இப்படிக்கு சிலுவையில் அறையப்படாதோர்-கவிதை-மனு தீரன்

இப்படிக்கு சிலுவையில் அறையப்படாதோர்

மனு தீரன்

வாருங்கள் கூழாங்கற்களைக் கொண்டு
எங்களை நோக்கி வீசி எறியுங்கள்

எம் காலடியில் நிகழ்ந்து கிடக்கும்
பொட்டல்களில் புதைத்து விடுகிறோம்

உங்கள் நிணத்து நீர் வார்த்தைகளால்

வேணுமென்றால் காறி உமுழ்ந்து
விடுங்கள் இன்னுமென்ன எமக்கான
பிரபஞ்சம் அதனை உறிஞ்சிக்
கொள்ளட்டும்

காற்று வீசும் திசையிலே நீங்கள் ஓடிச்
சென்று எங்களை நீங்கள் எதிர்
பாருங்கள்

அதன் எதிர்த்திசையில் எரியும்
ஆன்மாவோடு பயணித்துக்
கொண்டிருக்கிறோம்

அல்லது கண்ணாடிபோலொன்று
உங்கள் முகங்களில்
ஒட்டியிருக்கிறீர்களே அதனால்
எங்களைப்பார்த்து நகையுங்கள்

நாங்கள் உங்களுக்காக இப்
பிரபஞ்சத்திடம் அழுது
இறைஞ்சுகிறோம்

அல்லது உங்கள் போலிவாழ்வை
சத்தியம் மறந்து
இரசித்திக்கொண்டிருங்கள்
உங்களுக்கான பாவங்களுக்காக
நாங்கள் மரணிக்கிறோம்

பாவம் நாம் இப்போது சிலுவையில்
அறையப்படுவதில்லை
இங்கிருப்பவர்கள் அவ்வளவுக்கு
கொடூரமானவர்களல்ல

ஆனால் ஆணிகள் மட்டுமே
அறையப்படுகிறது அவர்களால் நாம்
புடுங்கமுடியாத படிக்கு

000000000000

வெறுமனே நகர்தலுக்கான காலம்

சிற்சில நிகழ்களில்
இராமர் பாலத்தில் கால்வைத்து
மூழ்கியும் இருக்கிறேன்

போதியின் கீழே நின்று
அந்த மூன்று ஆணிகளை ஞாயப்படுத்த
வேண்டி அப்பத்தை உண்டும்
இருக்கிறேன்.

வரலாற்றின் வார்த்தைகளின்
நாவுகளின் சூட்சுமத்தால்
நசுக்கப்பட்டதுதான்
இந் நிகழ் நாட்கள்

அதனால் ஓர் யுகப் பிழையின் சிறந்த
வார்த்தை மீதே என் கர்ச்சனை
ஏறி நிற்கிறது

எதன் பின்னும் செல்வதற்கில்லை
எதை வைத்தும் இனி அடுத்த நொடி
இல்லை
யார் மீதும் மொளனங்கள்
கலைப்பதில்லை

இது வெறுமனே நகர்தலுக்கான காலம்

கடந்தவையெல்லாம் என்னோடு
மட்டுமே சாட்சியாக இல்லை நீங்களும்
அதில் உள்ளீர்கள்

அதனால் இது என் நகர்தலுக்கான காலம்
எனதானதின் வாழ்க்கைக்காலம்
யாரையும் பிரதியாய் பெற முடியாது
இது என் நகர்தலுக்கான காலம்.

மீண்டுமென்பதில்லாமையே
குற்றமகற்றிய வாழ்தல்.
நான் மாற நினைக்கும் போதெல்லாம்
ஏதோ ஒன்று அதீதமாய் என்னிடம்
மாறியே இருந்தது

எந்த சூலாயுதமோ வேதங்களோ
கையில் ஏந்தி வரவிலை எந்த
வார்த்தைகளும் இறக்கப்படவுமில்லை
எனக்கு
ஆகையால் ஏற்கனவே பிறரும் ஏதோ
ஒன்றில் மாறி இருந்தனர்
பிறரை மாற்றுதற்கு எந்த
காரணங்களுமில்லை எனக்கு

இருபத்தோராம் நூற்றாண்டு கி.மு
வின் பிரதியெனின் அதுவும் யாரோ
ஒருவரின் பிரதியே

ஒரு அனுகூலமற்ற பிறரொருவரின்
வாழ்தலைப் பின்பற்றிக்
கொண்டிருக்கையில்
முழு மௌனமாகமுடிவதிலை நாம்
உரத்த குரலில் நம் ஆன்மாவால்
பேசமுடிவதிலை
மூச்சுக்காட்டின் வாழ்வில் மீண்டும்
ஜனிக்க முடிவதிலை

மீண்டும் அதே கோபம் மீண்டும் அதே
வார்த்தை மீண்டும் அதே ஏக்கம்
மீண்டுமென்பது பெரும் குற்றம்
அதே மீண்டும் மீண்டும்
அதே மீண்டும் மீண்டும் …
மீண்டும் என்பதுதான் எனதும் உனதும்
உன் தாத்தனாரின் வாழ்வும் அவரின்
முந்தைய மூதாதையர் வாழ்வும்

ஏனெனில் நான் முன்பொருமுறையும்
இதை வாசித்துக்கொண்டிருந்தேன்
அதனால்தான் அதே கோணங்களில்
என்னால் எழுத முடிக்கிறது

மீண்டுமென்பதில்லாமையே
குற்றமகற்றிய வாழ்வு
ஆனால் நானோ
நீயோ வாழமுடிவதில்லை அவ்வாறு

மனு தீரன்-இலங்கை

 

 395 total views,  1 views today

(Visited 58 times, 1 visits today)