ஒரு இதழை இயக்கமாக்கியவர் டொமினிக் ஜீவா-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்- எஸ்.கே.விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன்
ஓவியம் : மூனா

எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர்,சமூக ஜனநாயக போராளி என்ற பன்முக ஆற்றல் கொண்ட  ஆளுமையும், ஓய்வொளிச்சலில்லாத செயற்பாட்டாளருமான மதிப்புக்குரிய டொமினிக் ஜீவா அவர்கள் தனது தொண்ணூற்றி மூன்றாவது வயதில் கடந்த தை 28 அன்று இயற்கையெய்தியதைத் தொடர்ந்து அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சிகளும், நினைவு கூரல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு காலச்சூழலில், அவர் பற்றிய ஒரு கட்டுரை வரைவது  இலகுவானதல்ல. ஏனென்றால் அவர் பற்றியும், அவரது நூல்கள், மல்லிகை இதழ்கள் பற்றியதுமான அனுபவங்களையொட்டி பலரும்  எழுதியும் பேசியும் வருவதாலும் அவை சமுக வலைத்தலங்களில் பரவலாகப் பதியப்படுவதாலும், அத்தகைய ஒரு கட்டுரையினை எழுதும்போது பல அம்சங்கள் ‘கூறியது கூறலாகப்’ பொதுவெளியில் வெளிவரும் போது அது வாசர்களுக்குச் சலிப்பூட்டுவதாக அமையக் கூடும். அதனால் நடு மின்னிதழுக்கென எழுதும் இந்த நினைவுக் குறிப்பை  அவர் பற்றிய எனது மனப்பதிவாக மட்டுமே சுருக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அவரை நான் இறுதியாகச் சந்தித்தது 2009 டிசம்பர் மாதம் என்று நினைவு மட்டக்குளியில் இருந்த எனது அலுவகத்திற்கு சற்றும் எதிர்பாராதவிதத்தில் வந்து அவர் என்னை ஆச்சரியப் படுத்தினார்.  வரும்போதே அவரைக் கணட நான், அவர் என்னிடம்தான் வருகிறார் என்று நினைக்கவில்லை. ஏதோ முகவரியைத் தேடி தவறுதலாக என்னிடம் வந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் தான் தவறுதலாக வரவில்லை  தெரிந்துதான் வந்தேன் என்று கூறி எனது அலுவலகத்தில் இருந்து சிறிது நேரம் என்னுடன் உரையாடினார். சரிநிகரை நீங்கள் நிற்க விட்டிருக்கக் கூடாது. மீண்டும் கொண்டுவர முயலுங்கள் என்று கூறினார். மல்லிகை ஒழுங்காக கிடைக்கிறதா எனக் கேட்டார். நான் எனக்கு தவறாமல் தபாலில் வரும் ஒரேயொரு சஞ்சிகை மல்லிகை தான் என்று அவருக்குக் கூறினேன். ஒரு பெருமிதமான சிரிப்புடன் அவர் அதை எதிர் கொண்டார்.  வழமைபோல அடுத்த ஆண்டுக்கான சந்தாவை நான் ஏற்கனவே மட்டக்குளியில் நான் முடிதிருத்தச் செல்லும் கடையில் கொடுத்துவிட்டதாகச் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டு  ‘அது தெரியும், கடைக்காரத் தம்பி சொல்லித்தான் நீங்கள் இதிலை இருப்பதாக தெரிஞ்சுகொண்டு இஞ்சை வந்தனான். உண்மையிலை நான் வந்தது உங்களுடைய படம்  ஒன்று போடுவம் அட்டைப்படமாய்  என்று நினைச்சுத்தான்’ என்று சொன்னார். ஒருவகையில் அது எனக்கு நம்பமுடியாததாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மல்லிகைக் குடும்பந்தைச் சேர்ந்த பலநூறு எழுத்தாளர்களில் நான் ஒருவன் அல்ல. அவருடன் அதிகமாக நெருங்கிப் பழகுபவனும் அல்ல. அப்படியிருந்தும் அவர் ஏன் அப்படி கேட்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை தொடர்ச்சியான சந்தாதாராக இருப்பதாலாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவருக்கு வேறு காரணம் இருந்திருக்காலாம். திரும்பவும் ‘போட்டொ’ கையில் இருக்கிரதா என்று கேட்டார். நான் ‘எனக்கு இது விருப்பமில்லாத ஒன்று மட்டுமல்ல என்னைவிட  எவ்வளவோ பெரிய ஆக்கள் வெளியிலை இன்னும் இருக்கினம், அவையளின்ரை படங்களைப் போட்டு முடியுங்கோ அதுதான் முக்கியம்’ என்று அவரிடம் சொன்னேன்.  அதுவும் சரிதான்.  ஆனால் கட்டாயம் உங்களடை படம் வரவேணும் என்று  சொல்லி விட்டு, கொஞ்ச நேரம்  இருந்து பேசினார். அவரது சுய வரலாறான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’  என்ற நூல் பற்றி ரஞ்சகுமார் ஒரு ‘முழுமை பெறாத நாவல்’ என்று சரிநிகரில் எழுதிய அறிமுகக் குறிப்புப் பற்றி சொல்லி ,ஞாபகம் இருக்கா என்று கேட்டேன். ‘எனக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கு தம்பி. அவர் சொன்னது சரிதான். அது ஒரு நாவலுக்குரிய வரலாறுதான். ஆனால் அதை நாவலாக எழுத நான் விரும்பவில்லை. ஏனெண்டால் வரலாறுதான் தான் முக்கியம்.  அது நான் வாழ்ந்த எங்கடை காலத்தின்ரையும் வரலாறு. அதை நாவலா எழுதினால் இந்தமாதிரி சொல்லியிருக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். பின்னர் தானாகவே நினைவு படுத்தி காலம் இதழில் அவருடனான சந்திப்பை நான் பதிவு செய்த பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து விடை பெற்றார். அதே வெள்ளை வேட்டி, வெள்ளை ‘நாசனல்’ கையில் மல்லிகை இதழ்கள் கொண்ட கைப்பையுடன் அவர் நடந்து சென்று வீதியால் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றேன். தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வீணாக்காமல் இயங்கிக் கொண்டே இருக்கும் அவர் எப்பேற்பட்ட ஒரு உறுதியான மனிதர் என்ற ஆச்சரியம் எப்போதும் என்னிடம் இருந்தது. யாழ்ப்பாணத் தெருக்களில் எப்படி அவர் இதே தோற்றத்தில் நடந்து திரிந்தாரோ அதே நடை அதே வேகம், அதே உறுதியான அடிகள்!, அவருக்கு நிகராக இந்தளவு உறுதிப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருந்த இன்னொருரு மனிதரை அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி நான் கண்டதில்லை!

அவருடைய கருத்துக்களுடனோ, மல்லிகையில் அவர் பிரசுரிக்கும் விடயங்களை அவர் தெரிவு செய்யும் விதத்திலோ ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர் தன் அரசியல், கருத்து முரண்பாடுகளை மீறி மனிதர்களுடன் பழகும் விதம் அபூர்வமானது.  அதில் யாரும் மாறுபட்ட  கருத்துக்களை சொல்லிவிட முடியாது. என்னுடைய ‘வேலிகள்’ என்ற சிறுகதையை எனது நண்பர்  குலசிங்கண்ணர் மல்லிகைக்குத்தான் முதலில் கொடுத்தார். ஆனால் அதன் அரசியலுக்காக அவர் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டார். பின்னர் அது புதுசு இதழில் வெளிவந்தது. ஆனால் அவர் அது பற்றி என்னுடன் பேசக்கிடைத்த சந்தர்ப்பங்களில் ஒருபோதும் பேசியதில்லை.  அது அவரது உரிமை. அவருக்கென்று ஒரு தெரிவு இருந்தது, அரசியல் இருந்தது, அதை அவர் யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் கவனமாக இருந்தார், தான் பொருத்தமானதென நம்பியவற்றையே அவர் மல்லிகையில்  வெளிக்கொண்டு வந்தார். மற்றப்பத்திரிகைகள் பற்றியோ அவற்றில் வரும் விடயங்கள் பற்றியோ அவர் வெளிப்படையான எந்த விமர்சனமும் வைத்ததில்லை. ஆனால் தீண்டாமைக்கெதிரான குரல் எழுப்புவது சம்பந்தமான விடயத்தில் மட்டும் அவர் யாரென்று பாராமல் முகத்தில் அறைந்து விடுவதுபோல் பேசக்கூடியவர். அப்படிப் பேசியும் இருக்கிறார்!

0000000000000000000000000000000

1974 என்று ஞாபகம். யாழ்ப்பானத்தில் நடந்த தமிழாராட்சி மாநாட்டில் இடம்பெற்ற  குழப்பங்கள் பற்றிய செய்திகள் இன்னமும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஏற்கனவே நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள், நாடகங்கள் என்று இருந்த வாசிப்பு ஆர்வத்துடன் அரசியல் சார்ந்த செய்திகளையும், கட்டுரைகளையும் வாசிக்கும் ஆர்வமும் சேர்ந்துகொண்டிருந்தது. அப்போது நான் போய்க்கொண்டிருந்த வாசிகசாலைக்கு செய்திப் பத்திரிகைகள் தவிர, வார, மாத இதழ்களாக சஞ்சிகைகளும் வந்துகொண்டிருந்தபோதும், வெளிவரும் எல்லாச் சஞ்சிகைகளும் அங்கு போடப்படுவதில்லை. இதனால வாசிக சாலைக்கு வராத பிற சஞ்சிகைகளை புத்தகக் கடைகளில் கண்டால் ஒரு தடவையாவது அவை எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதற்காக வாங்கி வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் தற்செயலாக புத்தகக் கடையில் தொங்கிக் கொண்டிருந்த மல்லிகை இதழை முதன் முதலாகக் கண்டு அதை வாங்கினேன். அறுபது சதமாக இருந்ததும் வாங்கியதற்கு இன்னொரு காரணம். ஏனென்றால் என்னிடமிருந்த ஒரு ரூபாயில் மிச்சமான நாற்பது சதம்  எனக்கு வீட்டுக்குப் போவதற்கான பஸ் டிக்கற்றுக்குத் தேவை! வாங்கியவுடன், புரட்டிப்பார்த்த முதல் பக்கமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதுவரை நான் வாசித்த எந்தச் சஞ்சிகைகளிலும் இல்லாத ஒரு முக்கியமான புதுமை அந்த இதழின் முதல் பக்கத்தில் இருந்தது. இதழின் சின்னமாக இருந்த மல்லிகை மலர் இருக்கும் இடத்தில் அதன் அருகாக பாரதியின் ‘ ஆடுதல் பாடுதல் சித்திரம் ஆதியனைய கலைகளில், ஈடுபட்டென்றும் இருப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்!’ என்ற வரி போடப்பட்டிருந்தத புதுமை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதழை நான் பஸ் ஏறி வீட்டுக்குப் போவதற்குள்  கிட்டத்தட்ட வாசித்து முடித்து விட்டிருந்தேன். அது, அதுவரை கால எனது வாசிப்புக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தீவிரமான விடயங்களைப் பேசும் ஒரு வாசிப்பாக அமைந்ததுடன்  ஒரு புதுமையான அனுபவத்தையும் தந்தது.

அந்த முதலாவது இதழின் பின் நான் தொடர்ச்சியாக மல்லிகை இதழ்களை வாசிப்பவனாக இருந்தேன். அது எனக்கு அதுவரை  நான் அறிந்திராத ஒரு பெருவெளியை என்னுள் கூட்டி வந்து காட்டியது.. அந்த இதழிலிருந்துதான் நான் பல முக்கியமான ஈழத்து ஆளுமைகளை, எழுத்ததாளர்களை,  அவர்களது எழுத்துக்களைப் பற்றியெல்லாம் அறியத் தொடங்கினேன். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி  கவிஞர் முருகையன் முதல் நெல்லை க பேரன் வரையான பல படைப்பாளின் பெயர்களை அறிந்தேன். அவர்களது ஆக்கங்களினூடாக இன்னும் பலரது பெயர்களை அறிந்தேன் .எம்.ஏ. நுஃமான் அவர்களது கட்டுரை ஒன்றின்  மூலமே  (மஹாகவியின் வாழ்க்கை நோக்கு என்று ஞாபகம்)  மஹாகவி என்ற பேராற்றலை தெரிந்து கொள்கிறேன். டொமினிக் ஜீவா அவர்களை நேரில் காணாமலே அவர்மீது ஒரு கவர்ச்சியையும் பெருமதிப்பையும் மல்லிகை இதழ்கள் உருவாக்கிவிட்டிருந்தன. இதன் மூலமாகவே சோவியத் இலக்கியங்களை தெரிந்துகொண்டு வாசிக்கத் தொடங்குகிறேன். இலக்கியம் என்றால் என்ன, இலக்கிய விமர்சனம் என்றால் என்ன என்பது போன்ற பலவிடயங்கள் தொடர்பாக பல கட்டுரைகளும் விவாதங்களும் அதில் நடந்தன. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் க.நா.சு பற்றி எழுதிய விமர்சனத்தொடர் என்னை க.நா.சு வை தேடி வாசிக்க வைத்தது.  கைலாசபதி அவர்களின் பிற நூல்களை வாசிக்கவும் வெங்கட் சாமிநாதன் பற்றிய எம. ஏ. நுஃமானின் கட்டுரை வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளை, குறிப்பாக அவரது மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல், பாலையும் வாழையும் ஆகிய நூல்களைத் தேடிப் படிக்க வைத்தது. பேராசிரியர் சிவத்தம்பி ளின் நூல்களை, ஏ.ஜே.கனகரத்ன அவர்களை எல்லாம் அறியவும் படிக்கவும் வழிகாட்டியது. முற்போக்கு இலக்கியம் பற்றிய உரையாடல்களில் ஆர்வமுடன் கவனம் செலுத்தவும் வழிகாட்டியது.

இந்த வாசிப்பும் அதனால் உருவான இடதுசாரிய சார்பு கருத்துருவாக்கம் என்னை அதன் அரசியலோடு கொண்டு சேர்த்தது. கோவில், கடவுள் நம்பிக்கை ,என்ற புள்ளியிலிருந்து நான் விலகத் தொடங்கியதும் அப்போது இயங்கிக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகளது கொள்கைகள் கருத்துக்களுடன் சுதந்திரனின் கருத்துக்களின் முரண்படும் இடங்கள் என்பன மேலும் மேலும் அவற்றின் மீதான தேடலை என்னிடம் வளர்த்து விட்டன. இந்த வளர்ச்சி, பின்னர் மல்லிகையின் சார்பு அரசியலை விட முன்னேறியதான அரசியல் என நான் நம்பிய தடத்துக்கு என்னை நடத்திச் சென்றுவிட்டபோதும் எனக்கு மல்லிகையை புறக்கணிக்கவோ, ஜீவாவை புறக்கணிக்கவோ முடியாது என்பதை நான் எனது ஐயா அம்மாவை  அவர்களது கருத்துக்கள் நம்பிக்கைகளிலிருந்து நான் நிறையவே விலகிவிட்டபோதும் அவர்களை மதிப்பது என்பது போலவே எடுத்தும் கொண்டேன். என்னைப்போல, எனதும் எனக்கு முந்தியதுமான பரம்பரையின் அறிவுசார் வளர்ச்சிக்கு மல்லிகைபோல் இன்னொரு இதழ் உதவியிருக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஜீவாவை எல்லாக் காலத்திலும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

எண்பதுகளின் முதலிரண்டு ஆண்டிலும் பின் நான் முற்றுமுழுதாக மல்லிகை வாசிப்பதிலிருந்து விலகிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். இந்தக் காலத்தில் தான் எனது மேற்சொன்ன சிறுகதைப் பிரச்சினையும் வந்தது. ஆனால் மீண்டும் 90 களில் மல்லிகையை வாசிக்கத் திரும்பிவிட்ட போதும் இந்தக் காலங்களில் அது எனக்கு அதிகமாக எதையும் கற்றுத்தரவில்லையாயினும் இளம் தலைமுறையினர் தம்மை தாமே சுயபரிசோதனை செய்துகொள்ள அது உதவியாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

0000000000000000000000000000000

டொமினிக் ஜீவா ஒரு சிறுகதை எழுத்தாளராக, எனது ஆரம்பகால வாசிப்பின் போது என்னை மிகவும் கவர்ந்தவர். அவரது பாதுகை, தண்ணீரும் கண்ணீரும் (இதற்கு அவருக்கு இலங்கையின் முதலாவது சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது) சாலையின் திருப்பம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்கள் அக்காலத்தில் என்னை மிகவும் ஆட்கொண்டிருந்தன. பின்னாளில் அவர் எழுதிய எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத் தாளினூடாக ஒரு அனுபவப் பயணம் என்ற அவரது நூல்களும் என்னை மிகவும் ஆகர்சித்த நூல்கள். இதற்கான முக்கியமான காரணம் அந்த நூல்கள் ஒரு தனி மனிதரின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. எமது சமூகத்தின் அதுவரை பதிவுசெய்யப்படாத ஒரு வரலாற்றையும் பதிவுசெய்திருந்தன என்பதும்தான்.

இவையெல்லாம் எவ்வளவு முக்கியமானவை என்றபோதும், இவை அனைத்தையும் மேவி என்னை பெருமளவுக்கு ஆகர்சித்தது அவரது ஒரு இதழியலாளர் என்ற ஆளுமை என்றே சொல்வேன். அவர் அந்த இதழை தொடர்ந்து நடத்துவதற்காக தனது வாழ்நாளின் எல்லாச் சந்தோசங்களையும் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளினார். மல்லிகையை  நடத்துவதையே தனது பிரதான சந்தோசமாகக் கருதினார். அதற்காக அவர் எத்தகைய விட்டுக் கொடுப்புக்களையும் நெருக்கடிகளையும் எதிர் கொள்ளத் தரயாராக இருந்தார். தனது மனைவி,பிள்ளைகள், குடும்பம் என்று எல்லாமே கூட அவருக்கு மல்லிகைக்குப் பின் தான். அதற்காக அவர் எந்த விலையையும் கொடுக்கவும் தயாராக இருந்தார்.

2005-ம் ஆண்டளவில், கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழுக்காக அதன் ஆசிரியரும் நண்பருமான செல்வம் அண்ணையின் கோரிக்கையின் பேரில் அவருடனான ஒரு நீண்ட உரையாடலைச் செய்திருந்தேன். அவர் மனம்திறந்து பேசும் விதம் காரணமாக அதை ஒரு நேர்காணல் அல்லாது உரையாடலாகவே பதிவு செய்திருந்தேன். உண்மையில் அது உரையாடலும் கூட அல்ல. அவரே மனம் திறந்து எல்லாவற்றையும் பற்றிப் பேசியதன் ஒரு பதிவுதான் என்றே சொல்ல வேண்டும். அவருடன் நடந்த உரையாடலைப் எழுத்தில் பதிவு செய்த பிரதியை அவரிடம் காண்பித்துவிட்டு காலம் இதழுக்கு அனுப்பிவைத்தேன். அன்று அவர் தெரிவித்த  கருத்துக்களை அவரது உறுதியான அதே தொனியுடன் அவர் வாய்மொழியிலேயே பதிவுசெய்வதையே இப்போது பார்க்கும் போது அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கிறது என்ற திருப்தியை இப்போது உணர்கிறேன். அதையே அவரும் விரும்பினார் என்பதும் உண்மைதான்.  மல்லிகை தொடர்பாக அவர் அந்த உரையாடலின் போது இப்படிச் சொல்கிறார்:

“மல்லிகையின் முதலாவது இதழ் யாழ்ப்பாணத்தில் – ஒரு சலூனில் இருந்து, அந்தச் சலூனில் சவரத் தொழிலாளியாக வேலை செய்த ஒருவனை ஆசிரியராகக் கொண்டு – வெளிவரத் தொடங்கியது. இருபது சதம் ஒரு பிரதியின் விலை. என்னைப் பொறுத்தவரையில் மல்லிகை ஒரு வெறும் பத்திரிகையாகத் தோன்றியதாக நான் கருதவில்லை பல்வேறு கருத்துக்கள், பல்வேறு முரண்பாடுகள், பல்வேறு எண்ணங்களின் தொகுப்பாகத்தான் மல்லிகை தோன்றியது. அன்றைய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொண்டிருந்தாலும், மல்லிகை முழுக்க முழுக்க அப்படியே இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்க விமர்சகர்களாக இருந்த கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மகாகவியை அங்கீகரிக்காத போதும், நான் அவரது படத்தை அப்போதே மல்லிகையின் அட்டைப் படமாகப் பிரசுரித்தேன். கொழும்புக்குச் சென்று, அவரைக் கண்டு அவரது படத்தை வாங்கி வந்து பிரசுரித்தேன்; இது வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவம். எனக்கு ஒரு உறுதியான கருத்து இருந்தாலும் கூட முழு தேசத்திலும் உள்ள ஆரோக்கியமான கருத்துக்களையும் மல்லிகையில் பிரசுரிக்க வேண்டுமென்று நான் கருதினேன். உண்மையில் சொல்வதென்றால், நான் எனது சுயகருத்துக்குள் ஆட்பட்டு இருந்திருப்பேன் என்றால் என்னால் இவ்வளவு காலத்திற்கு மல்லிகையைக் கொண்டு வந்திருக்க முடியாது!

கூடவே அவர் இந்த இடத்தில் தன்னைப் பற்றியும் அது மல்லிகையின் தொடர்ச்சிக்கும் எப்படிக் காரணமாக இருந்தது என்பதையும் விளக்குகிறார். தான் ஒரு மண்புழுவாக இருந்து மனிதனாக வந்தவன் என்று சொல்லும் பெருமிதம் அவரது உறுதிக்கு ஒரு நல்ல சான்று:

“இன்னொன்றையும் சொல்லவேண்டும். நான் சாதாரணமாக மனிதனாக உருவெடுக்கவில்லை. மண்புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்தவன். ஒவ்வொரு வளர்ச்சிக்கும் எவ்வளளவோ விலை கொடுத்து மேலே வந்தவன். அந்தப் பதினெட்டு வயசில் இருந்த இலட்சிய வேகத்தில் நான் எடுத்த முடிவு, இலட்சிய உறுதி இன்றுவரை என்னுள் நின்று என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை. உண்மையில் நான் அதற்காக எதையும் செய்யவில்லை. ஒரு நல்ல கணவனாக , நல்ல தந்தையாக நான் இருந்ததில்லை. இயக்கம்,எழுத்து,பத்திரிகை என்ற வேகம் மட்டுமே என்னை முழுதாக ஆட்கொண்டிருந்தது. இதுதான் நான் உலகெங்கிலும் இல்லாதஒரு புதுமையைச் செய்ய எனக்கு அடிப்படையாக இருந்தது.”

மல்லிகை இதழின் வெற்றிகரமான சந்தைப்படுத்தலுக்கு காரணமாகவிருந்த ஒரு சம்பவத்தை அவர் சுவாரசியமாகச் சொல்வார். அது ”பெரியார் காட்டிய வழி’ என்று பெருமையுடன் அதை இந்த உரையாடலின் போது தெரிவித்தார். பெரியார் மலேசியா வந்திருந்த போது, அவரைச் சந்திக்கச் சென்ற இரு நண்பர்களிடம் பெரியார் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அவர்கள் சற்றுச் சங்கடத்துடன், தாங்கள் ஒரு முடிதிருத்தும் நிலையம் வைத்து நடாத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் ஆச்சரியப்படும்படியாக பெரியார், மிகுந்த சந்தோசத்துடன் தனது குடியரசு பத்திரிகை தமிழ்நாடு முழுவதும் பரவலாகுவதற்கு சிகை அலங்கார நிலையங்களே பெருமளவு உதவி செய்துகொண்டிருக்கின்றன என்று தெரிவித்தாராம். இந்த இருவரில் ஒருவர் டொமினிக் ஜீவாவின் நண்பர். அவர் இந்தக் கதையை அவருக்குச் சொன்னதும் ஜீவா அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். மல்லிகை வெற்றிகரமாகப் பரவலாகுவதுவதில் இந்த சிகை அலங்கார நிலையங்களின் பங்களிப்பு மிகப் பெரிது என்று ஒருவகைப் பெருமிதத்துடன் என்னிடம் தெரிவித்தார்.

மல்லிகை இதழை அவர் வெறுமனே ஒரு மாதாந்த இதழாக மட்டும் கருதவில்லை. மாறாக அதை ஒரு பெரு விருட்சமாக வளர்க்க விரும்பினார். மல்லிகைக் காரியாலயம், ஒரு சந்திப்பு மையமாக,எழுத்தாளர்கள் வந்திருந்து இலக்கிய உரையாடல் செய்யும் களமாகவும் அமைய வேண்டும் என்று விரும்பினார். இதுவே அவரது பெரும் பலமாகவும் இருந்தது என்று சொல்ல வேண்டும். இதுபற்றிய உரையாடல் வரும் போது அவர் இவ்வாறு கூறுகின்றார்:

“கொழும்பிலை இருந்தோ, பிற பிரதேசங்களிலை இருந்ததோ யாழ்ப்பாணம் வாற எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கிற சந்திப்பு மையமாக மல்லிகைக் காரியாலயம் இருந்து வந்தது. ஜீவாட்டை வந்திடுங்கோ சந்திப்பம் எண்டு சொன்னால் சரி. இது எனக்கு ஒரு வளமான இலக்கிய வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை நானும் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். எங்கடை நோக்கம் நானும் ஒரு எழுத்தாளனாக பலர் மத்தியிலும் பேசப்பட வேணும் எண்டதல்ல. அப்படி நான் ஒரு காலமும் நினைக்கயில்லை. மல்லிகையூடாக நிறைய எழுத்தாளார்கள் உருவாக வேண்டும். எழுத்துக்கள் வர வேண்டும் எண்டுதான் நான் விரும்பினேன். இப்ப திரும்பிப் பார்க்கிறேன். எங்கடை சாதனை மிகப் பெரிசு எண்டு தெரிகிறது. இப்ப கிட்டடியில் நடந்த – பண்டாரநாயக்கர் ஞாபகார்ந்த மண்டபத்தில் நடந்த – புத்தகக் கண்காட்சி விழாவிலே பார்க்கேக்கை நாங்கள் நினைச்சுப் பார்க்க முடியாத பல இடங்களில் இருந்து நிறையப் புத்தகங்கள் வெளிவந்திருக்கிறன.

0000000000000000000000000000000

அவர் எழுதத் தொடங்கிய காலம் சாதிக் கொடுமைகள் மிகவும் மோசமாக இருந்த காலம். தீண்டாமைக்கெதிரான போராட்டத்தின் வெற்றி  ஏற்படுத்திய நம்பிக்கையும் உறுதியும் அவரை மேலும் தீவிரமாக இயங்க வைக்கிறது. தாம் ஒரு இலக்கிய இயக்கமாக வளர்ந்திருப்பதாக பெருமையுடன் சொல்கிறார். ஒரு இலக்கிய இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று சாகித்திய விழா எடுக்க முயன்ற ஒரு கூட்டத்தில் முட்டை எறிந்த ஒரு சம்பவம் பற்றி விளக்குகையில் அதை தெளிவாக முன்வைக்கிறார்:

“ஒரு இலக்கிய இயக்கத்தை இந்தத் தேசத்திலை கட்டியெழுப்ப வேணும் என்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலை நடாத்தப்பட்ட சாகித்திய விழாவிலை முட்டை அடிச்ச விஷயம் பற்றி இப்பவும் பேசப்படுகிறது. முட்டை அடிச்சவங்கள் முட்டையடிச்சவங்கள் என்று சொல்லுகிறார்கள். முட்டை அடிக்கிறது என்ற திட்டம் உண்மையில திட்டம் போட்டு நடந்த ஒன்றல்ல ஆனால் இந்த நிகழ்வுக்கரிய ஒரு நிலைமை அங்கு உருவாகியிருந்தமையை மறுக்க முடியாது. சரி பிழைகளுக்கு அப்பால் முட்டை எறியுமளவான மனோநிலயை, உணர்வு நிலையை, உயர்சாதிப் பண்டிதர்கள் உருவாக்கியிருந்தார்கள். இழிசார் இலக்கியத்தால் தமிழ் குட்டிச்சுவராகிறது என்று அவர்கள் பேசினார்கள். சாதி ஒடுக்குமுறையின் பல உச்சமான கொடுமைகளை அனுபவிச்ச எங்கடை சமூகத்தின் ஒரு எதிர்ப்புணர்வுதான் அது. கண்ட கண்ட சாதியர் எல்லாம் எழுத வந்துட்டுதுகள் எண்டு சொல்லாமல் சொல்லி வந்தார்கள். இந்த அயோக்கியத்தனங்களுக்கு முன்னால் முட்டை எறிந்த சம்பவம் ஒண்டும் பெரிய சம்பவம் அல்ல.

எங்கடை பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதை அவர்கள் தீர்மானித்தார்கள். கந்தசாமி என்று வைக்கச் சொன்னால் ‘கந்தன்’ என்று எழுதினார்கள். எங்களது பிள்ளையள் படிக்கிறததென்டால், ஏன் படிப்பிக்கிறாய் தொழிலைப் பழக்கு உனக்கு உதவியாய் இருக்கும் எண்டு பெரிய அக்கறையாக ஆலோசனை சொல்வார்கள். அவர்களுக்கு முடி சிரைக்க ஒரு பரம்பரையையே வைத்திருப்பதற்காகச் செயற்பட்டார்கள். இப்படி எத்தனையோ. முட்டையடி என்பது ஒரு குறியீடு மட்டுமே. அது இன்று மட்டும் எங்கடை எதிரிகளாலை சொல்லப்படுகிறது எண்டால் அதிலே ஒரு கூர்மையான உண்மை இருந்திருக்குது என்பது காரணம். இப்படி எத்தனையோ சொல்லலாம். எனக்கு சாகித்திய அக்கடமி பரிசு கிடைக்கேக்க ‘நாவிதனுக்குப் பரிசு’ கிடைத்திருக்கு என்று நையாண்டி செய்யவில்லையா ஒரு யாழ்ப்பாணத்து பண்டிதச்சட்டம்பி ?. உண்மையில் இந்தப் போராடடங்களினூடாக தேசத்தின் இலக்கிய இயக்கம் நன்கு பலமாக வளர்ந்து வந்தது. நாங்கள் சாதியின் பேராலை நடந்த கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கிய போதுதான் எமது எழுத்துக்கள் ‘இழிசன இலக்கியம்’ என்று பழிக்கப்பட்டன. அவர்கள் செய்தவைகளை யாரும் கேள்வி கேட்கவில்லை. சுந்தரலிங்கம் – பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு பெரிய கல்விமான். அமைச்சரவையிலை எவ்வளவு ஒரு முக்கியமான ஆள். கழிசடைமாதிரி, ரவுடிமாதிரி போய் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு மாவிட்டபுரத்திலை ஆலயப் பிரவேசப் போராட்டத்தில எதிர்த்து நிக்கேல்லையா? இதையேன் கேட்கவில்லை. முட்டை அடி பற்றி மட்டும் இண்டைக்கும் பேசுகிறார்கள். உண்மையில் தென்னிந்திய பிராமணன் செய்ததை விட யாழ்ப்பாணத்து வெள்ளாளன் செய்த அநியாயம் மிகப்பெரியது. அந்தக் கொடுமைகளை எதிர்த்து எங்களுக்குள்ளே எரியிற நெருப்புதான் மல்லிகையை நாற்பது ஆண்டுகளாக நிலைக்க வைச்சிருக்கு. உண்மையில் எங்களிடம் எந்தக் கெட்டித்தனமும் இருக்கவில்லை. சாதிய ஒடுக்குமுறை எங்களை கெட்டித்தனமாக்கியிருக்கிறது. ஒரு இலக்கிய இயக்கம் வளரக் காரணமாக இருந்திருக்கிறது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். யாழ்ப்பாணத்திமிர். யாழ்ப்பாணத்தான் பெரிய படிப்பாளி அவனுக்குத்தான் இலக்கியம், தெரியும் இலக்கணம் தெரியும், என்ற திமிர் எப்படி யாழ்ப்பாணத்துக்குள்ள எங்கட சமூகத்தை ஒடுக்கி வைத்தானோ அப்படித்தான் மட்டக்களப்பானை, திருகோணமலையானை, மலையகத்தானை எல்லாம் ஒதுக்கி வைக்கிற போக்கு அங்கு இருந்தது. அண்டைக்கு அப்படி ஒதுக்கி ஒதுக்கி வைத்ததின்ரை வெளிப்பாடுதான் இண்டைக்கு நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அனுபவத்திலிருந்து நாங்கள் படிச்சிட்டம் என்னவென்டால் நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் எண்டது. நாங்கள் வெளியேறினோம். மட்டக்களப்பு, மலையகம், திருகோணமலை முஸ்லீம் என்ற பாகுபாடின்றி எல்லாப் பிரதேசங்களின் இலக்கியத்தையும் நாம் உள்வாங்கி ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்துகிறோம். “

ஆயினும், ஒரு சமூகப் போராளியாக எழுத்தாளராக அவரது ஈடுபாட்டை விடவும் பெரிதும் மல்லிகையே அவரை அவரை  ஆட்கொண்டிருந்தது என்பதை அவரே எந்த ஆதங்கமிமின்றி வெளிப்படையாகச்  சொல்வார்:

“மல்லிகைதான் என்னுடைய எல்லாம். நான் முன்னால சொன்னது போல நான் ஒரு நல்ல கணவனாகவோ, தந்தையாகவோ இருக்கவில்லை. எனது மாமா மகளைத்தான் எனக்கு மணம் பேசி வந்தார்கள். நான் அப்பவே சொன்னனான். எனது மனைவிக்கு என்னை முடிக்காதை எண்டு. நீ மனதிலை வைச்சிருக்கிற அத்தனை கனவையும் நான் நாசமாக்குவன். உன்னைப் படத்துக்குக் கூட்டிக் கொண்டு போகவோ, ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போகவோ நான் வரமாட்டன் எண்டு நான் அப்பவே சொன்னனான். சத்தியமாய்சொல்லிறன் இராப் 12 மணிக்குத்தான் வருவன். சிலவேளை வராமலும் விடுவன். நீ விளக்கைக் கொழுத்தி வைச்சு விட்டு காவல் இருக்க வேண்டி வரும். மற்றது என்ர சினேகிதங்களெல்லாம் என்னைப் போலவே வக்கறுந்ததுகள். ஒருதரும் உருப்படியாய் இருக்கமாட்டனுங்கள். ஆனால் ஒண்டு நான் சொல்லுறன், நான் மனிதனாக இருப்பன். துன்புறுத்தமாட்டன், அடிக்கமாட்டன், பெண்மையை கேவலப்படுத்த மாட்டன், ஒரு நல்ல மனிதனாக இருப்பன். இதையெல்லாம் சொல்லுகிறான் ஏனென்றால் என்னை முடிக்காதை எண்டு சொல்லத்தான் எண்டு எல்லாம் சொன்னனான். அம்மாவுக்கும் சொன்னான். உன்ர அண்ணனுக்காக அவன்ரை மகளை நாசமாக்கப் போறாய் எண்டு சொன்னனான். உன்ரை சொந்த மருமோளை ஏன் இப்படி நாசமாக்கிறாய் மற்ற சகோதரங்களுக்கு முடிச்சுக்குடன் எண்டும் சொன்னனான். ஏனென்டால் எனக்குத் தெரியும் நான் ஒரு நல்ல கணவனாகவோ அப்பனாகவோ இருக்க மாட்டேன் என்று. அப்பவே நல்லாத் தெரியும். அண்டைக்கு இருந்த இலக்கியத் திமிர் என்னை அப்படிச் சொல்ல வைத்தது. ஏனென்டால் எந்த ஆதரவும் இல்லாமல் தட்டிக் கொடுக்க யாரும் இல்லாமல் வளர்ந்தனாங்கள். என்னுடைய படைப்புத் திமிரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எளிமையாக இருக்கிறது. இயல்பாக இருக்கிறது வேறை, என்னர படைப்புத்திமிரை யாருக்காகவும் எந்த கொம்பாதி கொம்பனுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் அன்றைக்கு யாரும் கொடுக்காத விலையை நான் கொடுத்து வந்தனான். நீ குடும்பப் பின்னணியால், வந்திருப்பாய்; நீ கல்வியால் வந்திருப்பாய்; நீ சாதியால் வந்திருப்பாய்; நீ பெரும்பான்மையால் வந்திருப்பாய். ஆனால் நான் ஒண்டுமில்லை. பிறந்திருக்கிறன். எதுவுமில்லாமல் மேலே வந்தவன். இதுதான் என்னை அப்படிப் பேசவைத்தது. இண்டைவரைக்கும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.”

அவருடனான உரையாடலின் காலத்தில் தலித் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அதுபற்றிய அவரது கருத்துக்களையும் இவ்விடத்தில் சேர்த்துக் கொள்வது பொருத்தம் என்று கருதுகிறேன்:

“தலித் இலக்கியத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தலித்துக்கள் தாங்கள் தங்களது பிரச்சினையை எழுதிய முறை, பச்சையாகச் சொன்னால் நானும் டானியலும் இலங்கையில் கையாண்ட முறை. மற்றையது தலித் அல்லாதவர்களால் எழுதப்படுவது. தலித் இலக்கியம் தலித்துக்ளால்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் அல்ல. எங்களை உருவாக்கினதுகூட தலித்துக்கள் அல்ல. எங்களிடம் சிந்தனையை தந்ததும், பின்னணியாக நின்றதும் தலித் அல்லாதவர்களே. பச்சையாகச் சொல்லப்போனால் இலங்கையிலிருக்கிற மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த இடது சாரிகள் தான் எம்மை இப்படிச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

தலித் இலக்கியம் தலித் இலக்கியம் என்று ஒரு காலகட்டம் வரைக்கும்தான் சொல்ல முடியும். அதற்கு மேலை சொல்ல எதுவும் இருக்க முடியாது. தலித் இலக்கிய போராட்ட அம்சங்கள் இருக்கலாம். வெறும் தலித் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஏனெண்டால் இண்டைக்கு சமூகம் விரிந்துகொண்டு வருகிறது. கல்விக்களம் விரிவடைகிறது. அரசியல் போராட்டம் விரிவடைகிறது. அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவும் தலித்துக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தலித் இயக்கத்திற்கும் இங்கத்தைய நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கை தலித்துக்கள் மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள். முழுத் தமிழ் நாட்டிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை விட்டால் மற்றைய பிரதேசங்களில் தலித் பிரச்சினை அவ்வளவாகக் கூர்மையடைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இது மிக மோசமாக உள்ளது. ஆக தமிழ் நாட்டான் தலித்தியத்தை அணுகுவதற்கும் நாங்கள் அணுகுவதற்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு.

தவிரவும் இப்பதான் தலித்திலக்கியம் எண்ட ஒண்டு வந்து கொண்டிருக்கின்றது. ஏன் இது கல்கி காலத்தில் வரவில்லையா? அகிலன் காலத்தில் வரவில்லையா? ரகுநாதன் காலத்தில் வரவில்லையா? அப்போது அந்த மக்களின் குரல்கள் வெளிவர முடியாத அளவுக்கு அவர்கள் மண்புழுக்களாக இருந்தார்கள். இப்போது அது வெளிவருகிறது. தலித் இலக்கியத்தில் இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆரோக்கியமான அம்சம் அதாவது விடுதலை. மற்றது “நாங்கள் விடுதலை” முதல் விடுதலை மானிட குலத்தோடு சேர்ந்தது நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற சிந்தனை. மற்றையது நாம் மட்டும் விடுதலை பெற்றால் போதும் என்கிற விடுதலை. இரண்டாவது போக்கின் காரணமாகத் தான் இன்றைய தலித்தியக்கத்தின் போக்கு மோசமாகி விடுகிறது. இலங்கையில் அந்த உணர்வு இல்லை. இந்தியாவில் அது வெறும் தலித் விடுதலை பற்றியே பேசுகிறது. முழு இந்தியாவுக்குமான தலித்துக்கள் பற்றிப் பேசுகிறது. எனவே அது முழு இந்திய விடுதலைக்கான போராட்டத்துடன் இணைந்து நடக்க வேண்டும்; அனைத்து நேசசக்தியையும் இணைத்து நடக்க வேண்டும். ஈழத்தில் உள்ளது ஒரு பிரதேசம் சார்ந்த ஒடுக்கு முறையே. இலக்கை அரசில் சாதிய ஒடுக்குமுறை அம்சம் பெரிய ஒன்றாக இல்லை. ஆனால் இந்திய அரசில் அது அடிப்படையாக உள்ளது. அங்குள்ள தலித்துக்கள் இந்தியாவின் விடுதலையையும் சேர்த்து யோசிக்க வேண்டும். அப்பதான் அது வெற்றிபெறும் அல்லது தலித்துக்கள் தனிமைப்பட்டுப் போவார்கள்.

இறுதியாக இன்னொரு விடயம்பறிய அவரது கருத்தையும் சொல்லி முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஐரோப்பிய வாசகர்கள் பற்றிய அவரது கருத்துத் தான் அது. இது காலம் இதழின் வாசகர்கள் பற்றி அவர் சொன்னது தானென்றாலும் அது இன்றும் பொருந்துமா என்று பார்க்கப்பட வேண்டியுள்ளது. அவர் சொல்கிறார்:

“இண்டைக்கு ஐரோப்பாவில் (இதை அவர் புலம்பெயர் நாடுகள் என்ற அர்த்தத்திலேயே சொன்னார்) உள்ள காலம் வாசகர்களும் ஈழத்து வாசகர்கள் தான் அவையளுக்கு மல்லிகை புதுசல்ல. அடுத்த தலைமுறை இன்னும் வரவில்லை. அந்தத் தலைமுறை வரும்போது அது புதிய தேடல், சிந்தனைகளுடன் வரும். இப்ப உள்ள வாசகர்கள் இங்கிருந்து போனவர்கள்தான். ஆனால் ஒண்டைச் சொல்ல வேணும். ஐரோப்பிய தமிழ் வாசகர்கள் இந்தியப் படைப்புகட்கு கொடுக்கும் ஆதரவையும் இலக்கிய அந்தஸ்தையும் எங்கள் நாட்டுப் படைப்புகளுக்கு கொடுக்க பஞ்சிப்படுகினம். அது என்ன காரணம் எண்டு தெரியவில்லை. அதுக்கு காரணம் அவர்களது விளம்பரமோ என்னவோ, ஆனால் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை. எனக்குத் தெரியவில்லை. இது ஈழத்தவர்களுக்கு தற்காலிகமாக திருப்தியாக அல்லது லாபமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது அவ்வளவாக நல்லது என்று நான் நினைக்கேல்லை.”

0000000000000000000000000000000

ஒரு ஓர்மம் வாய்ந்த இதழாசிரியராக டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை, சமூக அக்கறையுடனான இதழியலில் கவனத்துக்குரிய ஒரு உதாரணமாகும் என்று நினைக்கிறேன், அவரது அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய நோக்குகள், செயற்பாடுகளில் மாற்றுக் கருத்துகளுக்கு  இடமிருப்பினும் கூட அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் புறக்கணிக்க முடியாத பெரும் முன்னுதாரணங்கள். அவரது இறப்பு வயது முயற்சியாலும், அதனால் ஏற்பட்ட உடற்தழற்சியாலும் இயல்பாக நடந்த ஒன்றாயினும், கொழும்பு வைத்திய சாலையில் அவருடைய உடலுக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்ததாக அறிவிக்கப்பட்டு அவசரமாக அரச செலவில் தகனம் செய்யப்பட்டதில் நியாயமான சந்தேகம் எளவே செய்கிறது. அவரும் அவரது மகனும் விரும்பியபடி அவரது பிறந்த ஊரான யாழ்ப்பாணத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய முடியாமற்போனது மட்டுமல்லாமல், அவரது உறவினர்கள்,பிள்ளைகள், நண்பர்கள் நேரில் வந்து அஞ்சலி செய்யமுடியாமலும் போனது மிகவும் வருத்தத்துக்குரியது.

மல்லிகையை ஒரு இயக்கமாகவே வளர்த்தவர் அவர். அது அவர்கண் முன்னே வளர்த்து விருட்சமாவதைப் பார்த்தவர். அது ஒன்றே அவர் வாழ்நாள் இலட்சியமாகவும் இருந்தது, அது எல்லோர்க்கும் கிடைத்தல் அரிது. சமகாலத்தில் அவர்போல மனம் நிறைந்த வாழ்வை வாழ்ந்தவர்களைக் காண்பது அரிது. அவரது மறைவு ஒரு பழுத்த இலையின் முழுமையுடனான இயல்பான விலகல் போன்று அமைதியானது, மனம் நிறைந்த திருப்தியுடனானது.  டொமினிக் ஜீவா அவர்களுக்கு என் மனம் நிறைந்த அஞ்சலிகள்!.

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன்

 

 

 

 

 

(Visited 198 times, 1 visits today)
எஸ்.கே.விக்னேஸ்வரன்

‘நான் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் எவ்வளவோ விலை கொடுத்து மேலே வந்தவன்’ -டொமினிக் ஜீவா-கலந்துரையாடல்- எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஆரம்பம் அப்போது எங்களுக்கெல்லாம் – எல்லா எழுத்தாளர்களுக்கும் – களமாக அமைந்தது சுதந்திரன் பத்திரிகைதான். சுதந்திரன் ஒரு தமிழரசுக் கட்சியின் பத்திரிகை என்றாலும் கூட அது எங்களைப் போன்ற எழுத்தாளர்களை […]