போர் அல்லது கொலை வழி-கவிதை-கோ.நாதன்

போர் அல்லது கொலை வழி

எப்போதுமான தீர்க்க நீள் கனவு
ஆழ் மனதுள் உறைகிறது.
வெறுஞ்சோடி யாருமற்ற
நிலத்தின் மேல் போரில் எஞ்சிய
உக்கியும் மங்காத எலும்புத் துண்டாய்

விடியும் பொழுது ஒவ்வொன்றின்
இயல்பு நிலைகளும்
துருப்பிடித்த துப்பாக்கி கெடுபிடிகளுள்
முன் வகிபாகம் செய்கிறது.

நெடுங்காலம் கடந்தும்
நிலம் பூக்கும் வாசனை மலர்களில்
யுத்தம் வீழ்ந்து மடிந்த
கந்தக நெடிகளின் நஞ்சு திரவம்.

மூதாயரின் சூழல் மண்ணுள்
புதையுண்ட இனத்தின்
அடியை அழித்தொழிக்கும் தீவிரம்.
அரச மரங்களுள்
நிழல் கடவுளின் வௌவால் வருகை.

மண் மூடிய பதுங்கு குழிக்குளிலிருந்து
முளைவிடும் செடியில் மிளிரும்
சீருடையில் போரின் இயலாமைத் தன்மை

00000000000000000000000

வெள்ளை நிறம்

என் இனத்தின் ஆயுதம்
தோள்களிலிருந்தும், கரங்களிலிருந்தும்
மௌனித்து ஒரு சகாப்தமாகி விட்டன.

நீயும் வல்லாதிக்கத்தின்
பெரும் சூழ்ச்சியில் தோற்கடித்து விட்டாய்

இப்போதும் அச்சத்தில்
துப்பாக்கியும் கையுமாய் அலைகின்றாய்.
செத்த நிலம் மீது
பீரங்கி வண்டிகளை திருப்பி செலுத்தும் நீ

உன்னில் இளையான் கூட
மொய்ப்பதற்கு தயக்கப்படும் ஆனால்
நீ உறவில் வன்மப் பட
தமிழிச்சி வாடை தேடுகிறாய்.

பொழுதுகளெல்லாம் நிர்வாணமாக்கப்பட்ட
பெண் உடல்களில் மிதந்து
காமப்பலி பீடம் தயாரிக்கும் உன்னால்
என் நிலம் ஒளிப் புன்னகை இழந்து போனது.

என் ஊரின் சந்திகள் மீளவும்
எங்கள் இரத்தம் குடித்து
பிணமாக்கப்பட்ட பிண்டங்கள் மேல்
நாயகள் மோனத்தால் சிரிக்கின்றன.

வெட்கத்தையும்,
மானத்தையும்,
ரோஷத்தையும் விட்டு விலகி
நடுத்தெருவின் புற்தரையில்
இறைச்சிக்காக வளர்ப்புப்படும் மிருகமாய்
என் சமூகம் தோல்வியை மெல்லுகின்றன.

சாராய நெடியில் பிரியும் வாய் சொற்கள்
உன் வெற்றியின் எல்லைகளை
ஒரு இருண்ட காலத்திற்கு குரலெழுப்பும்

வெள்ளை நிறமுடைய நிலவையும்
என்னால் நிமிர்ந்து பார்ப்பதற்கும்
பீதி கொள்ளும் மனசு
நீ இருளிலும் சப்தமில்லாமல் உலாவும்
வெள்ளை வாகனத்தில்
எப்போதும் கொலையில் உயிர் உழலும்

கோ.நாதன்-பிரான்ஸ்

(Visited 185 times, 1 visits today)