தரிசுப் பச்சை-சிறுகதை-ஸிந்து ஜா

ஸிந்துஜாசாந்தாமணிக்குக் கலவரமாகத்தான் இருந்தது. மேஜை மேலிருந்த கணக்குப் புத்தகத்தில் எல்லா எண்களும் முப்பது போலவே இருந்தன.ஒவ்வொரு மாதமும் இருபது அல்லது இருபத்தியிரண்டாவது நாள் வந்து விடும். இந்தத் தடவை முப்பது நாள்கள் ஆகிவிட்டன. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். நாலரை. அன்று அவள் ஒருமணி முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்ப பெர்மிஷன் வாங்கியிருந்தாள். ஐந்து மணிக்கு ஆபிஸ் வாசலில் வந்து நிற்கிறேன் என்று லக்ஷ்மி சொல்லியிருக்கிறான்.

நேற்றிலிருந்து  ஒரே கலக்கமாக வயிற்றைச் சுருட்டிச் சுருட்டி அடிக்கிறது. அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை. லக்ஷ்மிதான். .பெயர் பெண்ணென்று தோன்றினாலும், ஆண்தான். லக்ஷ்மி சரவண குமார். சரவணனும் குமாரும் எப்படி எதற்காக எப்போது கழண்டு கொண்டார்கள் என்று தெரியவில்லை. யாருக்கும் அவன் லக்ஷ்மிதான். எல்லோரும் கூப்பிடக் கேட்டுக் கேட்டு

பெண்ணாகி விட்டானா? நேற்று அவன் நடந்து கொண்ட விதம் எதைக் காண்பிக்கிறது? அவள் காலை அலுவலகத்துக்கு வந்த பின் அவனுக்குப் போன் செய்தாள். மதியம் லஞ்சுக்கு காவேரி கான்டினென்டலுக்குப் போகலாம் என்றாள்.  அங்கே  சாப்பாடு படு சுமார்தான்..அதனால் கூட்டம் வராத அந்த இடத்தைத் தேர்வு செய்தாள்.

அவனுக்கும் முன்னதாக அவள் ஹோட்டலுக்கு வந்து விட்டாள். வழவழப்பான மேஜைகள், குஷன் வைத்துத் தைத்த நாற்காலிகள், வண்ணத்தில் தோய்ந்த விரிப்புகள், ஏர்கண்டிஷனர் என்று சாப்பாடு தராத தரத்தை சூழல் தந்து விட்டது. அவன் பத்து நிமிஷம் லேட்டாக வந்து அவளருகே உட்கார்ந்து கொண்டான்.

“ஏன் என்னவோ மாதரி இருக்கே? ஒடம்பு சரியில்லியா?”  என்று டாக்டரைப் போல் கேட்டு விட்டான். வந்ததும் வராததுமாய்

அவ்வளவு வெளிப்படையாகவா வெளிப்பட்டுக் காட்சியளிக்கிறேன் என்று அவளுக்குள் ஒரு நினைப்பு ஓடிற்று. அவள் அவனது வலது கை விரல்களைப் பற்றிக் கொண்டாள். அவன் தனது விரல்களால் அவள் விரல்களை அழுத்தினான். வழக்கமாக உடலில் உராய்ந்து செல்லும் மின்பொறி அப்போது அவளுக்கு ஏற்படவில்லை.

“என்ன சாப்பிடலாம்? லஞ்சா? டிபனா?” என்று கேட்டான்.

“ஏதாச்சும்” என்றாள் அவள்.

அவன் கையிலிருந்த மெனு கார்டைக்  கீழே வைத்து விட்டு அவளை உற்றுப் பார்த்தான்.

தன் கண்களில் திரை கட்டியிருப்பதை அவள் உணர்ந்தாள். அவன் மெல்லிய குரலில் “என்னா ஆச்சு? வீட்டுல ஏதாச்சும் சண்டையா?” என்று கேட்டான்.

அவள் இல்லையென்று தலையை அசைத்தாள். “எனக்கு நாள் தள்ளிப் போயிருச்சு.”

அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள அவனுக்கு ஒரு நிமிஷம் பிடித்தது.

“என்னது? நிஜமாவா?” என்று கேட்டான்.

அவள் அவனது முகத்தையே கவனித்தவாறு இருந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் மாறி விடவில்லை. திடுக்கிடல்  எதுவும் காணோம். பின்வாங்கும் முகமாகத் தெரியவில்லை.

“நீ ப்ரெக்னன்ட்னா சொல்ற?”

அவள் மறுபடியும் அவனது வலது கையைத் தனது இடது கையால் பற்றிக் கொண்டாள். அவள் நடுக்கத்தை அவனுக்கு அது உணர்த்தியது.

“இன்னிக்கி விடிகாலேல ப்ரான்டோ கிட் டெஸ்ட் பண்ணினேன். பாசிட்டீவ்ன்னு வந்திருச்சு” என்றாள் சாந்தாமணி.

அவர்களிடையே நிலவிய மௌனத்தைப் பணிப்பெண் வந்து கலைத்தாள். “என்ன ஸார் சாப்பிடறீங்க?”

லக்ஷ்மி  இரண்டு பாஸந்தி கொண்டு வரச் சொன்னான்.

சாந்தாமணி அவனைப் பார்த்து “ஸ்வீட்டா?” என்று கேட்டாள் பணிப்பெண் சென்றதும்.

“ஆமா. ஏன்?”

“வயத்துல புளிய கரைச்சுக்கிட்டு நான் இங்க தடுமார்றேன்.”

“சாந்தா, நாம இத கொஞ்சம் நிதானமா எடுத்துக்கிட்டு பேசணும்'” என்றான் லக்ஷ்மி

அவன் அம்மாதிரிப் பேசுவது அவளுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இந்த இரண்டு வருஷப் பழக்கத்தில் அவனது விசேஷ குணங்களை அவள் நன்றாக அறிந்திருந்தாள். பேச்சில் நிதானம், மற்றவர்களை பற்றிய மதிப்பீடுகளில் ஆழ்ந்த கவனம், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பு என்று அவள் அவனை மிகவும் விரும்புவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன.

“லக்ஷ்மி , எனக்கு கோபமா வருது. குழப்பமா இருக்கு. பைத்தியம் புடிச்சவ மாதிரி இருக்கேனோன்னு பயமா இருக்கு. நீ இன்னிக்கு என்னயப் பாத்த ஒடனே ஏன் வாடிக் கிடக்கேன்னு கேட்டுட்ட. அப்படியெல்லாம் நான் என்னோட உணர்ச்சியை வெளியில காமிச்சுக்க மாட்டேன்னு ஒனக்கே நல்லா தெரியும். ஆனா இப்ப அப்பிடி இல்லாம இருக்கேனே” என்றாள்

“சரி, நாளைக்கி இதப்பத்தி பேசலாமா? எனக்கும் கொஞ்சம் டயம் கொடு” என்றான் லக்ஷ்மி இறைஞ்சும் குரலில்.

“அந்த எழவெடுத்த பர்த்டேயன்னிக்கி நானும் மயங்கியிருக்கக் கூடாது. ஒன்னையும் மயக்கியிருக்கக் கூடாது” என்றாள் வெறுப்புடன்.

அவன் பதிலளிக்கவில்லை. சென்ற மாதம் அவளுடைய பர்த்டே வந்தது. அன்று இருவரும் அவரவர் ஆபீஸில் ஒன்பதரைக்கு அட்டன்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்து போடுவதற்குப் பதிலாக பனசங்கரி அம்மன்  கோயிலில் இருந்தார்கள். ஆபீஸ்  வீடு இரண்டிலும் தெரிந்த முகங்கள் படாத தூரத்தில் இருந்த கோயிலுக்குச் செல்வதென்று முந்தின மாலையே தீர்மானித்து விட்டார்கள்.  தரிசனம் முடிந்த பின் மாருதிக்குப் போய் தாவண்கெரே பென்னே மசால் தோசை சாப்பிட்டார்கள். கை கோர்த்துக் கொண்டு பஸ்கள் எழுப்பிய புழுதியை நிராகரித்தவர்களாய் சாலை ஓரத்தில் நடந்து சென்றார்கள். பெங்களூரின் மிதமான காலைக் குளிர்ச்சி காற்றுடன் சேர்ந்து அவர்களைக் குசலம் விசாரிப்பது போல் தழுவிக் கொண்டு சென்றது. சாலையின் நடுவில் கறுப்பும், வெள்ளையும் கலந்த தோலுடன் ஒரு சீமைப் பசு அவர்களைப் பார்த்து ‘ஜாலிதானா?’ என்று கேட்பது போல் தலையை அசைத்துக் கொண்டு நடந்து சென்றது. மனம் பூராவும் உற்சாகமும், விடுதலை உணர்வும் பதிந்து கிடப்பது போலிருந்தது  சாந்தாமணிக்கு.

அதே மனநிலையுடன், ஒரு ஓலா பிடித்து லால்பாக் சென்றார்கள். அவர்களைப் போல பல ஜோடிகள் தோட்டத்தில் விரவிக் கிடந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்தும் உட்கார்ந்தும், மடியில் படுத்துக் கொண்டும் நிகழ் காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசித் தீர்த்தார்கள். அங்கிருந்து கிளம்பும் போது “நேரே சாப்பிடப் போயிறலாமா?” என்று லக்ஷ்மி கேட்டான்.

“எனக்கு பசிக்கவே இல்ல. உனக்குப் பசிக்குதா?” என்று சாந்தாமணி கேட்டாள்.

“இல்ல. அப்ப வீட்டுக்கு போயிரலாம்” என்றான்.” கொஞ்ச நேரம் அங்க இருந்திட்டு அப்புறம் சாப்பிடப் போவோம்.”

அவன் பாலஸ் ரோடில் இருந்த ஒரு மெயினில் வீடு எடுத்திருந்தான். அவள் அங்கே இரண்டு மூன்று முறை போயிருக்கிறாள்.  சிறிய வீடு. அவ்வளவாக நெருக்கடி இல்லாத அமைதியான சூழலில் அந்த வீடு இருந்தது.

அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவளுக்குப் பிடித்தமான வழக்கமாக உட்காரும்  ஊஞ்சலில் படுத்துக் கொண்டாள்.

“நல்ல அலைச்சல். கால வலிக்குது” என்றாள் சாந்தாமணி.

லக்ஷ்மி அவள் காலருகே வந்து உட்கார்ந்து கொண்டு அவளது காலை அமுக்கி விட்டான்.

“அப்பாடா, எவ்வளவு நல்லா இருக்கு” என்று அவள் சிரித்தாள்.

“இன்னிக்கி நீ க்ரீன் ஏஞ்சல் மாதிரி வந்திட்டே” என்று லக்ஷ்மி சிரித்தான்.

அவள் பச்சை வண்ணப் புடவையும், அதே கலரில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். வலது கையில் பச்சைக் கல் பதித்த ஒரு வளையல் , இடது கையில் பச்சை ஸ்ட்ராப்புடன் வாட்ச், நெற்றியில் பச்சைச் சுட்டி,  பின்னலை அழகு செய்த பச்சை ரிப்பன்,  கையில் கொண்டு வந்த பச்சை நிற லேடீஸ் பேக், காலணியும் பச்சையில்தான்.

“நல்ல வேள  லிப்ஸ்டிக் பிழைச்சது” என்று சிரித்தான். “பச்சைத் தேவதை” என்று அவள் கையை எடுத்து முத்தமிட்டான். “எங்கூர்ல  வயக்காட்ல பச்சப் பசேல்னு கண்ணு எட்டுற தூரம் வரையும்  பயிரு ஆடி  ஆடி மனசை அள்ளுறத பாத்ததுதான் இப்ப  ஞாபகத்துக்கு வருது” என்றான். “பூமியே பச்சப்  புடவைய போத்திக்கிட்டு வந்த மாதிரி அப்ப நினைச்சிருக்கேன். இப்ப நீயே அப்படிதான் ஒரு தேவி மாதிரி இருக்கே” என்று நெகிழ்ந்தான். அவன் கிராமத்திலிருந்து வந்தவன். எப்போதும் அவர்கள் பேச்சின் ஊடே இப்படி ஏதாவது பேசி ஊரைக் கொண்டுவந்து விடுவான்.

அவள் அவன் பேச்சால் ஈர்க்கப்பட்டவளாய் எழுந்து அவன் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள்  அறையின் பொதுக் குளுமைக்கு எதிராக இளம்சூடு எழுந்து மெல்லப் பரவிற்று. அவள் அவனிடமிருந்து விலகுவது போல் நெருங்கி இழைந்தாள். பூக்களின் மலர்ச்சியுடன் ஆடிய இளம் செடி, கொம்பின் மீது சுழன்று ஏறிப் பரவிய விகசிப்பில்  தன்மய நினைவுகளும் ஆடைகளைப் போலக்  கழன்று விழுந்தன. ஸ்பரிச மயக்கம், எழுந்து வர முயன்ற எண்ணங்களை அடித்து விரட்டிற்று.

அவர்கள் அன்று சாப்பிடப் போகவில்லை. சாந்தாமணி நேரம் கழித்து எழுந்து  சீர் செய்து கொண்டாள்….

ஐந்து மணிக்கு அவள் ஆபிசிலிருந்து வெளியே வரும்போது அவன் காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் சற்று நடந்து  மல்லேஸ்வரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்து இடது கோடியில் இருந்த கல் இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஸ்டேஷன் மரங்களினிடையில் பறவைகள் போய் வந்து கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சலைத் தவிர வேறு சப்தம் எதுவும் இருக்கவில்லை.

“என்ன யோசிச்சு வச்சிருக்கே?” என்று லக்ஷ்மி அவளிடம் கேட்டான்.

அவள் சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை.

“எனக்கு இது வேண்டாம்” என்றாள்.

“ஏன்?”

“வேண்டாம்ணா வேண்டாம்”

அவன் சிரித்தான். “இது சின்ன பிள்ளைங்க பேசறமாரி இருக்கு.”

அவன் ஏன் சீரியஸாக இல்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

“ஏன், உனக்கு அது சரின்னு படலையா?” என்று கேட்டாள் சாந்தாமணி.

“எனக்கு சரியா படலைங்கறதை விட உனக்கு சரியா படுதாங்கிறதுதான் முக்கியம்” என்றான். தொடர்ந்து “இது பாவமில்லையா?” என்று கேட்டான்.

“பெரிய தப்பா ஒண்ணு  மாறிடறதுக்கு முன்னால சின்ன தப்பை சரி செஞ்சிடறது தப்பா என்ன?”

அவன் ஒன்றும் பேசாமல் தள்ளி நின்ற மரங்களில் உட்கார்ந்திருந்த

பறவைகளைப் பார்த்தான். அவன் பார்வை சென்ற வழியில் அவளும் பார்த்தாள். “இதுங்களுக்கு எல்லாம் தப்பு ரைட்டு எதுவும் கிடையாது. வரத வாங்கி வச்சுக்குவம்னு பெரும்புத்தி. கவலை இல்லாத சென்மங்கள்” என்று பெருமூச்சு விட்டான்.

பிறகு அவளைப் பார்த்து ” நான் சொல்றதை நீ தப்பா எடுத்துக்காத. நீ எவ்வளவோ கெட்டிக்காரி. நம்ம கலியாணத்துக்கு யாரும் எதுவும் தட சொல்லப் போறதில்ல. எங்க அம்மா கூட நல்ல விசயத்த சீக்கிரம் முடிச்சுப்  போடுடான்னுதான் சொல்லிக்கிட்டே இருக்கு. ஆனா  கொஞ்ச நாள் போகட்டும் போகட்டும்னு நீ தள்ளிப் போடறதால நானும் எங்க அம்மா பேச்ச காதில வாங்கிக்காம இருக்கேன். இப்ப இது இப்படி ஆயிருக்கிறதால ஒடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சா என்ன?” என்றான்.

“நாம இப்ப கலியாணத்தைப் பத்தி பேசறதுக்கா இங்க வந்தோம்?” என்று சாந்தாமணி அவனிடம் கோபப்பட்டாள்.”நான் ஏற்கனவே விசாரிச்சு

வச்சிட்டேன். ஜெயநகர்ல கங்காபாய்ன்னு ஒரு கைனக் இருக்காங்க. அவங்க இத செய்வாங்களாம். காலேல ஒம்பது மணிக்கு போனா, சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிச்சிருவாங்களாம். நான் நாளன்னிக்கி போகலாம்னு இருக்கேன். உன்கிட்ட இதப் பத்தி பேசிட்டு நாளைக்கு போன் செஞ்சு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்” என்றாள்.

“ஏன் உங்க அப்பா அம்மா நாம இப்ப கலியாணம் பண்ணிக்கணும்னு சொன்னா வேண்டாம்பாங்களா?” என்று கேட்டான் லக்ஷ்மி.

அவள் அவனை உற்று நோக்கினாள். “நா என்னமோ சொல்றேன். நீ கலியாணம்,கலியாணம்னு பேசிக்கிட்டே இருக்கியே? நான் சொல்றத காதுல வாங்கிக்க மாட்டியா?”

“இத பார் சாந்தா . ஊரு உலகத்தில இந்த மாதிரி வந்தா, ஒண்ணு அந்த ஆம்பிளை அவளை விட்டு ஓடிப் போகப் பாப்பான். இல்லேன்னா ஆபரேஷன் பண்ணுக்கடின்னு விரட்டி அடிப்பான். இல்ல குடும்பங்கள்ல பிரச்சினையா வெடிக்கும். ஆனா இங்க நான் கெஞ்சறேன். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீயும் எதுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்கறேன்னு சொல்ல மாட்டேங்கறே” என்றான் லக்ஷ்மி.

“எனக்கு போன மாசம்தான் இருபத்திரண்டு வயசு ஆச்சு. இருபத்தி மூணு வயசு கூட ஆகாம நான் குழந்தைய பெத்து தூக்கி வளத்து முப்பது வயசிலயே கெளவியாயிடணுமா? இன்னும் நாலஞ்சு வருசந்தான்  நாம ஓடியாடித் திரியலாம். அப்புறம் குடும்பம் குளந்தை குட்டின்னு இருக்கவேதான் இருக்கு” என்றாள் சாந்தாமணி.

அவன் அவளைத் தாங்கவொண்ணாத வியப்புடன் பார்த்தான்.  அவன் பார்வை தன்னைக் குற்றவாளியாக உணரச் செய்கின்றதோ என்று சாந்தாமணி நினைத்து பார்வையை அவனிடமிருந்து பிய்த்து இணையாமல் ஓடிய தண்டவாளங்களை பார்த்தாள்.

“எனக்கு உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை. நீ உன் காரணத்தை நன்றாகவே யோசித்து வைத்திருக்கிறாய்” என்று  ஆங்கிலத்தில் சொல்லியபடி லக்ஷ்மி எழுந்தான். “கிளம்புவமா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.

அவர்கள் எழுந்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள்.

பிரியும் போது ” நாளன்னிக்கு நானும் உன் கூட வரேன். நீ தனியாப் போக வேணாம்” என்றான் அவன்.

அவளுக்கு நடுத் தெருவில் நின்று அப்படியே அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. பதிலாக அவள் அவனது கையுடன் தனது கையைச் சேர்த்து இறுக்கமாக அழுத்தினாள். பிறகு அவனிடம் ” நீ வர வேணாம். கிளினிக்  போறதுக்கு முன்னாடியே பேசிப் பேசி என்னோட மனச கலைக்கப் பாப்பே” என்று சிரித்தாள்.

மூன்றாம் நாள் லக்ஷ்மி அவளைச் சந்திக்க வந்தான். அதற்கு முன்தினம் அவள் அவனிடம் பேசி எல்லாம் ஒருவழியாக நல்லபடியாய் முடிந்தது என்று தெரிவித்திருந்தாள். அவன் காத்துக் கொண்டிருந்த போது சாந்தாமணி

யிடமிருந்து போன் வந்தது. அவள் வேலை காரணமாக வெளியே வர கால்மணி நேரம் ஆகும் என்றும் அவன் ரிசப்ஷனில் காத்திருக்கலாம் என்று சொன்னாள் .அவன் அங்கே சென்று உட்கார்ந்து காலையிலேயே படித்து விட்ட அன்றைய தினசரியில் கண்களைச் செலுத்தினான்.

சாந்தாமணி சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிஷம் முன்பாகவே வந்து விட்டாள். அன்றொரு நாள் அணிந்திருந்த பச்சை அலங்காரத்தில் இருந்தாள்.

அவனைப் பார்த்துச்  சிரித்தபடி, “பர்த்டே அன்னிக்கு போட்டது. ஆபிசுக்கு இன்னிக்குதான் மொதல்ல போட்டுக்கிட்டு வந்தேன். எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குன்னாங்க” என்றாள் தொடர்ந்து “பச்சைத் தேவதை” என்றாள் அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி.

அவன் அவளை மீண்டும் பார்த்தான். அவள் உடம்பில் அணிந்திருந்த புடவை, ரவிக்கை, இன்ன பிற அணிகலன்கள் எல்லாம் கறுப்பாய் அவன் கண்களுக்குத்

தோன்றின. அன்று சொன்ன கிராமத்து வயல் வெளிகளின் ஞாபகமும் கூடவே வந்தது. அவை இப்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு  பச்சைப் புல் கூடக் காணப்படாமல் கறுத்துச் சிதிலப்பட்டாற் போலிருந்தது.

ஸிந்துஜா-இந்தியா

 568 total views,  1 views today

(Visited 53 times, 1 visits today)