கு சட்டென உணர்த்தின. உங்களது கவிதைகள் உயிர்வாழ்வதற்கான செயற்றிறன் மிக்க மந்திரசக்தியாக வாசிக்கப்படுகின்றன. ஆனால் றொஹிங்ஞர்களைப் பொறுத்தவரை நம்பிக்கை மட்டும் ஒரு வழியைக் காட்டிவிடுமா?

மியான்மரில் அரசியல்ரீதியாக இலக்குவைக்கப்பட்டுள்ள சமீபகாலம் வரை, நாம் ஆங் சான் சூ கிய் எமக்கு உதவிபுரிவார் என்று நாம் நம்பியிருந்தோம். நாம் அந்த நாட்டில் வாழ்ந்தவரை அவர்தான் எமக்கு கதாநாயகன். அவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபொழுது, அவர் கண்களை இறுக்க மூடிக்கொண்டதுடன், மியான்மரின் றொஹிங்ஞர்களின் நிலை குறித்து இப்பொழுது அவர் அக்கறை கொள்வதே இல்லை. இதன் பின்னர், அவரது நிர்வாகத்தின் கீழேயே உலகிலேயே அதிகரித்த வேகத்தில் றொஹிங்ஞயர்கள் 2017இல் நாட்டை விட்டு இடம்பெயர்ந்த சம்பவமும் நிகழ்ந்தது. அவர் ஒரு தலைவர் என்பதுடன் அவரது நாட்டின் றொஹிங்ஞ சிறுபான்மை இனத்தவரைக் காப்பதற்கான தார்மீக அதிகாரத்தையும் கொண்டிருப்பவர். ஆனால் அவர் தவறிவிட்டார். இதன் மூலம் றொஹிங்ஞர்கள் தமது இறுதி நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். மறுபுறத்தில், சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளும் போதுமானதாக இல்லை. றொஹிங்ஞர்களுக்கான நீதியைப் பொறுத்தமட்டில் புலம்பெயர்ந்து வாழும் பெருமளவினராலும் ஏனைய பல அண்டை நாடுகளாலும் முன்னெடுக்கப்படுபவைகூட கண்துடைப்பாகவே உள்ளது. இத்தகைய ஆதரவை நாம் மியான்மரிடமிருந்தோ அல்லது சர்வதேச சமூகத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், நாம் எமக்குள்ளிருந்தே அந்த நம்பிக்கையைக் கண்டுபிடிக்க வேண்டும். றொஹிங்ஞர்கள் தமக்குள்ளிருந்தே தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான தலையீடுகளில் முதன்மையானது அவர்கள் தாங்கள் இப்பொழுது வசிக்கும் இடத்தில் அவர்களிடம் உள்ளதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கண்டுபிடிப்பதாகும். இதை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு, வெளிநாடுகளில் வாழும் றொஹிங்ஞ தலைவர்கள் அதிகளவில் பொறுப்பேற்றுக்கொண்டு இத்தகைய மீள்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். றொஹிங்ஞ சமூகத்தை நாகரிமடைந்த சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு றொஹிங்ஞரும் பங்களிப்பு செய்ய வேண்டும். உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட றொஹிங்ஞர்களில் நானும் ஒருவன் என்பதால், உலகில் கடின உழைப்பாளிகளில் ஒருவனாக செயல்படவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். இந்த உணர்வு எனக்குள் ஒவ்வொரு நரம்பிலும் சுற்றிச்சுற்றி வருகிறது.

ஒக்டோபரில் தாயகம் திரும்புவதற்காக வழங்கப்பட்ட தவறான உறுதிமொழி றொஹிங்ஞரால் கடந்த ஆண்டு தடுக்கப்பட்டிருந்தது. உங்களைப் பொறுத்தவரை, முகாம்களிலிருந்து வெளியேறுவதற்கு சிறந்த வழி எது என்று கருதுகிறீர்கள்? நீங்கள் எங்கு வாழ விரும்புகிறீர்கள்? பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கும் முறையான புனர்வாழ்விற்கும் மியான்மர் அரசாங்கம் எமக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். வரலாற்றுபூர்வமாகவும் பூகோளரீதியிலும், பாரம்பரிய அடிப்படையிலும், நாம் அந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள்.

நான் எனது வீட்டிற்குத் திரும்பச் செல்வதற்கு விரும்புகிறேன். மியான்மர்தான் எனது தாய்நாடு. நாம் அங்கு பரம்பரையாக வசித்து வருகின்றோம். மியான்மர் அரசாங்கம் எமது பாதுகாப்பான மீள்குடியேற்றத்திற்கம் முறையான புனர்வாழ்விற்கும் உத்தரவாதமளிக்க வேண்டும். வரலாற்றுபூர்வமாகவும், பூகோளரீதியாகவும், பாரம்பரிய அடிப்படையிலும் நாம் அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு தசாப்தத்தில் நாம் பலறை இடம்பெயர்ந்து மீண்டும் திரும்பியிருக்கிறோம். ஒவ்வொரு றொஹிங்ஞரும் தனது தாய்நாட்டிற்கு பாதுகாப்பாகவும், கௌரவத்துடனும் தனது சுயவிருப்பின் அடிப்படையிலும் செல்வதையே விரும்புகிறான். முதலில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் பொறுப்புக்கூறவேண்டும். றொஹிங்ஞ மக்களுக்கு மியான்மர் அரசாங்கம் மீண்டும் குடியுரிமையை வழங்க வேண்டும். மியான்மரில் வசிக்கும் ஏனைய இனக்குழுக்கள் அனுபவிப்பதைப் போன்ற அனைத்து உரிமைகளையும் றொஹிங்ஞர்கள் அனுபவிப்பதற்கு சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

000000000000000000000000000000000

மையு அலி பற்றிய சிறு குறிப்பு :

தேசிகன் ராஜகோபாலன்மையு அலியுடனான (Mayyu Ali) ஜேம்ஸ் பைனின் (James Byrne) கலந்துரையாடலின்போது ருஸ்ஸல் வாட்கின்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட நிழற்படம் ஒன்று வங்கதேசத்தின் கொக்ஸ் கடைவீதிக்கருகில் அமைந்துள்ள குக்கூபலோங் என்னும் அகதி முகாமையும் அதில் தங்கியிருக்கும் அகதிகளின் நிலையையும் கூடுமான அளவிற்கு  அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ருஸ்ஸெல் ஐக்கியராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களத்தில் பணிபுரிபவர். மையு அலி றோகிங்ஞவின் இளம் கவிஞரும், மனிதாபிமானச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் கொக்ஸ் பஜார் அகதிமுகாமில் இளைஞர்களுக்கு வலுவூட்டும் மையத்தினை நடத்தி வருகிறார். இவர் ஏராளமான கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் றொகிங்ஞபிளாகர்.கொம் (for rohingyablogger.com) என்னும் சமூக வலைதளத்திற்காகவே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் அவருடைய கட்டுரைகள் அல்ஜசீரா, டாக்கா ட்ரிபுயூன் மற்றும் சிஎன்என் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் தி ப்ளோசம் (மலரும்) என்னும் தலைப்பில் தனது ஆரம்பகால கவிதைகளையும் உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டு அதனை முகாம்களில் விநியோகம் செய்திருந்தார். அவரது கவிதைகள் மியான்மர் நாட்டில் புதுக் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதுடன், (special feature on Rohingya poetry) என்னும் தலைப்பில் இலக்கிய ஆங்கில நடையிலும் எளிமையான ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய கவிதைகள் றொகிங்ஞ கவிதைகள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் என்னும் தலைப்பில் ஆர்க் பதிப்பகத்தினரால் ஜூலை 2019இல் வெளிவரவுள்ளது. ஜேம்ஸ் பைன் (James Byrne) என்பவரால் கவிஞருடனான நேர்காணல் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

Translator : James Byrne

தேசிகன் ராஜகோபாலன்

000000000000000000000000000000000

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

 315 total views,  1 views today

(Visited 87 times, 1 visits today)