இறுதிச்சாட்சி தலைமயிர்-கவிதை கோ.நாதன்

இறுதிச்சாட்சி தலைமயிர்

கோ.நாதன்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

அமைதி,
குழைந்திருக்கும் போருண்ட நிலம்.
உப்பு மணல் தரவையெங்கும்
வலியெறிந்த காலத்தை,
அடம்பன் கொடி மேல் வளர்த்திருந்தது.

போர் எனும் பிசாசு,
நிலத்து மக்களை சாகடித்து
ஆதி இனத்தையும்
நிலம் விட்டு துரத்தியிருந்தன.
இடம்பெயர்தல்,
பலிபீடம் ஏறுதலை விடவும் கொடியது.

நான் வாழ்ந்த நகரம்,
வெறுமையையும், நிசப்தத்தையும்
காற்றுவெளி பரப்பில்
மௌனத்தை விரவி இழைத்திருந்தது.

நானும், அவளும்
அறமுள்ள போராளியாக நுழைந்தோம்.
நாம்,
உறவிழந்த உறவாகி வளர்ந்த பின்னும்
களமும், போர் வியூகமும்
காலம் கற்று தந்த கருணை யுகமானது.

வானமும், பூமியும், ஆயுதமும்
மௌனித்து கிடந்த தருணம்,
யாரோ ஒருவரினால்
கையளிக்கப்பட்ட போர்க் கைதியானோம்.

கரங்களும், கால்களும்
நைலோன் கயிற்றால் கட்டப்பட்ட
நானும்,அவளும், மற்றவர்களும்
துன்புறுத்தல் வழியே
உயிர் நோக செத்துக் கொண்டிருந்தோம்.

நிர்வாணம்,
பாழடைந்த கட்டிடங்களுக்கு அப்பாலும்
வெட்கமற்று,உணர்வற்று,
நீண்டு விரிந்து மலிந்து கிடக்கின்றன.

நாயும்,
வெட்கத்தில் விலகிப் போகிறது.

அவளும்,அவள்களும்
வல்லுறவுக்கு சாவை நெருங்கிய போது
நானும், அவன்களும்
கண்களிலிருந்து
கூச்சத்தில் அவமானத்தை சுமத்திருந்தோம்.

நீர் நிலை கரையில் வளர்ந்த
தமிழ் நாகரிகம்,
நீர் நிலை கரையில்
அழித்தொழிக்கப் பட்டது.

போர் துடைத்தெறிந்த மிகுதியாய்
அவளினதும்,அவள்களினதும்
என்னுடையதும், அவர்களுடையதுமான
தலைமயிர்கள் தான் இறுதி சாட்சி.

00000000000000000000000000000000

தேநீரின் உயிரி

கோ.நாதன்

எனது தேசத்தின்
தேயிலைத் தரமும்,விலையும்.
பல நூற்றாண்டுக்கு முன்
களவாடிப் போன பேரரசின்
வாரிசுகள்,
இப்போதும் தீர்மானிக்கிறார்கள்.

மேற்குலக,
குளிர் நிலத்து மக்களிடையே
என் நிலத்தின் தேயிலை
நோய் தீர்க்கும் ஔடதமாயிற்று.

உல்லாச விடுதி,
கண்ணாடி இழை மேசையில்
எனது தேயிலைச் சாயம் கலந்த
குவளையிலிருந்து அவர்கள்
உதடுகளும்,உள்ளங்களும்
சூடு தணித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனிக் கலவைக்கான
தங்கக் கரண்டி அருகே ஒளிர்கிறது.
தேநீர் மண்டியில் – எனது தாயின்
இரத்தம் உறைந்து கனக்கிறது.

அவர்கள் யாருமில்லை.
உலக வியாபாரிகளின் ராஜதந்திரிகள்.
தேயிலையின் மகிமையையும்,
அதனுடான உடல் ஆரோக்கியத்தையும்
மதங்கள் வழியே
பரப்புரை செய்யும்
புனித மதவாதிகளும் அவர்கள் தான்.

தேயிலைத் தோட்டங்களின்
கூலி அடிமை சாசனத்தை எழுதிய
வல்லரசு,
பேரினவாத இறைமை அரசிடம்
நிலவுடைமையற்ற,
மக்கள் சரத்தையும்,
ஆயுள் கால பிரகடனத்தையும்,
கையொப்பமிட்டு விற்று விட்டார்கள்.

மழையிலும், வெயிலிலும்
முகடுகளெங்கும் கால் மிதித்து
உடல் நொஞ்சான் ஆக்கப்பட்ட
என் தாய்.
மீந்தும் இரத்தத்தில் பிடிமானமற்ற
வாழ்வை ஆசுவாசப்படுத்துகிறாள்.

கூன் விழுந்த சரீரம்,
முள்ளந்தண்டை வளைத்திருந்தது.
ரவிக்கையில் ஏறிய கற்கள் ஊசிக்கு
மாற்றூசி இல்லாமல்
முட்கள் மானம் காக்கிறது.

அவளுடைய
முதுகில் ஏற்றப்பட்ட கூடை,
மலையகத்தின் தேசிய அடையாளமாயிற்று.

இயற்கையை,
கண்கள் பார்வையில் கடந்து போகும்
மானிட விலங்கு,
லயன் கொட்டிலில்
குடும்ப ஊர்வன வாழ்வியம்
ஏதிலியாய் வரைந்திருக்கிறது.

வெண் முடுபனி,
பச்சை நிலம்,
நீல வானம்,
கருமை இருள் என்பது மட்டும்
காலத்தின் சுழற்சியில் நிரந்தரம்.

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ.நாதன்

(Visited 106 times, 1 visits today)