ஈழத்து இலக்கிய பயணத்தில் மல்லிகை ஜீவா ஒரு சகாப்தம்-என்.கே.துரைசிங்கம்-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்

என்.கே.துரைசிங்கம்அடக்குமுறையும்,அவமானமும் பலரை உருவாக்கியிருக்கிறது,சாதிக்க செய்திருக்கிறது.இறந்த காலத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து நிகழ்காலத்தில் அதனை கடந்தவர்களே எதிர்காலத்தை செப்பனிடும் சிற்பிகளாக உருவெடுத்துள்ளார்கள். வரலாற்று பக்கங்களை புரட்டுகின்றபோது இந்த உண்மை புலனாகும்.மல்லிகை ஜீவாவும் இவ்வாறு தான் தோற்றம் பெற்றார்.

சாதீய வன்மங்களால் ஆரம்பபள்ளி கல்வியை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார் ஆற்றல்மிகு மாணவனாக திகழ்ந்தவர் பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதில் தந்தையாரின் சிகைஅலங்கரிப்பு தொழிலுக்கு சென்றார்.தனது இளமை காலத்தில் தீண்டாமை கொடுமையால் தனது காதலை சாகடித்தார். சாதியின் பேரால் பல அவமானங்களை சந்தித்தார்.இந்த வன்மங்களை கண்டு துவண்டு விடவில்லை இவற்றை எதிர்கொண்டு போராடினார்.

ஆலயம் செல்லத்தடை, கிணற்றில் தண்ணீர் அள்ளத்தடை, வீட்டிற்குள் தடை என்று பல வடிவங்களில் யாழ்ப்பாணத்தில் புரையோடிப்போயுள்ள சாதிவெறி  பஞ்சமர் என்று கூறப்படுகின்ற சக மனிதர்களை தீண்டத்தகாதவர்கள் என அடையாளப்படுத்தி ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் பஞ்சமர்களை இதற்கெல்லாம் விட்டால் அது துடக்காகி விடுமாம். ஆனால் வீடு கட்டுவதும் கிணறு வெட்டுவதும் இதே பஞ்சமர்கள் தான். எல்லாம் முடிந்த பின் நன்றியுணர்வின்றி அவர்களை ஓரங்கட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முற்போக்கு சக்திகள் திரண்டெழுந்தனர். அந்த திரளில் டொமினிக் ஜீவாவும் ஒருவரானார்.

கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர் கார்த்திகேசன் மாஸ்டர் போன்ற பெரும் மனிதர்களுடன் கிடைத்த தொடர்பு அவரைக் கம்யூனிஸ்ட் போராளியாக்கியது. அந்த பாசறையில் பயணித்து பல போராட்ட களங்களை சந்தித்தார். மக்களோடு பலதொடர்புகள் ஏற்பட்டன. மக்களிடம் கற்று மக்களுக்கு கொடுக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் பேனாவை ஆயுதமாக எடுத்து எழுத்துப்போராளியானார்.

சுதந்திரன் பத்திரிகையில் முதலாவது படைப்பு வெளியானது.தொடர்ந்து இலங்கை பத்திரிகைகளிலும், தென்னிந்திய சஞ்சிகைகளான தாமரை,சரஸ்வதி போன்ற இதழ்களிலும் எழுதினார்.1949,50 களில் எழுத ஆரம்பித்தார். “தண்ணீரும் கண்ணீரும்” என்ற அவரது சிறுகதை தொகுதிக்கு சாகித்திய மண்டல பரிசு பெற்றார். பாதுகை,சாலையின் திருப்பங்கள், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய சிறுகதை தொகுதிகளையும் அவர் படைத்துள்ளார்.

1966ஆம் ஆண்டு மல்லிகை என்னும் கலைஇலக்கிய இதழை ஆரம்பித்து முற்போக்கு இலக்கியத்தில் பயணித்தார். பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுத்ததுடன் இளம் படைப்பாளிகளை வளர்த்தெடுத்தார். தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூன்று சமூகத்து எழுத்தாளர்களும் மல்லிகையில் எழுதினார்கள். இலக்கியம் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிஎழுப்பியவர் மல்லிகை ஜீவா என்றால் மிகையல்ல, புதிய எழுத்தாளருக்கு ஊக்கமளிப்பதில் ஜீவா வல்லவர் என்பதை நான் பல தடவை அவதானித்துள்ளேன்.1985ஆண்டு  ஐ.நா.சபை சர்வதேச இளைஞர் ஆண்டு பிரகடனம் செய்தது. அந்த காலம் எமது மண்ணில் பல இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர் ,கொல்லப்பட்டனர்.

“இது இளைஞர் ஆண்டு
ஐ.நா.பிரகடனம்
எங்கள் மண்ணில் இளைஞர்களே இல்லை
வெளிநாடுகளிலிருந்து
இளைஞர்களை
இறக்குமதி செய்வோமா ?

என்றவாறு எழுதி மல்லிகை அலுவலகத்தில் ஜீவா அவர்களை நேரில் சந்தித்து கொடுத்தேன். அதனை செப்பனிட்டு 1985 மாசி மல்லிகையில்  பிரசுரித்து ஊக்கம் அளித்தார்.

இலக்கிய நிகழ்வுகளில் மற்றும் யாழ்.நகர தெருக்களில் அவரை சந்திப்பேன் அப்போதெல்லாம் சிறிய புன்னகையுடன் கடந்து செல்வேன்.அவரது கம்பீரம், நிமிர்ந்த நடை,தேசிய உடை எப்பொழுதும் நினைவுகளில் நிற்கும்.ஈழநாடு பணிமனைக்கு அவ்வப்போது வருகை தருவார்.ஆசிரிய பகுதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் நானும் ஈழநாடு பணியாளன் என்பதால் தெரிந்து வைத்திருந்தார்.

யுத்த காலத்தில் கொழும்பு பத்திரிகைகள் யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாதிருந்தது. அந்த நாட்களில் ஈழநாடு ஆசிரியர் பகுதிக்கு கொழும்பு பத்திரிகைகள் எப்படியோ வந்து சேர்ந்து விடும் அவற்றை வாசிப்பதற்காக ஈழநாடு வருவார் அப்போது அவரோடு பழகியது நினைவில் நிற்கிறது.மாதம் ஒரு தடவை வெளியாகும் மல்லிகை மணத்தினை நுகரும் வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். சிறுகதை,கட்டுரை,இலக்கிய விவகாரங்கள் ,ஆசிரியர் கருத்து, தூண்டில் என மல்லிகையில் வெளியாகும் அத்தனை விடயங்களும் வாசிக்க வாசிக்க என்னை திருப்திபடுத்தியது.

மல்லிகை பந்தல் பதிப்பகம் மூலம் 75 நூல்கள் பதிப்புத்துள்ளார். அதுமட்டுமல்ல மல்லிகை முன் அட்டையில் இலக்கியம் மற்றும் துறைசார்ந்தவர்களின். படங்களை பிரசுரித்து உள்ளே அவர்களின் செயற்பாடுகளை கட்டுரைகளாக வெளியிட்டு மதிப்பளிப்பார்.சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவினத்தவர்களும் முன் அட்டையை அலங்கரித்தனர்.

மல்லிகை பிறப்பெடுத்தது குறித்து ஜீவா கருத்து வெளியிடும் போது,

“எமது மண் வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றியபோது அதற்கு தளம் கொடுக்க சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்திய சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்றொரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து அதன் வழி மல்லிகையை தோற்றுவித்தேன். அத்தோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், கொள்கைகளை எழுத்தின் மூலம் பரவலாக்கம் செய்யவும் சஞ்சிகை ஒன்று தேவைப்பட்டது. இவை மட்டுமல்லாமல் எம்மண்ணில் ஆக்க கர்த்தாக்களை அறிமுகப்படுத்துவதும்,ஊக்குவிப்பதும் அவசியமாக இருந்தது அதற்கு ஒரு பிரசுரகளம் தேவைப்பட்டது இதன் வழியே மல்லிகை மலர்ந்தது” என தெரிவித்தார்.

“மல்லிகை 50ஆவது ஆண்டு மலரை போட்டுவிட்டே ஓய்வேன்”என்று ஓயாது உழைத்தவர். ஆனால் அவரது 85 வயதில் 2012 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக மல்லிகையை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.2012 மார்கழி தனது 401ஆவது இதழுடன் மல்லிகை மணம் நின்று போனது.

“சாதிவெறியே என்னை எழுத தூண்டியது. அடிப்படை சாதி வெறி இன்னும் அழிந்து போகவில்லை .யாழ்ப்பாண சாதிவெறி நுணுக்கமாக ஐரோப்பிய மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. என்னுடைய சுயவிமர்சனம் என் மரணத்திற்கு பின்தான் செய்யப்படவேண்டும். நான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல” இவ்வாறு இலக்கிய உரைகளில் கூறியுள்ளார். இலக்கிய மேதைகள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள் என எவரும் தொடமுடியாத உயரத்தில் ஜீவா உயர்ந்து நிற்கிறார் என்றால் ஓயாத உழைப்பும் மல்லிகையின் பயணமும் அதன் மூலம் கிடைத்த இலக்கிய செழுமையும் தான் காரணமாகும்.ஈழத்து இலக்கிய வரலாறு எழுதப்படும் போது ஜீவாவின் அத்தியாயம் அவசியம் என்பது சுட்டிக்காட்டதக்கது.

என்.கே.துரைசிங்கம்-பிரான்ஸ்

என்.கே.துரைசிங்கம்

(Visited 74 times, 1 visits today)
வ.ந.கிரிதரன்

படைப்புகளால் வழிகாட்டும் கவிஞர் கி.பி.அரவிந்தன்-கட்டுரை-துரைசிங்கம்

பல பரிமாணங்களை கொண்ட கி.பி.அரவிந்தன் ஒப்பற்ற கவிதைகளாலும்,அரசியல் கட்டுரைகளாலும்,விமர்சனத்தினாலும் ,ஈழப்போராளியாக இயங்கியமையாலும் மறைந்தும் மறையாமலும் இருக்கிறார். ஈழப்போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்தி வந்தவர் அந்த பட்டறிவு அவரை எழத வைத்தது […]