வெய்யிலின் மிடறு-கவிதை-சிந்துஜன் நமஷி

வெய்யிலின் மிடறு

சிந்துஜன் நமஷி

 

அடிபட்டுக்கிடக்கும் செந்நாயின்
பெருமூச்சு போல தகிக்கிறது சூரியன்
பெருக்கமரத்தடியில் கூடும்
குழந்தைகள் மணலை சமைத்து சோறு
என்று பரிமாறுகிறார்கள்

இடுப்பில் குடத்தோடு
காய்ந்துபோன குளத்தின் கானல்நீர்
வெளியில் தண்ணீர் எடுக்க
வரம்புகளின் மேல் வரிசை
கட்டும் சிறுமிகள் வம்பு பேசி
சிரிக்கிறார்கள்

எல்லோரிலும் மூத்தவள் தரும்
அதிகாரக்குரலுக்கு பயந்து கைகளை
கழுவிவிட்டு மணல் சோற்றில்
கைவைக்கிறான் கடைக்குட்டி

ஓட்டைச்சிரட்டையில் எதையோ
மொண்டுவந்து பருகத்தரும் சிறுவனிடம்
இது என்ன என்று கேட்கிறேன்
சுடச்சுட வெய்யில் என்கிறான்

அண்ணார்ந்து வார்த்த வெய்யில்
என் இரைப்பைக்குள் செரிக்கிறது
சூரியனை தொலைத்தவர்கள் இருட்டி
விட்டதென்று வீடுகளுக்குள்
ஓடுகிறார்கள்

0000000000000

உடற்சூடு

போஸ்ட்மோட்டம்
செய்யும் அறைகளின் போர்வைகளில்
நிரந்தரமாய் ஏறி இருக்கிறது ஒரு
விதமான
பழுப்பு நிறம்

இப்போதைக்கு அவளுக்கு
பெயரெல்லாம் ஒன்றும் கிடையாது கால்
கட்டை விரலில் தொங்கும் முப்பது ஏழு
என்று வேண்டுமானால்
அழைத்துக்கொள்ளலாம்
உறைந்துபோன அருவியாய் கழுவி
விட்ட கூந்தல்
பிணம் அறுக்கும் மேடையிலிருந்து
பெருக்கெடுக்கிறது

மார் என்புகளை துண்டுபோடும் சிறிய
கோடரிகளின் வெள்ளி
மினுமினுப்பையொத்த ஒற்றை
மெட்டியை சவர்க்காரம் இட்டு
களைகிறான் சிப்பந்தி

ஒரே இழுப்பில் பிரிந்துவரும் குடலும்
இரைப்பையும் பிளாஸ்டிக் வாளிகளுக்கு
மாற்றப்படுகிறது
அதன் துவாரங்களின் வழியே மீறும்
நிணநீர் சிறு வாய்க்கால்
வழியோடிச்சேர்க்கிறது

இத்தியாதிகளை துழாவி அலசி முடித்து
பஞ்சு நிறைகையிலும் அடங்கி விடாத
உடல் சூடு அவள் சாவு குறித்து அந்த
நடுநிசியிலும்
சந்தேகிக்க செய்கிறது

சிந்துஜன் நமஷி-இலங்கை

சிந்துஜன் நமஷி

 326 total views,  1 views today

(Visited 89 times, 1 visits today)
 
சிந்துஜன் நமஷி

பொறுப்பு துறத்தல் -கவிதை – சிந்துஜன் நமஷி

பொறுப்பு துறத்தல்   பெரும் ஆடு வேள்விக்கெண்டு வெள்ளையம்மாள் வளத்த ஆடு செவ்வரத்தம்பூவில மாலை போட்டு மலை நெடுக இழுத்து வந்து அய்யனார் காலடில கட்டிப்போட்டாள் பித்தளை குடத்தில தண்ணிநிறைச்சு […]