மொழிபெயர்ப்பு நேர்காணல்-ஜெனிபர் நான்சுபுகா முகாம்பி-தேசிகன் ராஜகோபாலன்

“எங்களிடம் விண்ணை முட்டும் கட்டிடங்கள் இல்லை, ஆனால் அதற்குப் பதிலாக மலைகளும், சேரிகளும் உள்ளன, அவற்றைத்தான் நான் எனது எழுத்தின் மூலம் உலகிற்கு கொடுக்கப் போகிறேன்.”

ஜெனிபர் நான்சுபுகா முகாம்பி

ஓகஸ்ட் 6, 2019

மாத்யு டேவிஸ்: நல்வரவு ஜெனிஃபர். உலக இலக்கிய வெளியில் நவீன இலக்கியத்தில் பல வழிகளிலும் தடம் பதித்துள்ள உங்களது புதினமான கிண்டுவிலிருந்து (Kintu) நமது உரையாடலைத் தொடங்க விரும்புகிறேன். உங்களின் அந்த நாவல் 1750இல் புகாண்டா இராச்சியத்தின் புதிய தலைவருக்கு தனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக கிண்டு கிட்டா தலைநகருக்கு புறப்படுவதிலிருந்து ஆரம்பமாகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தலைநகருக்குச் சென்றபோது, அவர் கட்டவிழ்த்துவிட்ட சாபத்துடன் கின்டுவின் சந்ததியினரின் போராட்டத்தை விபரிப்பதாக தொடர்ந்து செல்கிறது. எனவே, நீங்கள் கிண்டு கிட்டாவைப் பற்றி எனக்கு விபரித்தால் நான் ஆச்சரியப்படுவேன். அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமா? அந்தப் புத்தகத்தில் அவர் ஒரு உண்மையான கதாபாத்திரமாக உலா வருகிறார் ஆனால் உங்களால்தான் அந்த கிண்டு கதாபாத்திரம் குறித்து விபரிக்க முடியும்.

ஜெனிஃபர் நான்ஸ புகா மகும்பி: என்னை இங்கு அழைத்தமைக்கு நன்றி. முதலாவதாக கிந்து பூமியில் அவதரித்த முதல் மனிதனைக் கற்பனை செய்து உருவாக்கப்பட்ட பாத்திரம். ஆகவே, நான் இலக்கியத்தில் கிண்டு என்று குறிப்பிடும்போது, உகாண்டாவைச் சேர்ந்த அனைவருக்கும் தாம் ஆரம்ப நிலைக்குத் திரும்பிச் செல்கிறோம் என்பது தெரியும். இருப்பினும், நான் பயன்படுத்தும் கதாபாத்திரமானது யதார்த்தத்தில் கற்பனையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதி முடித்திருந்த 2004ஆம் ஆண்டிற்கு நாம் வருகையில், அவரது குரல் யதார்த்தத்தைவிட அதிக கற்பனையுடன் ஓங்கி ஒலிக்கிறது. நீங்கள் 1750 காலக்கட்டத்தில் சஞ்சரிக்கின்ற வேளையில், அவர் ஒரு தந்தை, அவர் ஒரு தலைவன், அவர் ஒரு கணவர், அவர் ஒரு நண்பர். மேலும் அவர் யதார்த்தத்தில் சஞ்சரிப்பவர், அவரது பிரச்சினைகள் உண்மையானவை. நான் அவரோடு செய்தவை அனைத்தும் அவரை அந்த உண்மையான காலத்தில் உண்மையான அரசர்களைச் சுற்றி உலவ விட்டது மட்டுமே. கிந்து ஒரு புராண உருவத்துடன் பக்கவாட்டில் வைக்கப்பட்டதன் காரணமாக அவரே முதல் மனிதர் மற்றும் புகாண்டாவின் முதல் ராஜா- இந்த இடத்தில்தான் அவர் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் கதாபாத்திரமாகத் தோன்றலாம் ஆனால் எனக்கு அதையிட்டு மகிழ்ச்சியே.

டேவிஸ்: கின்டுவை நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள் என்பது குறித்தும் அதனை எங்கிருந்து ஆரம்பித்தீர்கள் என்பதைப் பற்றியும் அந்தப் புத்தகத்தின் எழுத்துப் பரிணாமம் பற்றியும் கொஞ்சம் விவரிக்க முடியுமா? நீங்கள் முதலில் 1750ஆம் ஆண்டின் நிகழ்வுகளின் தொகுப்பிலிருந்து தொடங்கினீர்களா? அல்லது நீங்கள் எழுதத் தொடங்கிய போது இத்தகைய கதாபாத்திரங்களை இன்றைய நவீன காலத்தில் உலவுகின்ற பாத்திரங்களுடன் பொருத்திப் பார்த்தீர்களா? அதன் வளர்ச்சிப்போக்கு எவ்வாறிருந்தது?

மகும்பி: ஆமாம், நான் ஒரு மக்கள் குழுவின் மரியாதைக்குரிய அனுபவமிக்க மூத்த பிரஜையாகவே எழுதத் தொடங்கினேன். நான் முதலில் அவரது கதையை காலம் குறிப்பிடாமலேயே எழுதினேன். நான் புகாண்டா வரலாற்றைத் திரும்பிப் பார்த்தேன். அந்த காலத்தை ஆராய்கையில் அந்த ராஜ்ஜியம் மிகவும் குழப்பமுற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. இது எனக்கு அதிக நாடகத்தை எழுத வழிவகுக்கும். ஒருவர் பின் ஒருவராக தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்த மூன்று சகோதரர்கள் மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் ஆட்சியைப் பிடித்த விதத்தையும் நான் உணர்ந்தேன், “சரி, கிந்துவை இந்த இடத்திலும் இந்த காலத்திலும் வைத்து எழுதுவோம்”, என்று நினைத்தேன். இவ்வாறுதான் அந்த ராஜாக்களுடன் உறவாடுகிறார். எனவே, அவர் தனக்கென்று ஒரு கதையை வைத்துள்ளார், அவர் இரட்டையர்களை தனது மனைவிகளாக மணமுடித்ததுடன் ஒருவரை மட்டுமே விரும்பியதுடன் மற்றவரை அவரது மனம் விரும்பவில்லை. ஆனால் அதே நேரம், தலைநகர் லுபியாவில் நடப்பவைகளும் சரியானதாக இல்லை. ஆகவே அந்த சூழலுக்குள் இருந்து கொண்டே அந்த கதையைச் சொல்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

டேவிஸ்: நாம் வரலாற்றுக் காலத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர், நாம் பல நூற்றாண்டுகளைக் கடந்து இப்பொழுது நாம் நிகழ்காலத்தில் காலூண்றியிருக்கிறோம் அதுவும் 2019இல் இல்லை 2014இல் அதாவது இந்த நாவல் முடிவடைகையில். நீங்கள் ஏன் உகாண்டா வரலாற்றுக் காலத்தின் முழுப்பகுதியையும் அதிலும் குறிப்பாக காலனித்துவ காலப்பகுதியை ஒதுக்கிவிட முடிவெடுத்தீர்கள்?

மகும்பி: வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன். நான் மேற்கில் இலக்கியம் கற்பித்ததுடன் அங்குள்ள இலக்கியங்களையும் படித்தேன், ஆப்பிரிக்க நூல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பார்த்தேன், குறிப்பாக ஆப்பிரிக்காவின் விடயங்கள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதைவிடவும் ஆப்பிரிக்க விடயங்களை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அவர்கள், ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகள் குறித்தே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆகவே, உங்கள் நாவலில் அத்தகைய விடயங்கள் இருந்தால் மட்டுமே அவர்களின் கவனத்தைப் பெறமுடியும். விடயங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, நீங்கள் அதனை வாசித்தீர்கள் என்றால், அந்த வரிக்கு அடுத்த வரியைக்கூட அவர்கள் படிக்க மாட்டார்கள். அகெபே ஒகோன்க்வோவை ஒரு தந்தையாக, ஒரு மகனாக, ஒரு கணவராகக் கையாள்கையில் இவை அனைத்தும் புறந்தள்ளப்படுகின்றன அவர்கள் ஐரோப்பா என்ன செய்தது என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள், நாம் எப்படி இந்த கலாசாரத்தைச் சீரழித்திருக்கிறோம். ஆனால் மக்கள் எம்மைப் பார்ப்பதற்கு எனது கலாசாரத்தை ஏறிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நாம் அழகானவர்கள், நாம் அழுக்கானவர்கள், நாம் மோசமானவர்கள், நாம் அறிவானவர்கள், நாம் மிகவும் ஆர்வமிக்கவர்கள். அதைத்தான் நான் செய்ய விரும்பினேன். அந்த அடிப்படையில்தான் நான் அவற்றைத் தவிர்த்தேன். காலனித்துவத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் வரலாற்றைப் படித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் நான் ஒரு உகாண்டவனாக எங்கள்மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். நாம் புகாண்டா இராச்சியத்தில் தொடங்கியதும் இப்பொழுது யுகாண்டாவில் இருப்பதும் உங்களுக்குத் தெரியும். எனினும் நீங்கள் சமகாலத்திற்கு வருகையில், காலனியாதிக்கத்தைப் பற்றிச் சொல்வதற்கான பிரதிபலிப்புகள் இருக்கின்றன ஏனெனில் காலனித்துவம் என்பது தன்னைச் சுற்றியே நடைபெறும் ஒரு செயற்பாடு ஆகவே வெள்ளையர்கள் அங்கு இல்லாத போதிலும் நீங்கள் இப்பொழுதும் அதனைக் கண்டுணர முடியும்.

டேவிஸ்: ஆமாம் நீங்கள் செய்கிறீர்கள். அது ஒரு அழகான அற்புதமான நாவல். அது ஆப்பிரிக்க நாவல்களில் சிறந்ததெனப் போற்றப்படுகிறது இந்தப் புகழ் குறித்து தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? எழுத்தாளர் என்ற வகையில் அதனை எப்படி உணர்கிறீர்கள்? ஒரு சிறந்த ஆப்பிரிக்க நாவல் என்பதால் கூட அது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அது குறித்து உங்களது எதிர்வினை யாது?

மகும்பி: ம்… முதலாவதாக நான் அந்த உயரத்தை இன்னமும் அடையவில்லை. நான் மதிப்புரைகளைப் படிப்பதில்லை. இப்பொழுது நான் அடுத்த புத்தகத்தை வெளிக் கொணர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் பின்னோக்கி நகர்ந்து மதிப்புரைகளைப் படிக்கப்போகிறேன். (சிரிக்கிறார்) அவற்றில் ஒன்றை இன்று காலையில் நான் படித்துக்கொண்டிருந்தேன். ஏனையோரின் புத்தகங்கள் குறித்து மற்றவர்களின் மதிப்புரையை நான் வாசிப்பதால் அதிலும் குறிப்பாக இப்பொழுதுதான் ஒரு புத்தகம் வெளிவந்துள்ள நிலையில் இவற்றில் நான் அக்கறை கொள்வதில்லை. கிண்டுவைப் பற்றி இன்றிலிருந்து பத்து அல்லது இருபது வருடங்களுக்குப் பின்னர் மக்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். அதன் பிறகு நான் ஏதோ செய்திருப்பதை அறிந்துகொள்வேன். ஏனெனில் இன்றைய நாட்களில் நீங்கள் ஒரு மதிப்புரையைப் படித்து புத்தகத்தையும் படிப்பீர்களானால் நீங்கள் ஹ்ம்… என்று நினைத்துக்கொள்வீர்கள். எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. ஆகவே எனது புத்தகங்களுக்கான மதிப்புரைகளை நான் ஆழமாக உள்வாங்கிக்கொள்வதில்லை. மக்கள் தாங்கள் படித்தபடியே அதனை உள்வாங்கிக்கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நான் எழுதியிருக்கும் விதம் மிகவும் வித்தியாசமானது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு கதை மட்டுமே. யாரும் ஒரு புகழ் மிக்க நாவலை எழுத வேண்டும் என்று நினைத்துத் தொடங்குவதில்லை; அப்படியில்லையெனில் நீங்கள் தோல்வியடைவீர்கள். ஒரு நாவலின் அழகு என்பது அதனைக் கையில் வைத்திருப்பவரின் பார்வையில்தான் தங்கியிருக்கிறது அதனை வேறு விதமாகச் சொல்லட்டுமா? “ஒரு வாசகர்?” (சிரிக்கிறார்) அவர்கள் ஒரு புதினத்தை அவ்வாறு விபரிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நூலாசிரியர்களைப் பொறுத்தவரை, அது வெறுமனே ஒரு கதை சொல்லல் மட்டுமே.

டேவிஸ்: நாம் ஒரு புதிய சிறுகதைத் தொகுப்பு குறித்து சிறிது பேசுவோமே, அந்த கதையை சரியாகச் சொல்வேமே, அந்தச் சிறுகதைகள் தொகுப்பு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் வதிகின்ற மற்றும் தொழில்புரிகின்ற உகாண்டர்களையும், உகாண்டாவிலிருந்து சிலர் மான்செஸ்டர் நோக்கிப் பயணிப்பதையும், இங்கிலாந்திலிருந்து மீண்டும் உகாண்டா நோக்கித் திரும்புபவர்கள் பற்றியும் படம் பிடித்துக் காட்டுகிறது. உங்களது புதினம், கிண்டு முற்று முழுதாக உகாண்டாவை மட்டுமே மையப்படுத்துகிறது, இங்கு நீங்கள் ஏராளமான கதாபாத்திரங்களை வெளிநாடுகளில் உலாவவிட்டுள்ளீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் உகாண்டர்கள், விசேடமாக அவர்கள் வெளிநாடுகளில் பெரிய சமூகங்களாக இல்லாத நிலையில், அத்தகைய கதாபாத்திரங்களை வெளிநாடுகளில் உலாவவிட்டிருப்பதற்கு உந்துதலாக அமைந்தது எது?

மகும்பி: ஒன்று, வெளிநாட்டுக்குச் சென்ற அல்லது குடியேறியவர்கள் அல்லது அகதிகள் ஆகிய யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுடன் சுமந்து செல்லும் தாயக நினைவுகளை மீண்டும் எழுத வேண்டும் என்ற அவாவிலிருந்து எழுவது. அந்த எண்ணம், “ஹா நான் இங்கிருக்கிறேன்” இங்கிருந்தபடியே எனது தாய்நாட்டுடன் மீண்டும் தொடர்புகொள்கிறேன் என்பதிலிருந்து தோன்றுகிறது. ஆகவே என்னைப் பொறுத்தவரை அந்த முழுத் தொகுப்பும் நான் அவர்களின் பார்வைக்காக சில படங்களை இணைத்து மீண்டும் எனது தாயக உறவுகளுக்காக எழுதும் கடிதங்களே. ஆகவே, இதுதான் எங்கள் வாழ்க்கை, இப்படித்தான் நான் வாழ்கிறேன். எனது மெர்சிடஸைப் பாருங்கள் (சிரிக்கிறார்), எனது பெரிய வீட்டைப் பாருங்கள், அல்லது அதன் எதிர்ப் பக்கத்தைப் பாருங்கள். ஆனால் வீடு என்று வருகின்றபோது, நான் இன்னும் உகாண்டாவையே வீடாகப் பார்க்கிறேன், ஆனால் அவ்வப்போது, குறிப்பாக இப்போது நான் அமெரிக்காவில் இருக்கையில், மான்செஸ்டரை வீடாகப் பார்க்கிறேன், இவ்வாறு வீடு என்பதற்கான பொருள் நிலையற்றதாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவே, நான் வசிக்கும் இந்த புதிய இடத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றும் இந்த இடத்தைப் பற்றி உகாண்டா மக்களிடம் சொல்வதற்காகவும் எழுத விரும்பினேன். அத்துடன், மான்செஸ்டரிலேயே ஒரு சிறிய உகாண்டாவை நாங்கள் எவ்வாறு உருவாக்கியுள்ளோம் என்பது பற்றியும் அவர்கள் எவ்வாறு தம்மைப் புதிய சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டார்கள் அல்லது தகவமைத்துக்கொள்ள தவறினார்கள் என்பதையும் காட்ட விரும்புகிறேன். பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பி வரும்போது, நாங்கள் விட்டுச் சென்ற வீட்டைப் பற்றிய யோசனையுடன் திரும்பி வருகிறோம், நாங்கள் திரும்பும்போது, அது எம்மைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதையும் நாம் எப்படி அந்தச் சூழலுக்குள் பொருந்தத் தவறிவிட்டோம் என்பதையும் நாம் எப்படி திடீரென்று அன்னியமாகிவிட்டிருக்கிறோம் என்பதையும் உகாண்டா மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஒவ்வொருமுறை வீட்டிற்குச் செல்கின்ற போதும் எனது அம்மா, “ஓ, ஒரு பிரித்தானியர் திரும்பி வந்திருக்கிறார்” என்று சொல்வார். (சிரிக்கிறார்) ஆனால் நான் ஒரு உகாண்ட நாட்டவன் என்பதை நான் இங்கு அழுத்திக் கூறுகிறேன் வீட்டிற்குச் செல்கையில் எனது அம்மா என்னை பிரித்தானியன் என்று அழைக்கிறார். எனவே அத்தகைய இடப்பெயர்வுகள், இடப்பெயர்வின்போதும் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பும் போதும் எவையெல்லாம் முறிந்துபோகின்றன என்பதைப் பற்றியும் எதனைத் தவறவிடுகிறோம் என்பதைப் பற்றியும் சொல்ல விழைகிறேன்.

டேவிஸ்: நீங்கள் அந்தக் கதைகளை எழுதிய தருணத்தில் அவைகளுக்கான கால எல்லை அதிலும் குறிப்பாக அனைத்திற்கும் முன்னதாக எழுதிய கதையின் கால எல்லை எது? கிண்டு எழுதிய அதே காலப்பகுதியில் அவைகளையும் எழுதினீர்களா? இத்தகைய கதைகள் ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்வாறு அமைந்திருந்தது?

மகும்பி: 2008ஆம் ஆண்டு நான் கிண்டுவை எழுதிக்கொண்டிருக்கையில், கிண்டு ஒரு பெரிய புத்தகமாக இருந்தபடியால், நான் சாரா மெய்ட்லான்டினால் (Sara Maitland) வழிநடத்தப்பட்ட வேளையில், அந்த அம்மணி என்னிடம், “இது ஒரு பெரிய புத்தகம் என்பது உனக்குத் தெரியுமா, கதையின் நடுப்பகுதியை அடைகையில், அது எங்கே செல்கிறது என்பதை நினைவில் கொள்வதில் நீ தவறப்போகிறாய், ஆகவே போகிற வழியில் சிறுகதைகளையும் எழுதுவது சிறப்பானது ஏனெனில் சிறுகதைகள் ‘புமில் தொடங்கி பூம் என்று தொடர்ந்து பும்’ என்று முடிந்துவிடும். சிறுகதையில் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு மற்றும் கதையின் வளைவுகள் என்பன உங்களுக்குத் தெரியும்.” என்று கூறினார். ஆகவே நான் ‘மாலிக்கின் கதவு’ (“Malik’s Door.” )என்னும் கதையிலிருந்து அதனை எழுதத் தொடங்கினேன். அந்தக் கதையைச் சரியாக எழுதி முடிப்பதற்கு எனக்கு நான்கு ண்டுகள் பிடித்தது. அதனாலேயே எனக்கு அதைப் பிடிக்காமல் போய்விட்டது. சிறுகதைக்கான சரியான கருவைக் கண்டுபிடித்து அதனை எழுதுவது மிகவும் கடினமான காரியம். அதிலும் என்னைப் பொறுத்தவரை கதையின் வளைவுகளைவிடவும் அதனை ஒழுங்கு மாறாமல் (ரிதம்) படைப்பதே சிறந்தது. இதனாலேயே அதனை எழுதுவதற்கு என நீண்ட காலம் பிடித்தது. அதன் பிறகு நான் “காலனிகளுடனான எமது உறவை” (“that title cracks me”) எழுதினேன் (அந்த தலைப்பு என்னை சுக்குநூறாகச் சிதறடித்தது) இருப்பினும் அதனை எழுதி முடித்தேன். ஆனால் அதன் பின்னர், அந்தக் கதையை எழுதும் போது எனது எழுத்தாற்றல் செழுமையடைந்தது. அந்தக் கதையை நான் 2011இல் எழுதியதாக ஞாபகம். ஆனால் கிட்டத்தட்ட 2013இல் நான் கிண்டுவை முடித்திருந்தேன். எனது முதலாவது நாவலை முடித்து, அது அங்கீகரிக்கப்படாத நிலையில், அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை, ஏனெனில் நான் அதனை வெளியிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். என்னிடம் இரண்டு புத்தகங்கள் உள்ளன! (சிரிக்கிறார்) தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிடுகிறது. ஏனெனில் அதன் பின்னர் எப்படி இருந்தாலும் நான் ஏழையாகிவிடுவேன் என்று முடிவெடுத்தேன். எனவே நான் ஒரு சிறுகதை எழுத்தாளர் குழுவில் இணைந்தேன். அங்கு நான் மாதாமாதம் ஒரு சிறுகதையைக் கையளிக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் நான் பல கதைகளைக் குவித்தேன். அப்படி இருந்தும் அவைகளை ஒரு தொகுப்பாக நான் வைக்கவில்லை. கிண்டு வெளிவந்த பின்னர்தான் அவைகளை இங்கு தொகுக்க வேண்டுமென்பதை உணர்ந்தேன். அவற்றை விரிவாக வாசித்தபொழுதுதான், அவை அனைத்தும் மான்செஸ்டரை மையப்படுத்தி அமைந்துள்ளன என்பதையும் குடும்ப கட்டமைப்பைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதையும், குடும்பங்கள் எவ்வாறு வீழ்ச்சியடைகின்றன, அவை எவ்வாறு முறிந்து போகின்றன, அவை எவ்வாறு மீண்டும் இணைகின்றன, அவை எவ்வாறு தங்களை மீளமைத்துக் கொள்கின்றன என்பதை உணர்ந்தேன். அதனால்; நான் அதன்மீது எனது பார்வையைச் செலுத்தி சிறுகதைத் திரட்டை ஒன்றாக வைத்தேன்.

டேவிஸ்: இந்த பெரிய நாவலின் படைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில், ஒரு கதையின் வளைந்து செல்லும் போக்கைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் ஒரு வழியாக ஆரம்பத்தில் நீங்கள் கதைகளை எழுதத் தொடங்கினீர்கள் என்பதைக் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இந்த கதைகள் எவ்வாறு ஒருவழியில் உகாண்டா மக்களுக்கான கடிதங்களாக அமைந்தன என்பதை நீங்கள் முன்பே குறிப்பிட்டுள்ளீர்கள், அவை நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள் என்பதையும் உங்களது சிந்தனையை எவ்வாறு பார்வையாளர்களுடன் பொருத்திப் பார்க்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்தின. கடந்த இரண்டு மாதங்களாக நீங்கள் இங்கு தங்கியிருந்து, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சாலிட் ஸ்டேட் புக்ஸில் நடந்த நிகழ்வு உட்பட இரண்டு நிகழ்வுகளைச் செய்துள்ளீர்கள். அங்கு உரையாற்றுகையில், “எங்களிடம் விண்ணை முட்டும் கட்டிடங்கள் இல்லை, ஆனால் அதற்குப் பதிலாக மலைகளும், சேரிகளும் உள்ளன, அவற்றைத்தான் நான் எனது எழுத்தின் மூலம் உலகிற்கு கொடுக்கப் போகிறேன்.” என்னும் உங்களது பேச்சை நான் விரும்பிக் கேட்டேன். என்னைப் பொறுத்தவரை, அதுவே உண்மையில், உங்களது வாசகர்களையும் உங்களது எண்ணக்கருவையும் ஒருங்கிணைக்கிறது. நீங்கள் உலகம் முழுவதற்குமோ அல்லது பிரித்தானியருக்கோ, அமெரிக்கருக்கோ எழுதுகின்ற உகாண்டா நாட்டு எழுத்தாளரல்ல. நீங்கள் உகாண்டா மக்களுக்காக எழுதுகிறீர்கள். அது ஏன் உங்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது?

மகும்பே: நல்லது, நான் ஆப்பிரிக்க இலக்கியத்தைப் படித்து வளர்ந்ததாலும், நான் ஆப்பிரிக்க இலக்கியத்தைக் கற்றதினாலும், ஆப்பிரிக்க இலக்கியத்தைக் கற்பித்ததினாலும் அது எனக்கு அவசியமாகப் பட்டது. ஆப்பிரிக்கர்கள், ஆப்பிரிக்க இலக்கியத்தை ஒரு பாடமாகக் கருதுகிறார்களே அன்றி அதனோடு ஒன்றிக்கவில்லை என்பதை நான் விரைவாகவே உணர்ந்து கொண்டேன். ஆப்பிரிக்க வாசகர்கள் அமெரிக்க இலக்கியங்களையும் ஏனைய ஆங்கில இலக்கியங்களையும் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, எமது இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அதுவே நாம் எமது புத்தகங்களை உலகிற்காக எழுதுகிறோமா அல்லது எமக்கு வருவாயைக் கொடுக்கும் சந்தைக்காக எழுதுகிறோமா என்பதைத் தீர்மானிக்க வைக்கிறது. ஆகவே நாம் எப்பொழுதும் ஆப்பிரிக்காவைப் பற்றி எழுதுகிறோமே அன்றி, ஆப்பிரிக்கர்களுக்காக எழுதுவதில்லை. நாம் உலகிற்கு ஆப்பிரிக்காவைப் பற்றிச் சொல்கிறோம். ஏனைய உலக நாடுகளுக்கு ஆப்பிரிக்காவைப் பற்றி விளக்கிச் சொல்லுமாறு ஆப்பரிக்கா எம்மிடம் கேட்பதாக நினைத்து நாம் எழுதுகிறோம். ஆப்பிரிக்கர்கள் அந்தப் புத்தகங்களைப் படிக்கையில், அவை தமக்காக எழுதப்பட்டவை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர் ஏனெனில் நீங்கள் ஏன் அவர்களுக்கு அவர்களின் நாட்டைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் விளக்க வேண்டும். அது உண்மையில் அலுப்புத்தட்டுவதாக அமையும். ஏனைய உலக நாட்டவர்களுக்கு இது அலுப்புத் தட்டுவதாக இருக்காது ஏனெனில் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் யாரும் அந்தப் பணியைச் செய்யவில்லை. ஆகவே அமெரிக்க எழுத்தாளர்கள் அமெரிக்கர்களுக்காகவே எழுதுகிறார்கள் ஏனெனில், முழு உலகமும் அவர்களைப் புரிந்துகொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறே பிரித்தானியர்களும். ஆனால் எம்மைப் பொறுத்தவரை, “நான் இதைத்தான் சொல்கிறேன், இதைத்தான் நான் செய்கிறேன்” என்று நாம் அமெரிக்கர்களுக்குப் புரிய வைக்க முனைகிறோம். அவர்கள் எமது உலகைப் புரிந்துகொள்ளவில்லை எமது கலாசாரத்தையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நாம் எதிர்பாரக்கிறோம்.

எனது கலாநிதி (முனைவர்) பட்டப்படிப்பிற்கான பகுதிகளில் ஒன்றாக வாசகர்களின் தன்மையை ஆய்வு செய்கையில், நாம் இந்த இடத்தில்தான் தவறிழைக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டபோது எனக்கு ஹ்…ஹ் என்ற பெருமூச்சு வந்தது. அவ்வாறு எழுதியதற்காக ஆப்பிரிக்க எழுத்தாளர்களின்மீது நான் குற்றம் சுமத்த மாட்டேன், எமது பதிப்பகத்தார் மேற்குலகைச் சேர்ந்தவர்கள் அவர்களின் முகவர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆகவே அவர்கள் இங்குள்ள சந்தைக்கு தீனி போடுபவர்களாக இருக்கின்றனர். ஆப்பிரிக்க சந்தைகளைப் பற்றி எவரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஆனால் நான் எம்மால் அதனை மாற்ற முடியும் என்று நினைத்தேன். ஆபிரிக்க வாசகர்களுடன் நாம் மீண்டும் இணைய முடியும். உண்மையில், இதுவே ஆப்பிரிக்க சந்தையை மீண்டும் தட்டி எழுப்புவதற்கான பிரதான செயலூக்க சக்தியாக இருந்தது. ஏனெனில் அது அங்கேயே இருக்கிறது; அது எமது புத்தகங்களுடன் தொடர்பற்றிருக்கிறது. அவர்களை மீண்டும் தட்டியெழுப்புவதற்கு, “ஒரு நிமிடம் நில்லுங்கள், நாம் உங்களுக்காகவே எழுதுகிறோம், நாம் எமக்காக எழுதுகிறோம்” என்ற சொன்னாலே போதுமானது. “இது உங்களுக்கு ஆப்பிரிக்க நாவலை கைகளில் பற்றிப்பிடிப்பதற்கு அனுமதியளிப்பதுடன், “நான் எதைப்பற்றிப் பேசுகிறேன் என்பதைத் தெரிந்தே பேசுகிறேன், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும், நான் அதை விரும்பவில்லை அல்லது அதனை நான் நேசிக்கிறேன் என்று சொல்ல வைக்கும். இதனை என்னால் சொல்ல முடியும்.” இவ்வாறாக, புத்தகங்கள் ஆப்பரிக்கர்களால் திறனாய்வு செய்யப்படும் அதன் மூலமாக மேற்குலகம் ஆப்பிரிக்காவில் இடம்பெறுகின்ற திறனாய்வுகளை அறிந்துகொள்ள முடியும். இதனாலேயே எனது புத்தகங்கள் உகாண்டா நாட்டினரால் மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் மேற்கு நாடுகள் இந்த புத்தகங்களின் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தாலும் அல்லது கண்டுபிடிக்கத் தவறினாலும் உலகின் மூலை முடுக்குகளில் உகாண்டாவிலிருந்து வரும் மதிப்புரைகளின் ஊடாக அந்தப் புத்தகங்களைப் பார்க்க முடியும். அது உண்மையில் உதவிகரமாக அமையும். அதேநேரம், நான் முன்னர் கூறியபடி, நல்ல இலக்கியம் ஒரு வாசகரை மட்டுமே பார்க்கிறது, ஆனால் புத்தகம் உலகைச் சென்றடைகின்றபோ, ஒவ்வொரு வாசகனும் அதனுடன் உறவாடக்கூடியதாக இருக்க வேண்டும். நான் இப்பொழுது சொல்லப்போகின்றவை வேடிக்கையாகவும் இருக்கலாம், “ஓ நான் இப்பொழுது அமெரிக்க வாசகர்கள் பற்றியும் சிந்திக்கிறேன், நான் இப்பொழுது பிரித்தானிய வாசகர்களைப் பற்றிச் சிந்திக்கிறேன், நான் இப்பொழுது இந்திய வாசகர்களைப் பற்றிச் சிந்திக்கிறேன்,{ ஏனெனில் அவை ஆங்கில வாசகர்களுக்கான பெரிய சந்தைகள். அது கடினமானது.

டேவிஸ்: மேற்கத்திய வெளியீட்டாளர்கள் ஆப்பிரிக்காவைப் பற்றிய, உகாண்டாவைப் பற்றிய நாவல்களில் மேற்கத்தைய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய புத்தகத்தப் பதிப்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் உங்களது கிண்டுவில் எத்தகைய மேற்கத்தைய பாத்திரங்களும் இடம்பெறவில்லையே.

மகும்பி: இல்லை, நான் சேர்க்கவில்லை. யுத்தம், முழுப்புத்தகமும் யுத்தத்தைப் பற்றிப் பேசுவது, முழுமையாக வறுமையின்மீது பார்வையைச் செலுத்துவது போன்ற பிரபலமான கருக்களையும் அவர்கள் விரும்புகின்றனர் அவைகளை ஐரோப்பிய நேயத்துடன் எழுதுவதை விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை என்னுள் உறங்கிக் கொண்டிருந்த ஆப்பிரிக்கனை மேற்கு தட்டி எழுப்பியது.

டேவிஸ்: எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது – நீங்கள் உகாண்டா நாட்டவர், நீங்கள் உகாண்டாவில் பிறந்தவர். நீங்கள் இப்பொழுது கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசிக்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை இன்றைய உகாண்டா என்பது என்ன? உங்கள் அறிவுக்கெட்டியவரை உகாண்டனாக இருப்பது என்பதன் பொருள் என்ன? நீங்கள் இங்கிலாந்தில் செலவழித்த காலத்தில் அவை அனைத்தும் எப்படி மாற்றமடைந்துள்ளன?

மகும்பி: ம்… நான் உகாண்டாவில் வசித்த வேளையிலும், நான் உகாண்டாவில் இருந்த பொழுதும், நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன்; ஒரு சராசரி மனிதனாக இருந்தேன். நான் ஒரு ஆப்பிரிக்கனாகவோ அல்லது கறுப்பினத்தவனாகவோ இருப்பதையிட்டு நான் அக்கறைகொள்ளவில்லை. அத்தகைய எண்ணமே எனக்கு வரவில்லை என்பதைத்தான் அப்படிச் சொல்கிறேன். இந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்றால், “நான் மேற்குலகிற்கு வரும்வரை நான் ஒரு ஆப்பிரிக்கன் என்பதே எனக்குத் தெரியாது.” என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ஆப்பிரிக்கர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஆப்பிரிக்கா ஒன்றுள்ளது. அங்கு சென்று ஒரு ஆப்பிரிக்கரிடம் நீங்கள், “ஒரு நிமிடம் நில்லுங்கள், அந்த ஆப்பிரிக்கர்கள் யார்? என்று கேட்டால் எனக்குத் தெரியாது நான் அந்த ஆப்பிரிக்கனாக இருந்தவன்” என்று பதிலளிப்பார்கள். அதைப்போன்றே, மேற்குலகிற்கு வருகின்றபோது அது என்னுள் உறைந்திருந்த ஆபிரிக்கனை மீளெழுப்பியது. நீங்கள் எனது “மான்செஸ்டரில் நடப்பவை” என்னும் சிறுகதையைப் படித்தால், எப்படி ஆப்பிரிக்க புத்திஜீவிகள் ஆயுதப்போராளிகளாக மாறினார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும், அவர்களில் நானும் ஒருவன், எனக்கு ஒரு இடம் வேண்டும், அதற்கு நான் சொல்லக்கூடிய முதலாவது விடயம், “நான் ஒரு ஆப்பிரிக்கன். என்னைப் பிடித்துச் செல்லுங்கள், நான் ஒரு ஆப்பிரிக்கன்.” என்பதாகும். ஏனென்றால் இங்கே ஆப்பிரிக்கராக இருப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆப்பிரிக்கனாக இருப்பவர்களைக் கண்டால் மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள். நான் உங்கள் முன் ஒரு ஆப்பிரிக்கனாக அமர்ந்திருக்கிறேன்.

அது எனக்கு உகாண்டாவைப் பற்றிய ஏக்கத்தை ஏற்படுத்தியது. நான் எனது கலாசாரத்தை நேசிக்க ஆரம்பித்தேன். கடந்த காலத்தில், நான் அதைப்பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் எனது மொழியின்மீது கவனம் செலுத்த ஆரம்பித்ததுடன் அது எப்படி ஆங்கிலச் சொற்களை உள்வாங்கியுள்ளது என்பதையிட்டு கவலையடைந்தேன். நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வழக்கமுடையவன்; இப்பொழுது நான் அதைக் கடைப்பிடிப்பதில்லை. எவ்வாறு மேற்கு என்னை ஒரு மூர்க்கமான ஆப்பிரிக்கனாகவும் உகாண்டனாகவும் மாற்றியுள்ளது என்பதை நினைக்க வேடிக்கையாக இருக்கிறது. இதுவே நான் ஏன் மரபுகளுக்குச் சென்றேன் என்பதற்கான வாய்மொழி விளக்கம் இதுதான், ஏனென்றால் நான் அதில்தான் இலயித்திருக்கிறேன், எனது படைப்பாற்றலும் எனது முன்னோர்களின் படைப்பாற்றல் வரலாறும் அதுவே. இதுவே எனது ஊற்றும் உற்சாகம் மற்றும் யோசனைகளுக்கான அடிப்படை ஆதாரமுமாகும்.

ஆகவே மேலைத்தேய நாடுகளுக்கு வருகின்ற பெரும்பாலான மக்கள், தாம் மேற்கத்தையராக மாறிவிட்டதை வெளிப்படுத்திக்கொள்ளவே முற்படுகின்றனர். நான் வீட்டிற்குச் செல்கின்றபோது மக்கள், “கடவுளே, அவள் ஒரு முற்போக்கான மரபுவாதி. அவளிடமிருந்து விலகியே இரு.” என்று சொல்வார்கள். (சிரிக்கிறார்) உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு நியூயார்க்கில் இருக்கும் எனது மாமியுடன் நான் பேசிக்கொண்டிருக்கையில், “ஆமாம் ஜெனிஃபர், நீங்கள் மரபை நேசிப்பவர் என்பதைப் புரிந்துகொள்கிறோம், ஆனால்…(சிரிக்கிறார்) இப்பொழுதெல்லாம் நான் வீட்டிற்குச் சென்றால், மக்கள் என்னை நான்சுபுகா என்றுதான் அழைக்கின்றனர். அதாவது நான் உண்மையில் எப்படி இருக்கிறேன் என்பதையிட்டு எனக்கு அவர்கள் சூட்டிய கலாசார நாமம். அவர்களுக்கு நான் ஜெனிஃபர் இல்லை ஆனாலும் அவர்கள் ஜெனிஃபர் என்று அழைப்பதைவிடவும் இதில் எனக்கு மகிழ்ச்சியே. ஹ்ம்.. இப்படித்தான் இங்கிலாந்து என்னை மாற்றியிருக்கிறது.

0000000000000000000

மகும்பி பற்றிய சிறுகுறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்உகாண்டாவைச் சேர்ந்த நாவலாசிரியரும் கதைசொல்லியுமான ஜெனிஃபர் நான்சுபுகா மகும்பியின் முதலாவது நாவலான கிண்டு, குவானி கையெழுத்துப் பிரதித் திட்டத்தில் 2013ஆம் ஆண்டில் வெற்றிபெற்றதுடன் 2014ஆம் ஆண்டிற்கான எடிசாலட் பரிசிற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு அவரது லெட் அஸ் டெல் திஸ் ஸ்டோரி ப்ராப்பர்லி என்னும் கதைக்கு பொதுநலவாய நாடுகளின் சிறுகதை விருது வழங்கப்பட்டது. இதனை கிராண்டா நிறுவனம் பதிப்பித்திருந்தது. மேலும் அவரது எழுத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக 2018ஆம் ஆண்டு கௌரவமிக்க விருதான வின்ட்ஹாம்-கேம்பெல் பரிசும் வழங்கப்பட்டது. அவரது முழுச் சிறுகதைத் திரட்டான மான்செஸ்டர் ஹேப்பன்ட்டானது ஒன்வேர்ல்ட் பதிப்பகத்தினால் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. பின்னர் தலைப்பு மாற்றப்பட்டு லெட்ஸ் டெல் திஸ் ஸ்டோரி ப்ராப்பர்லி என்ற திரட்டு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டது. அவர் மான்செஸ்டரில் தனது கணவர், மகன் ஆகியோருடன் வசித்து வருவகிறார். மான்செஸ்டர் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தில் ஆக்கபூர்வமான எழுத்துகள் குறித்து விரிவுரைகளையும் நிகழ்த்தி வருகிறார்.

மகும்பி,ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஆலன் செயூஸ் சர்வதேச எழுத்தாளர் மையத்தில் ஆய்வாளராகக் கடமையாற்றிய வேளையில் கடந்த வசந்தகாலப் பருவத்தில் அவர் அந்த மையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளரான மாத்யு டேவிசுடன் உரையாடலை மேற்கொண்டிருந்தார். இங்கே உகாண்டர்களுக்காக எழுதப்படுவதை, ஆப்பிரிக்கர்களும் மேலைத்தேய நாட்டினரும் ஆப்பிரிக்க இலக்கியத்தை படிப்பதில் எப்படி வேறுபடுகின்றனர் என்பதைப் பற்றியும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த பதினெட்டு வருடங்கள் அவரை எப்படி மாற்றியுள்ளது என்பது குறித்தும் இருவரும் கலந்துரையாடுகின்றனர்.

0000000000000000000

டேவிஸ் பாடிய சிறுகுறிப்பு :

மாத்யு டேவிஸ், ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஆலன் செயூஸ் சர்வதேச எழுத்தாளர் மையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராகத் திகழ்பவர். இவர் மங்கோலிய எழுத்தாளரின் கதையை மையமாகக் கொண்டு வென் திங்ஸ் கெட் டார்க் என்னும் நூலின் ஆசிரியராவார். அவரது படைப்பு உலகின் பல பாகங்களில் வெளிவந்துள்ளதைப் போன்றே நியூ யோர்க்கர், தி அட்லான்டிக் அண்ட் கியுர்னிகா ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது. அவர் புதிய அமெரிக்காவில் எரிக் மற்றும் வெண்டி ஷ்மிட் ஃபெலோ, யு.என்.எல்.வி.யில் உள்ள பிளாக் மவுண்டன் இன்ஸ்டிடியூட்டில் ஃபெலோ மற்றும் சிரியா மற்றும் ஜோர்டானுக்கான ஃபுல்பிரைட் ஃபெலோவாக பணியாற்றியுள்ளார்.

00000000000000000000000000000000000000000

நேர்காணல் தொடர்பான புகைப்படங்கள் :

தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன் தேசிகன் ராஜகோபாலன்

00000000000000000000000000000000000000000

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 96 times, 1 visits today)