அமெரிக்கா கியூபாவின் வளர்ச்சியைத் தடுக்கிறதா? – மொழிபெயர்ப்பு கட்டுரை-தேசிகன் ராஜகோபாலன்

ஒரே இரவில், 130,000 பேர் அமெரிக்காவிற்காகவும் ஜிம்மி கார்ட்டர் மற்றும் பில் கிளிண்டனை தோற்கடிப்பதற்காகவும் கியூபாவை விட்டு வெளியேறினர். பின்வருபவை பெர்னாண்டோ மொராய்ஸ் எழுதிய பனிப்போரின் கடைசி சிப்பாய்கள் (The Last Soldiers of the Cold War) என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்படுகின்றது. ‘தற்போது எதைப் படிக்க வேண்டும்?’ என்னும் கட்டுரையில் றொபெர்ரோ பெர்னான்டெஸ் றிடாமெர் சமகால கியூபாவை அறிந்துகொள்வதற்கு மொராய்ஸின் மேற்படி புத்தகத்தையும் பரிந்துரைத்துள்ளார். 1959ஆம் ஆண்டு பிடெல் காஸ்ரோ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் குடிவரவு நெருக்கடி அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவில் யதார்த்தத்தை விடவும் மூர்க்கத்தனமானதாகவும் அதிக பதற்றமானதாகவும் இருந்தது. இத்தகைய நிலையானது கியூபாவின் மக்கட்தொகையில் ஏறத்தாழ மூன்று சதவீத மக்கள் அதாவது 200,000 மக்கள் 1962ஆம் ஆண்டுவரை நீடித்த கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது.

குடியேற்றத்தின் காரணமாக மியாமியின் குடிப்பரம்பலானது 300,000-லிருந்து சடுதியாக 500,000-மாக அதிகரித்தது. கியூபாவினர் வருவதற்கு முன்னர், பத்து உள்ளுர் வாசிகளில் எட்டுபேர் வெள்ளையர்களாகவும் இரண்டுபேர் மட்டுமே வெள்ளையர் அல்லாதவராகவும் – கறுப்பர்கள் மற்றும் ஸ்பெயின் அல்லது இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். குடியேற்றவாசிகளின் முதலாவது அலையானது படிஸ்டா அரசாங்கத்தின் சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்காகவும், போதைப்பொருள் கடத்துபவர்களையும், சூதாட்டக்காரர்களையும் விபச்சார புரோக்கர்களையும் உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், பெரும்பாலானவர்கள் தயாளமனம்படைத்த துறைசார் வல்லுனர்களாகவும் – அனைத்திற்கும் மேலாக வைத்தியர்களாகவும் இருந்ததாக புள்ளி விபரம் தெரிவித்தது. புரட்சிகர அரசாங்கத்தில் சுகாதாரத்துறையும் தேசியமயமாக்கப்பட்டதுறைகளில் முதலாமிடத்தை வகித்ததால் வர்த்தகர்கள், வங்கியாளர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆகியோரைப் போன்றே அவர்களின் சொத்தும் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. குடிவரவின் முதலாவது அலை, கியூபாவில் நடைபெற்றது இலத்தீன் அமெரிக்காவின் மற்றுமொரு இராணுவப் புரட்சியே என்ற மாயையைத் தோற்றுவித்தது.

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் துணையுடன் ஆறுவருடங்களுக்கு முன்னர் கௌத்தமலாவில் இராணுவப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜேகோபோ ஆர்பென்ஸினால் முன்னெடுக்கப்பட்ட விவசாய சீர்திருத்தத் திட்டத்தினால் அமெரிக்காவின் பன்நாட்டு நிறுவனமான யுனைடெட் ஃப்ரூட் கம்பெனி என்னும் பழங்கள் உற்பத்தி நிறுவனத்தின் நலன்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக கௌத்தமாலாவின் அதிபரைப் பதவியிலிருந்து தூக்கியெறிவதற்காக அந்தப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது. அது இன்றளவும் ஒவ்வொருவரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. அமெரிக்கக் கடற்கரையிலிருந்து 160 கிமீ தொலைவிலுள்ள கியூபாவில் ஒரு கம்யூனிஸ அரசாங்கம் ஆட்சி செய்வதை அமெரிக்காவால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

“மியாமியில் குடியேறியுள்ள அனைத்து குடும்பத்தினரும் தங்களது பணியாளர்களுடனும் நாய்களுடனும் விரைவில் கியூபாவிற்குத் திரும்புவார்கள்.” என்று தான் நம்புவதாக கியூபாவின் நிபுணரும் கல்விமானுமான ஜீசஸ் அர்போலியா எழுதினார். கத்தோலிக்க திருச்சபையினர் எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து பெருந்திரளான மக்கள் தப்பிப்பதற்கு ஏற்பாடுசெய்திருந்த மனோநிலையிலேயே கியூப மக்கள் இன்னும் வாழ்கின்றனர்.

ஹவானாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான முதலாவது மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில், சிஐஏவும் மியாமியின் பேராயர் கோல்மன் கரோலும் பெருமளவிலான குழந்தைகளை கியூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றும் ஒரு பயங்கரமான திட்டத்தை கியூப திருச்சபையின் மறுதலிக்க முடியாத ஆதரவுடன் முன்னெடுத்தனர். ‘ஒப்ரேசன் பீட்டர் பேன்’ என்று பெயரிடப்பட்டதும் பின்னர் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் கவனத்தையீர்த்ததுமான அந்த நடவடிக்கை 1960-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் ஒரு இரவு வேளையில், ஸ்வேன் வானொலி என்ற பெயரில் மியாமியிலிருந்து கியூபாவிற்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக இயங்கிய வானொலியில் அதன் அறிவிப்பாளர் ஒருவரின் அமைதியைக் குலைக்கும் அறிவிப்பு வெளியானது.

“கியூப தாய்மார்களே! புரட்சிகர அரசாங்கம் உங்களது குழந்தைகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளது!” என்று அந்த அறிவிப்பாளர் ஓலமிட்டார்.

“உங்கள் குழந்தைகள் ஐந்து வயதுடையவராக இருந்தால், அவர்கள் உங்களது குடும்பத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பதினெட்டுவயது பூர்த்தியடைந்த பின்பே உங்களிடம் திரும்பி வருவார்கள், அவர்கள் பொருள்முதல்வாத பேய்களாக மாற்றப்படுவார்கள்! கவனம், கியூப தாய்மார்களே! உங்களது பிள்ளைகளை அரசாங்கம் திருடுவதற்கு அனுமதிக்காதீர்கள்!” என்று அந்த அறிவிப்பாளர் தெரிவித்தார்.

அடுத்த நாள் காலை இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ உறுப்பினர்களால் எழுதப்பட்ட அந்த கற்பனை சட்டத்தைக் குறிப்பிட்டு “அது எந்த வேளையிலும்” கியூப அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று துண்டுப் பிரசுரம் மூலம் கியூபா நாடு முழுவதிலும் வீதிகளில் தூவப்பட்டது. கற்பனை வளத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த சட்ட விதிகளை உள்ளடக்கிய ஆவணத்தில் “கலாநிதி பிடெல் காஸ்ரோ, பிரதமர்” என்று கையொப்பமிடப்பட்டிருந்ததுடன் அந்தக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஓஸ்வெல்டோ டோர்டிகோஸின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. அந்த சட்டவிதிகளிலும் பந்திகளிலும் இடம்பெற்றிருந்த விடயங்கள் தாய்மார்களையும் தந்தையரையும் பீதியடையச் செய்யும் வகையில் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.

விதி 3:

 தற்போதைய சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து, இருபது வயதிற்குக் குறைந்த சிறுவர்கள் அரசினால் பொறுப்பேற்கப்படுவார்கள்.

விதி 4:

 ஐந்து வயதுவரையான சிறுவர்கள் தமது பெற்றோரின் கண்காணிப்பில் தொடர்ந்தும் இருப்பவர், அதிலிருந்து அவர்களது பௌதிக, உளவியல் மற்றும் குடியியல் கல்வி ஆகியவை குழந்தைகள் வட்டங்களுக்கான அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். அதுவே மேற்குறித்த சிறுவர்களின் பாதுகாவலராகச் செயற்படுவதற்குப் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாகும்.

விதி 5:

அவர்களின் கலாசாக் கல்வி மற்றும் குடியியல் பயிற்சி ஆகியவற்றை நோக்குகையில், பத்து வயதிலிருந்து, ஒவ்வொரு மைனரும் அத்தகைய குறிக்கோளை எட்டுவதற்குப் பொருத்தமான இடத்திற்கு பிரித்தெடுத்து அனுப்பப்படுவார்கள், அது எப்போதும் தேசத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டதாகவே இருக்கும்.

பந்தி 1:

இந்த சட்டம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, ஒவ்வொரு சிறுவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பந்தி 2:

தற்போதைய சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் இருப்பது புரட்சிக்கு எதிரான குற்றமாகக் கருதப்படும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இரண்டு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மறைமாவட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் பிரையன் வால்ஷ். இவர் ஆறு அடி உயர, ஐம்பது வயதான ஐரிஷ் பாதிரியார். ஒரு குத்துச்சண்டை வீரருக்குரிய உடலமைப்புடன், இளம் வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வந்தவர். சில வாரங்களுக்குப் பிறகு ஒரு அக்டோபர் இரவில் ஹவானாவுக்கு வந்த வால்ஷ், தனது பயணப் பொதியில் 500க்குக் குறையாத அமெரிக்காவிற்கான வெற்று நுழைவு விசாக்களையும் கொண்டு வந்திருந்தார். அவர் ஒரு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதைக் கண்டார். புரட்சிகர அரசாங்கத்தின் மறுப்புகள் கியூப குடும்பங்களின் அச்சங்களைச் சிறிதும் தணிக்கவில்லை. கூடுதலாக, நாடு முழுவதிலும் உள்ள பாரிஷ் பாதிரியார்கள், குறிப்பாக குறைந்த படித்த மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில், பெற்றோரிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மாஸ்கோவிற்கு அனுப்பி, ரஷ்ய மக்களின்; நுகர்வுக்காக அவர்கள் பொதிசெய்யப்பட்ட உணவாக மாற்றப்படுவார்கள் என்னும் கொடூரமான வதந்தியை பரப்பும் பணியை அவர்கள் வலிந்து ஏற்றுக்கொண்டனர்.

அத்தகைய விரும்பத்தகாத பயங்கரமான கதைகளை அரசியல் இலாபங்களுக்காகப் பரப்புவது அது ஒன்றும் முதல்முறையல்ல. கம்யூனிஸ்ட்டுகள் மனிதர்களை உட்கொள்பவர்கள் என்ற மிலேச்சத்தனமான கதைகளை இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தவுடன், பாசிச பிரச்சார இயந்திரம் துண்டுப்பிரசுரங்களுடன் இத்தாலிக்குள் நுழைந்தபோது செம்படையிடம் சரணடைந்த இத்தாலிய படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஸ்டாலினிய ரஷ்யாவில் பட்டினியால் வாடியவர்களுக்கு உணவாக்கப்பட்டனர் என்ற கதையை அவிழ்த்துவிட்டனர்.

1960 ஆம் ஆண்டின் இறுதியில், கியூப புரட்சி ஏற்கனவே விவசாய சீர்திருத்தங்கள், வங்கி முறையை தேசியமயமாக்குதல் மற்றும் கிட்டத்தட்ட ஆயிரம் தொழிற்சாலைகளை “கட்டாயமாக கையகப்படுத்துதல்” போன்ற தீவிர மாற்றங்களை செயல்படுத்தியது. அவற்றில் நூறு சர்க்கரை ஆலைகள் மற்றும் பேகார்டி ரம் தொழிற்சாலை, அமெரிக்க டுபோன்ட் ரசாயன தொழிற்சாலை போன்ற சில ராட்சத உற்பத்தி நிறுவனங்களும் அடங்கும்.

இத்தகைய புரட்சிகர நடவடிக்கைகள் நிலவிய போதிலும், ஓபரேசன் பீட்டர் பேனின் நடவடிக்கைகளானது கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுமூக உறவு நிலவுவதான தோற்றத்தையே வெளிப்படுத்தியது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கியூபாவின் தலைநகரை ஃபுளோரிடாவுடன் இணைக்கும் ஃபுளோரிடா நீரிணையை இருபுறமும் விமானத்தின் மூலம் கடந்தனர். ஹவானாவையும் மியாமியையும் ஆகாயமார்க்கமாக இணைக்கும் பாதையை கியூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு குழந்தைகளை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு பிரியன் வால்ஷ் தெரிவு செய்தார்.  குழந்தைகளுடன் பெற்றோர்களும் வரக்கூடாது என்று சிஐஏ கோரிக்கை வைத்தது. அருட்தந்தை தனது முதல் பயணத்தின்போது கொண்டு சென்ற 500 வெற்று விசாபடிவங்கள் கம்யூனிச நரகத்திலிருந்து 5 சதவிகித சிறுவர்களைக்கூட மீட்டெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை.

பல வருடங்களுக்குப் பின்னர் இதனைக் குறித்து தனது தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பிடல் காஸ்ரோ தனது கருத்தை பின்வருமாறு வெளிப்படுத்தியிருந்தார்:

“புரட்சி ஒரு சுதந்திரமான மக்களின் ஒரு தன்னார்வ செயலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், நாட்டிலிருந்து புறப்படுவதற்கு நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை” என்று கியூபா தலைவர் நினைவு கூர்ந்தார்.

ஏகாதிபத்தியத்தின் பதிலானது ஏனைய யுத்த நடவடிக்கையுடன் பீட்டர் பேனின் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ‘பெட்ரோ பேன்’ என்னும் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கணக்கின்படி 14,048 ஆண், பெண் சிறுவர்கள் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் அமெரிக்க பொது வாழ்வில் கௌரவமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். உதாரணமாக குடியரசின் செனட்டரான மேல் மார்டினஸ், (Mel Martínez) மியாமியின் முன்னாள் மாநகர மேயராகத் திகழ்ந்த தோமஸ் ரிகாலிடோ (Tomás Regalado), ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷினால் ஸ்பெயின் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட எடுவர்டோ அகுய்ரி (Eduardo Aguirre), 2009ஆம் ஆண்டு அன்றைய ஹோன்டுராஸின் ஜனாதிபதியாகத் திகழ்ந்த மானுவல் ஸெலாயாஸால் உறுதியளிக்கப்பட்டதன்படி அந்நாட்டுத் தூதுவராக நியமனம் பெற்றிருந்த ஹ_கோ லோரன்ஸ் (Hugo Llorens) ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஆரம்பத்தில் கத்தோலிக்க அனாதை இல்லங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் வைக்கப்பட்ட இந்த வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மீண்டும் ஒருபோதும் தங்கள் தந்தையையும் தாய்மார்களையும் பார்க்க மாட்டார்கள். கியூபப் புரட்சியின் மிகவும் வியத்தகு மற்றும் வேதனையான அத்தியாயங்களில் ஒன்றான ‘ஆபரேஷன் பீட்டர் பான்’ 1962 -ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. கியூபாவின் சட்டத்திருத்தத்தில் ஜனாதிபதி ஜான்சன் கையெழுத்திட்டதன் பின்னர், 1966 ஆம் ஆண்டின் இறுதியில் மூன்றாவது இடம்பெயர்வு ஏற்பட்டது. இது 1959 ஆம் ஆண்டு முதல் நிலவும் அமெரிக்க அதிகாரிகளின் மனநிறைவான கண்ணின் கீழ் தப்பிப்பிழைத்த ஒரு சூழ்நிலையின் சட்டப்பூர்வ அங்கீகாரமாகும். வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அமெரிக்காவிற்கு வருகை தரும் கியூப நாட்டவருக்கு அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருந்தாலும் வேறுநாடுகளிலிருந்து குடியேறிய எந்த நாட்டினருக்கும் வழங்காத சலுகைகளை வழங்கியது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைகள் சபலத்திற்குட்படுத்தும் அழைப்பிதழாகத் திகழ்ந்தன: அரசியல் தஞ்சம் கோரல் மற்றும் ஆவணங்கள் நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கின. வேறுவிதமாகக் கூறினால், பணியாற்றுவதற்கான அங்கீகாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கோருவதற்கான உரிமைகள் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் இருபத்தோரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டன. இது மெக்சிகோவின் எல்லையூடாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் இலத்தீன் அமெரிக்க நாட்டினருக்கு காட்டப்படும் அணுகுமுறைக்கு நேர் எதிரானது. அடுத்து வரும் நான்காண்டுகளில் வராதரோவையும் மியாமியையும் ஆகாயமார்க்கமாக இணைக்கும் கடற்கரையில் குடியேற்றுவதற்காக 270,000 கியூபநாட்டவரை அமெரிக்கா அழைத்துக்கொண்டது.

நான்காவதும் அதிரவைக்கும் சப்தமிக்கதுமான நெருக்கடி 1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மதியவேளையில், ஆறு கியூபர்களினால் ஹவானாவில் நிலைகொண்டிருந்த பெரு நாட்டின் தூதரக வளாகத்திற்குள் வேலிக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு பேருந்து செலுத்தப்பட்டது. அந்த ஆறுபேரும் நுழைவதற்குத் தடையாய் கதவருகில் காவலுக்கு நின்ற ஒரேயொரு சிப்பாயும் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நிமிடங்ளுக்குப் பின்னர், அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்ததும், அந்த ஆறுபேரும் அரசியல் அகதிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு படைவீரரைக் கொலை செய்தமையினால் அவர்களும் குற்றவாளிகளே என்றும் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் கியூபா கோரியது. இருப்பினும் எமது நாடு அவர்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுப்பதற்குத் தீர்மானித்துவிட்டது என்று கூறி பெரு நாட்டுத் தூதுவர் கியூபாவின் கோரிக்கையை நிராகரித்தார். சூழ்நிலையின் தாக்கம், பிடெல் காஸ்ரோவை 1975ஆம் ஆண்டு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்த ஜெனரல் ஜுவன் வெலஸ்கோ அல்வடோவின் ஆட்சியைக் கவிழ்த்த பெருநாட்டின் தலைவரான ஜெனரல் ஃபிரான்சிஸ்கோ மொரெல்ஸ் பெர்முடெஸ{டன் நேரடியாக மோதும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

உள் நுழைந்த அந்த ஆறுபேரையும் அரசியல் தஞ்சம் கோருபவர்களாக ஏற்றுக்கொண்டதனூடாக, பிடெல் காஸ்ரோவை தப்ப முடியாத அளவிற்கு ஒரு மூலையில் அடைத்துவிட்டதாக பெர்முடஸ் நினைத்திருந்தார். அது கியூபாவிலிருந்து குழுவாக மக்களை வெளியேறுவதற்கு அனுமதியளிக்கும் என்றும், நாட்டிலிருந்து வெளியேறுவதற்குரிய ஒரு சீரிய திட்டத்தை அரசாங்கம் வகுக்கும் என்றும் அவர் நம்பினார். ஒட்டுமொத்தத்தில் வன்முறை உட்பட அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு தூதுவராலயத்தில் உள்நுழைவதை நோக்கமாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கான அனுமதியை மறுக்காமல் இருப்பது அந்த ஆறு கியூப நாட்டவர்களையும் தியாகிகளாக மாற்றிவிடும் அதே நேரம் மீண்டும் ஒருமுறை கியூபாவை மனித உரிமைகளை மீறிய ஒரு நாடாக முத்திரை குத்தப்படும். அனைத்து முடிவுகளும் எதிர்பாராத அளவுக்கு இராஜதந்திர உறவில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தன.

பிடெலின் பதில் நடவடிக்கை எவ்வாறு அமையும் என்று ஜெனரல் பெர்முடெஸ் (Bermúdez) எதிர்பார்த்ததற்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை பிடெல் எடுத்திருந்தார். ‘பெட்ரோ ஓர்டிஸ் கப்ரெரா’ (Pedro Ortiz Cabrera) என்னும் படைவீரரின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை பெருநாட்டு அரசாங்கம் ஒப்படைப்பதற்கு மறுத்தமையினால் கியூப அரசாங்கம் அந்த நாட்டுத் தூதரகத்திற்கு வழங்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான தனது உரிமையை நிலைநாட்டுகிறது என்னும் பெர்முடெஸின் நடவடிக்கைக்கான அவரது பதில் கிரான்மா என்னும் சஞ்சிகையின் ஏப்ரல் மாத வெளியீட்டின் முதலாம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. நாட்டை விட்டு வெளியேற விரும்பும் அனைவரும் தாராளமாக வெளியேறலாம் என்று இராஜதந்திர பணியகம் குறிப்பிட்டது. தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக எண்ணிய ஒரு செயல் எப்படி முதலில் ஒரு அமளியாகவும் பின்னர் ஒரு நெரிசல் மிக்கதாகவும் மாறியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பத்தாயிரம் மக்கள் ஆறு படுக்கையறைகளைக் கொண்ட ஒரு குடியிருப்பின் முன்னால் முகாமிட்டிருந்தனர். கூட்டமாக வந்த மக்கள் அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். இதனால் அச்சமடைந்த அந்த இராஜதந்திர நடவடிக்கைக்குப் பொறுப்பான தூதுவர் எட்கார்டோ டி ஹபிச் (Edgardo de Habich) அந்த வீட்டைக் கைவிட்டு, தன்னுடன் வர்த்தக உறவு வைத்திருந்தவர்களைத் தவிர தனது முழு இராஜதந்திர உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

ஆக்கரமிப்பு நடைபெற்று இரண்டு வாரங்கள் கழிந்த பின்னரும், இன்னமும் ஏராளமான மக்கள் தூதரகத்தினுள் இருந்தனர். பெரு வழிக்கு வந்து சரணடைந்து, ஒரு குறுகிய கால அறிப்பின் மூலம் திரண்ட பத்தாயிரம் பேரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தது. அது ஜிம்மி கார்ட்டர் ஆட்சிக்கு வந்த நேரம். கியூபப் புரட்சி முடிவடைந்ததன் பின்னரான காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் குடியிருந்தவர்களில் கார்ட்டர் மட்டுமே கியூபாவுடன் நல்லுறவைப் பேணினார். தீவிற்குச் செல்வதற்கான அனைத்துவிதமான பயணத் தடைகளையும் நீக்குவதற்கும் ஹவானா மற்றும் வாஷிங்டன் ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாக்கின்ற துறைகளைத் தோற்றுவிப்பதற்கும் அவர் பொறுப்பேற்றிருந்தார். இதனை அவரே,

“ஒரு குறைந்தபட்ச இராஜதந்திர பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்” என்று தனது வார்த்தைகளில் கூறினார்.

பிரேசிலிருந்து வெளிவந்த வேஜா என்னும் பத்திரிகைக்கு 1977ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலில், ஐக்கிய அமெரிக்காவில் சில மாற்றங்கள் ஏற்படுவதை பிடெல் அங்கீகரித்திருந்தார்.

“எய்சென்ஹோவர், கென்னடி, ஜோன்சன், நிக்ஸன் மற்றும் ஃபோர்ட் ஆகியோர் கியூபாவுடன் ஒரு மோதல்போக்குக் கொள்கையைப் பற்றிப்பிடித்திருந்தனர்,” என்று அந்த வார சஞ்சிகைக்குத் தெரிவித்த கியூப ஜனாதிபதி மேலும் “இதுவே பதினெட்டு வருடங்களாக நீடித்திருந்த அந்தக் கொள்கையுடன் ஒத்துப்போகாத முதலாவது அமெரிக்க அரசாங்கமாகும். நிக்ஸன் ஒரு கோமாளியாகத் திகழ்ந்தார், எத்தகைய தர்மநியாயங்களுமற்ற ஒரு தனிநபராகவே திகழ்ந்தார். கார்ட்டரும் அவரைப்போன்றே செயற்படுவார் என்று நான் நினைக்கவில்லை.” என்றார்.

இத்தகைய அறிவிப்பு வெளிவந்து மூன்றாண்டுகளின் பின்னர், அமெரிக்காவின் உள்விவகாரத்தில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. பழமைவாதக் கட்சியின் அமெரிக்க பெரும்பான்மை கார்ட்டரின் உடன்படிக்கைகளை பனாமாவின் ஜனாதிபதி ஓமர் டோரிஜோஸ்-உடன் 2000ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்படிக்கையானது பனாமா கால்வாயைக் கட்டுப்படுத்துவதற்கு அடகு வைத்ததைப் போன்றது என்று வதந்தியைக் கிளப்பியது. சோவியத் துருப்புக்கள் 1979ஆம் ஆண்டு ஆப்கான் மீது படையெடுத்ததை மறந்து சோவியத் யூனியன்மீது கரிசனை காட்டுபவராக கார்ட்டர் இருக்கிறார் என்று பொதுமக்களும் கருதினர். ஆனால் அவரது புகழை முடிவிற்குக் கொண்டுவரும் விதமாக 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி இரவு, வெள்ளை மாளிகை ஒப்புதல் அளித்த ‘கழுகின் சேதம்’ (Operation Eagle Claw) நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தது. எட்டு உலங்கு வானூர்திகளும் ஆறு ஹெர்குலஸ் ஊ-130 விமானங்களும் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த தொன்னூறு தீவிரவாத எதிர்ப்பு கொமான்டோ வீரர்களும் பஹ்ரைன் ராச்சியத்திலிருந்து நிமிட்ஸ் என்னும் விமானந்தாங்கிக் கப்பலில் புறப்பட்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்னர், டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் கைப்பறியிருக்கும் இரான் நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் ஐம்பத்து இரண்டு அமெரிக்கர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும். ஏற்கனவே இரானிய எல்லைக்குள் இருந்தபோதிலும் தலைநகரிலிருந்து 500கிமீ தொலைவில் இருந்த டாஷ்ட்-இ-காவிர் பாலைவனத்தில் ஏற்பட்ட மண்புயலால் பாதையிலிருந்து தூக்கி வீசப்பட்டன. பணியில் ஈடுபட்டிருந்த ஒரு உலங்கு வானூர்தி போக்குவரத்து விமானத்துடன் மோதியதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. எட்டு அமெரிக்க படைவீரர்கள் மரணமடைந்தனர், பணயக் கைதிகள் இரானியர்களின் பிடியிலேயே தொடர்ந்தும் இருந்தனர். ஓபரேசன் கிளாவினால் ஏமாற்றத்துடன் தப்பிப்பிழைத்தவர்கள் தொண்ணூறு நாட்களுக்குப் பின்னர், ஹவானாவில் உள்ள பெரு நாட்டுத் தூதரகம் வெளியேறியதன் பின்னர், வாஷிங்டனுக்குத் திரும்பினர்.

சர்வதேச சமூகம்; வெளிப்படுத்திய கோபத்தின் காரணமாக தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த 10,000 அகதிகளில் ஆயிரம்பேரை ஏற்றுக்கொள்வதற்கு பெரு சம்மதித்தது. கனடா 600 பேரையும் கொஸ்டா ரிக்கா 300பேரையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்தனர். அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியிருந்த அமெரிக்க ஜனாதிபதி தனது புகழை மீட்டெடுப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைத்திருந்தார். வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து தான் கியூபாவுடன் கடைப்பிடித்து வரும் மென்வலு ராஜதந்திர அணுகுமுறைக்கு மாறாக, ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்து ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்.

“திறந்த மனத்துடனும் விரிந்த கைகளுடனும்” என்னும் புதிய பெயரில் பழைய சட்டமூலத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்குள் வருகின்ற அனைத்து கியூபர்களும் அரசியல் தஞ்சம், வதிவிட அந்தஸ்து, வேலை செய்வதற்கான அனுமதி மேலும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட ஏனையவற்றையும் பெறுவர் என்று அறிவித்தார்.

00000000000000000000000000

ஆசிரியர் குறிப்பு:

பெர்னான்டோ மொரைஸ் என்பவர் பிரேசிலின் முக்கியத்துவமிக்க சமகால எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். அவர் எஸ்ஸோ என்னும் விருதை மூன்றுமுறைகளும் ஊடகத்துறைக்கான ஏப்ரல் விருதை நான்கு முறைகளும் பெற்றுள்ளார். அவரது படைப்புகள் பதினெட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு மில்லியனுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளன.

000000000000000000000

Translation from the Portuguese By Robert Ballantyne with Alex Olegnowicz Editorial note: Fernando Morais is one of Brazil’s most important contemporary writers and journalists. He has received the Esso Award three times and the April Award for journalism on four occasions. Morais’s works have sold more than two million copies in more than nineteen countries.

ரோபர்ட் பாலென்டைனுடன் அலெக்ஸ் ஒலெக்நோவிக்ஸ் இணைந்து போர்த்துக்கேய மொழியிலிருந்து மொழிபெயர்த்துள்ளனர்.

தமிழில் :

தேசிகன் ராஜகோபாலன் -இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 39 times, 1 visits today)