இரண்டு கரைகள்- சிறுகதை-ஜிஃப்ரி ஹாஸன்

 

ஜிஃப்ரி ஹாஸன்பாலைநகரில் அப்போது பாடசாலை இருக்கவில்லை. அங்கிருந்து தியாவட்டவான் அரசினர் தமிழ்-முஸ்லிம் கலவன் பாடசாலைக்குத்தான் நாங்கள் வந்து போய்க்கொண்டிருந்தோம். தீவிர ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதி அது. பாலைக்காட்டிலிருந்து சிங்களப்பள்ளிக் கூட மைதானத்தைக் கடந்துதான் (அங்கு ஒரு சிறிய அறைக்குள் ஒரு புத்தர் சிலை இருக்கும்) நானும் எனது உற்ற நண்பர்களான மைய்யன், மோகன், யாக்கூப், ராணி,திருமால், நூர்ஜஹான் போன்றோர் சகிதம் பள்ளிக்கூடம் செல்வது வழக்கம். அடிக்கடி சண்டை மூளும் இடத்தில் எங்கள் பாடசாலை அமைந்திருந்ததால் பாடசாலையின் இயக்கத்துக்கு முறையான நேர ஒழுங்குகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. பெரிதாக படிப்பும் நடைபெறுவதில்லை. மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் அதைத்தான் விரும்பி இருந்தனர்.

மம்மி அக்கா என நாங்கள் அழைக்கும் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு டீச்சர் மட்டும் சில ஆங்கிலப் பாடல்களை சொல்லித் தருவா. மம்மி டீச்சர் ஒரு டம்மி டீச்சர்தான். அவர் ஐந்து பாடல்களை திரும்பத் திரும்ப மூன்று முறை சொல்லி முடிக்கும் போது இடைவேளை பெல் அடிக்கும். மதியச் சாப்பாடு கிடைக்கும். உணவு கிடைக்கும் வரைக்கும் தான் மாணவர்கள் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். பிறகு தங்களது புத்தியை காட்டத் தொடங்கி விடுவார்கள். பிறகு மம்மி அக்காவால் ஒரு பாட்டைத்தானும் முழுமையாகப் பாட முடியாமல் போய்விடும். பின்னர் ஒளித்தோடும் கூட்டமொன்று எப்போதும் எங்கள் வகுப்பில் தயார் நிலையில் இருக்கும். மைய்யனும் மோகனும்தான் அந்தக் கூட்டத்துக்கு இணைத் தலைவர்களாக இருந்தனர். சாப்பாடு கிடைத்ததும் பாடசாலை சுற்றுப் புறத்தில் அந்த அணியைச் சேர்ந்த ஒருவரையும் காண்பது கடினம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நானும் இந்த அணியின் உறுப்பினராகி விடுவதுண்டு. ஆனால் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான தகுதியை நான் பெற்றிருக்கவில்லை. ஒளித்தோடுவதற்கு நான் காட்டும் தயக்கம்தான் அதற்குக் காரணம்.

மதிய உணவாக ‘பெட்டிஸ்’ வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு நாள் மம்மி டீச்சர் இனி யாரும் ஒளித்தோடக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தா. தனது கையிலிருந்த பெட்டீசால் மம்மி டீச்சர் மீது வீசி எறிந்து அவரது எச்சரிக்கைக்கு தனது எதிர்ப்பைக் காட்டினான் கூட்டத் தலைவன் மைய்யன். அந்த சம்பவத்தைக் கண்டித்து அதிபர் மைய்யனுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தார். அதன் எதிரொலியாக அன்று அவர் ஓட்டமாவடி வரைக்கும் தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மறுநாளும் மைய்யனால் அதிபர் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஸ்டவசமாக அதில் எந்தப் பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை.

எங்கள் வகுப்பில் அன்சார் மட்டும் கொஞ்சம் ‘பொருளாதார’ வசதி படைத்தவனாக இருந்தான். அவனது உம்மா மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப்பெண்ணாக இருந்தா. அவவனிடம் நீல நிற அரைச்சைக்கிள் ஒன்று இருந்தது. ஒரு சிறிய, பழைய சைக்கிளொன்று அவனிடமிருப்பது கிட்டத்தட்ட ஒரு ப்ளைட் இருப்பதற்கு சமமானதாக இருந்தது. அப்படிக் கதை விட்டுக் கொண்டிருந்தான். ஒருநாள் ஜீப்பில் யாரோ அவனைத் துரத்த இவன் அந்தச் சைக்கிளில் ஓடித் தப்பியதாகவும் ஜீப்பால் அவன்ட மயிரையும் புடுங்கேலாமப்போய்விட்டதாகவும் சொன்னான். இப்படித் தினமும் ஏதாவது ஒரு சாகசம் அவனைது சைக்கிளைக் கொண்டு நிகழ்த்திக் கொண்டிருந்தான்.

இந்த சைக்கிள் சர்கஸ்காரனுக்கு ஒரு நாள் திடீரென்று அவன் உம்மா வௌ்ளை நிற ஒரு சோடி ஷூ அனுப்பி இருந்தா. பிறகு அதைப்பற்றி கதை விடத் தொடங்கினான். அதை அணிந்து கொண்டு வந்து ‘மார சீன்’ போட்டான். அந்த Shoe வுக்கு மேலால் அவன் காலில் எப்படி மிதித்தாலும் அவனுக்கு வலிப்பதில்லையாம். யார் வேண்டுமானாலும் மிதிக்கலாம் என அன்சார் தினமும் சவால் விடுவதும் நாங்கள் மிதித்து தோல்வி காண்பதுமாக இருந்தோம். நாங்கள் ஒவ்வொருவராக அவன் காலில் ஏறி மிதித்துக் கொண்டு ‘நோகுதா..நோகுதா’ எனக்கேட்பதும் அவன் ‘ம்ஹ்ம்…’ என்று மறுப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வகுப்பில் சற்றுப் பருமனாக இருந்த அசன் நன்றாக ஊண்டி மிதித்தபோது அது அவனுக்கு வலித்திருக்க வேண்டும். அன்சார் அதைக் காட்டிக்கொள்ளாமல் நெளிந்ததை நான் அந்தக் கணத்தில் பார்த்தேன். அதன் பிறகு அன்சார் அசனை மட்டும் தனியாக கூட்டிக்கொண்டு சென்று ஒரு பயத்தம் போலை வாங்கிக் கொடுத்தான். ஒரு பயத்தம் போலைக்கு சோரம் போன அசன் அன்றிலிருந்து அன்சாரின் காலில் மிதிப்பதில்லை.

அன்சாரின் Shoe வின் மகிமை நாளுக்கு நாள் வகுப்பில் உயர்ந்து கொண்டே போனது. இதனால் பலருக்கும் அதனை அணிந்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அன்சார் ஒரு தொழில் நடவடிக்கைகயில் இறங்கினான். Shoe பொருந்தக்கூடியவர்கள் பாடசாலை விடும்வரை அவனது ஷூவை அணிந்துகொள்ளலாம். வாடகை இரண்டு ரூபாய். வாடகைக்கு ஷூ எடுத்துப் போட்டவர்களும் அன்சாரைப் போலவே வலிப் பரீட்சை நடத்தினர்.

‘நோவலல்லுவாடா?” என அன்சாரும் அதட்டியாக கேட்பான் .

அவர்களும் ‘ஓம்’ என்று சொல்லிச் சமாளிப்பார்கள்.

ஆனால் எனக்கு அன்சாரின் ஷூவை விடவும் அவனது சின்னச் சைக்கிளே பிடித்திருந்தது. அதில் ஓடிப் பார்க்க எனக்கு ஆசை. சைக்கிளை ஓடிப்பார்க்கத் தரும்படி அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் ஸ்கூலிலிருந்து அந்தா தெரியிர போக்கு வரைக்கும் ஓடிப்பார்க்க ரெண்டு ரூபாய் கேட்டான். என்னிடம் ஒரு ரூபாய்தான் இருந்ததால் ஒரு ரூபாய்க்கு தரும்படி கேட்டேன். நாளை ஒரு ரூபாய் தரவேண்டுமென கடன் திட்டத்தில் சைக்கிள் ஓட்டத் தந்தான். நானும் கடன்திட்டத்தின் அடிப்படையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பேன். அவன் காட்டிய போக்கை விட்டு ஒரு மீற்றரும் கூடுதலாக செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். கடன் கணக்கிலும் கடும் கறாராக இருந்தான். இனிமேல் சைக்கிள் அவனிடம் இரவல் பெறுவதில்லை என நான் முடிவெடுத்திருந்த அன்று அவன் காட்டிய போக்கைத் தாண்டி வேதக்கோயில் வரைக்கும் சென்று விட்டேன். பின்னால் நின்று சத்தமாக கூப்பிட்டுக் கொண்டே நின்றான். நானோ எதையும் கவனிக்கவில்லை. மிதி மிதி என மிதித்து வேதக் கோயிலடிக்குச் சென்று திரும்பி வந்தேன். கடுங்கோபத்தில் என்மீது சீறிப்பாய்ந்து வந்து என்னை ஓங்கி அறைந்த அன்சார் மீது எனது உற்ற நண்பர்களான் மோகனும் மைய்யனும் செங்காட்டுப் புலி போல பாய்ந்து அன்சாரை நையையைப் புடைத்தனர். வாழ்க்கையில் அன்சார் அப்படி ஒரு அடியை அன்றுதான் வாங்கி இருப்பான். மறுநாள் அன்சார் எப்படியும் வாப்பாவைக் கூட்டி வருவான் என்ற அச்சத்தில் நாங்கள் மூவரும் அன்று பாடசாலைக்கு கட் அடித்துக் கொண்டு எங்கள் செங்கல் வாடிக்குச் சென்று கல்லுப் பிரட்டினோம்.

என்னிலும் இரண்டு வருடங்கள் கூடிய எனது சகோதரனுக்கும் அவனது சகபாடி அபூபக்கருக்கும் பள்ளிக்கூடம் செல்வதென்பது சிறைக்கூடத்துக்குச் செல்வதைப் போன்றது. பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் மதிய உணவைக் கூடப் புறக்கணிக்குமளவுக்கு பள்ளிக்கூடத்துக்கு கட் அடிப்பதில் இன்பத்தை அனுபவிப்பவர்கள் அவர்கள். எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடத்துக்கு கட்டடிப்பதற்கென்றே இருவரும் விசேட திட்டங்கள் வகுப்பதும் இயங்குவதுமாகவே இருப்பார்கள் எனது சகோதரன் பள்ளிக்கூடம் வராமல் எங்காவது ஒளித்தால் நான் வீட்டில் சொல்லி விடுவேன் என்ற பயம் காரணமாக என்னை சமாளிப்பதற்கென்று இருவரிடமும் திட்டம் ஒன்று தயாராக இருந்தது. அப்போது புலிகள் இயக்கத்தில் தாஜிகான் என்றொருவர் இருந்தார்.

‘இன்டெய்க்கு தாஜிகான் பள்ளிக்கூடத்துக்க புகுந்து எல்லாருக்கும் அடிக்கிறயாம்..இன்டெய்க்கு நாம பள்ளிக்கூடம் போனா நமக்கும் அடி விழும்’ எனது சகோதரனும் அவன் சகபாடி அபூபக்கரும் எனக்கு கரடிவிட்டனர்.

நான் கொஞ்சம் பயந்த சுபாவம். தாஜிகான் ஏன் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து சும்மா எல்லாருக்கும் அடிக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கத் தெரியாத பருவம். இரண்டுபேரும் சேர்ந்து என்னை இலகுவாக மடுத்து விட்டானுகள். பள்ளிக்கூடத்துக்கு சற்றுத் தள்ளி செயலற்ற நிலையில் ஒரு பேக்கரி இருந்தது. அந்த பேக்கரிக்குள் போய் ஒளிந்திருப்பதுதான் அவர்களின் திட்டம். கடந்த இரண்டு நாட்களாக அதுதான் அவர்களின் மறைவிடமாகச் செயற்பட்டு வந்தது.

‘பக்கத்து வீட்டுக்காராக்கள் பனிஸ், தேத்தண்ணி எல்லாம் தருவாங்க”

என்று இருவரும் சுதி பிசகாமல் பொய் சொன்னார்கள். நானும் ஒரு எளிய மனக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். தாஜிகானின் அடியிலிருந்து தப்பும் அதேநேரம் தேத்தண்ணியும் பனிசும் இலவசமாக கிடைக்கும். நானும் சம்மதித்து அங்கே போனேன். பள்ளிக்கூடம் கலையும் வரை அந்த பேக்கரிக்குள் ஒளிந்துகொண்டிருந்து விட்டு பள்ளிக்கூடம் விடும் நேரம் பார்த்து திருட்டுத்தனமாகப் பதுங்கி வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாக சேர்ந்து வீட்டுக்குச் செல்வது. இரண்டு நாட்கள் என்னை இப்படியே அலைக்கழித்தார்கள்.

எனக்கு பனிசோ, தேத்தண்ணியோ ஒரு மண்ணுங் கிடைக்கவில்லை. ஆனாலும் தாஜிகானின் அடியிலிருந்து தப்பித்துக் கொண்டோம் என்று ஒரு சிறு ஆறுதல் ஏற்பட்டது. இருந்தாலும் பனிசும் தேத்தண்ணியும் கிடைக்காதது பெருங்கவலையாகவும் ஒரு புறம் ஆத்திரமாகவும் இருந்தது. மறுநாள் இவர்கள் என்னை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் மெல்ல எழுந்தது. இரண்டு நாட்களாக பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் ‘பெட்டீசை’யும் இவர்களால் இழந்துவிட்டேனே என்ற மன ஆதங்கம் கடுமையாக என்னை வாட்டத் தொடங்கியது. தாஜிகான் விசயத்தை மோகனிடம் மெல்ல கதை விட்டுக் கேட்டேன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், ஏரியாப் பொறுப்பாளராக அவனது மாமா இருப்பதனால் மாமாவின் அனுமதியின்றி தாஜிகான் உள்ளே புகுந்து அடிக்க முடியாதென்றும் அந்த இடத்திலேயே பெரியாள் பத்தினான் மோகன். உண்மையை புரிந்து கொண்ட நான், என்னை ஏமாற்றி இரண்டு நாட்கள் எனது ‘பெட்டீசு’க்கு ஆப்படித்த இருவரையும் மாட்டிக்கொடுத்து செம அடி வாங்கிக் கொடுத்தேன். இதனால் அபூபக்கர் என் மீது மிகவும் கடுப்பாக இருந்தான்.

அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நானும், ராணியும் ஒளித்தோடி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளை எங்களை இடைமறித்த அபூபக்கர் அங்கிருந்த பனை மரமொன்றில் மரத்தில் படர்ந்திருந்த பலமான கொடியினால் என்னை கட்டி வைத்து அடித்தான். அச்சத்தில் நான் அலறிய அலறல் அந்தக் காட்டை ஊடறுத்துச் சென்ற ஒற்றையடிப் பாதையால் சென்று மறைந்தது. ராணி என்னை மீட்பதற்கு இயன்றளவு போராடினாள். எனது அதிர்ஸ்டவசமாக அன்று பள்ளிக்கூடத்திலிருந்து ஒளித்தோடி வந்த எனது உற்ற நண்பன் மோகன் எனது அலறலைக் கேட்டு ஒரு ஹீரோவைப் போல் ஓடி வந்து வந்த வேகத்தில் ஒரு சிறு பனங்கன்றின் மேலால் எம்பிக் குதித்து நேரடியாக அபூபக்கர் மீது பாய்ந்தான். அந்தப் பாய்ச்சல் விஜயகாந்த் பாய்வதைப் போலவே இருந்தது. அந்நாட்களில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் இல்லாத போதும் ஜெனரேட்டர் மூலம் தொலைக்காட்சியில் படம் போட்டுக் காண்பிக்கும் ஒரு வீட்டுத் தியேட்டருக்கு மோகன் அடிக்கடி சென்று விஜயகாந்தின் திரைப்படங்களை அதிகம் பார்த்து வருபவனாக இருந்தான்.

தியாவட்டவான் தமிழ்-முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலையில் அது வரைத் தன்னிகரில்லாச் சண்டியனாக இருந்து வந்த அபூபக்கர் அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்ததை நான் முதன் முதலாகப் பார்த்தேன். அபூபக்கர் என்னை அடித்த அதே கருக்குச்சீவாத பனை மட்டையால் மோகன் அவனை நையைப்புடைத்தான். அடிதாங்க முடியாத அபூபக்கர் அலறிக் கொண்டு உயிர் தப்பி ஓடினான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இனி தாஜிகானுக்கும் பயப்படுவதில்லை என உள்ளுர நினைத்தேன்.

அன்று மோகனும், ராணியும் எனக்காக மிகவும் வருத்தப்பட்டார்கள். எனக்காக ராணி அபூபக்கருடன் மல்லுக்கட்டிய போது ஒரு நாள் எனது பெட்டீசை ராணி கடன் கேட்டபோது நான் கொடுக்க மறுத்தது என் நினைவுக்கு வந்து என்னை உறுத்தியது. நாளைக்கு எனது பெட்டீசை ராணிக்குத் தருவதாக வாக்குறுதியளித்தேன்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் மம்மி அக்கா தவிர வேறும் பல பாடகர்கள் இருந்தார்கள். “அதோ ஒரு பறவை கப்பல் பறக்குது பார்” என்றொரு பாடலை நாள் தவறாது பாடி வரும் ஒரு ஆசிரியரும் எங்கள் பள்ளிக்கூடத்தில் இருந்தார். அவரது அந்தப்பாடலால் விமானத்தை கப்பல் என்று அழைக்கும் ஒரு தலைமுறையை அவர் உருவாக்கினார். அறிவுலக அயோக்கியத் தனங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கப்படுகின்றன போலும். அதனால் மாணவர்கள் அவரைப் பறவைக்கப்பல் மாஸ்டர் என்று அழைக்கத் தொடங்கி இருந்தனர்.பறவைக்கப்பல் மாஸ்டருக்கு ஒருபோதும் கோபம் வந்து நாங்கள் பார்த்ததில்லை.

இப்படிக் கலகலப்பாக போய்க்கொண்டிருந்த எங்கள் பள்ளிக்கூடத்துக்குள் திடீரென்று பூதம் வந்ததைப் போல் ஒரு அடிதடி மாஸ்டர் மாற்றலாகி வந்தார். அவர் எங்கள் கோட்டப் பாடசாலைகளில் அடிதடிக்குப் பிரபலமானவர். சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்னுமொரு விஜயகாந்த். ஏற்கனவே எங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சார்பில் ஒரு விஜயகாந்த் இருந்தான். இப்போது ஆசிரியர்கள் சார்பிலும் ஒரு விஜயகாந்த் வந்திருக்கிறார். இப்போது இங்கே இரண்டு விஜயகாந்த். ஒரு குகைக்குள் இரண்டு சிங்கம்.

இந்த விஜயகாந்த் மாஸ்டர் போகுமிடமெல்லாம் அடிதடியில் இறங்கி பிள்ளைகளின் கையை எலும்பை முறித்து விட்டு பிறகு அங்கிருந்து இன்னொரு பள்ளிக்கூடம் இடம் மாற்றப்படுவார். அவர் பிள்ளைகளுக்கு கிட்டத்தட்ட விஜயகாந்த் பாணியில் பறந்து பறந்து அடிப்பவராகவே இருந்தார். எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்தும் அவர் இடமாற்றப்படும் வரை அவரது விஜயகாந்த் பாத்திரத்தை சிறப்பாக வகித்துக் கொண்டிருந்தார்.

துரதிஸ்டம் எங்கள் வகுப்புக்கு அவர்தான் வகுப்பாசிரியர். எனது அதிஸ்டம் வகுப்பில் எனக்கு மட்டும்தான் வாசிக்கத் தெரியும். என்னை முன்னுக்கு வந்து வாசிக்கச் சொல்லிவிட்டு அவர் பார்த்துக்கொண்டிருப்பா்;. பிள்ளைகள் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டு நான் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். எவராவது இடையில் கதைத்தால் அலேக்காக அவனைத் தூக்கி ‘மாமியார்ர வீட்டப் பார்த்தியாடா…பார்த்தியாடா..” என அவனது தலையை தனது நெற்றியில் அடித்து தூக்கி அவனது கதிரையை நோக்கி எறிவார். இதுதான் அவரது அடி. விஜயகாந்த் அடி.

நான் வாசிக்கும் போது ஒரு தடவை ‘ஔவையாரை’ ஒலவையார் என வாசித்தேன். அப்போது எனக்கு ‘ஔ’ வுக்கு ‘அவ்’ என உச்சரிப்பது தெரியாது. அவர் அதைத்திருத்தாமலே இருந்தார். அப்போது அவர் மேசையில் தாளம் போட்டுக் கொண்டு “கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…”என்ற பாடலை முணுமுணுத்தபடி கனவு கண்டு கொண்டிருந்தார்.

ஒருநாள் மாணவ விஜயகாந்த் மோகனை விஜயகாந்த் மாஸ்டர் கடுமையாக அடித்து நொறுக்கினார். அவனைப் பிரம்பினால் சகட்டுமேனிக்கு கடுமையாக அடித்தார். அந்த அடியை பார்த்து வகுப்பே அச்சத்தில் உறைந்திருந்தது. அவன் அழுது கொண்டு ஏரியாப் பொறுப்பாளராக இருந்த அவனது மாமாவை அழைத்து வரச் சென்று விட்டான்.

சற்றைக்கெல்லாம் ஒரு மஞ்சள் நிற உழவு இயந்திரம் பள்ளிக்கூடத்தின் முன்னால் வந்து நின்றது. மோகனும் ஏரியாப் பொறுப்பாளரான அவனது மாமாவும் அதிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். மோகன் நேரடியாக எங்கள் வகுப்பறையை நோக்கியே அவரை அழைத்துவந்து கொண்டிருந்தான்.

மோகன் விஜயகாந்த் மாஸ்டரை அடையாளங் காட்டினான். அப்போது இந்த இயக்கத்தின் செயற்பாடுகளில் தமிழ்-முஸ்லிம் உறவு சிறப்பானதாக இருந்தது. இருசாராரும் அந்த இயக்கத்தின் உயர் பதவிகளில் இருந்தார்கள்.

“நீ என்ன மனிசனா..மாடா..?” ஏரியாப் பொறுப்பாளர் மோகனின் சட்டையைக் கழற்றிக் காண்பித்துக் கொண்டே ஆக்ரோசமாகக் கேட்டார்.

மோகனின் உடலெங்கும் பிரம்படியின் தழும்புகள் சிவப்புக் கோடுகளாய்ப் பாரித்திருந்தது. எனது பெஸ்ட் பிரென்ட்டின் உடலில் சிவப்புத் தழும்புகள் எனக்குள் சற்றுக் கிலேசத்தை ஏற்படுத்துவதைப் போல் உணர்ந்தேன். ஏரியாப் பொறுப்பாளருக்கும், விஜயகாந்துக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. விஜயகாந்த் மாஸ்டர் எனக்கு எவனுக்கும் பயமில்லை என்று வாயால் சொல்லிக் கொண்டு திரிந்ததை இப்போது செயலிலும் காட்டிக் கொண்டு நின்றார். ஆனால் ஏரியாப் பொறுப்பாளர் மாஸ்டரின் வயிற்றில் தொப்புள் பகுதியை பலமாகப் பிடித்து திருகிய போது, “ஆ..” என்று குனிந்தார். அப்போது வகுப்பறை மேலும் அச்சத்தில் உறைந்தது. மாஸ்டரும் பொறுப்பாளரின் கையைப் பிடித்து முறுக்க முயற்சித்த போதும் பொறுப்பாளர் உதைத்த உதையில் தெறித்துக் கொண்டு விழுந்தார். அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூட அந்தக் காட்சியை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும் எங்கள் குருவை அடிப்பது எங்களுக்கு அழுகையை வரவழைப்பதாக இருந்தது. நானும் இன்னும் சிலரும் பரிதாபத்தில் தேம்பி அழுததை பயத்தில் அழுவதாக பொறுப்பாளர் நினைத்திருக்க கூடும். அதிபர் ஏரியாப் பொறுப்பாளரை பாடசாலைக்குள் வந்து ஆசிரியரை அடிக்க முடியாது என்றும் இதற்காக தான் மேலிடத்திற்குப் போகப் போவதாகவும் எச்சரித்தார்.

“அப்ப இதற்கென்ன நியாயம்?’ என ஏரியாப் பொறுப்பாளர் அதிபரிடம் மோகனைக் காண்பித்துக் கேட்டார்.

“ஏன் மாஸ்டர் உங்களுக்கிந்த தேவல்லாத வேல..?” என்று விஜயகாந்த் மாஸ்டரையும் அதிபர் அப்போது கடிந்து கொண்டார். அதற்கு பிறகு ஏரியாப் பொறுப்பாளர் விஜயகாந்த் மாஸ்டரை கடுமையாக எச்சரித்து விட்டு கிளம்பி விட்டார். பொறுப்பாளர் கிளம்பிய பிறகுதான் பதுங்கி இருந்த ஏனைய ஆசிரியர்கள் வெளிப்பட்டார்கள்.

சில நாட்களுக்குப்பின் விஜயகாந்த் மாஸ்டர் இங்கிருந்தும் மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவர் சென்றது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது. இப்போது பெட்டீசுக்குப் பதிலாக நல்ல சுவையான பிஸ்கட் எங்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனினும் நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து தமிழ் மாணவர்கள் பிரிக்கப்பட்டு விட்டனர். எனது உற்ற நண்பர்களான மோகன், திருமால், ராணி போன்றவர்கள் இல்லாத ஒரு பள்ளிக்கூடமாக அது மாற்றப்பட்டு விட்டது. அருகிலிருந்த சிங்களப் பள்ளிக்கூடம் தமிழ் பள்ளிக்கூடமாக மாறியது. எனது நண்பர்கள் அங்குதான் சேர்க்கப்பட்டார்கள். போர் உக்கிரமடைந்ததையடுத்து அந்த சிங்களப் பள்ளிக்கூடம் தன் சிங்கள அடையாளத்தை தமிழ் அடையாளமாக மாற்றிக் கொண்டது. அரசினர் தமிழ்-முஸ்லிம் கலவன் பாடசாலையான எங்கள் பள்ளிக்கூடம் எங்களை மட்டுமே கொண்ட பள்ளிக்கூடமாயிற்று.

மதிய உணவாக எனக்குக்கிடைத்த பிஸ்கட்டுகளை மோகனுடனும் ராணியுடனும் நான் பகிர்ந்துண்ண நினைத்தபோதும் அது என்னால் முடியாததாக இருந்தது. ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தரப்பங்களிலிருந்து நாங்கள் தூரமாகிவிட்டிருந்தோம். இப்படியே பல நாட்கள் கழிந்ததில் எங்கள் முகங்கள் ஒருவருக்கொருவர் மறந்து போயிற்று. பள்ளிக்கூடத்தினுள்ளேயே எங்கள் உறவுகள் மடிந்து விட்டன. அதற்குள்ளேயே எங்கள் கனவுகளும் மடிந்தன. எங்கள் வாழ்வும் அதன் இயல்பை இழந்து போனது.

ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

(Visited 120 times, 1 visits today)