இரவுகள் அறியாப்பொழுதுகள் அடங்கும்-கலைச்செல்வன்(மீள் வாசிப்பு)

 

கலைச்செல்வன்

இரவுகள் அறியாப்
பொழுதுகள் அடங்கும்
காடும் வீடும்
ஒன்றேயாகும்
“எங்கள் போராட்டம்(?)
நிச்சயம் வெற்றி பெறும்”
“மக்களுக்கு மரண பயம் இல்லை”
(வாழும் பயம் தவிர)

அறிவித்தல்கள் ஆயிரமாக
அனைத்துக் கிளைகளும்
அள்ளி வீசும்
அவை எழுத்திலா?
பேச்சிலா?
கத்தி நுனியிலா?
துப்பாக்கிக் குண்டிலா?

இரவுகளின் கனவு
விழித்திருக்கும்போதும்
காதுகள் கதவு
இடுக்குகளில் பதுங்கும்
படிகளில்
அதிர்வுகளை எண்ணும்

அவை பெண்களின் கால்களா?
ஆண்களின் கால்களா?
இரண்டு கால்களா?
நாலு கால்களா?
காலையும் மாலையும்
கரிய வளையுள் பதுங்கும்
விழிகள் கூட
பனிப்புகார், இரவின் நிழல்
கார் கண்ணாடி,மதகு இடுக்குகள்
அனைத்திலும்
முகங்களைத் தேடும்

கறுப்பா,வெள்ளையா?
யாழ்ப்பாணமா,பாண்டிச்சேரியா?
மனிதனாகவா,மிருகமாகவா?

யாழ்ப்பாணத்தின்
எந்தத் தெருக்கள்
நினைவில் ஓடுவதறியா
அந்நியத் தெருக்களும்
ஈழத்து வீதியாக
அராஜகம் அனைத்தும்
புவியினில் விரியும்.

எங்கே எம் வாழ்வு?
எங்கே நாம் அகதி?
எங்கே எமது போராட்டம்?
எங்கே எமது விடுதலை?!

1990-ல் எழுதியது

0000000000000000000000000

மலைகளைப் பொசுக்கும் வாலிபம்

இருளடர்ந்த என் உலகத்தில்
துயரத்தின் ஒளிக்கீற்றுகள்தான்
என் பாதங்களுக்கு வழி கொடுக்கின்றன.

மலைகளும் அருவிகளும்
நிறைந்த இந்தப் பாலைவனத்தில்
பசி எனக்கு சோறூட்ட
வறுமை ஆதரவோடு வளர்த்தெடுத்தது.

அவை பாலைவனங்களா…..?
இல்லை
இன்னுமின்னும் கொடியது.
ஈரலித்த மண்ணில் ஆழப் பதிந்த
என் சோகத்தின் சுவடுகள்
என் வரலாற்றை
மறுபதிப்புச் செய்துகொள்ளும்

இன்னும் இன்னும் – ஏன்?

காலம் வட்டமான வரிகோடுகளாக
வலம் வந்து கொண்டிருக்க
இன்பம்
அவை எட்ட நின்று சிரித்து விட்டு
கிட்ட வந்து சோகச்சூட்டுக்குள்
எரிந்து போகின்றன.

அடிக்கடி துடிப்பிழந்து போகும்
என் இதயத்திற்கு
அந்த இன்பங்களைத்தான்
“வாழ்விருக்கு” என் வாழ்வை
இழுத்து வருகின்றன

இருக்கிறதா ….?
இருக்கு என்ற
ஏக்கம் தான் ……
வாழ்வா?

அன்பு,காதல்,ஊடல்,உறவு
எல்லாமே எனக்கும் இருக்கிறதே…….
ஆயினும் இவற்றைப் பாய்ச்சுவதற்கு
இத்தனை கடத்தற்கரிய சுவர்களா?

ஓடிவரும் குழந்தையின்
உச்சி முகர்வுக்காக
ஏங்கி …ஏங்கி …..
எத்தனை தரம் கைகளை நீட்டி
ஒடித்துக்கொண்டு விட்டேன்.

இந்தப்பெருமதில்களை
எழுப்பியவர் யார்….?
அதைத் தூசி தட்டிப்
பழுது பார்க்கும்
வாரிசுகள் யார்…..?

1990-ல் எழுதியது

நன்றி :கலைச்செல்வனின் பிரதிகள்

கலைச்செல்வன்- பிரான்ஸ்

கலைச்செல்வன்

(Visited 66 times, 1 visits today)
 
கலைச்செல்வன்

மௌனம்-சிறுகதை-கலைச்செல்வன்

ஒரு அடைத்துப் பூட்டிய பெரிய சுப்பர் மார்க்கற். நீண்டு விரிந்து கிடக்கிறது. சாமான்களை அடுக்கிக் கொண்டேயிருக்கிறேன். வியர்த்துக் கொட்டுகிறது. வெளியிலை வெப்பநிலை 35 டிகிரியாம். இங்கு சாமான்களும் மூச்சுக்காற்றும் சேர்ந்து […]

 354 total views