அந்த இசையை மட்டும் நிறுத்தாதே-கவிதை-வாசுதேவன்

அந்த இசையை மட்டும் நிறுத்தாதே

வாசுதேவன்

 

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்
இன்று இது எம் இறுதி இரவு
சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானமெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்
நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்
பயணித்து விடுவேன்
பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து
விழிக்கும் வரையும்
மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத
இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்
இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்
கதையொன்று சொல்
காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்
சத்தத்தை சற்று அதிகமாக்கிவிடு.

2.
கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
புறப்பட்டுச் சென்றபின்
கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்
விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்
போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை
விட்டகன்றுவீடு திரும்பினார்கள்.

சமுத்திரங்கள் எங்கும்
போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
போர்த்துக்கீசப் பெண்கள்
ஃபதோ (கயனழ) இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.

காதலும் பாசமும் காமமும்
கரைந்து போகும் சோகம் பிறக்கும்
இசையிலேயே அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.
இதுதான் அவ்விசை.
லிஸ்பொண் நகரத்துக் கோடைகால
நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி
ஒலித்துக்கொண்டேயிருக்கும் ‘ஃபதோ’ (கயனழ).
மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச்சென்ற
மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்
மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்
மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கியது காலம்.

ஒரு ஓலம் மட்டும் எப்போதும்
எஞ்சியிருந்தது.
ஒரு ஓலம் மட்டும் எப்போதும்
எஞ்சியிருக்கிறது.
காற்றசையா நடுநிசிகளில்
பட்டமரங்களின் கிளைகளில்
படுத்துறங்கிக்கொண்டிருக்கிறது
அந்த ஓலம்.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானமெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக்கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

3.
உங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்
எங்களிடமும் வந்தார்கள்
தாயையும் காதலியையும் மனைவியையும்
கதறவிட்டு வந்தவர்கள்
கைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்
எம்மிடம் வந்தார்கள்.

கொள்ளையிட வந்தார்கள்.
கொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.
கிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.
உங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற
பாதையெங்கும் ஓலமொலிக்கச் சென்றார்கள்.
நம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்
பின்னரும் யார் யாரோ வந்தார்கள்
இருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.
வெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்
அவர்களுடன் கூடவே வந்தன
அடிமைத்தளைக்குள் நாம் அகப்பட்டுச்
சீர் குலைந்தோம்.

அமர்ந்தவர்கள் போனார்கள்
அவரெமக்கிட்ட அடிமை விலங்கையும்
அகற்றாதே போனார்கள்.
அதிகாரம் பெற்ற புதியவர்கள் எசமானர் ஆனார்கள்
பின்னர் நாம் அலைக்கப்பட்டோம்
பின்னர் நாம் கலைக்கப்பட்டோம்
அல்லது தப்பியோடினோம்
எதனிடமிருந்து தப்பியோடியபோதும்
எம்மிடமிருந்து எப்போதும் தப்பியோடமுடியாது
அகப்பட்டுக்கொண்டோம்.

தாயைத் தந்தையை தன்னவர்களையெலாம் கைவிட்டு
எமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்
எம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து
இன்னமும் எம் எல்லைகளுக்குள்
வந்து கொண்டேயுள்ளார்கள்.
அவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை
எம்மவரின் ஓல ஒலியுள் தம்மவரின் ஓலங்கள்
அமிழ்வதையும் உணராது
உயிர்கொடுத்தும் உயிர் குடிக்க
அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.

ஓலமெங்கும் நிறைகிறது
ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.
ஓலம் மட்டும் எப்போதும் எஞ்சியிருக்கிறது.
சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

கணவர்களும் மகன்களும் காதலன்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
அழுதிருந்த போர்த்துக்கீசப் பெண்களின்
ஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.

அமெலியாக, போர்த்துக்கல், அழகியே,
காலம் சுமந்து வந்த சோகம் வழியும்
ஓலம் கலந்த உன் இசையின் சத்தத்தை
மேலும் அதிகமாக்கு
திருமணமாகிய மறுதினமே
கணவன் கடலோடியபின் கரையில் நின்ற
போர்த்துக்கீசப் பெண்ணின் மனம்போல்
கனதியாய் கிடக்கிறது இந்த இரவு.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது.
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?
விடியும் வரையும்
அந்த இசையை மட்டும் நிறுத்தாதே

000000000000000000000000

ஐந்தொகை

வாசுதேவன்

உதரவுக்கிரத்தில் உதயம்கொண்ட ஆற்றில்
ஆரம்பித்த பயணம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
காற்று வீசும் திசையில் அசைந்து கொண்டிருக்கின்றன
மனதிலிருந்து உதிர்ந்து வீழ்ந்த பழுப்பிலைகள்
கட்டிலரவங்கள் உமிழ்ந்து தள்ளிய
நஞ்சையுண்டு நஞ்சையுண்டு பருத்துப்பெருகிய
சலிப்பின் விழிகள் அச்சமூட்டியவண்ணமேயுள்ளன
மாற்றமுறா நாளந்தங்கள் கீறிச்செல்லும் பாதைகள்
வட்டங்களாக வட்டங்களுள் அகப்பட்டுக்கொள்கின்றன
மூர்க்கங்களும் முனைப்புகளும்
*
சன்னதங்களும் சத்தங்களும் ஓய்ந்த போர்ப்பெருவெளி
தொலைவில் தொலைந்துகொண்டிருக்கிறது
ஆதிமனக் கனவுகளின் எச்சங்கள் நொதித்துத்தரும்
போதையூற்றில் உடல்நனைக்கின்றன ஊர்திரும்பாப் பறவைகள்
இன்மை வெளியின் இடுக்குகளுள் தொங்கிக்கொண்டிருக்கும்
இருப்பு வவ்வால்கள் விழித்திருப்பதாகப் பாசங்குகொள்கின்றன
*
அடிவானம் தொலையும் பாலைநிலப் பறவையின்
தாகமொன்று தரிப்பிடமின்றி அலைந்துகொண்டிருக்கிறது
மாலைநேரங்களில் அது இசைக்குறிகளின் வளைவுகளில்
ஊர்ந்து பதுங்கி ஊமையாகிக்கொள்கிறது
முளைத்தலின்றிய வேரின் இரகசியங்களை வெளியூற்றும்
முனைப்புகளின் தோல்விகளுள் அது துவண்டும்கொள்கிறது
*
அந்தகச் சிந்தனைகளின் ஆர்ப்பரிப்பில் சிதைவுறும்
ஏகாந்தவெளி ஆட்காட்டிகளின் அலறல்கள் பிரபஞ்ச
எல்லைகளில் அலைந்தலைந்து கலைந்து கொள்கின்றன
*
வானம் எப்போதும் போலிருண்டிருக்கிறது
ஒற்றைப்பனைக்காடு வழமைபோல் செழித்திருக்கிறது
எல்லா யுத்தங்களும் தொடக்கத்தின் முன்னரே நிறைவேறிவிட்டன
எல்லா அமைதியும் யுத்தங்களைக் காத்திருக்கிறது
இதையெல்லாம் மறதிக்குள் விட்டெறிந்து
இப்போதும் சொற்களைத் தொடுத்து உரமூட்டி
வலுவேற்றி என் அம்பறாத்தூணிகளை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
காலத்தைப் போக்கவோர் காரணம் வேண்டுமென்பதற்காக

வாசுதேவன்- பிரான்ஸ்

வாசுதேவன்

 375 total views,  1 views today

(Visited 93 times, 1 visits today)