ஈழத்து தமிழ் அரங்கில் உளவியல் நாடகங்களும் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எதிர் கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்களும்-கட்டுரை-சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்

ஈழத்தின் நாடக வரலாற்றில் தமிழ் அரங்கில் முக்கிய நபராக விளங்குபவர் குழந்தை ம.சண்முகலிங்கம் ஆவார். நாடக எழுத்தாளர், நாடக பயிற்சியாளர், நாடக நடிகர் என பல்வேறு வகையில் நாடகத்துறையுடன் பிரிக்க முடியாத இணைப்பினை கொண்டவராவார். இன்று வரையில் நூற்றிஇருபதுக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். உலக பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர்களான சோபோகிளிஸ், ஹென்றி இப்சன், அன்ரன் சொக்கோ, பேட்டேல் பிரக்ச்ட், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் நாடகங்களையும் யப்பானிய நாடகங்களையும் தமிழ்மொழி பெயர்த்துள்ளார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது நாடகங்களை ஒரு அரங்கியல் ஆளுமையாகவே எழுதுகிறார். தான் வாழ்கின்ற தான் உருவாக்க விரும்புகின்ற அரங்கிக்கான வரண்முறைகளையும் அதற்கான சாத்தியப்பாடுகளையும் அறிந்த ஒருவராக நாடகங்களை உருவாக்குகின்றார். அத்துடன் இவருடைய மொழி நடைப்பாங்கு என்பதும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது.

குழந்தை ம.சண்முகலிங்கத்தினுடைய ஆரம்ப நாடகங்களில் மொழிநடையானது இயல்பான பேச்சு நிலைக்கு அப்பாற்பட்ட ஒரு எழுத்து நிலைப்பாங்காகவே இருந்தது. இதனால் பல நடிகர்கள் இதனை பேசுவதில் சில சிரமங்களை எதிர் நோக்கினர். இந்த பண்பு படிப்படியாக மாறி ‘அன்னை இட்ட தீ’, ‘எந்தையும் தாயும்’ ஆகிய நாடகங்களில் மிக இயல்பானதாக மாத்திரமல்லாமல் “பிறெக்டிய தொலைப்படுத்தல்” தொனியிலிருந்தும் விடுபட்டவையாகவும் காணப்பட்டன என பேராசிரியர். சி.மௌனகுரு அவர்கள் ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நாடகங்கள் முழுமை பெற “இணைவாக்கம்” என்பது முக்கியமான அம்சமாக விளங்கியது. அதாவது இசை, உடையமைப்பு, காட்சியமைப்பு, ஒளி, மேடை அசைவுகள் என அனைத்தையும் நாடகக் கதையுடன் இணைத்து ஆற்றுகையில் முழுத்தன்மையினை ஏற்படுத்தும் தன்மையினை காணலாம்.

பல்கலைக்கழக மட்டத்தில் நாடகத்தை ஒரு துறையாகப் பயில்வது என்பது வெறுமனே அரங்கு பற்றிய தரவுகளை மாத்திரம் அறிவதாக அமையாது. இத் தரவுகள் யாவும் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட பண்பாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட சிந்தனை மரபின் மனித உறவுகளின் ஊடாட்டங்கள் (ஐவெநசயஉவழைn ழக ர்ரஅயn சுநடயவழைn) எவ்வாறு இருந்தன என்பதையும் அந்த ஊடாட்டங்கள் எத்தகைய முரண் (யுபழn) நிலை மோதல்களுக்கு இடமளித்தன என்பதையும் அந்த மோதல்கள் அச்சமூகத்தின் மனிதத்துவத்தை எவ்வாறு பாதித்தன? என்பதையும் தெரியப்படுத்தல் வேண்டும். உண்மையில் அந்த நிலையின் போதே நாடகம், மானுடத்தின் வரலாறாக மாறுகின்றது எனக்குறிப்பிடுகின்றார்.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் ஈழத்து தமிழ் அரங்கியலின் மிகவும் காத்திரமான பல நாடகங்களை உருவாக்கிய ஒருவராக காணப்படுகின்றார். இந்த வகையில் இவரினால் பல்வேறுபட்ட நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. “யுத்தம்” என்பது தமிழர் வரலாற்றில் கலைப்படைப்புக்களை ஸ்தம்பிதமடைய செய்திருந்த காலப்பகுதியாக காணப்பட்டது. கலைஞர்களுக்கும் கலைப்படைப்புக்களுக்குமான தேவைப்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் “போர்” என்பது வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது கொடுமையான ஒரு விடயமாகும். என்று குறிப்பிடுகின்றார்.

எனினும் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது நாடகங்கள் எழுதும் பழக்கத்தை கைவிடவில்லை. தொடர்ச்சியான நாடக உருவாக்கங்களில் தனது கவனத்தை செலுத்தினார். இவரது நாடகங்கள் குறிப்பாக மேலைத்தேய நாடகக் கோட்பாடுகள், கிரேக்க அவலச்சுவை கோரஸ் முறைமை, அங்கவீச்சு நாடகங்கள், இப்சனின் சமுதாய சித்தரிப்பு முறை என்பவற்றை கற்றறிந்த புலமையுடன் கீழைத்தேய கலைவடிங்களிலும் முக்கியமாக “கூத்து” ஆட்டங்களையும் உள்வாங்கி தமிழ் இலக்கிய இலக்கண, புராண, தேவார, திருவாசகங்களை பயன்படுத்தி சிறப்பான நாடக உருவாக்கங்களை காலத்தின் தேவையை அறிந்து நாட்டின் தேவையை அறிந்தும் உளவியல் கோட்பாட்டு வெளிப்பாடுகளுடன் உருவாக்கியமை சிறப்பான விடயமாகும்.

பெரியோரினை மட்டும் இலக்காக கொள்ளாமல் எமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளையும், சிறுவர்களையும் அவர்களது “நாளைய திடமான வாழ்வியலுக்கு அடித்தளம்” இடுவதாக இவருடைய சிறுவர் நாடகப் பணியும் முக்கியமானதாகும். இதற்கு உதாரணமாக “இடுக்கண் வருங்கால்” எனும் சிறுவர் நாடகத்தை குறிப்பிடலாம். 1998ல் சிறியோருக்காக பெரியவர்களும், சிறுவர்களும் நடிக்கும் முறை உருவாகியது. இதுவும் உளவியல் ரீதியான சமுதாய ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்தியது.

இத்துடன் 1982ல் கதையோட்டப்பாங்கு உடைய “உறவுகள்” எனும் நாடகத்தை உருவாக்கினார். 1992ல் சிகிச்சை நாடகமாக உளவியலின் போர்க்கால தாக்க வெளிப்பாடுகளில் பிரதிபலிப்பாகவும் தமிழர்கள் மத்தியில் போர்க்காலப்பகுதியில் பரவலாக காணப்பட்ட நெருக்கடி நிலையான அனைத்து விதமான பிரச்சனைகளையும் இனங்கண்டு உளவள ரீதியான பலரின் உதவியுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவளத்துறையினருடன் கலந்துரையாடி “அன்னையிட்ட தீ” நாடகத்தினை உருவாக்கினார். அக்கால போரியல் வாழ்வியலின் அனைத்து தாக்கவன்மையான விடயங்களையும் சிக்கல் நிறைந்த அன்றாட போராட்ட வாழ்வியலையும் சுதந்திரமற்ற “மூடிய சிறைச்சாலை” ஆக காணப்பட்ட யாழ்ப்பாண மக்களின் அடிமை வாழ்க்கையையும் அடிப்படை மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்ட அவலம் மிக்க வாழ்வை தெளிவாக நாடக மாந்தர்களின் உளவியல் பாத்திர உருவாக்கத்தின் மூலமாக தமது பிரச்சனைகளை அவர்களே கண்டு அரங்கியல் அனுபவத்தை பெறும் வண்ணமாக ஆற்றுகை செய்தார். இந்த நாடகத்தின் ஆற்றுகையில் பல இடங்களில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடுகிறார். அன்னையிட்ட தீ நாடக ஆற்றுகையின் போது “இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்து மக்கள் சிதறி ஓடுகின்ற மரணிக்கின்ற சம்பவம் தாண்டிக்குளத்தில் இடம் பெறும் காட்சி.”

மக்கள் பலர் முகத்தினை மூடியபடி கீழே குனிந்ததாகவும் சிலர் கண்ணீர் விட்டதாகவும் பலர் தங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக நாடக முடிவில் கூறியதையும் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இராணுவத்தினர் மூலமாக இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சியில் அவர்களை இராணுவவீரன் “பிளாஸ்டிக் பைப்” ஒன்றினால் தாக்குவது போன்ற காட்சியின் போது ஆற்றுகையில் மக்களில் சிலர் மேடைக்கு பாய்ந்து வந்து இராணுவ ஆடையுடன் நின்ற நடிகரை தாக்கியதாகவும் பின்னர் இது நாடகம் என்று விளங்கப்பட்டு ஆற்றுப்படுத்தப்பட்டதாகவும் அவர் எதிர் கொண்ட அனுபவத்தை பகிர்கிறார்.

அத்துடன் அன்னையிட்ட தீ நாடகமானது உளவள ஆலோசகர்கள் பலருடன் கலந்துரையாடி எழுதப்பட்டதனால் சிறப்பான பல அம்சங்கள் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை என்பது நிதர்சனமான உண்மை என்று கூறுகின்றார். “உளவியல்” என்பது பற்றிய விளக்கத்தை வழங்கும் போது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார். “உள்ளத்தினுடைய இயல்புகளை இயம்புதல் அல்லது கூறுதல் என்பதே உளவியல் ஆகும்” மனித மனம் என்பது மிகவும் புதிர்கள் நிறைந்த ஒன்று எனவும் அது எந்த நேரத்தில் எப்படி வேலைசெய்யும் என்பதை அறிதல் சிரமம் எனவும் எனினும் “உளவியல்” என்பது எல்லா விடயங்களிலும் கலந்திருப்பதாக கூறினார். எந்த ஒரு விடயமும் உள்ளத்தின் பால் தொடர்புடையதாகவே அமைவதாகவும் கூறுகின்றார்.

மேலும் அன்னையிட்ட தீ நாடக ஆற்றுகையினை போராட்ட அமைப்புக்கள் எதிர்த்தபோதிலும் அது குழுவில் இருந்த ஒரு சிலரின் எதிர்ப்பாக அமைந்ததே தவிர ஒட்டுமொத்த இயக்கத்தின் பாராட்டுதலை பெற்றதாகவும் சிறப்பான நாடகமாக புகழ்ந்து கூறப்பட்டதாகவும் கூறினார். எந்தையும் தாயும் நாடகமானது தனது மகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதியதாகவும் இருப்பினும் தானும் உள மருத்துவரான சிவயோகனும் இணைந்து கலந்துரையாடியதன் அடிப்படையில் மேற்கொண்ட விடயமாக அதனைப்பற்றி கூறுகின்றார். நாடகம் ஆற்றுகை செய்யப்பட்ட போது “நல்லூர் தேருக்கு வாற சனம் போல” பார்வையாளர்கள் நிறைந்து காணப்பட்டதாக முகத்தில் பரவசத்தோடு கூறினார். போடப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து போட வேண்டிய தேவையும் ஏற்பட்டதாம். அதனை சாதுரியமாக கையாண்டு நாடகத்தை நிகழ்த்தி முடித்தது சுவையான அனுபவம் என்கிறார்.

நாடகம் எழுதும் பொழுது அதற்குத் தேவையான இடத்தில் பாடல் ஒன்றைப் போட வேண்டிய தேவை ஏற்படுமாம். அப்போது நாடகத்தின் சம்பவத்திற்கு பொருத்தமான வகையில் தமிழ் கவிதை வரிகள், பாடல்கள், சமய வரிகள், தேவார திருவாசகங்களை பொருத்தமாக இணைத்து சிந்தித்து சேர்ப்பது சுவையான அனுபவம் என்கிறார். மண் சுமந்த மேனியர் நாடகத்திற்கு பெயரிட்ட சம்பவம் சுவாரசியமான ஒன்றாகும் என்று கூறினார். அதாவது திரு.சிதம்பரநாதன் அவர்கள் அவசரமாக ஒத்திகை பார்த்த காரணத்தால் ஒரு நாள் சிதம்பரநாதன் ஒத்திகையை முடித்து இரவு வீட்டுக்கு நாடக கலைஞர்களோடு வந்து நாடகத்தின் பெயர் பற்றி விசாரித்த போது கலைஞர்கள் “நாமர்க்கும் குடியல்லோம்” என்ற போதும் பின்னர் சண்முகலிங்கம் அவர்கள் “மண் சுமந்த மேனியர்” என்ற அர்த்தமுள்ள பொருத்தமான பெயரை வைத்ததாக சுவாரசியமாக கூறுகிறார்.

‘மண் சுமந்த மேனியர்’, ‘அன்னையிட்ட தீ’, ‘எந்தையும் தாயும்’ ஆகியவை எண்பதுகளின் காலப்பகுதியில் புகழ் பெற்ற ஒரு நாடக வடிவங்களாக விளங்குவதோடு யாழ்ப்பாணத்து போர்க்கால அரங்க அவலத்தின் பொக்கிசங்களாக பலரும் போற்றும் நாடகங்களாக காணப்படுகின்றன என பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஈழத்து தமிழ்நாடக அரங்கப் பாரம்பரியம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் யாழ்ப்பாணத்து அரங்க வரலாற்றில் மாத்திரமன்றி ஈழத்து தமிழர் மத்தியிலான அரங்கிலும் போர்க்கால சூழலினை எழுத்துருவமாக வாசிப்போர் மனத்திரையிலும் நாடகத்தை பார்ப்போர் மனதிலும் காட்சிப்படிமங்களாக காண்பிப்பதுடன் அக்கால மக்களின் உளவியல் ரீதியான தாக்கங்களையும் அதற்கான ஆற்றுப்படுத்தல் வழி முறைகளையும் சிறப்பான வகையில் குறிப்பிட்டிருப்பதை காணமுடிகிறது. நாடகத்தின் தலைப்புக்கள் பற்றிய சில தகவல்களை சுருக்கமாக நோக்கும் பொழுது பழந்தமிழ் இலக்கிய படிமங்களை பயன்படுத்தியமையை காணமுடியும். ‘மண்சுமந்தமேனியர்’ : திருவாசகம் ‘எந்தையும் தாயும்’ : பாரதியார் கவிதை, ‘அன்னையிட்ட தீ’ : பட்டினத்தார் பாடல் என்றவாறு நோக்கலாம். இப்படியான அனுபவங்களுக்கு அப்பால் ஒரு துரதிஷ்டமான சம்பவமும் சண்முகலிங்கம் அவர்களின் நாடகங்களுக்கு ஏற்பட்டது. போர்க்காலத்தின் தாக்கமே இதற்கு காரணமானது. அதாவது இவரது அனைத்து நாடக செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்திற்கு உள்ளேயே இடம் பெற்றது தவிர வேறு இடங்களுக்கு செல்லவில்லை என்பது பாரிய குறையாக நாடகவியலாளர் மத்தியிலும் தமிழ் நாடக இரசிகர்கள் மத்தியிலும் காணப்படுவது இயல்பான ஒன்றாகும்.

“வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளைப் போர் முகத்திலறைந்து கூறுகின்ற வேளைகளிலும் முற்றுகைக்குள் வாழ்வு முடக்கப்பட்டு அடுத்த வேளையே கேள்விக்குரியதாக இருக்கும் சூழ்நிலைகளிலும் கூடமக்களின் வாழ்வியலினை பற்றிய சிந்தனைகளையும் சமூகப் பொறுப்புடனும் ஒரு நாடகக்காரராக சண்முகலிங்கம் அவர்கள் செயற்பட்டது என்பது சிறப்பான விடயமாகும்.” இன்றைய காலகட்டத்தினை பொறுத்த வரையில் பலரது சிந்தனை மட்டங்களுக்கு வித்திட்டவர் குழந்தை ம. சண்முகலிங்கம் ஆவார். “போரையும் பொருளையும் பொருட்டாக மதிக்காது எவரிலும் தங்கியிராது எப்பொழுதும் குழுவாகச் சேர்ந்தியங்கி கலையாக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதும், இதனூடு இணைந்ததாக எதிர்காலத் தலைமுறையினை உருவாக்குவதுமே இவரது நாடகத்தின் மூலமாக மேற்கொண்ட அரிய சேவையாக உணர்ந்தார் என கலாநிதி சி.ஜெயசங்கர் சண்ணரது கல்வியியல் அரங்கு என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை “எந்தையும் தாயும்” நாடகம் பற்றிய உரையாடலின் போது அவர் தனது மனம் திறந்து பல விடயங்களை குறிப்பிட்டார். அதாவது பலரும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் பிதிபலிப்பாகவே சண்முகலிங்கம் இந்த நாடகத்தை எழுதியதாக எண்ணுகிறார்கள். அனால் அது அவ்வாறு அல்ல. அந்த நாடகம் எழுதும் பொழுது தனது பிள்ளைகள் தன்னுடனேயே இருந்ததாகவும் தற்பொழுது தானும் மனைவியும் தனியாக இருந்தாலும் நாடகத்துறைக்குள் தனது வாழ்வு இணைக்கப்பட்டிருப்பதால் தான் தனிமையை உணரவில்லை என்றும் கூறினார். ஆயினும் தான் எதன் மீதும் அதிக வெறியோ, பற்றோ கொள்ளுவதில்லை என்றும் அவ்வாறு பற்றுக்கொள்பவன் ஒரு நல்ல நடுநிலையான நாடகக்காரராக முடியாது என்றும் கூறினார்.

அத்தோடு எதிலும் மூழ்கிப்போகின்ற இயல்பு தனக்கு குறைவான ஒன்று என்றும் தனது அனுபவத்தை தெரிவித்த அவர் எதனையும் புறவயமாகவும் அன்னியமாகவும் பார்க்கின்ற ஒருவராலேயே எந்த விடயத்தையும் தெளிவாகவும் சுய கண்ணோட்டத்துடனும் புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். எனினும் சில தடவைகள் தான் நாடக எழுத்துருக்களை எழுதும் போது தன்னையும் அறியாமல் தான் கண்ணீர் சிந்துவதாகவும் அது தனது தனிப்பட்ட உளவியல் என்றும் கூறினார். வாழ்க்கையைக் கூட தான் புறவயமாக நின்றே நோக்குவதாக தெரிவித்த அவர் தனது வாழ்வின் பல விடயங்களை தான் ஒரு சாதாரண மனிதனாக அல்லாமல் புறவயமாக நின்று நோக்க நாடகத்துறையின் பிரவேசமே காரணமாகும் என்று கூறினார். மனிதனின் வாழ்வியலில் எது நிகழவேண்டுமோ அது நடந்தே தீரும்! என்றும் அதனை நினைத்து வருந்துவதில் பயனில்லை! காலத்தின் சுழற்சியில் அனைத்தும் மாற்றமடைவது இயல்பு என்று கூறினார்.

தனது நாடகங்கள் சிலவற்றில் குறிப்பாக “எந்தையும் தாயும்” நாடகத்தில் வரும் “ஐயாத்தரை” எனும் பாத்திரம் தன்னுடைய மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாத்திரமாக தான் படைத்ததாக கூறினார். ‘மண் சுமந்த மேனியர்’ நாடகத்தில் இடம்பெற்ற காட்சியொன்றும் முக்கியமாக பேசப்பட்டதாக கூறுகின்றார். அதாவது இடப்பெயர்வில் பாதிப்படைந்து பல தூரம் கடந்து வந்து தாயொருத்தி சிறியமகளை போர்வையால் போர்த்துவது போன்ற காட்சி மிகவும் தாக்கவன்மை மிக்கதாக அமைந்ததாகவும் அடிக்கடி தன்னிடம் கூறுவதாக தெரிவித்தார்.

இவற்றுடன் நாடகத்தின் மூலமான செய்திகள் என்பவை வெறுமனே மக்களுக்கு மாத்திரம் கூறப்படுவன அல்ல என்றும் தனது நாடகங்கள் பலவற்றில் அக்கால போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைப்புக்கும் பல விடயங்களைத் தெளிவுபடுத்த பயன்படுத்தியுள்ளேன் என்று கூறினார். நேரடியாக கூற முடியாத ஆனால் கூறியே ஆக வேண்டும் என்ற செய்திகளை தனது நாடகங்களில் சொல்லாமல் சொல்லியுள்ளதாக புன்முறுவலுடன் கூறுகிறார்.

‘மண் சுமந்த மேனியர்’ இரண்டாம் பாகத்தில் போராட்டக் குழுவில் உள்ளவர்களின் திருமண உரிமை பற்றிய விடயத்தை நாடகத்தில் “ஊருக்கு உதவுபவன்” என்ற ஒருவன் காதலில் விழுகிறான். 1986 களில் இந்நாடகம் ஆற்றகை செய்யப்பட்டு பின்னர் போராட்டக் குழுவில் உள்ளவர்களின் திருமணம் செய்யும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்நாடகத்தில் அவன் திருமணம் புரிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டது அக்காலத்தில் சற்று சவாலான விடயமாக இருந்தது என்கிறார்.”மாதொருபாகம்” நாடகத்தில் ஒரு காட்சியில் அந்நாடக பாத்திரம் ஒன்று. “இந்த கலவரத்திலையும் எங்களை காப்பாத்தினது ஒரு சிங்கள குடும்பம் தான்” என்று கூறுவதன் ஊடாக தமிழர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றோ சிங்களவர்கள் அனைவரும் கொடிய மனம் படைத்தவர்கள் என்றோ எண்ணுவது தவறான விடயம் என்பதையம் மனித மனங்கள் என்பவை எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்ற “நல்லிணக்க சிந்தனையை” தூண்டியவரும் இவர் தான் என்பது மறுக்க முடியாத விடயம்.

அத்துடன் தனது மனநிலை, தன்னுடைய தனிப்பட்ட உளவியல் என்பது எந்தவொரு தரமான தாக்கவன்மையான நல்ல படைப்புக்களை பார்க்கின்ற பொழுதும் தன்னையறியாமல் உணர்வுக்குள் ஆட்பட்டு கண்ணீர் சிந்தும் பழக்கம் தன்னிடம் உள்ளதாக கூறுகிறார். அன்னை இட்ட தீயில் நாடகத்தை எழுதும் போது பல சம்பவங்கள் தனக்கு ஏற்பட்டதாக கூறுகிறார். அதாவது நாடகத்தை எழுதி முடித்ததன் பிற்பாடு உள மருத்துவர் சிவயோகன் அவர்களுக்கு அதனை வாசித்துக் காட்டிய பொழுது நாடகத்தின் ஒரு இடத்தி;ல் தான் மிகவும் மனம் வருந்தியதாக தெரிவித்தார். அதிலும் “ஜானகி” எனும் பாத்திரத்தின் மீது தான் ஒன்றித்த அளவுக்கு எந்தவொரு பாத்திரத்தின் மீதும் ஒன்றித்தது இல்லை என்று கூறினார். அந்த பாத்திரம் மிகவும் தாக்கவன்மையான பாத்திரமாக “அன்னை இட்ட தீ” முழுவதும் வலம் வந்ததாக அதனை சிலாகித்து கூறுகின்றார்.

இந்த நாடகம் முழுக்க முழுக்க உளவியல் தாக்கமடைந்தவர்களை அவதானித்து மூலமாக மிகவும் ஆலோசிக்கப்பட்டு எழுதப்பட்ட நாடகம் என்பது முக்கியமான விடயமாக கூறப்படுகின்றது. உளவளத் துறையின் உதவியுடன் பெறப்பட்ட விபரங்களை அடியாகக் கொண்டும் தனது தனிப்பட்ட அனுபவங்களை முன்னிறுத்தியும் அதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். பாத்திரங்களுக்கு இடையிலான நுணுக்கமான உறவு முறைகளை அமைப்பதிலும் அவற்றுக்கிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி ஊடாட செய்வதும் தனக்கு எப்படி வந்ததென்பது கூறமுடியாத விடயம் என்றும் அது ஒரு இயல்பான சிந்தனை முதிர்ச்சியின் விளைவு என்று கூறினார். இவரது எல்லா நாடகங்களுமே அனேகமாக நிறைந்த உறவு முறைகளும் ஊடாட்டங்களும் இணைந்ததாக காணப்படுவதை அவதானிக்க முடியும்.

தமிழர் சமூகத்தின் மனதிலும் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்திய போரினுடைய அனர்த்த தாக்கங்கள் அனைத்தையும் “அன்னையிட்ட தீ” நாடகம் வெளிப்படுத்தி நிற்கின்றது என்கிறார். இராணுவ சித்திரவதை, உயிரிழப்பு, மகனை இழந்த தாய், ஊரடங்கு, வான்வளி தாக்குதல், உளவியல் தாக்கம் நிறைந்த சந்ததியால் கல்வியை முன்னெடுக்க சிக்கல்படுதல், விமானத்தின் ஒலியை கேட்டவுடன் கதறுதல் என்ற அனைத்தும் தொகுப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமை முக்கியமான நாடகமாக இதனை இன்றும் நிலைநிறுத்த காரணமாக அமைவது எனலாம்.

அரசியல் என்பதனை அறிவதிலும் அது தொடர்பான விடயங்களினை ஆலோசிப்பதிலும் ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பதினாறு வயதில் இருந்து பல அரசியல் கட்சிகளினுடைய பல அரசியல் தலைவர்களினுடைய பிரசாரக்கூட்டத்தினை கேட்டவர் தான் என்பதை கூறுவதுடன் தமிழர் அரசியல் தலமைகள் பலரினுடைய செயற்பாடுகள் அந்த காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி நம்பிக்கை அற்றதும் விலகல், வெறுப்பு மனநிலையிலேயே மக்கள் காணப்படுகின்றனர் என்பதை நிதர்சனமாக முன்வைக்கிறார். தான் பல்வேறு நாடகங்களை எழுதியுள்ள போதும் எந்தவொரு கட்சி சார்ந்தோ பக்கச்சார்பாகவோ செயற்படுவதில்லை என்றும் நடுநிலையாக செயற்பட்டதனாலேயே இத்தகைய கொடிய அரசியல், போர்க்கால சூழ்நிலையையும் தாண்டி உயிரோடு வாழ்வதற்கு இந்த நடுநிலைமையே காரணம் என்று கூறுகின்றார்.

ஆர்கொலொ சதுரர் 2003-ல் எழுதப்பட்ட போது இறதிப்போரின் முடிவினைக்கூறுவது போன்று (2009) நடைபெற்றதை மகாபாரத கதையின் மூலம் அபிமன்யுவின் மரணத்தைக்குறியீடாக கொண்டு சித்திரித்து காட்டியதாகவும் குறிப்பிட்டார். பிதாக்களால் அமைக்கப்பட்ட “வியூகத்தால்” அபிமன்யு அழிக்கப்பட்ட கதையே அங்கு விளக்கப்பட்டதைக் காணலாம். மக்களின் அரசியலை முன்கொண்டு செல்வதாக தம்மை காண்பிக்கும் அரசியல் வாதிகள் முடிந்தளவாவது உண்மைத்தன்மையோடும், சேவை மனப்பாங்குடனும், தியாகத்துடனும் சேவை புரியும் காலம் ஏற்படும் பொழுது தான் தமிழர்களின் வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்கிறார்.

“எந்தையும் தாயும்” நாடகத்தின் இறுதியில் கூறப்படுகின்ற ஒரு வசனம் சர்வதேசத்தின் குறியீடான அரசியல் சுயலாபத்தினை வெளிப்படுத்துகின்ற தன்மையினை வெளிப்படுததுகிறார். சங்கரப்பிள்ளை இறந்ததன் பின்னராக கூறப்படுகின்ற வசனம். “இதென்ன மார்க்கோசின்ர பூதவுடலேவைச்சுக் கொண்டிருக்க” என்ற கூற்று சர்வதேசத்தின் அரசியலினை நாசுக்காக வெளிப்படுத்தி நிற்கின்றது. பிணங்களை பயன்படுத்தி அரசியல் செய்வதை நாசுக்காக கூறியதாக பலரும் பாராட்டியதாக கூறினார். குறிப்பாக பேராசிரியர். சி.மௌனகுரு அவர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் இதனை பாராட்டி எழுதியதாக தனது அனுபவத்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

எமது சமூகத்தின் முக்கியமான குறைபாடு என்பது எதையும் தமக்கு நடக்கின்ற பொழுதோ தமது உறவுகளுக்கு நடக்கின்ற பொழுதோ அதனை ஒரு பாரிய தாக்கமாகவும் அதனை தீர்ப்பதற்காக பாடுபடும் மக்கள் இதுவே இன்னுமொரு மனிதனுக்கு சமூகத்தில் இடம்பெறும் வேளை அதனை விமர்சனத்திற்கு உட்படுத்துவதிலும் அதனைப் பற்றிய கட்டுக் கதைகளை மேற்கொள்வதன் மூலம் பிரச்சனைகளை பூதாகரமாக்க மனித மனங்களை நோகடிக்கும் விதமாக செயற்படுகின்றன. இது திருத்தப்பட வேண்டிய விடயம் என்பதையும் தெளிவாகக் கூறினார்.

இறுதியாக தற்காலத்தின் சமகால சம்பவங்களை சமூகத்தைப் பார்க்கின்ற பொழுது பல நாடகங்களை எழுதத் தூண்டுவதாகவும் அதற்கான கதையாடல்கள் சமூகத்தின் எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுவதாகவும் கூறுகிறார். நிறைய நாடகங்களை எழுதக்கருப் பொருட்களை தற்கால சமூகம் கொண்டமைந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் உருவாகும் எதிர்கால சந்ததிகள் நாடகத் துறையை சமூகத்துடன் இணைத்து பலப்படுத்துவதாகவும் எமது சமூகத்தை ஆரோக்கியமான பாதையிலும் அறிவார்ந்த நோக்கத்துடனும் முன்னெடுத்துச் செல்ல உழைக்க வேண்டும் என்பதையும் கூறினார்.

சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்

நடன நாடகத்துறை.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப்பல்கலைக்கழகம்.

(Visited 1,395 times, 1 visits today)
 
அப்பலோ

அப்பல்லோ-நாவல்-நூல்விமர்சனம்-சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்

‘அப்பல்லோ’ பெயரை வாசித்தவுடனேயே உள்ளுராக ஒரு சிந்தனைப் பூச்சி “சடக்” என்று சிறகடித்து நினைவுப்பெட்டகத்தினை ஊடறுத்து உள்நுளைகின்றது. ‘அப்பல்லோ….’, ‘அப்பல்லோ…..’ உதடுகள் என்னை அறியாமல் இரு தடவை பெயரை உச்சரிக்கின்றது. […]