படைப்புகளால் வழிகாட்டும் கவிஞர் கி.பி.அரவிந்தன்-கட்டுரை-துரைசிங்கம்

பல பரிமாணங்களை கொண்ட கி.பி.அரவிந்தன் ஒப்பற்ற கவிதைகளாலும்,அரசியல் கட்டுரைகளாலும்,விமர்சனத்தினாலும் ,ஈழப்போராளியாக இயங்கியமையாலும் மறைந்தும் மறையாமலும் இருக்கிறார்.

ஈழப்போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்தி வந்தவர் அந்த பட்டறிவு அவரை எழத வைத்தது சிறைக்கதவுகளை முத்தமிட்டபோது மறியல் கம்பிகளை எண்ணிய போதெல்லாம் அவரது சிந்தனை விரிவடைந்தது.அதனாலே துப்பாக்கி தூக்கிய கரங்களில் எழுதுகோலையும் ஏந்தினார். மெளனித்து போகும்வரை எழுத்துப்போராளியாகவும் பயணித்தார்.

போராட்ட பாதையில் தாயகம்,தமிழகம்,பிரான்சு என அவர் நடந்த தெருவெங்கும் தன் எழுத்துகளால் தடம் பதித்து இருக்கிறார்.கவிதைகளால் களமாடியிருக்கிறார்.அவரது கவிதைகளில் ஓசை,நயம் மட்டுமல்ல புதிய சுவை,பொருள் நிறைந்தே காணப்படும் முதலில் வெளியான “இனி ஒரு வைகறை”என்ற கவிதை தொகுப்பே இவரது கவிதை நடைக்கு கட்டியக்காரன் போல தென்படுகிறது .இந்த பெயரே அழகான கவிதை போல அமைந்துள்ளது. இதற்கு பின்னர் தான் பலர் “இனி”என்ற வார்த்தையை தம் எழுத்துகளிலே புகுத்தினர். ஈழவிடுதலையில் மட்டுமல்ல எழுத்துகளாலும் வழிகாட்டியானவர் கி.பி.அரவிந்தன்.

“ஒரு நொடி:
ஒரு கணம்:
ஓரிமைப்பொழுது
கண்மூடுத்திறப்பதற்குள்
அது நிகழ்ந்தது
குத்தென
சாய்ந்துசரிந்து
சட்டென
மேலெழநிமிர்கையில்
எச்சமிட்டது”

இது என்னவென்பது  பாமரரும் சுலபமாக புரிந்து கொள்வார்கள் விமானக்குண்டு வீச்சு சம்பவத்தை செய்தியோடு அதன் பாதிப்பை,வலியை  “இனி”என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

இதுதான் கவிதை என்பதற்கு வேறென்ன வேண்டும்.கவிதை என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் அமைதல் வேண்டும்  அதனையே தனது புனைவுகளில் பதித்துள்ளார்.கி.பியின் கவிதைகளில் மட்டுமல்ல ஏனைய எழுத்துகளிலும் கனதி இருக்கும்,நயம் தெரியும் ஏன் அழகியல் அமைதியாக அமர்ந்திருக்கும் . இந்த கைவண்ணத்தை,கற்பனை வளத்தை எப்படி கற்றாரோ,பெற்றாரோ தெரியாது ஆனால் போராளியாக பெற்ற அனுபவம் நிறைந்த வாசிப்பும் தான் அவரை உருவாக்கியுள்ளது.

அவரது நூல்கள் ,அவரது வழிகாட்டலில் வெளியிடப்படுகின்ற நூல்களுக்கு சூட்டப்படுகின்ற பெயர்கள் கவிதை மொழியிலே அமைந்திருப்பதை காணலாம் .”இனி ஒரு வைகறை” “முகம் கொள்” போன்றவற்றுடன் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் 75 ஆவது அகவை சிறப்பு  மலருக்கு “சுட்ட பழமும் சுடாத மண்ணும்”என்ற பெயரை சூட்டினார்.இதழ்களுக்கான ஆக்கங்களை எழுதுவதுடன் அவற்றுக்கு வடிவம் கொடுப்பதிலும் கி.பி வல்லவர்.

தமிழ் மொழியின் மீது தீவிர நேசிப்பு கொண்ட கி.பி பிரான்சில் தமிழ்சோலை ஊடாக தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார் .”நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”என்று தமிழ்சோலை விருது வாக்கியத்தையும், தமிழ்சோலை கீத்த்தையும் எழுதினார்.மேலும் பாடத்திட்டங்களையும் தயாரித்து புகலிடத்தில் தமிழ் மொழி கல்வியை ஊக்குவித்தவர்.

தான் கவிதை எழுத வந்தது போராட்ட முனைப்புகளாலேதான்,போராளியானதால் என்று கூறும் கி.பி “மகாகவி உருத்திரமூர்த்தி ,நீலவாணன்,சண்முகம் சிவலிங்கம்,சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன்,கம்சத்வனி,நு.:மான்,சு.வில்வரத்தினம்,மு.புஸ்பராஜன்,புதுவைரத்தினதுரை,நிலாந்தன்,சிவரமணி,கருணாகரன்,சோலைக்கிளி,அனார்,ஆகியோரின் கவிதைகளை பாராட்டிய அவர் இளங்கோ,மெலிஞ்சிமுத்தன் ஆகியோர் நம்பிக்கை தரும்வகையில் எழுதுகிறார்கள்.இப்படியே நான் பல கவிஞர்களை குறிப்பிடலாம் உடன் நினைவுக்கு வந்தவர்களையே குறிப்பிட்டேன்”. என்று வெளிச்சம் நூறாவது இதழுக்கு வழங்கிய நேர்காணலிலே இத்தகவலை அவர் தெரிவித்தார்.

கி.பி யின் இரண்டு கவிதைகள் இலங்கை அரசாங்க கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் தரம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் பகுதியாக வெளியிடப்பட்ட தமிழ் மொழியும் இலக்கியமும் என்னும் பாடநூலில்இடம்பெற்றுள்ளன.

இறக்கம் என்ற தலைப்பில்,

“பிடிக்கப் பிடிக்க
சறுக்கின்றது
ஏறிய இடத்திலாயினும்
இறங்கலாமென்றால்
வழுக்கி செல்கிறது சரிவு “

என்று தொடங்கும் கவிதையும்

திசைகள் என்னும் தலைப்பிலான

“காலைச்சூரியனுக்கு
முகம் காட்டி நின்றால்
புறமுதுகில் மேற்கிருக்கும்
இடக்கை பக்கம் வடக்கு
வாடைக்காற்று தழுவும்”

என தொடங்கும் கவிதையும்  பாடநூலில் இடம்பெற்றமையானது கி.பி யின் கவித்துவத்தின் சிறப்புக்கு அடையாளமாகும்.

சிறுகதைகள்,அரசியல் கட்டுரைகள்,விமர்சனங்கள் பல தளங்களில் எழுதியவர்  “அப்பால் தமிழ் “எனும் தனது வலைத்தளத்தில் அவற்றை பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளராக பணியாற்றிய ஒருவர் பிரான்சில் வெளியிட்ட  அவரது பத்திரிகை அனுபவம் பற்றிய நூலுக்கு அப்பால் தமிழ் மூலம்  அள்ள அள்ள குறையாத ஓர் அட்சய பாத்திரம் என்று எள்ளலோடு ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தார்.ஈழமுரசு பத்திரிக்கையிலும் வெளிவந்தது.

கம்பன் கழக ஜெயராஜ் மல்லிகை யில் எழுதிய வாராதே !வரவல்லாய் என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக கட்டுரை வரைந்தார்.தனது  எழுத்துகளில் மூலம் உண்மை,நீதியை நிலை நாட்டுவதிலும் கி.பிக்கு நிகரில்லை. நாட்குறிப்பை கூட கவித்துவத்துடன் எழுதியவர் கி.பி.  1991 தை 14 ஆம்திகதி அவரது நாட்குறிப்பில்,

“கண்டறியாத்தேசத்தில்
இயந்திரப் பற்களுக்குள்ளே
கனவுருகி-வாழ்வுருகி
உன்னப்பன் நானிருக்க
உன் காதுள் பஞ்சடைத்து
தன்னுக்குள் உனைப்போர்த்தி
ஊனுருகி உயிருருகி
உன் அன்னை காத்திருப்பாள்
நான்றிவேன்… என் மகனே…
மெல்ல நீ கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்மணியே”

என்று எழுதியுள்ளார். அன்று தான் அவரது மகன் பிரசவமானான் இதனை கி.பியின் மனைவி பதிவு செய்துள்ளார்.

எரிமலை,வழிகாட்டி,தர்க்ககீகம் ,ஈழம்,பொதுமை,பாலம் ஆகிய இதழ்களில் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து அவற்றுக்கு அணி சேர்த்தவர் ஈரோஸ் இயக்கத்தின் பத்திரிகைகளாக இருந்தாலும் இலக்கியத்தன்மையுடன் ஆக்கங்கள் வெளிவரக்காரணமானவர் கி.பி.

“கருத்துகள் மக்களை பற்றிக்கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும் “என்ற வாக்கியத்தை அன்றைய ஈரோஸ் பிரசுரங்களில் காணமுடிந்தது.

இருப்பும் விருப்பும் என்ற புத்தகம் 2009 வெளியானது.பலதலைப்புகளில் பல விடயங்களை

எழுதியுள்ளார்.ஈழ அரசியலை பக்கசார்பற்ற தன்மையில் விமர்சனக்கண்ணோட்டத்தில்

பதிவு செய்துள்ளார்.

சாத்வீக பாதையில் சந்தி பிரித்தவன்:பொன்.சிவகுமாரன்  என எழுதியுள்ளார்.

“சாத்வீக பாதையில்
சந்தி பிரித்தாய்
காலவெளியில்
சுவடுகள் பதித்தாய்
காலக்கரைவிலும்
உன்றன் சுவடுகள்”

என்னும் கி.பி ஆரம்ப நாட்களில் சிவகுமாரனோடு பயணித்தவர். பிரான்சில் அகதி நிலையில் வாழ்ந்த கி.பி,

” நான் அகதி நிலையை மாற்றிக்கொள்வதில்லை என்றே உள்ளேன்.ஈழத்தமிழ் சமூகத்தின் அகதி நிலைக்கு ஒரு முக்கிய காரணம் போராட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் எப்படி எனது அகதி நிலையில் மாற்றம் ஏற்படும்.குடியுரிமை என்பது அந்த நாடுகள் தாங்களாக தருபவை அல்ல.நாம் விண்ணப்பிக்க வேண்டும்.நான் விண்ணப்பிக்கவில்லை அவ்வளவுதான். குடியுரிமையை ஏற்கும் போது இந்த போராட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கொள்ளலாமல்லவா?இரண்டாவது குடியுரிமை பெறும் போது இந்த நாட்டு வரலாற்றினை இரத்தமும் சதையுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த கொடியின் மீதான இரத்தக்கறைகளுக்கும் நான் சாட்சியாக வேண்டும் இவற்றை விட ஈழக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போதே எனது அகதி நிலையை மாற்ற விரும்புகிறேன்”

இவ்வாறு பிரான்சு குடியுரிமை பற்றி கூறியுள்ளார்.

பிரான்சில் ‘மெளனம்’ என்ற சஞ்சிகையை நண்பர்களுடன் ஆரம்பித்தார் ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. பரதேசிகளின் பாடல் என்ற கவிதைதொகுதியை அப்பால் தமிழ்மூலம் வெளியிட்டார்.கவிஞர்களுக்கு முகவரி பெற்றுக்கொடுத்தார்.பாரிஸ்கதைகள் என்ற தலைப்பில் 15 சிறு கதைகளை உள்ளடக்கி சிறுகதை தொகுப்பும் வெளியிட்டார்.

பி.பி.சி.தமிழோசையின் பிரான்சு செய்திதொடர்பாளராகவும் பணியாற்றினார்.ஐ.பி.சி தமிழ்வானொலி,அவுஸ்திரேலிய தமிழ் வானொலி,நோர்வே தமிழ்வானொலி,ஜீ.ரீ.என்,ரீ.ரீ.என் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார். குறும்பட வளர்ச்சிக்கும் முடிந்த வரை உழைத்தவர் அடுத்த தலைமுறைக்கு சகல துறைகளிலும் வழிகாட்டியாக துலங்கியவர்.அவர் காலமாகி விட்டாலும்  பதிவுகள்,படைப்புகள், என்றும் தமிழ் சமூகத்துக்கு வழிகாட்டுவதாகவே இருக்கும் என்று நம்புவோம்.

துரைசிங்கம்-பிரான்ஸ்

துரைசிங்கம்

(Visited 144 times, 1 visits today)
 
என்.கே.துரைசிங்கம்

ஈழத்து இலக்கிய பயணத்தில் மல்லிகை ஜீவா ஒரு சகாப்தம்-என்.கே.துரைசிங்கம்-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்

அடக்குமுறையும்,அவமானமும் பலரை உருவாக்கியிருக்கிறது,சாதிக்க செய்திருக்கிறது.இறந்த காலத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து நிகழ்காலத்தில் அதனை கடந்தவர்களே எதிர்காலத்தை செப்பனிடும் சிற்பிகளாக உருவெடுத்துள்ளார்கள். வரலாற்று பக்கங்களை புரட்டுகின்றபோது இந்த உண்மை புலனாகும்.மல்லிகை […]