நெற்கொழுதாசன் கவிதைகள்

 

நெற்கொழுதாசன்

எவரிடமும் நேரமிருக்கவில்லை.
தொடரூந்து எந்தநேரத்திலும் வந்துவிடக்கூடும்.
இரவு மழை.
மினுங்கும் தெருவில்
நிழலுடன் பேசி புன்னகைத்தபடி செல்பவனை
பைத்தியம் என்கிறார்கள்.
அவனுக்காகவே மழை வந்திருக்கவேண்டும்.
சிறுமி மழையை ஏந்துகிறாள்.
அவளிடத்தில் கடலாய் விரிகிறது புன்னகை.
கடல்தாண்டி உறங்காதிருக்கும் தேவதைக்கு
அழைப்பெடுக்கிறான் நாடற்றவன்.
முகம் அலைபேசியின் மஞ்சள் ஒளியில்
நிலவு தொட்டுவிடும் தூரமா என்ன ?
யாராவது இவர்களையும் பைத்தியம் என்று சொல்லவும் கூடும்.
இறுதி வாடிக்கையாளன் “கெனிக்கன் பியரை”
உடைக்க பொங்கிய நுரைவாசம்
நாசிகளில் ஏற,
கதவுகளை இறக்கியபடியே தொடரூந்து நிலையத்தை
அவதானிக்கிறான்.

நிலைய அறிவிப்பு
தொடரூந்து ஐந்து நிமிடந்தால் தாமதமாகும்.
நல்லது.
இன்னும் ஐந்து நிமிடங்கள் மிச்சமிருக்கிறதே
இந்த வாழ்வுக்கு.

000000000000000000000000000000000

நெடுஞ்சுழி
குரலழிந்த தொடரியின் நினைவுகள்.
மொழி இறந்தா போயிற்று என்ன
பாழ்வெளி.

எரிதேகம்
உருவழித்தும் வாழும் உயிர்.
வாசல்கள் மறந்தா போயிற்று என்ன
காலவழு

உடைபட்ட நாளொன்றின் துண்டுகள்
வழிகாட்டும் பலகைகளாய்
குறுக்கறுக்கின்றன.
தூரம் துயரம்
இடைவெளிகளில்
இளைப்பாற இருக்கைகள்

யாருக்கு வேண்டும் இந்த இசை.
அறுத்தெறியுங்கள்
நரம்பை.
காலத்தின் குரல் செத்துப்போகட்டும்.

இறுதியாய் எப்போது
பேசினாய்….

மீந்திருக்கும் நினைவுகளில்
அடைத்துக்கொண்டு எவ்வளவு நாளாயிற்று ..
என்றாவது நீ நான்
இடைவெட்டிக்கொள்ள
மீளும் குரலின் வாசனையையில்
காலம் என்னை நிராகரிக்கட்டும்.

00000000000000000000000000000

காலடியில் கிடக்கும் தாமரையிருந்து
இறங்கும் ஒளி
பொழுதில் கலக்கிறது.
இனி
திறவும் விழி ; எவரொருவரும் வரார்.

சொல் வெறுத்துநீர் அமர்ந்த நிழலில்
எத்தனை சொற்கள்.
உதறி நடந்த தடத்தில் எத்தனை வெகுமதிகள்
பரிநிர்வாணி
உம் பெயரில்தான் எத்தனை சைத்தியங்கள்

என்ன செய்யப்போகிறீர் தேவரீர்
முழுநிலவு மீந்திருக்கிறது.

திகழ் ஒளிசூழ் எம்பெரும,
காலக் கணக்குடைக்கும் வார்த்தைகளில்
ஏதேனுமொன்று நினைவிருக்கிறதா
வான்விரிவு வாழ்வு பெருக்கும் சீலங்கள்
எங்கேனும் மெய்த்திருக்கிறதா
அருகதர்கள் நிறைந்த அருகாமை வாய்த்திருக்கிறதா

சித்தார்த்தா,
ஆதியில் நீ மனிதனாய் இருந்தாய்.

எந்த
நிமித்திகனின் குரலிலும் உன் வீழ்ச்சி
பதியப்படபோவதேயில்லை
நிழல் விழா
பெருருவத்தில் விழிமயக்கி
மௌனமாய் வீசும்
மந்தகாசப் புன்னகை உம்முயுடையாயிற்று.
செங்கழு நீர்க்கொடியில் இனி நீர் தூங்கிடலாம்

நெற்கொழுதாசன்-பிரான்ஸ்

 

(Visited 47 times, 1 visits today)