வாசம்-கவிதை-தீபிகா

வாசம்

தீபிகா

 

அந்தப் பழைய வீட்டை
நல்ல விலைக்கு விற்றாயிற்று.

ஒரு தடயமின்றி எல்லாம்
எடுத்து வந்து விட்ட பிறகும்
ஏதோ தவறவிட்டதாய் தவிக்கிறது
வாழ் மனம்.

ஞாபகங்களை எடுத்து வரமுடியாத
அந்தரிப்பின் இரவில்
முள்ளாய்க் குற்றுகிறது நிலவு.

இனி
இலைகளாடும் வீதிக்கரை மரத்திற்கப்பால்
எனக்கு அனுமதியில்லை.

என் குழந்தைகளுக்கிருப்பதைப் போலவே
இந்த வீட்டுக்கிருக்கிற வாசத்தையும்
நான் அறிவேன்.

பிள்ளைகளின்
நெற்றியில் முத்தமிடுவதைப் போலவே
நான் கடைசியாய் முத்தமிட்டு வந்தேன்
இந்த வீட்டின் சுவரையும்.

இந்த வீட்டில் தான்
என் பிள்ளைகள்
ஒவ்வொன்றாய் பிறந்து வளர்ந்தார்கள்.

இதோ
நான் அடை காத்த கூடு
என்னை விட்டுப் போகிறது
நாளை
என் குஞ்சுகளும் உயரப் பறந்து விடும்.

பிறகு
இந்த வீட்டைப் போலவே
ஞாபகத்தில் தான் வைத்திருக்க வேண்டும்
என் பிள்ளைகளின் வாசங்களையும்.

00000000000000000000

கொழுக்கட்டை

தீபிகா

 

சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும்
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்
இடையேயெனவும் கூட,
விதம் விதமாய் வாசித்துக் களைத்தாயிற்று
அந்தக் கவிதையை.

இடியப்பத்தைக் கூட
சிக்கெடுத்து விடலாமென்கிற மனதில்
ஒரு துளியும் பிடிபடமாட்டேனென்கிறது.

எத்தனையோ வில்லங்கமான
குறுக்கெழுத்துப் போட்டிகளை நிரப்பி முடித்த
என் மூளை மீதேறியிருந்து
இந்தக் கவிதை மல்லுக் கட்டுகிறது.

ஒரு முடக்குமில்லாத சொற்களில்
யாருக்கான தொப்பியை
இந்தக் கவிதை கொண்டிருக்கிறது?

கவிதைக்கும் எனக்குமிடையிலான
ஒளி தூரத்தை
நானென் சிறு மூளை மீதேற்றிச்
சிலுவை சுமக்கிறேன்.

நளவெண்பாவிலும் நாலடியாரிலும் பிடிபட்ட
கொஞ்ச நஞ்சம் கூட
இங்கே மாட்டேனென்கிறது.

அப்படியொன்றும் அவசியமேயில்லை.
இரகசியமாய் தோற்றுவிடு என்கின்றன
சூடேறி வெளியேறிய மூளைகள்.

அந்தக் கவிதை
ஒரு காட்டு விலங்கைப் போல
என்னை இப்போது எதிர்கொள்கிறது.

நான் மூச்சிரைக்க
அதனிடமிருந்து தப்பியோடி வருகின்றேன்.

இறுதி விரை
யாரும் வாய் திறக்கவேயில்லை
ஒரு பூரணமுமில்லாத
அந்தக் கொழுக்கட்டையைப் பற்றி.

தீபிகா

14.06.2019

 307 total views,  1 views today

(Visited 118 times, 1 visits today)