மனிதர்கள் ஆபத்தானவர்கள் அவதானமாக கையாளுங்கள்-பிரகாசக்கவி

பிரகாசக்கவி

மகன் வரைந்த தாளில்
வானமும் பூமியும்
தலை கீழாக தொங்கின

திடீரென்று
அவனது ஓவியத்திற்குள்
ஒரு மீனாகி நுழைந்த எனக்கு தண்ணீர் தாகம்

சிறகசைத்து
வாலசைத்து
வாயசைத்து நான் அங்கு
பதை பதைப்பதை கண்ட மகன்
என் மேல் பரிதாபங்கொண்டு

மலைகளை
சிறு சிறு பறவைகளாக்கி பறக்கவிட்டான்

பறந்து சென்ற அவை
வானத்தில் கூடுகட்டி அமர்ந்தன

மீண்டும் அவன் கர ஒலி எழுப்பியவுடன்

பறந்து சென்ற குருவிகள்
மேகத்திலிருந்து
மெல்ல மெல்ல சிறகசைக்க தொடங்கியதும்

அங்கிருந்த மழை பூக்கள்
முதலில் கிணற்றையும்
ஆறு,குளம்,கடலென
அனைத்தையும் உருவாக்கிய பின்னர்
அது போய் சமுத்திரங்களில் உட்கார்ந்து கொண்டது
ஆனபோதும் தாளில் இன்னும்
மரங்களை மட்டும் காணவில்லை

000000000000000000000000000000

முத்தம் பற்றிய சில கிறுக்கல்கள்

முத்தம் கூவி யுத்தம் முடிந்த தெருவில்
சில்லென்று வீசும் தென்றலே
இந்த இருளை நாம் அள்ளித்தின்போம் வா அய்னா
பகலெல்லாம் பகலுமல்ல இரவெல்லாம் இரவுமல்ல
காதலும், ஊடலும்
இரட்டை குழந்தைகள் என்பதை
இந்த உலகிற்கு
உரக்கச் சொல்வோம் வா அய்னா

உலகத்தில் உள்ள
பூதங்கள் எத்தனை ஓ அய்னா
அது ஐந்திலிருந்து
ஆறு ஆகிப்போச்சுதடா என் தீரா
ஆறாவதாய் அதில் உள்ள
பூதத்தின் பெயர்தான் என்னவோ ஏய் அய்னா

ஆம் ஆம் அதன் பெயர்தான் இப்போது முத்தம் என்றானதடா என் தீரா
நாட்டியமாடும் நான்கு விழிகள் பற்றியும்
சிறகு முளைத்த இதழ்கள் பற்றியும்
தேன் சுரக்கும் முத்தம் பற்றியும்
தாறு மாறாக எழுதப்பட்டிருக்கின்ற
சிறு குறிப்பைத்தான்
தற்போது நீங்கள்
உங்கள் கண்களால் பருகிக்கொண்டிருக்கின்றீர்கள்

அன்பினால் கட்டப்பட்டிருக்கும்
எங்களது வீட்டிற்கு
தற்போது படையெடுக்கும் தேனீக்கள்
அவளது உதடுகள் தானென நினைத்து
இந்த சிறு குறிப்போடு சேர்த்து
உங்கள் கண்களையும்
அருந்தி விடப் போகின்றன மிகக் கவனம் நீங்கள்

பிரகாசக்கவி-இலங்கை

பிரகாசக்கவி

(Visited 51 times, 1 visits today)