ஈழ இலக்கியத்தில் டொமினிக் ஜீவாவின் இடம் : கதைகளின் வழியே ஒரு விவாதம் -டொமினிக் ஜீவா நினைவுக்கு குறிப்புகள்-ஜிஃப்ரி ஹாசன்

 ஜிஃப்ரி
ஓவியம் : நளீம்

ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் வரிசையில் டொமினிக் ஜீவா மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அதாவது 1950 களில் எழுதத் தொடங்கியவர். 1930 களில்தான் ஈழத்தில் சிறுகதை முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1940களில் இரண்டாவது தலைமுறை எழுத வந்தது. ஈழ இலக்கியம் தன் முகத்தை முழுமையான முற்போக்கு முகமாக மாற்றிக் கொள்ளத் தொடங்கிய கால கட்டம் டொமினிக் ஜீவாவின் தொடக்கமாக அமைந்தது. அந்த வகையில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவராக அவரைக் கருத முடியும். அப்போது மார்க்ஸிச சித்தாந்தம் இங்குள்ள ‘படித்த வர்க்கத்தினரிடையே’ அறிமுகமாகி பரவலான ஏற்பையும் பெற்றுக் கொண்டிருந்தது. இலங்கைப் பல்கலைக்கழகங்களிலுள்ள அறிவுஜீவிகளில் பலரும் மார்க்ஸியர்களாகவே மாறி இருந்தனர்.

ஈழ இலக்கியத்தை அப்போது பல்கலைக்கழக அறிவுஜீவிகள் அணிதான் வழிநடாத்தத் தொடங்கி இருந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை படைப்புகளுக்கூடாக ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குள் கொண்டு செல்வதற்கான திட்டம் பல்கலைக்கழக மார்க்ஸியர்களுக்கு இருந்திருக்கலாம். இலக்கியத்தின் மூலம் அவர்கள் நிகழ்த்த எதிர்பார்க்கப்பட்ட அந்தப் புரட்சி பெரியளவில் வெற்றி பெறவில்லை. சாதாரண மக்களை அரசியல் இயக்கமாக மாற்றுமளவுக்கு அது அவர்களைச் சென்றடையவில்லை.

பல்கலைக்கழக விமர்சன அணி வகுத்த பாதையில் மார்க்ஸிசத்தைக் கோட்பாட்டு ரீதியாக கற்றுப் புரிந்து கொள்ளாமலே படைப்பாளிகள் பயணித்தனர். அது வட்டங்களாலும் சதுரங்களாலும் மூடப்பட்ட பாதையாக இருந்தது. அதிலிருந்து எஸ்.பொ. போன்ற வெகுசிலரே பின்னர் விலகிச் சென்று வேறொரு பாதையை இட்டனர்.

இலக்கியத் தரம்மிக்க ஆழமான புனைவுகள் இக்காலப்பகுதியில் முற்போக்கு வட்டத்திலிருந்து மிகச் சொற்பமாகவே கிடைத்தன. அதேநேரம், பொதுவாகத் தமிழிலேயே இக்கால கட்ட சிறுகதைகள் ஆழமான புனைவுத் தன்மையற்றவையாகவே இருந்தன. ஈழத் தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்க காலகட்டமாகவே அதனைப் பார்க்க வேண்டும். தமிழகத்திலிருந்து மணிக்கொடி போன்ற சிற்றிதழ்களின் வருகையினூடாகவே இலங்கைப் படைப்பாளிகளுக்கு சிறுகதைகள் பரிச்சயமாகின. தமிழுக்கே புதிதாக அறிமுகமான துறையில் ஈழத்துப்படைப்பாளிகளுக்கு மிகுந்த கலை நேர்த்தியான, ஆழ்புனைவுத் தன்மையுடன் மனித வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் அணுகுவதற்கான ஆற்றல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் பின்னணியில்தான் ஜீவாவின் கதைகளையும் பார்க்க வேண்டியுள்ளது.

முற்போக்கு இலக்கியம் இங்கு காலூன்றுவதற்கு முன்னர் பெரும்பாலும் ஈழத்து இலக்கியம் மதம், இதிகாசம் மற்றும் புராணக் கருத்தியலைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது. அந்த வகையில் 1950களில் நிகழ்ந்த இந்த சடுதியான மாற்றம் ஈழ இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலாகவே அமைந்தது. அந்த தளத்திலிருந்து ஈழத்துப் புனைவுலகை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்ற மூன்றாம் தலைமுறைப் படைப்பாளிகளுள் ஒருவராக டொமினிக் ஜீவாவைக் குறிப்பிடலாம். இந்தவகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது. கதையின் இலக்கியத் தரத்துக்கு அப்பால் அதனை மக்களுக்கு நெருக்கமாக மக்களின் அன்றாட வாழ்க்கையை பதிவுசெய்த அணியில் அவர் இருந்தார். தான் கண்ட அனுபவித்த சமூக அவலங்கள் ஏற்றத்தாழ்வுகள் மீதான கோபம்தான் அவரை எதையாவது செய்யத்தூண்டியது. அதற்கு எழுத்தைத் தேர்வு செய்தார். இதனால்தான் அவர் எழுதத் தொடங்கிய ஆரம்பத்தில் தன் பெயரை புரட்சி மோகன் என சூடிக்கொண்டார்.

டொமினிக் ஜீவா உள்ளிட்ட பெருந்தொகையான படைப்பாளிகள் முற்போக்குப் பாதையைத் தெரிவுசெய்து தொடர்ந்து பயணித்தனர். ஜீவா அந்தக் கருத்தியலில் உறுதியாக இருந்து அந்தப் பாதையிலேயே பயணித்ததற்கு அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையும் அதற்கெதிரான அவரது கலக மனமும் ஒரு காரணமாக அமைந்தது. சாதி அடிப்படையில் அவர் சமூக அடுக்கமைவில் அடித்தளத்தைச் சேர்ந்தவர். முடிதிருத்தும் சாதியத் தொழில் அவருடையது. எனவே சாதிய அடக்குமுறையின் விளைவாக தனிப்பட்ட வாழ்க்கை மீதான புறக்கணிப்புகளை, அவமானங்களை, காயங்களை யாழ்ப்பாண சமூக சூழலில் அவர் கடுமையாக அனுபவித்திருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் தனது சுயசரிதையான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற நூலில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.

தவிர, முற்போக்குக் குரலை இலக்கியத்தில் அழுத்தமாக ஒலிக்க விடுவதன் மூலமே ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை மாற்றி சமத்துவத்தை நிலைநிறுத்த முடியும் என்று அவர் தனிப்பட்ட வகையிலும் கருதி இருக்க முடியும். அதேநேரம் ஈழத்தின் முதுபெரும் விமர்சகர்கள் முற்போக்கு இலக்கியத்தையே இலக்கியமாக முன்வைத்துக் கொண்டிருந்தனர். மார்க்ஸிசக் கருத்தியலைப் பேசும் படைப்புகளே முற்போக்கு இலக்கியம் எனும் கருத்து அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான கோட்பாட்டு அறிமுகங்களும் முன்வைக்கப்பட்டதோடு படைப்பாளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மறுப்பு ஆகியனவும் அவர்களது படைப்புகளின் உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. அதாவது அந்தப் படைப்பு முற்போக்குத் தன்மையானதா இல்லையா? என்பதை அடிப்படையாகக் கொண்டு. புனைவுத் திறன் இல்லாவிட்டாலுங் கூட முற்போக்குப் படைப்பாளி என்றால் அவருக்கு அங்கீகாரம் இலகுவில் கிடைத்துவிடும் சூழல்தான் அன்றிருந்தது. இதனால் ஈழப் படைப்பாளிகள் முற்போக்கு எழுத்தாளர்களாக பரிணமித்தனர். இந்தவகையில், ஜீவாவின் ஒட்டுமொத்த படைப்புவெளியையும் முற்போக்குச் சித்தாந்தமே தீர்மானித்தது. இந்த விசயத்தில் ஒரு கலைஞனாக தன்னை ஓர் இறுக்கமான கட்டுக்கோப்புக்குள் அவர் வைத்துக் கொண்டார். மிக அபூர்வமாகவே அவர் அதனை மீறிய சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனால் அவரது கதைகள் சாமான்யர்களின் குரலாகவே ஒலித்தன. மேல் தள மனிதர்களால் வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அவமானப்படுத்தப்பட்டவர்களின் கூட்டுத் துயரத்தையும், குமுறலையுமே அவர் வெளிப்படுத்தினார். அத்தகைய மனிதர்களை தன் படைப்புகளில் அவர் கொண்டாடினார். அவரது இந்த நிலைப்பாடு குறித்து அவரிடம் மறுபரிசீலனைகள் இருக்கவில்லை. தனது படைப்புகளில் அவர் காண்பித்த கீழ் அடுக்கு மக்களின் நேர்மையும், அறமும், ஒழுக்கமான நடத்தைகளும் மரபியல், சமூகவியல், உயிரியல், உளவியல் சார்ந்து சரியானதுதானா என அவர் ஒருபோதும் திரும்பிப் பார்த்ததில்லை. அவர் தன் பாதையில் தொடர்ந்தும் உறுதியாகப் பயணித்தார்.

பெரும்பாலும் அவர் ஒரு வட்டத்துள்ளேயே நின்று சுழன்றார் என்று சொல்ல முடியும். இதனால் அடுத்தடுத்து வரும் கதைகள் ஒரே கதாபாத்திரங்களால் ஆன கதைகளைப் போல் தோற்றங் காட்டுகின்றன. ஒரேவகையான மனிதர்கள், ஒரேவகையான பிரச்சினைகள், ஒரே வகையான சமூக சூழல் என கதைகள் மாறி மாறி வாசகனுக்கு ஏற்படுத்தும் அனுபவம் ஒற்றைத்தன்மையுடையதாகவே சுருங்கியது. பரந்த வாழ்க்கை அனுபவத்தை, விஸ்தாரமான பார்வைகளை அவரது கதைகள் விரித்துக்காட்டவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைகின்றன. விசைகொண்டு நகரவேண்டிய கதை சிலவேளைகளில் தன் ஆற்றலை இழந்து நிற்கிறது.

இந்த வீழ்ச்சி டொமினிக் ஜீவாவின் படைப்புகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல. ஈழத்தின் அநேக முற்போக்குப் படைப்பாளிகளிலும் இந்த வீழ்ச்சியைக் காண முடியும். அவர் தன் கதைகளில் எளிமையாகக் காட்டிய வாழ்க்கை உண்மையில் அவ்வளவு எளிமையானதல்ல. மிக உக்கிரமான நெருக்கடிகளால் வதைபடும் மனிதர்கள் அவர்கள். மேலோட்டமாகச் சொல்லப்படக்கூடியவர்களல்ல. மிக ஆழமாக முன்வைக்கப்பட வேண்டியவர்கள். அவர் எழுதியது ஒரு கணத்தில் முடிந்து போகிறவர்களின் வாழ்க்கையை அல்ல. யுகாந்திரமாக அடக்குமுறைக்குள்ளும் அவலத்துக்குள்ளும் சிக்கிக் கொண்டவர்களை. பெரும்பாலான கதைகள் இத்தகைய வாழ்வை மேலோட்டமான சித்தரிப்புகளால் குறுக்கிவிடுவது போலும் தோன்றுகிறது.

மனித உறவுகளும், ஊடாட்டமும் எப்போதும் ஒரு கணக்கியல் நியமமுறையில் மட்டுமே இவரது கதைகளில் நிகழ்ந்திருக்கின்றன. இது ஒரு அசாத்தியமான வாழ்க்கை கோலம் என்றே தோன்றுகிறது. வாழ்க்கையை உள்ளபடி காட்டாமல் ஒரு சட்டகத்துள் அடக்கி ஒரு மாயையான சித்தரிப்பை நோக்கியே அவர் படைப்புலகம் மையங்கொண்டிருந்திருக்கிறது. மனித வாழ்வு உணர்ச்சிகரமான பக்கங்களால் ஆனதுதான். அது ஒரு முற்போக்கு நியம முறைக்குள் சுருங்கியதல்ல என்பதை அவர் உணரவில்லை.

அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான ‘பாதுகை’ யில் அவரது கதைகூறல் முறையிலும், மொழிப்பாவனையிலும் ஒரு வளர்ச்சிநிலையை அவர் அடைந்திருந்தார். அப்போதைய ஈழத்தமிழ்ச்சிறுகதைகளின் போக்குக்கு சமாந்தரமான வளர்ச்சியாகவே அது இருந்தது. பாதுகை அவரது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கதை. இலக்கியரீதியாகவும் வெற்றிபெற்ற கதை. கதையின் அரசியலும், அழகியலும் ஒரு புள்ளியில் இணைந்து நகரும் கதை. முத்து முகம்மது எனும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கனவுகளை தொட்டுச் செல்லும் இக்கதை முதலாளித்துவத்தின், நகரமயமாக்கலின் இராட்சத வளர்ச்சியையும், அதற்குள் நசுங்கும் மானுடத்தின்அவலத்தையும் பேசுகிறது. சமாமான்ய மனிதர்களுக்குள்ளிருக்கும் கீழ்மையான பண்புகள் கூட அவர்களின் தொழில் தர்மம் என்று வரும் போது கைவிடப்படும் ஓர் உயர் குணத்தை அந்த சாதரண மனிதர்கள் கொண்டிருப்பதை இக்கதை சொல்கிறது.

திருத்த வேலைக்காக தன்னிடம் வரும் விலை உயர்ந்த ஒரு செருப்புச் சோடியை உரிமையாளர் பல நாட்களாக மீட்க வராமல் போகவே தன் புது மனைவிக்கு அதைப் பரிசாக கொடுத்து விடுகிறான் முத்து முகம்மது. சில நாட்களின் பின் உரிமையாளர் வந்து கேட்கும் போது நீங்கள் அப்படி ஒரு செருப்பும் தரவில்லை என்று பொய் சொல்கிறான். அதிர்ச்சியடைந்த அவர் அவனை தாய் தந்தை கடவுள்கள் மீதெல்லாம் சத்தியம் செய்து சொல்லச் சொல்கிறார். அவனும் எல்லாவற்றின் மீதும் பொய்ச்சத்தியம் செய்து விடுகிறான். ஆனால் கடைசியில் அவர் செருப்பு மீது சத்தியம் பண்ணு என்று சொல்லி விடுகிறார். அதை அவனால் செய்ய முடியவில்லை. அவன் உண்மையை ஒப்புக் கொள்கிறான். எளிய மனிதர்களுக்குள்ளிருக்கும் சமான்யப் பண்பையும், உயர் பண்பையும் ஒருசேர வெளிப்படுத்தும் கதை இது.

அவரது ‘தாளக் காவடி’ கதை கவனத்தைக் கோரும் மற்றொரு கதையாகும். ஒரு பஸ் நடத்துனரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லப் போய் பின் அதிலிருந்து விடுபட்டு பஸ் பயணிகளின் வெவ்வேறுபட்ட உலகங்களைத் திறந்து காட்டுகிறார். இதனால் பஸ் ஒரு பெரிய உலகமாக விரிகிறது. அங்கே அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள், கூலிகள், உயர்சாதி மனிதர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், ஆண்கள், பெண்கள் பலரும் வருகின்றனர். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை பேசிக்கொள்கின்றனர். தங்கள் கனவுகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அது ஒரு பரந்துபட்ட உலகமாக பஸ்ஸை உருமாற்றுகிறது. வாசகனுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. பஸ் என்ற ஒரு பெட்டிக்குள் அடக்கப்பட்டிருக்கும் ஒரு உலகத்தை வாசகன் கண்டு கொள்ளும் ஒரு சாகசத்தை ஜீவா இந்தக் கதைக்குள் நிகழ்த்திக் காண்பிக்கிறார்.

‘பாபச்சலுகை’ சாதியத்தைப் பேசும் கதை. யாழ்ப்பாண சமூக அமைப்பில் சாதி எப்படி ஒரு தலைமுறையின் கல்வியையும் பாழ்படுத்தி இருக்கும் என்பதை வாசகன் உய்த்துணர்வதற்கான திறப்புகளை இந்தக்கதை கொண்டுள்ளது. நடேசலிங்கத்துக்கும், திருச்செல்வத்துக்குமிடையில் நடக்கும் உரையாடலில் இருந்து இந்த ஊகத்தைச் செய்யலாம். அதற்கான காட்சிப்படுத்தல்கள் கதைக்குள் இடம்பெறுவதில்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட வேண்டும் என்ற நடேசலிங்கத்தின் குரல் சாதிய மேலாதிக்கத்தின் குரலாகும். “இந்த எளிய சாதிகளிடம் நல்ல ஒழுக்கக் குணம் மருந்துக்குமில்லைஎன நடேசலிங்கம் சொல்லும் போது ஜீவா காண்பித்த சாமான்ய மனிதர்களின் அறமும் ஒழுக்கமும் கேள்விக்குள்ளாகிறது. ஆனால் ஜீவா சாதியைப் புரிந்துகொள்ளப்படாத ஒரு சமூகநோய் என்றே காண்கிறார்.

அவரது முதல் தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் அவரது ஆரம்பகாலக் கதைகளின் தொகுப்பு. ஒரு முதல் தொகுப்புக்கான அத்தனை பலவீனங்களையும் கொண்டது. கதைக்கட்டுமானத்திலோ, கதைப் பொருளிலோ மிகத் தொய்வான, மிக மேலோட்டமான படைப்புகளாகவே அவை சுருங்கின. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை நுணுகிப் பரிசீலனை செய்து இரத்தமும் சதையுமாக அந்த வாழ்க்கையை வாசகன் முன் அவை நிறுத்தவில்லை. காரணம் அதற்கான போதிய படைப்புப் பயிற்சி அவரிடம் இருக்கவில்லை. அந்த நெருடல் அவரது தண்ணீரும் கண்ணீரும் தொகுதிக் கதைகள் முழுவதிலுமே நிறைந்திருக்கிறது. எனினும் இலங்கை அரசின் சாஹித்ய மண்டல விருதை அத்தொகுப்பு பெற்றது. முற்போக்கு இலக்கியத்தை விரைவாக வளர்க்கவும், அதனை வலுப்படுத்தவும் அப்போது இது போன்ற விருதுகள் பல்கலைக்கழக மார்க்ஸியர்களால் பயன்படுத்தப்பட்டன. இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் புனைவுத் தன்மையற்றவை. கதை எனும் வடிவத்தை அதன் முழுத்தகைமையோடும் பெறாதவை. முதிர்ச்சியற்றவை.

அவரது கல்வி ஐந்தாம் தரத்துடன் முற்றுப் பெற்றது. சுய தேடலாலும், படிப்பாலுமே எழுந்து வந்த படைப்பாளி அவர். அவரது அனுபவங்களின் வழியேயும் தொடக்க வாசிப்பின் வழியேயும் படைப்புலகுக்குள் நுழைந்தார். அப்போது அவரது படைப்பு மனம் முதிர்ச்சியடைந்திருக்கவில்லை. படைப்பாற்றல் செழுமையடைந்திருக்கவில்லை. இதனால் அவரது பெரும்பாலான ஆரம்ப காலக்கதைகள் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் போன்றே குறுகின.

இன்னொரு புறம் அவரது படைப்புகள் அழகியலும், புனைவுத் தன்மையும் குன்றிக் காணப்படக் காரணம் அவர் சாதிய அடக்குமுறை நிலவும் சமூக சூழலில் அதற்கெதிரான கலகத்தை நிகழ்த்துவதற்கான ஊடகமாகவே இலக்கியத்தை கருதியதுதான். இலக்கியம் குறித்த வேறு புரிதல் அவருக்குள் இருந்ததாக எண்ணத் தோன்றவில்லை. அவரைப் பொறுத்தவரை, தனது ஆழ்மனக் காயங்களை, தன்னைப் போன்ற அடித்தள மக்கள் மீதான மேல் அடுக்கினரின் அடக்குமுறைகளை வெளிப்படுத்த வேண்டும். எழுத்தில் தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான். புனைவுத் திறன், படைப்புப் பயிற்சி குறித்தெல்லாம் அக்காலத்தில் அவரால் சிந்தித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதனால் தைரியமாகப் பேனை குத்தினார். அப்படி எழுதப்பட்ட கதைகளின் தொகுப்புதான் தண்ணீரும் கண்ணீரும்.

அவரிடம் இருந்த கருத்தியல் பற்று அவர் தீவிரமும் உறுதியான நிலைப்பாடும் கொண்டவர் என்பதை தெரிவிக்கிறது. தனது படைப்பு சார்ந்து மறு விசாரணையற்றவராக அவர் இருந்திருக்கிறார். வாழ்க்கையின் முழுப்பரிமானமும் மேல் தட்டு – கீழ் தட்டு, முதலாளி-தொழிலாளி என்ற இரட்டை முகம் கொண்ட ஒன்றாகவே அவரால் புரிந்துகொள்ளப்பட்டது.

அவரது முதல் தொகுப்பு உள்ளடக்கியிருந்த கதைகளில் புனைவுத் தன்மை நிரம்பிய இலக்கியத் தகுதி உள்ள கதைகள் எனப் பார்த்தால் வெகு சொற்பமான கதைகளே தேருகின்றன. பெரும்பாலானவை கதைக்கான உருவமோ, உள்ளடக்கம் சார்ந்தோ புனைவுத் தன்மையைப் பெறாமலே சென்று முடிகின்றன. கதையின் மையப் பொருள் அழிப்பை நிகழ்த்திக்காட்டிய பின்-நவீன கதைகூறலுக்குள்ளும் அதனை அடக்க முடியாது. மொழியின் அழகியலும் இல்லை. அத்தொகுப்பிலுள்ள ‘இவர்களும் அவர்களும்’ கதை என்றவகையில் இலக்கிய வெற்றியை அது பெறவில்லை. முற்போக்குக் கருத்தியலில் மட்டுமே கவனம் எடுத்து எழுதப்பட்ட கதை என்பது புலனாகிறது. சுந்தரம் பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை என்ற இரு முதலாளிகளுக்கிடையிலான ஜென்மப் பகை என கதையாசிரியரால் சொல்லப்படும் முரண்பாடு இரு முதலாளிகளிடமும் சேவகர்களாக இருந்த மணியம், கந்தையா எனும் தொழிலாளர்களுக்குடையிலான முரண்பாடாக எஜமான் விசுவாசத்தால் பரிணாமம் பெற்றது. இரு தொழிலாளர்களும் ஒருவரை ஒருவர் தங்களது முதலாளிகளுக்காக அடித்துக்கொள்கின்றனர். கதையின் முடிவில் முதலாளிகள் இருவரும் சினேகபூர்வமாக ஒரே காரில் பயணிப்பதை மணியமும் கந்தையாவும் காணும் போது தங்களது அறியாமையை நொந்து கொள்கின்றனர். இந்த இடம்தான் டொமினிக் ஜீவா சொல்ல வந்த புள்ளி. அவர்கள் அவர்கள்தான் இவர்கள் இவர்கள்தான். இந்த வர்க்க முரணை, ஏற்றத் தாழ்வைத்தான் அதிகமும் ஜீவாவின் இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் பேசுகின்றன. பல கதைகள் பல சம்பவங்கள் குறித்த மேலோட்டமான குறிப்புகளால் மட்டுமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. புனைவாக அவர் சறுக்கும் இடங்கள் அவை.

‘கொச்சிக்கடையும் கறுவாக்காடும்’ இது போன்றதொரு மிக எளிமையான கதைதான். துறைமுகத் தொழிலாளியான அப்புஹாமியின் சின்ன மகன் சுகவீனமடையும் போது அவனுக்கான முறையான சிகிச்சை வழங்க பணமில்லாது தடுமாறும் அப்புஹாமி டாக்டர் இராஜநாயகத்தின் உதவியை நாடுகிறார். பணமில்லாததால் அப்புஹாமியால் வைத்தியரின் உதவியைப் பெற முடியாமல் போகிறது. இந்த வர்க்க அடக்குமுறை சாதியத்தை விட மோசமானதாகவும், அது இன, மத எல்லைகளைக் கடந்தது என்பதையும் இக்கதை சொல்கிறது. எழுத்தாளரின் வெறும் விவரணமாக சொல்லப்படும் இக்கதையில், கதைமாந்தர்களின் குறிப்பாக டாக்டர் இராஜநாயகத்தின்  மனமாற்றமே கதையின் மிக முக்கிய திருப்பமாகும். ஆனால் கதையில் அவரது மனமாற்றத்துக்கான காரணம் மிக நொய்மையானதாக, அதற்குள் தர்க்க ஒழுங்கு இல்லாததாக அமைந்துள்ளது. மேலும் கதைமாந்தர்களின் வாழ்க்கை விரிவான புனைவாக முன்வைக்கப்படுவதுமில்லை.

ஆயினும் கதைக்குள் பேசப்படும் சமூக அவலம் அடித்தள மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கான மருத்துவ நல சேவையைப் பெறுவதில் உள்ள பாரபட்சம், ஒரு பணக்கார நாய்க்குட்டிக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ சேவையைக் கூட ஒரு ஏழையின் குழந்தையால் பெற்றுக்கொள்வதில் காணப்படும் அசமநிலையை இக்கதையில் முன்வைக்கிறார். இதனை இலங்கையின் எல்லா சமூகங்களிலும் காணப்படும் ஒரு பொது அவலமாக காட்டுகிறார்.

இது போன்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் விளையும் சமூகப் புறக்கணிப்புகள், அவமரியாதைகள் மேல் தட்டு- கீழ் தட்டு என்ற வர்க்க முரண்களின் விளைவுதானே ஒழிய அதற்குள் இன, மத வேறுபாடுகள் இல்லை என்பதை அவரது சில கதைகள் தொட்டச் செல்கின்றன. பாதுகை, கொச்சிக்கடையும் கறுவாக்காடும், நகரத்தின் நிழல் போன்ற கதைகள்’ இந்தவகையில் சொல்லத்தக்கன. இவை அப்படியே தொழிலாளியை இன, மத, மொழிகளைக் கடந்த ஒரு தனித் தரப்பாக முன்வைக்கின்றன. அவரது கதைமாந்தர்களான அப்புஹாமியோ, முத்து முகம்மதோ, கந்தையாவோ ஒடுக்கப்படும் தரப்பின் பிரதிநிதிகள்தான்.  அவரைப் பொறுத்தவரை தொழிலாளர் என்போர் ஒரு தனியான இனம்.  தொழிலாளி என்பவன் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் தரப்பைச் சேர்ந்தவன் என்ற மார்க்ஸிச நிலைப்பாடே அவரது நிலைப்பாடும். இதனால் தான் அவர் சாதியுடன் பிணைத்து தொழிலாளியின் பிரச்சினையை தன் படைப்புகளில் முன்னிலைப்படுத்தினார்.  ஈழத்து முற்போக்குப் படைப்பாளிகளின் பொதுவான நோக்காகவும் அதுவே இருந்தது.

ஜீவாவின் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் அடித்தட்டு மக்கள். சாமானியர்கள். ஆனாலும், உயர் பண்புகளை மானுட அறங்களை வெளிப்படுத்துபவர்கள். சாதியில் குறைந்தவர்களிடம் அறம், உயர் மானுடப் பெறுமானங்கள் காணப்படுவதில்லை எனும் உயர் சாதிய நோக்குக்கு முற்றிலும் எதிரானவை இந்தக் கருத்தியல். இன மரபியல் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சில அற்பமான நடத்தைகள் வெளிப்படுவதற்கான சாத்தியமுண்டு. இந்த ஆய்வுகள் மீதெல்லாம் அவர் கவனஞ் செலுத்துவதில்லை. அவர் தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டாடும் ஒரு உலகையே தன் படைப்புகளில் சிருஷ்டிக்கிறார்.  சாதியத்திலோ, பொருளியலிலோ அடித்தளத்தில் இருப்பவர்களின் நேர்மையும், அறமும்தான் திரும்பத் திரும்ப பேசப்படுகின்றன.

ஜீவாவின் படைப்புகளில் கீழ் அடுக்கிலிருப்பவர்கள் பலியுணர்ச்சியற்றவர்கள். மேல் அடுக்கிலுள்ளவர்கள் எப்போதும் திமிர் பிடித்தவர்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள். பலியுணர்ச்சியுள்ளவர்கள். மொத்த சமூக அவலத்துக்கும் காரணமானவர்கள் என்ற சித்தரிப்பு மானுட உளவியலை இரட்டைச் சட்டகத்துக்குள் போட்டுப் பூட்டுகிறது. ‘காலத்தால் சாகாதது’ கதையில் வரும் அடித்தளத்திலிருக்கும் பொன்னுத்துரையிடம் இருக்கும் மானுடத் தன்மை அதே கதையில் வரும் உயர்சாதி மனிதரான மயில்வாகனத்திடம் இருப்பதில்லை. மனித உளவியலை சாதியையும், முதலையும் கொண்டு தீர்மானிப்பதற்கும் இனத்தையும், மதத்தையும் கொண்டு தீர்மானிப்பதற்குமிடையில் அப்படி என்ன வேறுபாடு இருக்கிறது? என்ற நியாயமான குழப்பம் வாசகனுக்கு ஏற்படத்தான் செய்கிறது.

ஈழ இலக்கியத்தில் நீண்ட காலமாக படைப்பு, பதிப்பு, இதழ் வெளியீடு என மிகச் சிக்கலான பரப்புகளில் தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்திருக்கிறார். அவர் மல்லிகை எனும் சிற்றிதழை 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400 இதழ்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். இது தமிழிலேயே ஒரு சாதனைதான். அது ஈழத்தில் நிகழ்த்திக்காட்டியதென்பது மகத்தான சாதனையாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தப் பின்னணியுமற்று உழைப்பின் மூலமே தன் பெயரை தமிழ் இலக்கியப் பரப்பில் பதிவுசெய்திருக்கிறார். அந்த உழைப்பு அவரது படைப்புகளை விடவும் அவரது இதழியல் மற்றும் பதிப்புத் துறைகளில்தான் ஆழமாக வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். அவரது இதழியல் பங்களிப்பு குறித்தும் விரிவான பார்வையை முன்வைக்க வேண்டியுள்ளது.

ஜிஃப்ரி ஹாசன்-இலங்கை

ஜிஃப்ரி

(Visited 482 times, 1 visits today)