அவரவர் தர்மம்-சிறுகதை-ஸிந்து ஜா

ஸிந்துஜா
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

னந்த ராவ் அன்று வழக்கத்துக்கு அதிகமாகக் குடித்து விட்டான். கிளப்பிலிருந்து வெளியே வந்து கார்களை நிறுத்துமிடத்தை நோக்கி நடந்த போதே அவன் நடையில் அதிகத் தள்ளாட்டம் இருந்தது.

அதனால் நான் அவனைப் பார்த்து “பாஸ், ரொம்ப லேட்டாயிருச்சு. இன்னிக்கி சனிக்கிழம வேற. டிரங்கன் டிரைவிங்னு பிடிச்சுக் காசு தேத்த போலீஸ் நிக்கும். நாம ஒரு ஓலா  பிடிச்சு உன் வீட்டுக்குப் போயிடலாம்” என்றேன்.

ஆனந்த ராவ் இகழ்ச்சியுடன் என்னைப் பார்த்து “என்ன வெளயாடுறியா? போலீஸ் என்மேல கை வெச்சிடுங்கிறே? சரி, அதையும் பாத்துரலாம்” என்று காரை நோக்கி முன்னேறினான்.

போலீசை இழுத்திருக்கக் கூடாது என்று என்னையே நான் கடிந்து கொண்டேன். கமிஷனரின் பி.ஏ. அவனுக்கு நண்பன். ஆனால் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் காரோட்டுவது அபாயகரமானது என்று நான் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமான இகழ்ச்சியைத் தாங்கிய முகத்தைக் காண்பித்திருப்பான். பிறக்கும் போதே நிறையப் பணத்தில் மிதந்து கொண்டு பிறந்தவன். வளர வளர அவன் குடும்பத்தின் செல்வமும் வளர்ந்தது. அவனது ஒவ்வொரு மயிர்க்காலிலும் செல்வத்தின் உக்கிரம் படிந்திருந்தது.

பதினைந்து வருஷங்களுக்கு முன்பு ஒருநாள் அவனை எச்.எம்.டி. விளையாட்டு மைதானத்தில் சந்தித்தேன். கால்பந்தாட்டத்தில் நாங்கள் இருவரும் எதிரெதிர் சைடில் இருந்தோம். நான் கங்கா நகர் கார்பொரேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த ராவ் தின்னூரில் உள்ள ஒரு கான்வென்டில் ஆறாவது. அவனது பள்ளி மாணவர்களும் எங்கள் பள்ளி மாணவர்களும்  கூடுவோம். இரண்டு டீமாகப் பிரிந்து விளையாடுவோம்.  நான் எப்போதும் ஆனந்த ராவின் டீமுக்கு எதிராக விளையாடுபவன்,  அன்று நாங்கள் ஜெயித்ததற்குக்  காரணம் ஆனந்தராவின் கோல் கீப்பிங்கை முறியடித்து இரண்டு கோல்கள் போட்டேன். பெனால்ட்டி ஏரியாவுக்கு வெளியே கோல் கோட்டுக்கு அருகே விளையாடுபவர் வருவது மிகவும் கஷ்டம் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கே ஆனந்தராவின் அணிக்காரர்கள் ஆறுகஜ தூரத்துக்கு வியாபித்து வழிந்து நின்றார்கள்.அதனால் பெனால்டி பாக்ஸுக்கு அடுத்தாற்போல் சில கஜ தூரத்தில் இருந்த விலாசமான பகுதியை நோக்கிப் பந்தை எடுத்துக் கொண்டு போனேன்,  இங்கு என் வேகத்தை நிறுத்தாமல் கோட்டைத் தாண்டிச் சென்று டீப் ஏரியாவில் நுழைந்து கோல் போட்டேன். ஆனந்த ராவ் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கைவிரல்களை அசைத்து எச்சரித்தான். எதிர் டீமில் இருந்தாலும் அவன் என்னைப் பாராட்டிய ஸ்போர்ட்ஸ்மன்ஷிப் எனக்கு மிகவும் பிடித்தது. நண்பர்களாகி விட்டோம். எங்கள் நட்பு வருஷத்திற்கு வருஷம் கெட்டிப்பட்டு இறுகியது.

ஒரு முறை நடந்த மேட்சின் போது  நான் விளையாட ஆரம்பிக்க அரை மணி முன்னால் கிரௌண்டுக்கு வரும் வழியில் ஆனந்த ராவ் என்னைப் பிடித்து  “ஹாய் மது, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான்.

நான் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினேன்.

“காருக்குள்ளே உட்கார்ந்து பேசலாம்” என்றான்.  நாங்கள் காரை நெருங்குகையில் அதனுள் உட்கார்ந்திருந்த டிரைவர் காரை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்று கொண்டான். ரினுள் சுகந்தமான வாசனை வீசிற்று.

எடுத்த எடுப்பில் நேரடியாக அவன் “இன்னிக்கி நீ விளையாடக் கூடாது” என்றான்.

“என்னது?”

“இன்னிக்கி நீ மிடில் லைன்பேக்கராதான விளையாடப் போறே? அப்படின்னா நிச்சயம் எங்க டீமே அவுட்டு. அதனாலே இன்னிக்கு நீ விளையாடாதே. நாங்க ஜெயிக்கணும்” என்றான். அவன் குரலில் தெரிந்த நிச்சயமும் உறுதியும்  எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

“நான் எதுக்காக அப்படிச் செய்யணும்?” என் குரலில் சிறிது காட்டத்தைக் காண்பித்தேன்.

அவன் அதை உணர்ந்து கொண்டதை போலப் புன்னகை செய்தான்.

“இது ஒரு ரிக்வஸ்ட்டுதான்” என்றான் அடங்கிய குரலில்.

“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

அவன் தன் பர்சைத் திறந்து ஒரு போட்டோவை எடுத்து என்னிடம் கொடுத்தான். சிகப்பு ஸ்கர்ட்டும் கறுப்பு டாப்சும் போட்டு ஓர் அழகிய யுவதி காணப்பட்டாள். தலை முடியைப் பாப் கட் செய்திருந்தாள். பார்ப்பவரை ஆகர்ஷிக்கும் முகத்தில் புன்னகை ஜொலித்தது.

“இவ என் கேர்ள் ஃப்ரெண்ட். மாதவின்னு பேரு. இப்பதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாலே சந்திச்சோம். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்டே சொல்லலாம்னு இருந்தேன். இன்னிக்கி மேட்ச் பாக்க அவ வரா. அதனாலே நான் ஜெயிச்சே ஆகணும்”  என்றான். இப்போது அவன் முகம் சற்றுத் தீவிரமான உணர்ச்சியைக் காண்பித்தது. “உங்க டீம்லே நான் மத்த எல்லாரையும் சமாளிச்

சிருவேன். நீதான் கஷ்டமான ஆளு. நீ எனக்கு ஹெல்ப் பண்ணிதான் ஆகணும்.” பேசி முடித்து விட்டு அவன் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டான்.

இந்த வித்தியாசமான சம்பவத்தை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான் அவனிடம் “இப்படி லாஸ்ட் மினிட்லே நான் எப்படி எங்க டீமுக்குப் போயி விளையாட முடியலைன்னு சொல்லறது?”

அவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தான். அதிலிருந்து இரண்டு மாத்திரைகளை எடுத்து என் கையில் கொடுத்தான். அவற்றை வாங்கிப் பார்த்ததும் எனக்குப் புரிந்து விட்டது.

நான் அவனைப் பார்த்ததும் “சாரி, எனக்கு வேற வழி தெரியலே” என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான்.

ஒரு பெண்ணுக்காக இவ்வளவு உயிரை விடுகிறானே என்று நினைத்தேன். அவளுக்காக அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதென்று தீர்மானித்தேன்.

“சரி, நான் பாத்துக்கிறேன்” என்று காரை விட்டு இறங்கக் கதவைத் திறந்தேன்.

“இப்பவே போட்டுக் கொள். பத்துப் பதினைந்து நிமிஷமாகும் வேலை செய்ய”   என்று சிரித்தபடி தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தான்.

“கிரேட்  ப்ளான்னர்” என்று அவனைப் பார்த்துச் சிரித்தேன்.

நான் மைதானத்தை அடைந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போனேன். கேப்டனுடன் கோல் கீப்பர், சென்டர் ஃபார்வர்ட் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.  நானும் பேச்சில் கலந்து கொண்டேன்.

ஐந்தாறு நிமிடங்களுக்குப் பின் “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லிக் கொண்டே பாத்ரூமை நோக்கி விரைந்தேன். வெளியே வந்தேன். மறுபடியும் அடுத்த ஏழெட்டு நிமிடங்களில் நான் பாத்ரூமுக்கு இரண்டு தடவை ஓடினேன்.

கேப்டன் நான் வந்ததும் கவலையுடன் “மது, எனி பிராப்ளம்?” என்று கேட்டான்.

அவனிடம் நான் சற்றுக் கவலை தொனிக்கும் குரலில் “ஸ்டமக் அப்செட்” என்றேன். “திடீர்னு இப்பதான்..” சொல்லிக் கொண்டே மறுபடியும் பாத்ரூமை நோக்கி ஓடினேன்.

அன்று நான் விளையாடவில்லை. எங்கள் அறையிலிருந்தே விளையாட்டைக் கவனித்தேன். என் பார்வை ஸ்டேடியத்தில் இருந்த சிறு கும்பலின் மேல் அலைந்தது.  என் பார்வை அந்தப் பெண்ணின் மேலே விழுந்தது. அதே சிகப்பு ஸ்கர்ட், கறுப்பு டாப்ஸ்!  அன்று ஆனந்தராவ் சென்டர் பேக். மைதானத்தில் அவன் பந்தை உருட்டிக் கொண்டு மைதானத்தின் பாதி நீளத்திற்குச் சென்று அவர்கள் அணியின் இப்ராஹிமிடம் தந்தான்.. அவன் எங்கள் கோலியின் முன் பகுதிக்குப்  புத்திசாலித்தனமாக உதைத்து அங்கே குதித்துக் கொண்டிருந்த அவர்கள் டீம் கேப்டன் முகேஷிடம் அனுப்பினான். அதை அவன் சரியாகக்  கோல் போஸ்டில் இருந்த இரு கம்பங்களுக்கு நடுவே செலுத்தி எங்கள் டீமுக்கு எதிராகக் கோல் போட்டான்.

ஆனந்தராவின் சிநேகிதி எழுந்து நின்று நடனமாடுவது போல உடலை ஆட்டித் தன் கையை அசைத்து மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

அன்று ஆனந்தராவின் டீம் ஜெயித்து விட்டார்கள். அதற்குப் பிறகு நானும் எங்கள் டீமிலிருந்து விலகி விட்டேன்.

எங்கள் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் எனக்கு ஒரு அரசாங்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனந்தராவ் அவர்கள் குடும்ப வியாபாரத்தில் இறங்கி விட்டான். பொருளாதார ஏற்றத் தாழ்வு எங்களிடையே இருந்தாலும் ஆனந்தராவ் அதை பற்றிய நினைவு எனக்குத் தோன்றாத வண்ணம் நெருக்கமாக இருந்தான்.

நான் சொன்னதை மறுப்பவன் போல ஆனந்த ராவ் காரை வேகமாகச் செலுத்தினான். ‘எதுக்கு இவ்வளவு அவசரம்?’ என்று கேட்க நினைத்து வாயை மூடிக் கொண்டேன். நான் கேட்டேன் என்று இன்னும் வேகமாக அவன் செல்ல ஆரம்பித்தால்? ஆனால் நான் பயந்தது அடுத்த இரண்டு நிமிஷத்தில் நடந்து விட்டது. கார் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போதே சற்று தூரத்தில் ஒரு சிறுமி இடது பக்கச் சாலையிலிருந்து வலது பக்கச் சாலைக்குக் குறுக்காக ஓடினாள். ஆனந்த ராவ் பிரேக்கை அழுத்தினாலும்  மிகப் பெரிய சத்தத்துடன் அது அந்த சிறுமியை ஓட்டிப் போய் நின்றது. காரில் அவள் அடிபட்டு விழுந்தாளா அல்லது அதிர்ச்சியில் கீழே விழுந்து விட்டாளா என்று தெரியவில்லை. நான் பதட்டத்துடன் கார்க்  கதைவைத் திறந்தேன்.

“ஏய் மது! கதவை எதுக்குத் திறந்தே? மூடு மூடு” என்றபடி ஆனந்தராவ் காரைக் கிளப்பி பின்பக்கம் சில அடிகள் சென்று வலது பக்கம் வேகமாகத் திரும்பி நெடுஞ்சாலையில் விரைந்தான். காரின் இடது பக்க வியூ மிரரில் சாலையில் கிடந்த குழந்தையை நோக்கிப் பலர் ஓடி வருவது தெரிந்தது. நான் உதறலுடன் ஆனந்தராவைப் பார்த்தேன். அவன் கவனம் முழுவதும் சாலையில் இருந்தது. அவன் முக பாவனையும் உடல் மொழியும் இது வேறு ஆனந்தராவ் என்று எனக்குத் தோற்றமளித்தது. அந்தக் குழந்தையின் கீழே விழுந்த தோற்றம் மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்திற்று. மனதின் ஒரு மூலையில் ஆனந்த

ராவுக்கு ஏற்படாத உணர்ச்சிகள் உனக்கு ஏன் என்ற கேள்வி எழுந்து என்னைக் கேலி செய்தது.ஆனால் மனதின் இன்னொரு குரல் “நான் தவறு செய்ய அஞ்சுபவன். ஏழை. நண்பனைப் போலப் பணக்காரன் இல்லை. அதனால்தான் அவன் செய்தது மனதளவில் எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை” என்று கூறியது.

நாங்கள் அவனது வீட்டை அடைந்தோம். அவன் காரைக் கராஜின் உள்ளே நிறுத்தி விட்டு வந்தான். “வா, போவோம்” என்று அவனது அறைக்கு அழைத்துச் சென்றான். பிரிட்ஜில் இருந்த ஐஸ் வாட்டர் ட்ரேயை எடுத்து அறையில் சோபாவின் முன் இருந்த பார் ஸ்டூலில் வைத்தான். அலமாரியைத் திறந்து விஸ்கி கொண்டு வந்தான். இரு தம்ளர்களில் அதை நிரப்பி என்னிடம் ஒன்றைக் கொடுத்தான்.ஒரே மூச்சில் குடித்து விட்டு மறுபடியும் விஸ்கியை நிரப்பிக் கொண்டான். அவன் மனநிலையை என்னால் யூகிக்க முடிந்தது.

“வீ வில் வெய்ட் அண்ட் ஸீ” என்றான்.

“எனக்கென்னவோ அந்தச் சின்னப்பொண்ணு மேலே கார் மோத

லேன்னுதான் தோணுது. அது கீழே விழுந்தது கூட அதிர்ச்சிலதான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றேன்.

அவன் என்னை நன்றியுடன் பார்த்தான்.

“நாம தூரமா வந்துட்டப்போ அங்க தூரத்திலிருந்து கொஞ்ச பேர் ஓடி வந்தாங்க இல்லே? ஆனா அவங்க கார் நம்பரையெல்லாம் பாத்திருக்க சான்ஸ் இல்லே, என்ன சொல்றே?”

“அப்படி யாராவது பாத்திருந்தான்னா அவன் ஆந்தையா இருந்தாத்தான் உண்டு!” என்றேன்.

ஆனந்தராவ் சிரித்தான். அவன் முகத்திலிருந்த கலக்கம் வடிந்து லேசான மலர்ச்சி ஏற்பட்டது. றகு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நான் கிளம்பறேன்” என்று எழுந்தேன்.

“ஆனந்த், காலேல மூவாயிரம் ரூபா வாங்கினேன். இன்னொரு ரெண்டாயிரம் எனக்கு வேணும் ” என்றேன். காலையில் என் தங்கையின் கல்லூரிப் படிப்புக்கு என்று  வாங்கியிருந்தேன்.

அவன் “அந்தக் கோட்லேந்து எடுத்துட்டுப் போ” என்று எதிர்ப்புற சோபாவின் மீது கிடந்த அவனுடைய கோட்டைக் காண்பித்தான்.பணத்தை எடுத்துக் கொண்டேன். அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன்.

இரவு பத்து மணிக் குளிர் உடம்பைக் குசலம் விசாரித்தது. நான் கார் வந்த வழியாகத் திரும்பிப் போனேன். வானில் நட்சத்திரங்கள் என்னைப் பார்த்து என்ன செய்யப் போகிறாய் என்று திகைப்புடன் கேட்டன. குளிருக்குப் பயந்து அசையாதிருந்த மரங்களும் கூட. அரை மணி  நேர நடைக்குப் பின் சாலையில் சிறுமி விழுந்த இடம் தென்பட்டது. அதை நோக்கி நடந்தேன். விரைந்து சென்ற கார்களின் விளக்கு வெளிச்சங்களையும் மேலிருந்து வீசிய சந்திர ஒளியையும் வைத்துப் பார்த்த போது ரத்தக்கறை எதுவும் அந்த இடத்தில் தென்படவில்லை. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சுற்றிலும் பார்த்தேன். சாலையின் மங்கிய விளக்கொளியில் இரு புறங்களிலும் பல குடிசைகள் காணப்பட்டன. இவற்றில் ஒன்றிலிருந்துதான் அந்தச் சிறுமி வந்திருக்க வேண்டும். எந்தக் குடிசை வாசலிலாவது கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. நான் அந்தப் பகுதியின் சிறிய சாலையில் நடந்து போய்விட்டுத் திரும்பி வந்தேன். என் கண்கள் எதிர் வரிசையிலிருந்த குடிசைகளை நோக்கின.

சாலையைக் கடந்து அப்பகுதிக் குடிசைகளை ஒட்டி இருந்த சிறிய பாதையில் பார்த்துக் கொண்டே நடந்தேன். யாரும் தென்பட

வில்லை. யாரும் காணப்படாததன் ஏமாற்றமும் அந்தச் சிறுமிக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையுமாக நான் சிறிய சாலையிலிருந்து திரும்பி  மெயின் ரோடை நோக்கி நடந்தேன்.

அப்போது திடீரென்று அங்கு வந்த ஒருவன் என்னை நிறுத்தி “யாரோய் நீ? ஆரப் பாக்ணும்?” என்று கேட்டான். அவன் வார்த்தைகளில் சாராயத்தின் குழறல் தென்பட்டது.

நான் அவனுக்குப் பதில் அளிக்காமல் நடந்தேன்.

அவன் திடீரென்று சில பெயர்களைச் சொல்லிக் கத்தினான். அதைக் கேட்டு சில குடிசைகளில் இருந்து ஆணும் பெண்ணுமாகப் பலர் ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவன் “ஏய் இந்தப் பச்சைச் சட்டைக்காரன் மாரம்மா அடிபட்ட கார்ல இருந்தாண்டா” என்று சொல்லியபடி என் மீது பாய்ந்தான். நான் என் கையை நீட்டிச் சமாளிப்பதற்குள் இன்னும் சிலர் என் மீது விழுந்து அடிக்கத் தொடங்கினர். என் சட்டை கிழிபடும் ஓசை எனக்குக்  கேட்டது. அவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாது நான் நிலத்தில் சரிந்தேன்.

“ஏன்டா எங்க குளந்தையைக் கொல்லப் பாத்ததுமில்லாம ஓடிப் போனியேடா. பணக்காரங்க கொளுப்புதான?” என்றபடி இரு கைகள் என் கன்னத்தில் அறைந்தன. நான் வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டேன்.

இரண்டு பேர் சேர்ந்து என்னைக் கெட்டியாக அமுக்கிக் கொண்டார்கள். இன்னொருவன் என் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பணத்தை எடுத்து விட்டான். “எவ்வளவு பணம் பார்ரா! இந்தக் கொளுப்புலதான குடிச்சிட்டு கொளந்தை மேல காரை ஏத்திட்டு ஓடிப் போனே?” என்றபடி பணம் எடுத்தவன் தன் அரை டிராயரில் திணித்துக் கொண்டான்.

அடி கொடுப்பவர்கள் விடாமல் உடம்பு முழுவதையும் காயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வாயில் திரவம் பட்டுக் கரித்தது. இரத்தம்.

அப்போது “டேய் நிறுத்துங்கடா!” என்று பலத்த அதட்டல் குரல் ஒன்று கேட்டது. உடனே அடிப்பவர்கள் நிறுத்தி விட்டார்கள். நான் படுத்திருந்தபடியே தலையை லேசாக மேலே தூக்கி யார் என்று பார்த்தேன். சற்று வயதான முகமும் ஆஜானுபாகுவான உடலுமாக ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். எனக்குத் தலை கனத்தது போல் இருந்ததால் கண்களை மூடியபடி தரையில் தலையைச் சாய்த்து விட்டேன்.

“ஏய் மஞ்சு களுதே, என்ன வாயைப் பொளந்துக்கிட்டு வேடிக்க பாத்துகிட்டுருக்கே? ஓடிப் போயி தண்ணியும் ஒரு துண்டும் வேகமா எடுத்தா” என்று அந்த மனிதர் சத்தம் போடும் குரல் கேட்டது.

“டேய் ரெண்டு பேரு வந்து இந்த ஆளைத் தூக்கி நிறுத்துங்கடா” என்றார். காலை ஒருவனும், தலையை ஒருவனும் தோளை ஒருவனுமாகத் தூக்கி என்னை நிறுத்தினார்கள். என் கால்கள் நிற்க முடியாமல் துவண்டன. யாரோ ஒரு முன்யோசனைக்காரன் ஒரு ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டான். அதில் உட்கார வைத்தார்கள். தண்ணீர் வந்ததும் என் வாயில் ஊற்றினார்கள். அதைக் குடித்தேன். கொண்டு வந்திருந்த துணியை நீரில் முக்கி என் முகத்தையும் கைகளையும் துடைத்து விட்டார்கள்.

அந்த மனிதர் “யாருப்பா நீ? இந்த நேரங் கெட்ட நேரத்துல இந்த இடத்தில என்ன வேல ஒனக்கு?” என்று கேட்டார்.

“இந்தாளுதான் சாமி நம்ம வேலப்பன் மக  மாரம்மா மேலே காரை ஏத்திட்டு ஓடிப் போனவன்” என்று யாரோ ஒருவன் சொன்னான்.

அவர் அவனை முறைத்துப் பார்த்தார். “குளந்தை மேல கார ஏத்தினவன் எதுக்குடா இந்த நேரத்துல இங்க வந்து நிக்கப் போறான் புத்தி கெட்டவனே!”

அவர் என்னைப் பார்த்து “நா கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலே” என்றார்.

நான் என்னை சரிப்படுத்திக் கொள்ள முயன்றேன். சிறிது பிரயாசைக்குப் பிறகு நானும் ஆனந்தராவும் ஒரே காரில் வந்ததையும் வண்டி ஒட்டிய ஆனந்தராவ் சாலையில் குறுக்கே ஓடிய குழந்தை அருகே வந்ததை பார்த்து சடன் பிரேக் போட்டு நிறுத்தியதையும் கீழே விழுந்த சிறுமியை இறங்கிப் பார்க்காமல் நாங்கள் சென்று விட்டதையும் சொன்னேன். ‘அந்தக் குழந்தை எப்படி இருக்கிறாள், அவளுக்கு அடிபட்டு விட்டதா’ என்ற என் மனதின் படபடப்புத் தாளாமல் அந்த இடத்துக்கு வந்து தேடியதையும், அடிபட்ட குழந்தைக்கு மருத்துவச் செலவுக்கு இருக்கட்டும் என்று பணம் எடுத்து வந்ததையும் சொன்னேன்.

“அதை எடுத்துக்கிட்டு ராஜண்ணாவும் சொக்குப் பயலும் ஓடிட்டாங்கைய்யா” என்று ஒருவன் சொன்னான்.

அவர் அதைக் கேட்டு முகத்தைச் சுளித்தார். “பாருங்கடா. ஒருத்தன் ஈவு இரக்கத்தோட குளந்தையைப் பார்க்கத் தேடி வந்திருக்கான். என்ன ஏதுன்னு விசாரிக்காம இப்பிடி நாயை அடிக்கற மாதிரி அடிச்சுப் போட்டிருக்கீங்க. போததுக்குப் பணத்தையும் எடுத்துக்கிட்டு ஓடிப் போயிட்டாங்களா அந்தத் தேவடியாப் பயலுக?” என்று சத்தமிட்டார்.

நான் சிரமப்பட்டு எழுந்து நின்றேன். உடல் ஆடிற்று. அந்த மனிதர் என்னருகில் வந்து தோளைப் பிடித்துக் கொண்டார்.

பிறகு அங்கிருந்த ஒருவனைக் கூப்பிட்டார். வந்தான். அவர் என்னைப் பார்த்து “இவங் கொளந்தைதான் அது. அது அடிபடாம தப்பிச்சிருச்சு. நீ இங்க வந்து அடி வாங்கிட்டு கிடந்திருக்கே. கிரகச்சாரம்” என்றார்.

“இவனோட சைக்கிள்லே உக்காந்து போக முடியுமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“இல்ல. வேணாம். நானே போயிக்கிறேன்” என்றேன்.

அவர் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தார்.

“ரொம்ப நன்றிங்க” என்றேன்.

“எதுக்கு?”

“இன்னும் என்னயத்  தொவட்டிப் போடாம இவங்களைத் தடுத்து நிறுத்தினதுக்குதான்” என்றேன்.

அவர் மீண்டும் ஒன்றும் சொல்லாமல் என்னை உற்றுப் பார்த்தார்.

நான் தட்டுத் தடுமாறி நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

நான் இந்தக் கோலத்தோடு என் வீட்டுக்குப் போனால் அம்மாவும் தங்கையும் பயந்து விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனந்தராவ் வீட்டுக்குப் போவதுதான் உசிதமானது என்று தோன்றியது. ஆனந்த

ராவிடம் குழந்தைக்கு ஒன்றும் நேரவில்லை என்று சொன்னால் நிம்மதி அடைவான்.

ஆனந்தராவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியைத் தட்டினேன். அவனே வந்து கதவைத் திறந்தான். என்கோலத்தைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தது முகத்தில் தெரிந்தது.

“உள்ளே வா” என்று அழைத்துச் சென்றான். என்னை உட்கார வைத்து விட்டு ஒரு கோப்பையில் குளிர்பானம் எடுத்து வந்தான். அதை நான் குடித்ததும் “உள்ள பாத்ரூமுக்குப் போயி இந்தத் துணியை எல்லாம் கழட்டி எறிஞ்சிட்டு கைகால் மூஞ்சியைக் கழுவிட்டு வா” என்று சொல்லியபடியே உள்ளே மறுபடியும் சென்று மாற்று உடை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். நான் என்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஆனந்தராவ் எனக்காகக் காத்திருந்தான்.

“என்னடா ஆச்சு?” என்று கேட்டான்.

நான் நடந்ததைச் சொன்னேன். அடி வாங்கியதையும் பணத்தை இழந்ததையும்.

அவன் ஒன்றும் சொல்லாமல் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான்.

பிறகு என்னைப் பார்த்து “குத்த உணர்ச்சி உங்கள அங்க விரட்டி அனுப்பிச்சுதோ!” என்றான்.

நான் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்.

அவன் “நீ ஒரு முட்டாள்டா” என்றான்.

ஸிந்து ஜா-இந்தியா

ஸிந்து ஜா

(Visited 68 times, 1 visits today)