யுக நிணத்தின் ஊனம்-கவிதை-கோ நாதன்

யுக நிணத்தின் ஊனம்

கோ.நாதன்

எந்த இடத்திலிருந்து தொடங்கி
எந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

நாம் எல்லோரும் பயணித்த
பாதை ஒன்று தான்
இலக்கு ஒன்று தான்
நிலம் ஒன்று தான்
போர் ஒன்று தான்
அதன் ஒளி தோற்றம் தான் வேறு

போரின் வெற்றியை கொண்டாடும்
ஒரு இனத்தின் சந்தோஷத்தில்
ஒரு இனத்தின் துயரம் கலந்திருந்தது.

துருப்பிடித்த துப்பாக்கிகளும்
அழுக்கேறிய சப்பாத்துக்களும்
ஆவேசப்பட்ட வார்த்தைகளும்
குரலற்றவர்களின் குரல்களை அறுத்தெறிந்தது .
பேயரசின் வன்முறையின் கூர்மைக் கத்தி.

சாட்சிகளிருந்தும்,
சாட்சிகளற்ற வெட்ட வெளியில்
அஞ்சலிக்
குறிப்புக்களை எழுதிப் பழிக்கின்றோம்.
யுக நிணத்தின் ஊனத்தை
பருகியதை தவிர, வேறொன்றுமில்லை?

எல்லா இழப்புக்களிடையும்,
எல்லா துயரங்களிடையும்,
எல்லா தோல்விகளிடையும்,
எல்லா இறப்புக்களிடையும்
ஒரு பிரளயத்தின்
இடைவெளி தாகத்தில் அல்லோலப்பட்டது.

ஞானத்தின் கறை படிந்திருக்கும்
தாயகத்தின் காலடிகளுள்
புதைந்து போன பெருங் கனவுகளை
சவப்பேழைக்குள் அடக்கியது போர்.

படுகொலை
நடந்தேறிய பாதைகளெங்கும்
வலிகளின் முட்களாய் முளைக்கிறோம் .
ஊழி யுகத்திலிருந்து தப்பித்து இருக்கிறது .
பயங்கரவாதத்தின் புன்னகை.

போருற்று கடந்தவளின்
முடிவுற்ற மண்ணின் மையத்தில்
சிதைந்த யோனியிலிருந்து பிறப்பெடுத்தது
போரின் அசைவற்ற குழந்தை.

000000000000000000000000

யுத்தம் தின்ற விலங்கு

நான்
கண் விழிக்கும் காலைப் பொழுது
ஒவ்வொன்றும் ஏதோவொரு
சாவின் சேதியை வீட்டின்
கதவு முன் சொல்லிக்கொண்டிருந்தது.

‘யுத்தம் மரணக் குருதி பருகும் பிசாசு’
எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட
ஞானத்தின் செருகிய வசனத்தால்
நிலமெங்கும் மலிந்திருந்தது மரணம்.

நான்
முச்சந்திகள் கடக்கும் தருணங்கள்.
அச்சம் கொணர்ந்த பதபதைப்பில்
இதயம் பலவீனமடைந்திருந்தது.
மனப்பிராந்தியில் – பிறழ்வு
அறிகுறியாய் சொற்கள் மௌனித்தன.

மதியம் அலையும் பேய்களையும்,
நடுச்சாமம் திரியும் ஆவிகளையும்
திகிலூட்டிய பழங்கதைகள்
கேட்டுக் கேட்டு – என்
எண்ணங்களில் அறியாமை விளைவித்தது.

இரவுகளின் விசுவாசத்தில்
ஊரின் வீடுகளில்
அடைவுப்படட புலிகளின் காலடிகள்.
பகல்களின்
துரோகத்தில் தடம் தேடல்ப்பட்ட
எல்லை நரிகளாலும் ,
காவல் சிங்கங்களாலும் -நான்
இருபக்க கடைவாயிலிருந்து
கடித்து குதறி எறியப்பட்ட நாயாகினேன்.

நான்
படுகொலையுண்ட- பின்
புற்தரையில் விழுந்து காய்த்த
இரத்தக் கட்டிகளை
எறும்புகள் நிரை நுரையாய் நகத்தியது.
துர் ஊனத்தை இளையான்களின்
கிணுகிணுப்பில் வடிகட்டியது காற்றுவெளி.

என்
மாமிசத்தை பொறக்கி
தின்று கொண்டிருந்தது யுத்த விலங்கு.

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ நாதன்

 

(Visited 230 times, 1 visits today)