பரிவு-சிறுகதை-ஸிந்து ஜா

விருத்தாசலம் அன்று காலை வீட்டை விட்டு வெளி வரும் போது ஒற்றை அய்யர் யாரும் எதிரே வரவில்லை. அடுத்த வீட்டுப் பூனை குறுக்கே போகவில்லை. ‘வெறகோ வெறகு’ என்று தெருவைக் கிழித்துக் கொண்டு  விறகு வண்டியைத் தள்ளிக் கொண்டு வரும் கருப்பண்ணசாமியின் குரலும் கேட்கவில்லை. கந்தல் உடையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு எவனும் வரவில்லை.

இம்மாதிரி எந்த அபசகுனத்தையும் அன்று காலை எதிர்கொள்ளா விட்டாலும் விருத்தாசலத்துக்கு அன்று மத்தியானம் நடக்கவிருந்த கஷ்டகாலம் அவரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தது. என்றும் போல் அன்றும் அவர் காலையில் எழுந்து காப்பி குடித்த பின்  குளித்து முடித்து சாமி கும்பிட்டு விட்டு ( சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச்சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்) கூடத்தில் இருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார். சுவர்க் கடிகாரம் மணி எட்டே முக்கால் என்றது. ஒன்பதரை மணிக்கு அவர் போய்க்  கடையைத் திறக்க வேண்டும். சொந்த வியாபாரம். ஆர்மியில் இருபத்தி இரண்டு வருஷம் இருந்து விட்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.  ராணுவம் அவருக்கு ஈட்டித் தந்த நல்ல பெயரை வைத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த  ஒரு தனியார் வங்கியில் தொழில் செய்யக் கடன் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றார்.

அந்த வங்கியில் அப்போதுதான் தலைமைப் பொறுப்பேற்றவர், அமெரிக்காவில் பெயர் பெற்ற ஒரு வங்கியில் பல வருஷங்கள் பெரிய பதவியில் இருந்து விட்டுத் தாயகம் திரும்பியவர், புதியதாக ஒரு கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி எந்தப் பொருள் / மனித  உத்திரவாதமும் இன்றி ஒருவரின் அனுபவத்தையும் வயதையும் வைத்துக் கடன்கள் வழங்கப்பட்டன. விருத்தாசலத்துக்கு ஐந்து லட்சம் கடன் கிடைத்தது. வயது வித்தியாசமில்லாமல் எவரையும் மயக்கி அவர்களின் கைக்குள் தன்னைப் போட்டுக் கொண்டு பிரபலமடைந்து விட்ட செல்போன்களை  வியாபாரம் செய்யத் தீர்மானித்து அதில் இறங்கிவிட்டார். மாதாந்திர  ஓய்வூதியமும், கடையிலிருந்து வந்த லாபமும்  அவருக்கும் மனைவிக்கும் அவருடைய செல்லப் பெண்ணுக்கும் வேண்டிய அளவு  பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து அரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த மெயின் ரோடில் கடை போட இடம் கிடைத்தது. அவரின் உயிரான கோதை வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஸ்கூலில் ஒன்பதாவது படிக்கிறாள். கெட்டிக்காரி. எப்போதும் துடியாய் இருப்பாள். முகத்தில் சதா சர்வகாலமும் குடியிருந்த மலர்ச்சியைக் கண்டு அவர் உள்ளம் பூரித்துப் போவார். அவளை யாரும் எதுவும் பேசிவிடக் கூடாது.

“பதினாலு வயசாகப் போகுது. இன்னும் ஒரு வாய் வென்னி வச்சுக் குடுக்கத் தெரியாத பொம்புளப்பிள்ள. ஆச்சு, இன்னும் நாலு வருசம் போனா எவன் கையிலியாவது பிடிச்சுக் குடுக்கணும். ஒண்ணுந் தெரியாம இப்பிடி வளத்திருக்கியேன்னு பேச்சு வாங்கிக் கட்டிக்க வேண்டியது நாந்தேன்” என்றாள் அவர் மனைவி வடிவு.

“அடச்சே. சும்மா கிட. அது குளந்தை. அதைப் போய் படுத்தி எடுத்துக்கிட்டு. யாரு சொன்னா அத இன்னும் நாலு வருசத்துல கட்டிக் குடுக்கப் போறோம்னு? அது ஐஏஎஸ்சு படிக்கப் போற குட்டி. தெரியுமா உனக்கு?” என்று அவர் மனைவியின் வாயைக் கிண்டினார் . “இந்த வருசம் அதுதான் ஸ்கூல் பஸ்ட்டு.”

அப்போது அவரது பெண்ணரசி அங்கு வந்தாள். அவர்கள் பேசியது எல்லாம் அவள் அறையில் கண்ணாடிக்கு முன் நின்று அலங்காரம் செய்து கொண்டே கேட்டிருப்பாள்.

“அப்பா, எப்படி இருக்கேன்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள்.

“அம்மா. ஸ்கூலு யூனிபாரம்லயே கண்ணு கொள்ளலயே. ஏய் வடிவு ! குழந்தைக்குச் சுத்திப் போடு” என்றார் பெருமையுடன்.

“ஆமா. நம்ம வீட்டுக்கு உப்பு வித்தே சர்க்கிள் கடை சாயபு கடையை பெரிசா கட்டிட்டாரு.”

“அப்பா. எனக்கு அம்பது ரூபா குடுங்க. இன்னிக்கி சாயந்திரம் ஸ்கூல் விட்டதுக்கு அப்புறம் நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்து  புதுசா வந்திருக்கிற பார்லர்ல ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடப் போறோம்” என்றாள் கோதை.

“ஆமா. சாப்பிட்டு வந்திட்டு இங்க வந்து லொக்கு லொக்குன்னு இருமு” என்று வடிவு ஆசிர்வதித்தாள்

“இந்தா நூறு ரூபா வச்சுக்கோ. நல்ல குவாலிட்டியா வாங்கி சாப்பிடு சரியா?”

“மை குட் டாடி” என்று அவள் அவரைக் கட்டிக் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த  வடிவின் முகத்திலும் ஒரு இச். பிறகு சிட்டாகப் பறந்து விட்டாள்.

“நீங்களே உங்க செல்ல மகளைக் கட்டிக்கிட்டு அளுங்க” என்று அவர் மனைவி அலுத்துக் கொண்டாள்.

“அவளுக்குத்தான நாம சம்பாரிக்கிறோம்? நீ சொல்ற மாதிரி நாளைக்கி இன்னொருத்தன் கையில பிடிச்சுக் கொடுக்கத்தானே வேணும்! எப்பவும்

அவ சந்தோஷமாக இருக்கட்டும்” என்று நெகிழ்ந்து சொன்னார் விருத்தாச்சலம்.

0000000000000000000000000

அவர் கடைக்கு வந்த போது வாசலில் முத்துமாரி காத்துக் கொண்டிருந்தான். அவர் கடை ஆரம்பித்த உடனேயே அவன் அவரிடம் வந்து சேர்ந்து விட்டான். அதற்கு முன்னாலும் அவன் ஒரு செல்போன் கடையில் இருந்ததால் அவனுக்கு கடை வியாபாரம், போனைப் பிரித்து எடுத்து ரிப்பேர் செய்வது எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது. அவர் அவன் ஒருவனைத்தான் வேலைக்கு வைத்திருந்தார். காலையில் ஆகும் வியாபாரப் பணத்தை அவன் பாங்கில் போய் ஒரு மணிக்குக்  கட்டி விட்டு அப்படியே அவன் வீட்டுக்குச் சாப்பிடப் போய்விடுவான். ஒன்றரை ஒண்ணேமுக்கால் மணிக்குக் கடைக்கு வந்து விடுவான். அப்புறம் அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு மூன்று மணி வாக்கில் கடைக்கு வருவார். நாள் பூராவும் திறந்திருக்கும் கடையில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அது எப்போது வேண்டுமானாலும் வரும், கஸ்டமரை இழக்காமல் இருக்க உதவும் என்று அவர் நம்பி நடத்தி வந்தார்.

அவர் அருகில் நெருங்கியதும் முத்துமாரி அவரிடம் “ஐயா ! எங்கம்மாவுக்கு இன்னிக்கி ரொம்ப உடம்புக்கு முடியாம போயிருச்சு.  உங்க கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்து டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னிக்கி ஒரு நாளு லீவு வேணும்” என்றான்.

அவனது தாய்க்கு கடந்த ஒரு வாரமாகவே உடம்பு சரியில்லை என்று முத்துமாரி அவரிடம் சொல்லியிருக்கிறான்.

“சரி, நீ உங்கம்மாவ அழைச்சுக்கிட்டு நம்ம டாக்டரு கிட்ட போ. நான் போன் போட்டு சொல்றேன். நீ ஒண்ணும் பணம் குடுக்க வேணாம். இந்தா மருந்து செலவுக்குப் பணம் கையில இருக்கட்டும்” என்று பர்சைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்தார். அவன் அவரிடமிருந்த சாவியை வாங்கிக் கடையைத் திறந்து, வழக்கம் போல்  போன்கள்  அதன் உடன் சேர்ந்த அலங்கார பொருட்களான ஹெட் போன், பவர் பேங்க், சார்ஜர், டேட்டா கேபிள் ஆகிய அனைத்தையும் வாடிக்கையாளர்களின் பார்வைக்குப் படும் இடத்தில் வைத்தான். விலை அதிகமில்லாத போன்களை கண்ணாடி அறையின் முதல் படியிலும், சற்று அதிகமுள்ளவைகளை அடுத்த படியிலும், மிக உயர்ந்த விலையுள்ளவைகளை  உள்அலமாரிக் கண்ணாடி அறைகளிலும் அழகாக அடுக்கி வைத்தான். பிறகு அவரிடம் விடை பெற்றுச் சென்றான். அவர் டாக்டருக்குப் போன் செய்து முத்துமாரி வருவதை பற்றிச் சொன்னார்.  பிறகு மனைவிக்குப் போன் செய்தார்.

“இன்னிக்கி முத்துமாரி அவங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு லீவு போட்டுட்டு போயிட்டான். நீ உன் வேலையை எல்லாம்  முடிச்சிட்டு இங்க வரியா ? நீ வந்தப்பறம்  நா பேங்குல பணத்தை கட்டிட்டு அப்பிடியே வீட்டுக்கு போயி ஒரு வாய் அள்ளிப் போட்டுட்டு கடைக்கு வந்துடறேன். அப்புறமா நீ வீட்டுக்கு போயிடலாம் ‘ என்றார். இம்மாதிரி சந்தர்ப்பத்திலோ அல்லது அவர் கடைக்கு வரமுடியாமல் வெளியூர் போக நேர்ந்தாலோ வடிவுதான் வந்து பார்த்துக் கொள்வாள். ஒன்றரை மணிக்குள் வந்து அவளை விடுவித்து விட வேண்டும். பாவம் அவளாலும் வெகு நேரத்துக்குப் பசியைத் தாங்க முடியாது.

பன்னிரெண்டே முக்காலுக்கு வடிவு வந்தாள். அதுவரை நான்கு போன்கள் விற்றிருந்தன. அவர் அன்றைய கலெக்சனையும் முந்திய தினம் மதியத்துக்குப் பின்னால் நடந்த விற்பனைப் பணத்தையும் எடுத்துக் கொண்டு பேங்குக்குச் சென்றார். அன்று அதிகமாகக் கூட்டம் இருந்தது. நம்மிடமிருந்து பணம் பெற்றுக் கொள்பவர்கள்தான் வரிசையில் வந்து நிற்க வேண்டும் என்னும் சாதாரண வாழ்க்கை நியதியை உடைத்துப் போட்டு விட்ட சூழ்நிலையை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். இதை விடக்  கொடுமை கடன் வாங்கிக் கொண்டு போ என்று வங்கிகள் பலபேரிடம் போய் நிற்பதுதான் என்று அவர் சிநேகிதன் பத்து சொல்வான். காலம் ரொம்பத்தான் மாறி விட்டது.

அவர் வங்கியிலிருந்து கிளம்பும் போது அதிக நேரமாகி விட்டது. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு கடைக்கு வரும் போது  இரண்டு மணி. கடைக்கு எதிர்ப்புறத்திலிருந்த வேப்ப மர நிழலில் ஸ்கூட்டரை நிறுத்தினார். ஸ்கூட்டரைப் பூட்டி விட்டுக் கடையைப் பார்த்த போது ஒரு இளைஞன் வெளியே வருவதைப் பார்த்தார். ஸ்கூலில் படிக்கும் பையனைப் போல இருந்தான். ஆனால் இவர்களால்தான் அவருக்குப் பிழைப்பு நடக்கிறது என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். அந்தப் பையன் நிதானமாக நடந்து சென்று கடைமுன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்து வண்டியைச் செலுத்திக் கொண்டு போனான்.

அவர் கடைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சி அடைந்தார். வடிவு தரையில் கிடந்தாள். அவர் பதறி அவளருகே சென்றார். அவள் லேசாகக் கண் முழித்து அவரைப் பார்த்தாள். அவர் இரு கைகளையும் அவளுடைய இடையைச் சுற்றிப் பற்றிக் கொண்டு அவளைத் தூக்கினார். அவள் கூடவே சேர்ந்து எழுந்திருக்க முயன்றதால் அவள் உடலின் கனம் பொருட்படுத்தக் கூடிய அளவில் இல்லை. அவர் அவளை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தார்.

“என்ன ஆச்சு வடிவு?” என்று பதற்றம் அடங்காமல் கேட்டார். அவர் கண்கள் சுற்றுமுற்றும் நோக்கின. கல்லா மேஜை கலைந்து கிடந்தது. போன்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஷெல்புகளின் கதவுகள் திறந்திருந்தன. அவர் கடையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து மனைவியிடம் தந்தார். இதற்குள் அவள் சோபாவின் மீது உட்கார்ந்து விட்டாள். அவர் தந்த நீரைப் பருகினாள்.

பிறகு அவரைப் பார்த்து “பயப்படாதீங்க. ஒண்ணும் இல்ல. சரியாயிடும்” என்றாள்.

அவள் மிகுந்த தைரியசாலி என்று அவருக்குத் தெரியும்.

வடிவு அவரைப் பார்த்து “பத்து நிமிசத்துக்கு முன்னால ஒரு பையன் வந்தான். நான் மாம்பழத்த சீவி தட்டுல வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். பசி சித்த நேரம் அடங்கிக் கிடக்கட்டும்னு. வந்தவன் நான் சாப்பிடறதையே பாத்தான். இந்தா எடுத்துக்கன்னு தட்ட நீட்டினேன். அப்பிடியே தட்டுல இருந்த எல்லாத்தையும் எடுத்து வாயில அடைச்சிகிட்டான்.  இப்படி ஒரு பசியான்னு கைல வச்சிருந்த இன்னொரு மாம்பழத்தையும் குடுத்தேன்.  ரெண்டு நிமிஷத்துல எல்லாம் வாய்க்குள்ள திணிச்சு உள்ளே போயிருச்சு” என்றாள். அவள் குரலில் வழிந்த பரிவு அவரை என்னவோ செய்தது.

“அப்புறம் நாலஞ்சு போனை எடுத்துப் பாத்தான். விலையெல்லாம் விசாரிச்சான். ஒடனே வாங்கப் போறவன் மாதிரி அவசர அவசரமா எல்லாம் செஞ்சான். ஒரு போன எடுத்து ‘இதுக்கு பில்லு போடுங்க’ ன்னான்  நானு பில்லிங் மெசினை எடுத்துப் போட்டுக்கிட்டே அவனைப் பாக்கறேன். அவன் இன்னும் ரெண்டு போனை எடுத்துக்கிட்டு என் கிட்ட வாரான். என் கையிலிருந்த போனையும் பிடுங்கிட்டான். டேய் என்னடா இதுன்னு நான் அவன் கையைப் பிடிக்கப் போனேன். ‘கெளவி, இத பாரு. சும்மா கம்முனு இருந்தே நீ பொழச்சேன்’-னு சொல்லிகிட்டே பேண்ட் பாக்கட்டில இருந்து உருவி ஒரு கத்திய முகத்துக்கு நேரே காமிக்கிறான். நான் அதை மீறி வாசலைப் பாத்துக் கத்தினேன். தெருவுல யாராச்சும் போனா  வந்து உதவ மாட்டாங்களான்னு. அப்பிடியே என்னோட வாய  அவன் கையால வச்சி அமுத்தி கீழே தள்ளி விட்டான். எனக்கு பயத்துல குரலே வரல. ஒரு நிமிசம் நின்னு என்னையப் பாத்தான். கல்லாகிட்ட போயி இளுத்துப் பாத்தான். அவன் கையில ஒரு நூறு ரூவா நோட்டு தெரிஞ்சது. நல்ல வேளையா எல்லாத்தையும் நீங்க எடுத்துக்கிட்டு பேங்குக்கு போயிட்டீங்க” என்றாள் வடிவு.

அவருக்கு ஸ்கூட்டரை மர நிழலில் நிறுத்தி விட்டு கடைக்கு வரும் போது கடைக்கு வெளியே வந்த பையனின் ஞாபகம் வந்தது. அவர் அவன் முகத்தை நினைவுபடுத்திப் பார்த்தார். உயரமாயும் கெச்சலாகவும் இருந்த உடல்தான் நினைவுக்கு வந்ததே ஒழிய அவன் முக அடையாளத்தை அவரால் நினைவு கூர முடியவில்லை. விருத்தாச்சலம் கண்ணாடி அலமாரிகளுக்கு முன்னால்  போய் நின்று பார்த்தார். வேறு எந்த சேதமும் ஆனது போலத் தெரியவில்லை. களவு போன மூன்று போன்களும் விலை குறைந்த ஐட்டங்கள்தான். அவரது அடக்க விலைக்கு மொத்த நஷ்டமாக ஐந்து அல்லது ஆறு ஆயிரம் இருக்கக் கூடும்.

“அவன் அடையாளம் ஏதாவது பாத்து வச்சியா? போலீசுக்கு ஒரு கம்ப்ளெய்ண்ட்டு குடுத்துறலாம்” என்றார் அவர்.

வடிவு ஒன்றும் பேசாமல் அவரைப் பார்த்தாள்.

விருத்தாச்சலம் தொடர்ந்து  “ஆனா போலீஸ்காரனுங்க கேச விசாரிக்கிறேன்னு ஏழெட்டு தடவை வந்து காபியும் டிபனுக்கு வாங்கிக் கொடுன்னு தின்னுட்டு போவானுங்க. அவனுங்களைக்  கவனிக்கறதுல இருக்கற நஷ்டத்தோட இன்னும் ரெண்டு மூணு ஆயிரம்தான் கூடும்” என்றார் விரக்தியாக.

“என்னவோ நம்ம நல்ல காலத்துக்கு விலை உசந்த போனையெல்லாம் அவன் தொடாம விட்டானே. யார் கண்டா?அவனும் கெட்டிக்காரனா இருக்கலாம். இந்த மாதிரி சாதாரண போனை யார்கிட்ட வேணும்னாலும் தள்ளி விட்டுருலாம். விலை உசந்ததுன்னா உனக்கு எப்படிடா கெடச்சதுன்னு யாராச்சும் கேட்டு மாட்டிக்கிடுவான்” என்றார்.

“உனக்கு அவன் அடையாளம் எதுவும் தெரியலையா? நான் கடைக்குள்ள வரப்பத்தான் அவன் நிதானமா நடந்து போயி வண்டிய எடுத்தான். வண்டி நம்பரக் கூட நான் பாக்கல. அவனும் சின்னப் பய மாதிரிதானே இருந்தான். பதினாலு பதினஞ்சு வயசு இருக்குமா?” என்றார்.

வடிவு அவரைப் பார்த்து “அதனாலதான் நானும் உங்க கிட்ட ஒடனே சொல்லல” என்றாள்.

“என்னது?”

“ஆமா. அவன் மூஞ்சியெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. தலைமுடி நெத்தில சதா விளுந்து கிடந்தது. ஒரு தடவை எதுக்கோ கையால முடியை ஒதுக்கி தலை மேல போட்டப்ப அவன் நெத்தியில இடது பக்கமா ஒரு பெரிய தளும்பு இருந்திச்சி. அவன் வந்த வண்டி ப்ளூ கலரு. டயர்ல மஞ்ச கலர் அடிச்சிருந்தது.”

அவர் வடிவைப் பார்த்து “இதைச் சொன்னாலே போதுமே. போலீஸ்காரனுங்க அவனை இழுத்துகிட்டு வந்திருவாங்களே. நீ ஏன் உடனே சொல்லல? இரு நான் போலீசுக்கு போன் போடுறேன்” என்று சட்டைப் பையிலிருந்து மொபைல் போனை எடுத்தார்.

“இல்ல, வேண்டாங்க. நீங்கதானே சொன்னீங்க” என்றாள் வடிவு.

விருத்தாச்சலம் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்து “என்ன சொல்ற வடிவு?” என்று கேட்டார்.

“அவனுக்கு பதினாலு பதினஞ்சு வயசுதான இருக்கும்னு சொன்னீங்க. நம்ம கோதை வயசுதான பாவம் அவனுக்கும்” என்றாள் வடிவு.

 சிந்துஜா-இந்தியா

(Visited 131 times, 1 visits today)