சிறகு முளைத்த விரல்கள்-கவிதை-பிரகாசக்கவி

சிறகு முளைத்த விரல்கள்

கண்களை போல
எனக்கு பத்து விரல்கள்
சிறகு முளைத்த அவற்றுக்கு
மனதைப் போல
தடுமாற தெரியாது

இப்போதெல்லாம் அடிக்கடி
மனதை விவாகரத்து செய்துவிட்டு
விரல்களை
மணந்துகொள்ளும் எனது மூளைக்கு
நடிக்கவும் தெரியாது
சிரிக்கவும் தெரியாது

ஆனால்
நன்றாக அதற்கு பேசத்தெரியும்

இப்படித்தான் நேற்று இரவு
தலை கோதிய எனது விரல்கள்
மனதை பிடித்து
மாட்டுக் கொட்டகை ஒன்றில்
மேயவிட்டு விட்டு
மூளையோடு
மிக நீண்ட நேரம் மல்லுக்கட்டியது

தேர்தல் பற்றியும்
காரசாரமாக விவாதித்தது

சிறகு முளைத்த தன்
ஆள்காட்டி விரலொரு
சினைப்பர் துப்பாக்கி என்பதால்

இம்முறை
வாக்குச்சாவடிக்கு பறந்து செல்லும்
எனது ஆள்காட்டி
போலிகளை சுட்டு தள்ள உறுதிபூண்டது

00000000000000000000000

டுமீல் டுமீல் டுமீல்

காகம் வெள்ளை என்பதை
ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் உள்ளே வரலாம்

உங்களுக்கு
ஒரு துண்டு சுதந்திரம் பரிசாக வழங்கப்படும்

நாடு ஒன்றை வரையப்போவதாகச்சொன்ன
நமது ஜனாதிபதி வரைந்த பெரிய காடு இது

அதோ பாருங்கள்
அதுதான் அதிசய பறவை
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அது பிறக்கும்

அதன் பெயரை
தேர்தல் என்பதாக அகராதி சொல்கிறது

பல கொடிய மிருகங்கள்
அந்த அதிசய பறவையில் ஏறி
நம்மை கொல்ல வருகின்றன

எல்லோரும் புதர்களுக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்

நம்மிடம் இருக்கும்
ஜனநாயகம் என்ற துப்பாக்கிக்குள்
உங்கள் வாக்கு என்ற ரவையை மீள் நிரப்பி
அந்த கொடிய மிருகங்களை சுட்டுத்தள்ளுங்கள்
டுமீல் டுமீல் டுமீல்

பிரகாசக்கவி – இலங்கை

 

(Visited 301 times, 1 visits today)