மௌனம்-சிறுகதை-கலைச்செல்வன்

கலைச்செல்வன்ஒரு அடைத்துப் பூட்டிய பெரிய சுப்பர் மார்க்கற். நீண்டு விரிந்து கிடக்கிறது. சாமான்களை அடுக்கிக் கொண்டேயிருக்கிறேன். வியர்த்துக் கொட்டுகிறது. வெளியிலை வெப்பநிலை 35 டிகிரியாம். இங்கு சாமான்களும் மூச்சுக்காற்றும் சேர்ந்து ஒரு 40 இருக்கும். மொட்டும் மலருமாக வரும் ஒவ்வொரு முகங்களையும் ரசித்து களைப்பை போக்கும் எண்ணம் இன்று இல்லை. விளையாட்டுச் சாமான்களோடு  அரும்புகள் ஆவலைக்கொட்டும் அழகையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. விளையாட்டுச் சாமான்களை ஒழுங்குபடுத்தி அடுக்கிவிட்டு எழுந்தேன்.

‘செவ்’ எதிரே நின்றான். “என்ன?” என்பதுபோல் எழுந்து நின்று ஒரு கன்ன நெற்றியை சுருக்கினேன். சுருக்கத்தில் வழி தவறிய வியர்வைத் துளி ஒன்று புருவ மயிரைப் பிடித்து கன்னத்தில் விழுந்து ஓடியது.

“வைன் போத்தல்கள் முடிந்து கொண்டிருக்கிறது. அந்தத் தட்டை நிரப்பி விடு.” அவன் சொல்லி முடிக்க முன்னர், “முதலில் கோப்பி குடிக்கப் போகிறேன். அதன் பின்னர் வந்து பார்த்துக் கொள்கிறேன்.” அவன் பதிலுக்கு காத்திருக்கும் அவசியம் இல்லை.

கோப்பி  குடிக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தேன். செறிவான கோப்பி  குடிக்க வேண்டும். இந்த மெசின் கோப்பி சரியில்லை. பார் கோப்பி  போல் வராதுதான். எது எப்படித்தான் இருந்தாலும் வட்டமாக மேசையடுக்கி கதிரை போட்ட அந்த கோப்பிச் சாலைக்குள் இருந்து குடிக்கும் ஆறுதல் அது ஒரு தனி ருசி. அந்த மண்டபத்தில் எங்கள் தண்ணீர் தாகங்களில் இருந்து ஆத்திரம், விரக்தி, கவலை, சந்தோசம், எல்லாத் தாகங்களும் தணிக்கப்படும். தீர்மானங்கள் முடிவாகும். போராட்டங்கள் தொடங்கும். அறிவிப்புப் பலகைகள் நாளுக்கு நாள் முறைக்கும். நான் எப்போது வியர்ப்பது, எப்போது ஓய்வது என்பதெல்லாம் அந்தப் பலகையின் நெற்றியில் இருந்துதான்.

நான் மண்டபத்துக்குள் நுழைந்தபோது கிறிஸ்ரின் உடுப்பு மாத்திக் கொண்டிருந்தாள். முன்னே கஃபேயை ஆற வைத்துவிட்டு பிரான்சுவா மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தான். கதிரை, மேசை, மெசின், வெஸ்ரியர், யாரிலும் அக்கறைப் படாமல் நாம் எல்லாம் சம்பந்தமும் சம்பந்தமில்லாமலும் இருக்கிறதைப்போல் பிரான்சுவாவும் கிறிஸ்ரினும். கண்கள் நிலம் தாழ, கால்கள் நிலை தவறாது நடக்க, மனம் திரும்பிவிடுவோமோ என்றது.

“சவா நாதன்?” மேல்சட்டையைக் கழற்றியபடியே கிறிஸ்ரின் கேட்டாள்.

“சவா, ஏ துவா? நான் .

“சவா! சவா!” அவள்.

கதை தொடர்ந்தது. அவள் காற்சட்டையை கழற்றினாள். கஃபே மெசின் எனக்காக கஃபேயை கக்கியது. நான் வைபிரேற்றர் மெசின் போல் நிலத்தில் நிலைப்படாமல் நிலைப்பட்டு.

நான் எங்கோ பார்க்க முனைந்தேன்; பிரான்சுவா தலையைத் தூக்கவே இல்லை. கிறிஸ்ரின் அலட்சியமாக மீண்டும் கூப்பிட்டாள். அவள் இடுப்பில் யங்கியைத் தவிர வேறில்லை. பாவாடையை கொளுவிக் கொண்டே கதைத்தாள். முகத்தை மீண்டும் திருப்ப வேண்டும் என்றிருந்த ஆவல் அல்லது அடக்கல் அவளுக்கு அறவே இல்லை. அவளுக்கு அதுபற்றி அக்கறையும் இல்லை. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லாவிட்டாலும் அந்தரமாக இருந்தது. நான் மட்டும் ஏன் அலட்டிக் கொள்கிறேன். நான் ஒரு ஆணாக இருப்பதாலா? அல்லது அவள் ஒரு பெண் என்று உணர்வதாலா?

பிரான்சுவா தலையை உயர்த்தாமல் விட்டிருந்தால், கேள்விகள் பதில்களாகி அவை மீண்டும் கேள்விகளாகி முடிவிலியாகி, கோப்பி சூட்டை முழுதாக இழந்திருக்கும்.

கிறிஸ்ரின் இருவருக்கும் கை தந்துவிட்டுப் போய்விட்டாள். நான் கஃபேயை வாயில் நனைத்துக்கொண்டே பிரான்சுவாவைப் பார்த்தேன்; அவன் கண்கள் கஃபேயில் நிலைகுத்தியிருந்தன. எந்த உணர்ச்சிகளையும் இனம் காட்டாத ஒரு விதமான முகம். அந்தப் பரந்த முகத்தில் சிரிப்பையோ கவலையையோ இதுவரை நான் பார்த்ததில்லை. அதிகம் பேசாதது அவர் சுபாவமாக இருக்கலாம். ஒரு வேளை தெருவில் அவரை சந்தித்திருந்தால் ஒரு பாதிரி என்றுதான் நினைத்திருப்பேன். அம்மட்டு சாந்தம் முகத்தில் அப்பிக் கிடக்கிறது. நான் கொதிப்பாக இருக்கிற சமயங்களில் இந்த முகத்தைப் பார்த்து தணித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். என்ன வயசிருக்கும் என நினைத்துப் பார்த்தேன். தெளிவாக நினைக்க முடியாமல் இருந்தது. நரம்புகள் வரம்பு வைக்காத கையைப் பார்த்து வயதைத் தேடினேன். முப்பத்தைஞ்சுக்கும் நாற்பத்தைஞ்சுக்கும் இடையில் இருக்கலாம்.

நான் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். ‘டக்’ என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தார். வழமைபோல் நான் என் பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இழையோடவில்லை. தலைமட்டும் ஒரு சென்றி மீற்றர் இறங்கி எழுந்தது. அச்சமயம் சொண்டுகள் சுருங்கி தம்மை இறுக்கி இலேசாகின.

இது எனக்குத்தான் என்பது திட்டவட்டமாக தெரிந்ததால், நானும் அப்படியே செய்தேன். அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிய பின்னரும், நான் செய்வது நாகரீகம் இல்லை என்று என் உள்ளுணர்வு எவ்வளவு சொல்லிப் பார்த்தபோதும், என் பார்வை அவர் முகத்தில் இருந்து அகல மறுத்தது.

ஒன்றில் இவருக்கு நல்ல அனுபவம் இருக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும். யார்தான் என்ன வேலை சொன்னாலும் திருப்பி ஒரு வார்த்தை வராது. எதற்கும் திருப்பிக் கதைத்துப் பழக்கமில்லையோ என்னமோ? நம்ம நாட்டிலைதான் அம்மா அப்பாவின் அடி உதையில் வளர்கிற பிள்ளைகள் திருப்பிக் கதைக்க பயப்படுவார்கள். இங்கு அப்படி வர ஒரு சந்தர்ப்பமே இல்லையே. இந்த மனிசன் ஒரு அசாதாரணமானவர்தான். கல்லுளி மங்கன் மாதிரி. சீ!  நான் எப்படி அப்படிச் சொல்ல முடியும். நான் அவருடன் ஏதாவது கதைத்துப் பார்த்திருக்கிறேனா இல்லையே… இந்த எண்ணம் தோன்றியதும் அவருடன் கதைக்கவேண்டும்போல் இருந்தது.

சற்றுத் தயக்கம் எழுந்தாலும் அலட்சியமாக, “சவா” என்றேன். யாரும் அங்கு இல்லாததால் அவர் தன்னைத்தான் என எடுத்திருக்கவேண்டும். மீண்டும் அதே சொண்டு சுருக்கலும் தலை தாழலும். “களைப்பாக இருக்கிறீர்களா?” தலையாட்டல் ‘இல்லை’ என்றது. “கவலையாக இருக்கிறீர்களா?” அதே தலையாட்டல்.

இனி என்ன கேட்டால் இந்தத் தலையாட்டலை நிற்பாட்டலாம் என்று நான் யோசித்த வேளை, அவர் என்னைக் கூர்ந்து பார்ப்பதுபோல் உறுத்தியது. அந்த உறுத்தல் ‘உனக்கு இப்ப என்ன தேவை’ என்று அவர் கேட்பதுபோல் இருந்தது. எனக்கு அசடு வழிந்தது. எனினும் இது என் முயற்சியின் ஒரு சிறிய வெற்றிதான். “வேலை முடிந்ததா?” என்றேன். தலை மேலும் கீழும் அசைந்தது. என் தோல்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதை அவர் புரிந்து கொண்டவர்போல, “உமக்கு என்ன வேணும்?”என்றார் அவர். ‘அப்பாடா மனிசன் வாயைத் திறந்ததே!’ என்று மனம் சந்தோசப்பட்டது. ஆயினும் இது அவருக்கு தெரியக்கூடாதாம் என்பதால் என் முகம் மலரவில்லை.

“இல்லை சும்மா கேட்டேன்” என்றேன்

‘சும்மா’ அவர் முணுமுணுத்தார்

அவர் என்னை நக்கலடித்தாரா? ஏசினாரா?  ‘சும்மா’ என்று எதுவும் இல்லை என்றாரா? சும்மாதானே என்றாரா? எனக்கு எதுவும் விளங்கவில்லை. முகத்தில்தான் ஏற்ற இறக்கம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குரலிலுமா அதைக் காட்டவேண்டும். “இல்லை உங்களுடன் பேசவேண்டும்போல் இருக்கிறது.” என்றேன். உலுப்பிவிடப்பட்டவர் போல் நிமிர்ந்தார். அவர் கண்கள் சுருங்கி பின்னர் விரியத் தொடங்கின. பார்வை என்னைத் துளைத்தது. முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி இழையோடியது. சொண்டு நீண்டு முகம் விரியத் தொடங்கியது. எல்லாம் ஒரு சீரான ஆர்முடுகலில் உயர்ந்து ஒரு இடைப்புள்ளியில் நிறுத்தி ‘ஏன்?’ என்பதுபோல் நெற்றியைச் சுருக்கினார்.

அவரின் ஆர்முடுகல் மாற்றம் என்னையும் இயக்கியிருக்க வேண்டும். என் முகத்தில் இருந்த அப்பாவித்தனம் மறைந்து ஒரு வகை அன்பு கலந்த பரிவுடன் சட்டென்று சொன்னேன், “உங்கள் முகத்தைப் பார்த்தால் நிறையப் பேசவேண்டும்போல் இருக்கு”. அந்த முகம் மேலும் வெருண்டது. சிரிக்கத் தொடங்கினார். சத்தமாக சிரித்தார். விக்கி விக்கி, விழுந்து விழுந்து சிரித்தார். மேசையிலே கையைத் தூக்கி ஒரு அடி அடித்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இப்போ என் முகத்தில் தோன்றிய சிரிப்பு பறந்துவிட்டது. பயம் வழிந்தது. மனிசனுக்கு பைத்தியமோ என்னமோ? என்ன சொல்லுது என்று தெரியவில்லை. ஒரு தினுசாகப் பார்த்தவாறு, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றேன்.

நான் அவரை அதட்டியதுபோல் உடனே சிரிப்பு தொலைந்தது. முகம் அமர்முடுகலுக்கு வந்து இறுகத் தொடங்கியது. அது அவரின் வழமையான சாந்தத்தில் தரித்து நிற்காமல் கடந்து போனது. முகத்தில் கவலையின் கோடுகள் வலை பின்னின. எதையோ ஞாபகத்திற்குக் கொண்டு வர அவர் கண்கள் பிரயத்தனப்பட்டன. அந்த முயற்சியில் அக் கண்கள் பெயர்ந்தன.  நிதானமாக  என் பக்கம் பார்வை குறி வைத்தது. “ஏற்கனவே இப்படி ஒரு பெண் சொன்னதால்தான் நான் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்.”

நான் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. யாரேனுக்கும் என்னைப் போல் தோன்றி இருக்கலாம். அதற்கும் அவர் இங்கே வருவதற்கும் என்ன சம்பந்தம். “ஏன்?” என்றேன். “அப்படித்தான்!” என்றவர் சற்று நிறுத்தி,  “அவ்வளவுதான்” என்றார். இதற்குள் ஏதோ இருக்கிறது. இதை அறிய வேண்டும் என்ற ஆவல் என்னையும் மிஞ்சி, நாகரீகம், மொழி, வேலை, நேரம், எல்லாத்தையுமே உடைத்துக்கொண்டு பாய்ந்தது.

“யார் சொன்னது?” என்று கேள்வியை மாற்றினேன்.

“ஒரு பெண்”

“உங்க காதலியா?”

“இல்லை… ஒரு வேளை இருக்கலாம்.”

“யார்?”

“தெரியாது.”

இந்த மனிசனுக்கு உண்மையாகவே பைத்தியம்தான் போலும். ஒரு பெண் இவருக்கு சொல்லி இருக்கிறாளாம். யாரென்று தெரியாதாம். ஏதோ பாதையைக் கண்டு பிடித்ததுபோல், ஒரு பொறி தட்டியது.

“காதல் கடிதத்தில் எழுதியிருந்தாளா?” என்றேன்.

“இல்லை. நேரில்தான் சொன்னாள்.”

சுத்தப் பைத்தியம் சுத்தப் பைத்தியம்; எனக்குள் ஒரு முடிவுக்கு வந்தேன். கதையை நிறுத்திவிட்டு எழும்புவோமோ என்று ஒரு கணம் நினைத்தேன். பின் அந்த உடம்பை விட நான் பலசாலியாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை இருந்ததால் தொடர்ந்து கதைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அவர் மேலும் என் கேள்விக்காக காத்திருக்கிறார்போல் இருந்ததால் எதையாவது கேட்கும் முயற்சியில்,

“அவள் இப்போ எங்கிருக்கிறாள்?” என்றேன்.

“வீட்டில்.”

நான் மௌனமானேன். சிறிது நேரம் கழித்து அவர், “நாங்கள் இருவரும் இரவு ஒரே வீட்டில் தங்குவோம்” என்றார்.

“அவள் உங்கள் மனைவியா?”

“இல்லை. அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.”

இது விடயத்தில் அவரிடம் தெளிவான பதில் இல்லையா அல்லது எனக்குச் சொல்ல விருப்பமில்லையா என்று விளங்கவில்லை. ஆயினும் அவர் பொய் பேசவில்லை என்பது மட்டும் துல்லியமாகத் தெரிந்தது. எனினும் ஏன் இவ்வளவு புதிர் போடவேண்டும் என்று யோசித்தேன் .

இதற்கு மேலும் கேட்பது நாகரீகமில்லைப்போல். அவரை நான் கஸ்டப்படுத்திக்கொண்டு இருக்கிறேனே என உணரத் தொடங்கினேன். பேசாமல் கோப்பியைக் குடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆழம் தெரியாமல் காலைவிட்டதுபோல்,இந்தப் பைத்தியக்காரனிடம் மாட்டுப்பட்டு…. இனி இப்படியே நிற்பாட்டிவிட்டு எழும்பிப் போவதும் மரியாதையில்லை. நாளைக்கும் அவருடன் வேலைசெய்ய வேண்டுமே. என்ன செய்யலாம் என யோசித்தபடி அவரைப் பார்த்தேன். ஆரம்பத்தில் “மெர்சிய” என்றும், பின் “பிரான்சுவா” என்றும், இப்போ “பைத்தியக்காரன்” என்றும் நான் நினைப்பது, எனக்கு என்னமோ போல் இருந்தது. ஆயினும் அவரின் பார்வை இன்னும் என் கேள்விகளை விழுங்கத் தயாராக இருப்பதுபோல் இருந்தது. அந்த முகம் எனக்குள் மேலும் மரியாதையை உண்டு பண்ணியது.

மௌனம் சவுக்குப் போல் என்னைத் துரத்தியது. நான் அசையாமல் இருந்தேன் என்றாலும் எனக்குள் அந்தரப்பட்டேன். விரைவாக, மேலும் விரைவாக எதையாவது செய்ய வேண்டும்போல் மனம் உறுத்தியது. முன்னால் இருந்த பைத்தியத்திற்கு இது ஒன்றும் இல்லைப் போலும்.எதிலும் ஒரு அவசரம் அக்கறை கிடையவே கிடையாது.

நான் மிகவும் ஆறுதலாக, காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்த சிகரட் பெட்டியை எடுத்து, மெதுவாக மூடியை விரித்து, ஒரு சிகரட்டை கொஞ்சம் வெளியே இழுத்துவிட்டு, அவரிடம் நீட்டினேன். அவர் இதை சற்றும் எதிர்பார்க்காதவர்போல், ஒரு கணம் நிதானித்து, மெதுவாக கை நகர்த்தி, அந்த சிகரட்டை இழுத்துக்கொண்டார். இது எல்லாமே இயல்பில்லாமல் பட்டதும்தான் என் தவறை உணர்ந்தேன். இவர் சிகரட் பிடித்து நான் பார்த்ததில்லை. ‘சிகரட் பிடிக்கிறனீங்களா?’ என்று கேட்டிருக்கலாம்; அதுவும் இல்லாமல் அதை நீட்டியது, அவர்மேல் நான் அதிகாரம் செலுத்தியதுபோல் இருந்தது. என்னை உள்ளூர அவமானம் அடைத்துக் கொண்டது. நானும் ஒரு சிகரட்டை எடுத்து சொண்டுகளில் செருகிவிட்டு லைற்றரை* எடுத்தேன். நான் அதிகாரம் செலுத்தினேன் என்பதற்காக, அவர் அதை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதும் ஒன்றும் பிந்திப் போகவில்லை. “மன்னிக்க வேண்டும். நீங்கள் சிகரட் பிடிக்கிறனீங்களா?” என்றேன்

“அதிலொன்றுமில்லை. சிகரட் பிடித்துக் கொள்வோம்”

லைற்றரை தட்டி, அவர் சிகரட்டை பற்ற வைத்தேன். பின் என்னுடையதை மூட்டியபடி, அவரை அவதானித்தேன். இந்த மனிசன் தெளிவா எதையும் சொல்லமாட்டுதாக்கும். ஆழமாக ஒரு ‘தம்’ஐ  ஆசுவாசமாக இழுத்து, பின் வாயைக் குவித்து புனல் செய்து, புகையை வெளியே தள்ளினார். சாந்த முகத்தின் அந்த மௌன வாயை ரசித்தேன். “உமக்கு என்னுடன் என்ன பேசவேண்டும்போல் இருந்தது?”. அவரின் கேள்வி புகைந்துகொண்டு வந்தது. உடனே எனக்கு எதுவும் தோன்றவில்லை. அவரிடம் நான் எதுவும் கேட்க நினைக்கவில்லை. ஆயினும் நான்தான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்கு, நானும் அவரும் தனியே இருந்ததும், அவர் அமைதியாய் இருந்ததால் என் அமைதி குலைந்ததும், அவர் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் என் உணர்ச்சி கொந்தளித்ததையும்….

பாதாளக் கிணற்றுக்குள் படியிறங்கிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அடியில் தட்டுப்பட்டதுபோல், “உங்கள் முகத்தைப் பார்த்ததும் ஒரு பழம் ஞாபகம் வந்தது” என்று லேசாக சிரித்தேன். மெல்லிய சிரிப்போடு அவர் முகமும் இலேசானது. “என்ன பழம்?” சர்வ சாதாரணமாகக் கேட்டார். ஆவல் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆயினும் நான் இதுவரை பார்த்த முகம் இப்போது இல்லை.

“மனோரஞ்சித பழம். அதற்கு பிரெஞ்சுப் பெயர் தெரியாது.”

“அது எப்படி இருக்கும்.?”

“மொனாலிசா மாதிரி இருக்கும்”

என்ன, எங்கே, ஆச்சரிய சுருக்குகளை நெற்றியில் வைத்தபடி என் பக்கமாக குனிந்தார். மீண்டும் “அது என்ன சாமான்? பழம்தானே! நான் நினைக்கிறது சரிதானே.” கொஞ்சம் விரைவாகக் கதைத்தார்.

“ஆமாம் அது பழம்தான்” என்றுவிட்டு, நான் மொனலிசா பற்றி கதைக்கத் தொடங்கினேன். ஒரு கணம் சிரிப்பது போலும், இன்னொரு சமயம் அழுவது போலும், அழுதுகொண்டு சிரிப்பது போலும்,சிரித்துக்கொண்டு அழுவது போலும், இன்னும் ஆனந்தத்தில் கண்கள் பனிப்பது போலும், அன்பு அடங்காது முகத்தில் பிளிறுவது போலும், இல்லை – என்னால் எதுவுமே செய்ய முடியாத இந்தப் பிரபஞ்சத்தை கையாலாகாத் தனத்துடன் பார்ப்பது போலவும்…

நான் எப்போது முடிக்கப்போகிறேன் என்பதுபோல் அவர் பார்வை விரிந்து விரிந்து, கேள்விக்குறியாகியது. மொனலிசாவின் முகத்திற்குள் இருந்து என்னை வெளியே தூக்கிப் போட்டது. எந்த உணர்ச்சியையும் பற்றிப் பிடித்துக்கொண்டு நிற்க முடியாமல் இருக்கிறதே…? எம்மை அங்கும் இங்கும் அலைக்களிக்கிறதே? அவர் பதிலுக்காக காத்திருப்பதுபோல இடைநிறுத்தினேன். அவர் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை மேலும் கீழும் அசைத்தவர், “அந்தப் பழம்” என்றார்.

“அதற்கு என்று ஒரு மணம் இல்லை. நாம் நினைக்கிறதெல்லாம் மணக்கும். நறுமணமும் வரும் நாற்றமும் வரும். அப்படித்தான் உங்கள் முகமும்.”

ஏதோ கொஞ்சம் கிரகித்துக் கொண்டவர்போலவும், நன்றாக குழம்பியவர் போலவும், “அப்படியா!” என்றார்

“இல்லை, அதற்கு எதிராக…”

“அப்படியென்றால்?”

“எந்த உணர்ச்சியும் தெரியாத, உணர்ச்சி இருக்கிற மாதிரியும் இல்லாத….”

அவர் மீண்டும் சிரிக்கத் தொடங்கினார். சத்தம் எழுப்பாத சிரிப்பு. போட்டோவில் பார்க்கும் கடல் அலை மாதிரி. அவர் இனியும் தூண்டில் போட்டால் நான் அதோ  கதிதான் என்பதால், பேச்சை மாற்றி, “உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா?”என்றேன்.

“இல்லை. இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.”

“திருமணம்?”

“செய்துவிட்டேன் என்றும் சொல்லலாம் செய்யவில்லை என்றும் சொல்லலாம்.”

நான் எதிர்பார்க்கும் திருப்தியான பதில்கள் இல்லைத்தான் என்றாலும் அவை அர்த்தபுஷ்டியானதும் அடக்கமானதும் நேர்மையானதும். இது சரி வராது என்று தோன்றினாலும் அவற்றை ரசிக்கத் தொடங்கினேன்.

“நீங்களும் அந்தப் பெண்ணும் மட்டும்தான் வீட்டில் இருக்கிறீர்களா?”

“ஆமாம்”

“அவளும் வேலை செய்கிறாளா?”

“இப்போ இல்லை.”

“முன்னர் என்ன செய்தாள்?”

“விபச்சாரம்”*

நான் எனக்குள் உறைந்துபோனேன். ஒரு பெண்ணின் படக்கூடாத இடங்களில் என் கை பட்டுவிட்டதைப்போல் பதகளித்து, எனக்குள் நானே தலையை சுருக்கிக் கொண்டேன். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பாரத்தேனா அல்லது ‘அட பாவமே’ என்னும் தோரணையில் அவரைப் பார்த்தேனா என்பதை என்னால் சரியாக அவதானிக்க முடியவில்லை. அவர் மட்டும் என்னைப் பார்த்து அநாயாசமாகச் சிரித்தார். அவருக்கு அப்படிப் பதில் சொல்லியதில் அழுத்தம் ஒன்றும் இல்லைப்போல் தோன்றியது.

“நான் தவறாக ஏதும் கேட்டுவிட்டேனா?” என்றேன் தாழ்மையாக.

“இல்லையே” என்று தலையசைத்தான்.

“எனக்கு வருத்தமாக இருக்கிறதே” என்றேன்;

“என்ன கேள்விக்காகவா? பதிலுக்காகவா? வருத்தப்படுவதற்கு இதில் எதுவும் இல்லையே” என்று கையை விரித்தான்.

கதவு திறபட்டது. ‘செவ்’ நுழைந்தான். அவன் தன் பாட்டுக்கு கஃபேயை அமுக்கிவிட்டு, மேசையில் வந்து இருந்தான். நான் இனியும் இதில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பது சரியில்லை என்று பட்டது. இன்னொரு வகையில் அந்த இடத்தைவிட்டு அகன்றால் போதும் என்று மனம் ஏங்கி இருக்கலாம்.

“எனக்கு இன்னும் கொஞ்ச வேலை இருக்கிறது. நாம் மீண்டும் சந்திப்போம்” என்று விட்டு வெளியேறினேன்.

* * * * *

வீட்டுக்கு  வந்தேன். மனைவி கேட்டாள் “ஏன் இவ்வளவு நேரம்.?”

“ என்னுடைய பிரெண்டின் மனைவியைப் பார்க்கப் போனேன்.”

“ஏன்?”

“பார்க்கவேண்டும்போல் இருந்தது”

“அதுதான் ஏன்?”

சிறிது நேரம் யோசித்தேன்.

உண்மை இதுதானே என்பதால், “அவள் ஒரு ப்ரொஸ்ரிரியூட்” என்றேன். மனைவியின் முகம் கறுத்து இருண்டது. பார்வை அனல் கக்கியது. சீறிக்கொண்டு நகர்ந்தாள். நான் லைட்டை அணைத்துவிட்டு அருகில் போய்ப் படுத்தேன். என் தோள் அவள் தோளில் பட்டதும் ஆறு இஞ்சி தள்ளிப் படுத்தாள்.

நான்?

நான் யார்? எனக்கும் தெரியவில்லை. சொல்லிப் பார்த்தேன். அம்மாவுக்கு மகன். அண்ணனுக்குத் தம்பி. அவளுக்கு கணவன், காதலன், துரோகி, காமுகன், போகி. இல்லை நான் யார்? அதுதான் எந்தஉறவு??.

கேள்விகள் பதில்களைத் தேடின. அவை கேள்விகளாக உருமாறின. நான் என்னைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இருளினுள் நுழைந்து, கனவையும் கடந்து ஆழ்ந்து ஒரு வேளை குறட்டையோடு ஓடிக்கொண்டிருந்தேன்.

* * * *

Les Temps Modernes என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அது ஜோன் போல் சார்த்தர் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த மாத வெளியீடு என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆகையால் அவர் பின்னே வந்து நின்று தலைப்பைப் பார்த்தேன், ‘Une Femme chez les Travestis”. அந்தப் பெண் இவருக்குள் உறைந்து இவரை மௌனமாக்கி வைத்திருக்கிறாள் போல் இருக்கிறது.

1995

  1. சூப்பர் மார்க்கற் – பல்பொருள் அங்காடி (Supermarket)
  2. 35 டிகிரி – 35 பாகை (degree)
  3. செவ் – பணியிடத்து பொறுப்பாளர் (chef)
  4. வைன் – செங்கள்ளு / திராட்சை ரசம் (wine)
  5. கஃபே – கோப்பி / கோப்பிச் சாலை (café)
  6. பார் – அருந்தகம் (bar)
  7. வெஸ்ரியர் – உடைகள் வைக்கின்ற பகுதி (vestiaire)
  8. மெசின் – இயந்திரம் (machine)
  9. சவா? – நலமா? (ça va?)
  10. சவா ஏ துவா? – நலம். நீ எப்படி? (ça va et toi?)
  11. வைபிறேற்றர் மெசின் – தொடரதிர் இயந்திரம் (vibrator)
  12. யங்கி – உள் கீழாடை
  13. சென்ரிமீற்றர் – நீள அளவை (centimeter)
  14. மெர்சிய – ஆண்களை மரியாதையாக அழைக்கும் பிரெஞ்சு சொல் (monsieur)
  15. பொக்கெற் – சட்டைப்பை (pocket)
  16. லைற்றர்  – நெருப்பேற்றி (lighter)
  17. தம் – புகை இழுத்தல்
  18. மொனாலிஸா (Mona Lisa) – 16ம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்ஸி (Leonardo Da Vinci) எனும் ஓவியனால் வரையப்பட்ட உலக பிரசித்தி பெற்ற ஓவியம். தற்போது பிரான்ஸின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் உள்ளது.
  19. பிரெண்ட் – நண்பன் / நண்பி (friend)
  20. ப்ரொஸ்ரிரியூற் – ‘விபச்சாரி’ / பாலியல் தொழிலாளி (prostitute)
  21. லைட் – மின்விளக்கு (light)
  22. இஞ்சி – அங்குலம் (நீள அளவை) (inch)
  23. Les Temps Modernes – பிரான்ஸின் முக்கிய தத்துவவியலாளர்களில் ஒருவரான ஜான் போல் சார்த்தர் அவர்கள் தனது சகாக்களுடன் இணைந்து 1945இல் ஆரம்பித்த சஞ்சிகை. இன்றும் கலிமார்ட் (Gallimard) பதிப்பகத்தினால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றது; சார்லி சாப்ளினின் Modern Times (1936) சினிமா ஏற்படுத்திய தாக்கத்தினால் பெயரிடப்பட்டது.
  24. Une Femme chez les Travestis – தங்களை உருமாற்றிக் கொண்டவர்கள் மத்தியில் ஒரு பெண்

கலைச்செல்வன்-பிரான்ஸ்   

கலைச்செல்வன்

 

 

 355 total views,  1 views today

(Visited 129 times, 1 visits today)
 
கலைச்செல்வன்

இரவுகள் அறியாப்பொழுதுகள் அடங்கும்-கலைச்செல்வன்(மீள் வாசிப்பு)

  இரவுகள் அறியாப் பொழுதுகள் அடங்கும் காடும் வீடும் ஒன்றேயாகும் “எங்கள் போராட்டம்(?) நிச்சயம் வெற்றி பெறும்” “மக்களுக்கு மரண பயம் இல்லை” (வாழும் பயம் தவிர) அறிவித்தல்கள் ஆயிரமாக […]