அந்திப்பொழுதும் மூடுபனியும்-மொழிபெயர்ப்புச் சிறுகதை-அபூபக்கர் ஆடம் இப்ராஹிம்-தமிழில்: ஜிஃப்ரி ஹஸன்

ஜிஃப்ரி ஹஸன்ஒரு சோடி சிறிய வௌ்ளை நிறப் பட்டாம் பூச்சிகளினால் எதிர்வு கூறப்பட்ட அவனது 32வது பிறந்தநாளுக்கு முதல் நாளே அவன் வந்துவிட்டிருந்தான். அவன் அப்போது அவளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவளோடு இருந்தான். அவனது தாயின் மரண ஆண்டு நிறைவு நாளும், அவனது பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அந்த நாள் குறித்து அவன் அச்சப்பட்டுக்கொண்டிருந்தான். கேண்டி இதனை அறிந்து அவனுக்கு உதவி செய்வதற்காக வந்திருந்தாள். அவள் அன்றைய நாளை அவனுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக்குவதற்கு விரும்பினாள். அந்த குறித்த நாளிலேயே அவர்களின் திருமணத்தை நிச்சயிப்பதற்கு அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். இதற்கிடையில், அவனது அம்மா மரணித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகி இருந்தன. அவன் விரைவாக ஒரு நிலைமாற்றத்தை அடைந்து கொள்ள வேண்டும் என அவள் எண்ணினாள்.

ஆனால், அன்று மாலை பட்டாம்பூச்சிகள் தன்னுடன் பறந்து வர ஒரு சிறுமி கதவைத் தட்டினாள். ஒஹிகோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கால்பந்து மெட்ச் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். கிச்சனிலிருந்த கேண்டி, அவன் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பமாட்டான் என்பதை அறிந்திருந்தாள். அவன் மெட்ச்சில் கடுமையாக மூழ்கி இருந்ததால் அதைக்கேட்டிருக்க மாட்டான் என அவள் நினைத்தாள். கதவில் தட்டப்படும் சதத்தத்துக்கு பதிலளிப்பதற்காக அவள் சென்றாள். ஒரு சிறிய வௌ்ளை நிற வண்ணத்துப்பூச்சி அவளது முகத்துக்கு குறுக்கே பறந்து சென்றது. அவள் சட்டென்று குனிந்தாள். வண்ணத்துப்பூச்சி அறைக்குள் மெல்ல பறந்து சென்று ஒஹிகோவின் முகத்துக்கு குறுக்கே நடனமாடியது. அவன் கையசைத்து அதைத் தட்டி விட்டதும் பறந்து சென்று சரியாக தொலைக்காட்சித் திரையின் முன்னால் அசைந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்தி விடுவதற்காக அவன் எழுந்து சென்றான்.

கேண்டி கதவில் தட்டிய சிறுமியின் பக்கமாகத் திரும்பினாள். இன்னுமொரு வௌ்ளை நிற பட்டாம்பூச்சி அவளைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தது. அவள் அநேகமாக கேண்டியை விட ஐந்து வயது குறைவாக இருக்கலாம். பெரும்பாலும்  அவளுக்கு பதினேழு வயதைத் தாண்டி இருக்காது என கேண்டி ஊகித்தாள். அவளுடைய தோல் அழகாகனதாகவும், உயர்வானதாகவும் இருந்தது. அவளது கண்கள் பெரியதாகவும் மற்றும் கேண்டியை மலைக்க வைக்கும் நுட்பமானதாகவும் இருந்தன.

“குட் ஈவினிங்” சிறுமி புன்னகைத்தாள். அவள் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டாள்.

“குட் ஈவினிங்! உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?”

“ஆம்……….. நான் ஒஹிகோவைத் தேடி வந்தேன்”

“யாரோ உங்களைத் தேடுறாங்க டியர்..”  கேண்டி சொன்னாள்.

ஒஹிகோ பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சியை விரட்டும் தனது பயனற்ற வேலையை கைவிட்டு விட்டு அவன் மெட்ச் பார்த்துக்கொண்டிருந்த சுதந்திரம் குழப்பப்பட்ட கோபத்துடன் கதவருகே சென்றான்.

சிறுமியின் கண்களைப் பார்த்த போது திடீரென்று அவனது இதயம் ஸ்திரமற்றுத் துடித்தது. ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பரிச்சயமான ஏதோவொன்று அவளது கண்களில் தெரிந்தது.  ஆயினும் அவன் அந்த சிறுமியை ஒரு தடைவை மட்டுமே, அதுவும் இருளில் தூரத்தில் வைத்துப் பார்த்திருந்தான்.

அவனது அபார்ட்மெண்டிலிருந்து செல்லும் வீதியில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அன்றிரவு அவள் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள்  எங்கிருந்து வருகிறாள் என்பதை அவன் அறிந்து கொள்ள அப்போது விரும்பினான். இதற்கு முன்னர் அவளை அவன் பார்த்ததில்லை என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

“யேஸ்…” கண் புருவத்தை உயர்த்திக் கொண்டே சொன்னான்.

“நான் உள்ளே வரலாமா?” அவள் கேட்டாள்.

அவன் கேண்டியைப் பார்த்தான். பின்னர் சிறுமிக்கு வழிவிட்டான்.

அவள் அவனைக் கடந்து வீட்டின் அமர்வுக்கூடத்துக்குள் நடந்தாள். அவளது நடை தளர்வற்றிருந்தது. அவள் தலையில் அணிந்திருந்த ஒளி ஊடுருவும் முக்காடு பின்னால் சிற்றோடையாய் தொடர்ந்தது. அவளைப் பின்தொடர்ந்து வண்ணத்துப் பூச்சியும் உள்ளே வந்தது. ஃப்ரேம் செய்து சுவரில் கொழுவப்பட்டிருந்த படத்தைப் பார்த்தபடியே அறையைச் சுற்றி நடந்தாள். அவனது அம்மாவின் படத்துக்கு நேரே அவனுக்குப் பின்பக்கத்தைக் காட்டி நின்றாள்.

“எக்ஸ்கியூஸ்மி மிஸ்,  உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” அவன் அவளுக்குப் பின்னால் வந்து நின்றான். அவள் அணிந்திருந்த கவுனுக்கு பொருத்தமற்றிருந்த அவளது மேன்மையான உருவத்தை அவன் இரசித்தான்.

அவள் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி நடந்து சென்று அவனது படத்துக்கருகில் போய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது பாடசாலைச் சீறுடையில் இன்னும் அவன் ஒரு சிறுவனாக காட்சியளித்தான்.

“நீங்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ளவில்லையா?” அவள் கேட்டாள். இன்னும் அவள் அவனது படத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘சொறி..விளங்கல்ல..’ -அவன்

“நீங்கள் முன்பு இராணுவ வீரனாக ஆக வேண்டும் என விரும்பினீர்கள்”

திடீரென இராணுவம் அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது இராணுவத்தில் சேரவேண்டும் என்றொரு விருப்பத்தை அவனும் கொண்டிருந்தான். அது அப்போது ஒவ்வொரு பிள்ளையினதும் இலட்சியமாகவே இருந்தது. ஒரு பெரும் இராணுவ ஆட்சியாளராக தான் ஆக வேண்டும் எனவும், ஒரு நாள் நாணயத்தாளில் அவனது முகமும் இடம்பெற வேண்டும் என்றும் அவன் விரும்பி இருந்தான்.

‘அதெல்லாம் ஒரு காலம்’ என்றவன் அந்தச் சிறுமி யார் என்பதை அறிய விரும்பினான். உதட்டில் தவழ்ந்த ஒருவித அலட்சியமான புன்னகையுடன் அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 “உங்களது பிறந்தநாள் நாளைக்குத்தானே?”

 ‘ஆம்”

அவள் பெருமூச்சுவிட்டாள். “அது உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியான நாளாகவே இருந்தது” என்று துயரம் தோய்ந்த குரலில் சொன்னாள்.

“மன்னிக்கனும் நீங்க யாரு?” சற்றே பொறாமைணர்ச்சி கொண்ட காதலியின் தோரணையில் கேண்டி கேட்டாள்.

“ஒஹிகோ இந்தச் சிறுமி யார்?”

“எனக்குத் தெரியாது” என்று சொல்லிக் கொண்டே சிறுமியை நோக்கித் திரும்பினான்.

“உனக்கு என்ன வேண்டும்?”

அவள் கேண்டியின் அருகே சென்று அவளைப் பார்த்தாள். துன்ப நிலையிலும் பொறுமையாக கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க முயற்சிக்கிற அந்த மூத்த பெண்ணை இந்த சோதனை தொந்தரவூட்டியது. ஆனாலும் அவள் தொடர்ந்தும் போராடினாள். அவளால் வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பதட்டமடைந்தாள்.

“இவள் ஒரு நல்ல மனைவியாக இருப்பாள்” அந்தச் சிறுமி ஒஹிகோவைப் பார்த்துச் சொன்னாள். அவளுடைய கண்கள் இன்னும் கேண்டியையே மதிப்பீடு செய்து கொண்டிந்தன. பெண்கள் பற்றிய உங்கள் ஈடுபாடு எப்போதும் மெச்சத்தக்கதாகவே உள்ளது.”

“ஆனால் உங்களைப் பொறுத்தவரை அவருக்கு முன்கோபம் உள்ளது. நீங்கள் அவருடன் பொறுமையாகவும், அறிவுபூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டும்”. அவள் கேண்டியிடம் சொன்னாள்.

“நீ யாரு” ஒஹிகோ இப்போது எரிச்சலாகக் கேட்டான்.

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். முதன்முதல் அவனை நெருக்கமாக்கிய பார்வை அது.

“டாகி” அவள் சொன்னாள். அது அவனது தாய் அவனை கிண்டலாக அழைக்கும்போது பாவிப்பது. அவனது அம்மா மட்டுமே அவனை அப்படி அழைத்தாள். அவனது மைத்துனனால் அவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அவன் அவளுடைய கண்களை ஆராய்ந்தபோது அந்த முகத்தைக் காட்டிலும் பழசான அந்தக் கண்களை ஏதோ ஒரு விதத்தில் அவன் அறிந்திருந்தான். மன அமைதியைக் குலைக்கிற ஒரு அறிவார்ந்த வெளிச்சம் அந்தக் கண்களில் தென்பட்டது. என்ன சொல்வதென்று தெரியாது நீண்ட நேரமாக அவளையே அவன் பார்த்துக் கொண்டு நின்றான்.

“அதைச் சொல்லுங்கள்”  அவள் தூண்டினாள்.

“நான் யாரென்று உங்களுக்குத் தெரியும்”  அவள் அவனை நோக்கி நடந்தாள். அவனது வேகமாக துடிக்கும் இதயத்தின் ஓசையை கேட்கக்கூடியளவு நெருக்கமாக அமைதியாக நின்றாள். அவளுடைய கண்களில் ஒரு சவால் தெரிந்தது. அந்தப் பார்வையை அவன் நன்றாக அறிவான்.

“உங்கள் இதயம் உங்களைப் பற்றிச் சொல்கிறது. ஆனால், வேண்டுமென்றே நீங்கள் அதை நம்புவதற்கு விரும்பவில்லை”

‘சற்றுப் பொறு, இது தவறு” அவளிடமிருந்து சற்று விலகிக்கொண்டு அவன் பலவீனமாகச் சொன்னான்.

“இது சரியாக இருக்க முடியாது, இது சாத்தியமானதாக இருக்க முடியாது”

“இங்கே என்ன நடக்கிறது?” கேண்டி ஆர்வமாகக் கேட்டாள்.

“சிலவேளைகளில் சில விடயங்கள் விளக்கத்திற்கு அப்பாற்பட்டவையாகவுள்ளன” என்று சிறுமி அறிவார்த்தமாகச் சொன்னாள்.

“நீ போய் விடு” ஒஹிகோ தீர்மானமாகச் சொன்னான்.

“நீ யாரென்றோ நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் என்றோ எனக்குத் தெரியாது உனது  நோக்கம் எதுவாக இருந்தாலும் அது நடக்காது”

“இங்கே என்ன நடக்கிறது” புறக்கணிக்கப்பட்ட உணர்வுடன் கேண்டி மீண்டும் கேட்டாள்.

ஆனால் யாரும் அவளைக் கவனத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.

சிறுமி பெருமூச்சு விட்டாள். அறையைச் சுற்றி மிதந்து கொண்டிருந்த இரண்டு சிறிய வண்ணத்துப்பூச்சிகள் பறந்து வந்து அவளுக்கருகில் நிலை கொண்டிருந்தன. ஆனால் அவற்றால் அவள் தொந்தரவுக்குள்ளாகவில்லை.

“அந்தக் காலத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள்” பழைய இனிய நினைவுகளை எதிரொலிக்கின்ற ஒருவித நெருக்கமற்ற குரலில் அவள் ஆரம்பித்தாள். “பாத்ரூமில் நீங்கள் ஒரு பாம்பைப் பார்த்த அந்தப் பொழுது. நீங்கள் அதைப் பற்றி உங்கள் தந்தையிடம் சொல்லவில்லை. பளிச்சிடும் கோரப்பற்கள் பாம்புக்குள்ளதாக நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதிலிருந்து தப்பி ஓட நீங்கள் முயற்சித்தபோது வழுக்கலான தரையில் நீங்கள் சறுக்கி விழுந்ததில் இங்கேதான் உங்கள் வலது கை முறிந்தது”

அவள் அவனது இடது கையை மெதுவாகத் தொட்டாள். அவன் அவளை வெறித்துப் பார்த்தபடி ஒரு கற்சிலை போல் உறைந்திருந்தான்.

“கட்டுப் பிரித்த பின் கைக்கு எப்படி பாம்புக் கொழுப்புத் தடவினேன் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அந்தக் கொழுப்பு ஒரு சிறிய ஜாடியில் சேகரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் சுயமாக வாசித்துச் செய்த முதல் விசயம் அதுதான். அதனால் உங்களைப் பற்றி நீங்கள் மிகப் பெருமையடைந்திருந்தீர்கள். நானும் உங்களைப் பற்றி பெருமையடைந்திருந்தேன் டாஜி”

அவளது குரலில் ஒரு நீடித்த வருத்த உணர்வு இருந்ததை அவன் உணர்ந்தான். ஆனாலும் அவன் கண்களில் கண்ணீர்த் துளிகளை காண முடியவில்லை. பின்னர் கண்ணீர் துளிகள் வடிந்த போது தனது கைகளின் பின்புறத்தால் அவற்றைத் துடைத்துக்கொண்டான். அழுதுகொண்டு காட்சி தருவதை அவன் விரும்பவில்லை. அதனை பலவீனத்தின் அடையாளமாக அவன் கருதினான்.

“இது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. யாராவது எனக்கு இதை தெளிவுபடுத்துங்கள்” கேண்டி கத்தினாள். அவளுக்குள் அப்போதிருந்த உணர்ச்சிகளின் விளைவால் அவளது குரலின் சுருதி குலைந்திருந்தது.

“என் கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது பற்றிச் சொன்னாய். அது என்ன வகையான கட்டு? அதை நான் எங்கே பெற்றுக்கொண்டேன்?” ஒஹிகோ உடைந்த குரலில் கேட்டான்.

வண்ணத்துப்பூச்சி ஒன்று சிறுமியின் தோளில் வந்து உட்கார்ந்தது. அதன் சிறகுகள் மெதுவாக படபடத்தன. பின்னர் அது கூரையை நோக்கிப் பறந்து சென்றது.

“உண்மையில் அது ஒரு கட்டு அல்ல. அது அநேகமாக ஒரு பென்டெஜை ஒத்தது. அந்த பாரம்பரிய எலும்பு வைத்தியர் நாஸராவில் சந்தைக்கு அருகில் இருந்தார். அவர் தன் வீட்டு முற்றத்திலேயே பணி செய்தார். மெல்லிய உலோகத் துண்டுகளால் உங்கள் கையை பொருத்தி அதனைவைத்து துணியால் கட்டுப் போட்டு விட்டார். அதற்கான சிகிச்சை போதியளவு செய்யப்பட்டுவிட்டது என்று அவர் கருதும் வரை பல தடவைகள் நாம் அங்கு சென்று வந்தோம்.

அது உண்மை. முரட்டுத்தனமான இளிப்புடன் காணப்பட்ட அந்த கிழவனை அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். அவன் அந்தக் கிழவனால் மிகவும் திகிலடைந்திருந்தான். அவனது எலும்புகளை அந்தக் கிழவன் சரிப்படுத்தும் போது அவன் பயங்கரமாக அலறினான். அப்போது அவனைத் தேற்றுவதற்கு அவனது தாய் மட்டுமே அங்கிருந்தாள். அவனது தந்தை வழமை போன்று தொலைவில் இருந்தார். அவன் தனது தந்தையை வருடத்தில் இரண்டு தடவைதான் பார்த்தான். வருடத்தில் வரும் இரண்டு பெருநாட்களில் தனது மகனுக்கு அவர் புத்தாடை எடுத்து வரும் போதும், குர்பானி கொடுப்பதற்காக ஆட்டுக்கிடா ஒன்றுடன் வரும் போதும் தான் அவன் அவரைப் பார்த்தான். ஒஹிகோ அப்போது மிகவும் சிறுவனாக இருந்தான். தனது வண்ணத்துப்பூச்சிகளுடன் இங்கே வந்திருக்கும் இந்தச் சிறுமி அப்போது பிறந்தும் இருக்க மாட்டாள். அவன் தனக்குள்ளேயே உறுதிப்படுத்திக் கொண்டான். அது அவனுடன் ஆடப்படுகின்ற நன்கு திட்டமிடப்பட்ட வெறும் சூழ்ச்சி மட்டுமே.

“இங்கே பார்! நீ இங்கிருந்து போய்விடு!” அவன் தீர்மானமாகச் சொன்னான்.

“உண்மையிலேயே இது ஒரு மோசமான பகடி. நீ இப்போது இங்கிருந்து போய் விடு. உன்னை அனுப்பியவனிடம் இது உண்மையிலேயே ஒரு குறும்புத்தனமான செயல் என்று சொல்”

சிறுமி தலையாட்டினாள். அவளுடைய வண்ணத்துப்பூச்சிகள் அவளைச் சுற்றிப் பறந்தன. அவள் கேண்டிக்கு முன்னால் வந்து நின்று மீண்டும் ஒரு முறை அவளை உற்றுப் பார்த்தாள்.

“உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” சிறுமி சொன்னாள். கேண்டி ஊமையாய் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

சிறுமி வாயிலை அடைந்த போது திரும்பிப் பார்த்தாள்.

“எலும்பு முறிவு வைத்தியரிடமிருந்து திரும்பி வரும் வழியில் நாம் ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்திய மரத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் நாளை அங்கே இருப்பேன். உங்களுக்கு நேரம் தெரியும். அவள் கனிவுடன் கதவை மூடிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

ஒஹிகோ நீண்ட நேரமாக மூடிய கதவையே வெறித்தபடி யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்குப் பின்னால் கேண்டி நடந்து வரும் சப்தம் கேட்டது.

“யார் அந்தச் சிறுமி?” பீதியான குரலில் அவள் கேட்டாள்.

அவன் பெருமூச்சுவிட்டக் கொண்டு சொன்னான்.

“அது என் அம்மா”

00000000000

அவன் அங்கே செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தான். பல ஆண்டுகளுக்கு முன்னரே மரம் வெட்டப்பட்டு விட்டது. யாரோ சிலர் அங்கே ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். 10 வருடங்களுக்கும் மேலாக அந்த வீடு பூரணமாகாமலே இருந்தது. அவள் ஒரு குழந்தையாக இருந்தபோது வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம் பற்றி அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்பது அவனுக்கு மிகுந்த ஆச்சரியமானதாக இருந்ததது. மரம் எங்கே இருந்தது என்பது அவளுக்குத் தெரியுமா என்பதை அறியவேண்டும் என்ற தீர்மானத்தோடு வீதியில் இறங்கினான். அவனுடைய மூதாதையர்கள் மறுபிறப்பை மிகவும் நம்பினார்கள். அவர்கள் தங்களது பிறந்த குழந்தைகளுக்கு தங்களது மரணித்த உறவினர்களின் பெயர்களைச் சூட்டினார்கள்.

ஆனால் நிச்சயமாக இந்த மர்மச் சிறுமி அவனது தாயின் மறுபிறவியாக இருக்க முடியாது என நினைத்தான். அநேகமாக அவள் அவனது அம்மா மரணித்த அதே காலப்பகுதியில் பிறந்திருக்கலாம். ஆனாலும் அது ஏதையேனும் சொல்ல வருகிறதா? அவனைப்பற்றி அவனது அம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருந்த தகவல்கள் எல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது? இந்தக் கேள்விதான் கடந்த 24 மணிநேரமாக அவனை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அவன் அதை நம்பவில்லை. அவன் இங்கு வந்தது ஒரு சப்பையான, மோசமான குறும்புதான் அது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகத்தான்.

ஒரு சிறிய வெள்ளைப் பட்டாம்பூச்சி அவன் முகத்துக்குக் குறுக்கே பறந்து வந்தது. பூரணப்படுத்தப்படாத கட்டடத்தின் முன்னால் அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்த சிறுமியைக் காண்பதற்காக அவன் பார்வையை உயர்த்தினான். அவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது 11.45 ஐக் காட்டியது. அது அவனது தாய் மரணித்த நேரம்.

“நீங்கள் வருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை” அவன் அவளை நெருங்கியபோது அவள் சொன்னாள்.

அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

“இங்கே ஒரு மரம் இருந்தது இல்லையா?”  சுற்றிப்பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள்.

“அது என்ன மரம்?”

“எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது ஒரு பெரிய மரம்.”

“இப்ப என்ன நேரம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா?”  அவள் புன்னகைக்க மட்டும் செய்தாள்.

அவன் மீண்டும் அதே கேள்வியையே கேட்டான்.

“உங்களுக்குத் தெரியும்?” அவள் சொன்னாள்.

ஒரு கணம் அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

“உண்மையிலேயே நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?”

“நான் யாரென்று உங்களுக்குத் தெரியும் டாஜி”

நீண்ட நாட்களுக்கு முன் இறந்து போன அவனது தாய்தான் அவள் என்று அவள் ஒரு போதும் சொல்லவில்லை. அவள் வாயாலேயே அவள் அதைச் சொல்வதை அவன் கேட்க விரும்பினான். அப்படிச் சொல்ல அவளுக்குத் துணிவிருக்கிறதா என அவன் சவால் விட்டான்.

“அதைச் சொல்லு” அவன் கோரிக்கைவிடுத்தான்.

“வாழ்க்கை மர்மம் நிறைந்தது டாஜி. அவள் அறிவுபூர்வமாகத் தொடங்கினாள். நீண்ட காலமாகவே நாம் பதில் தெரிந்துகொள்ள விரும்புகிற நிறையக் கேள்விகள் உள்ளன. ஆனால் சிலவேளைகளில் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்ற உண்மையை ஒருபோதுமே நாங்கள் தெரிந்துகொண்டதில்லை. எல்லாவற்றுக்கும் என்னிடம் பதிலுள்ளது போல் என்னால் போலியாகப் பாவனை செய்ய முடியவில்லை. இது எப்படி நிகழ்ந்தது? நான் இப்போது எப்படி இங்கே வந்தேன்? ஏன் வந்தேன்? என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. நான் அறிந்துகொண்டதெல்லாம்  மாலைநேர மங்கலான வெளிச்சத்தையும், மூடுபனியையும் போல வாழ்க்கையும் மர்மமாகவே நகர்ந்துகொணடிருக்கிறது என்பதைத்தான். இப்போது இங்கே இருக்கும் பிறகு எங்கேயோ போய்விடும்”

அவன் தலையை ஆட்டினான்.

“விசயங்கள் சும்மா நிகழ்வதில்லை. ஒரு காரணம் கட்டாயம் இருந்தே ஆகும். நேரம் வரும்போது  நாம் அதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாத போதிலும், இது உங்களுக்கு  எவ்வளவு சிரமமானது என்று எனக்குத் தெரியும்”

இது பகடியாக  இருந்தால்,நான் உன் தோலை உரிப்பேன் என அவன் நினைத்துக்கொண்டான்.

அவர்கள் நீண்ட நேரமாக மௌனமாக இருந்தார்கள்.

“ஆக, எனக்கு சொல்லுங்க எனது முதலாவது வார்த்தையை நான் உச்சரித்தபோது நீங்க எனக்கு என்ன கொடுத்தீர்கள்?” அவன் கேட்டான்.

சில வினாடிகள் அவள் யோசித்தாள். “எனக்கு ஞாபகமில்லை. ஒரு இனிமையான விசில் சத்தம் என்று நினைக்கிறேன்”

“அது ஒரு வினா-விடைப் போட்டி”

“போட்டியா..?”

அவன் அவளைப் பார்த்தான்.

“அது ஒரு பள்ளிக்கூட போட்டி. நான் அதில் வெற்றிபெற்ற போது..”

“எனக்கு அது ஞாபகமில்லை”

“எப்படி அது உங்களுக்கு ஞாபகமில்லாமல் போகும்? என்னைக் குறித்து நீங்க மிகவும் பெருமையடைஞ்சிங்க. நான் பெரியவனாக இருந்தபோதிலுங்கூட நீங்க என்னை முதுகில் சுமந்துகொண்டு போனிங்க”

அவள் எதுவும் பேசவில்லை. அவனது கண்கள் மங்கின. அவனுக்கு மிகவும் பிடித்தமானதை அவளால் ஞாபகப்படுத்த முடியாமல் போனதையிட்டு அவன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.  ஒரு சோடி ஏழு சைஸ் அடிடாஸ் சப்பாத்துக்களை அவள் அவனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தாள்.  அது உண்மையான தோல் சப்பாத்து. அவன் தினமும் அதைப் பாடசாலைக்கு அணிந்து செல்வான். அதனால் அங்கு வெறுங்கால்களுடன் கால்பந்து விளையாடிய அநேக மாணவர்கள் மத்தியில் அவன் ஒரு ஹீரோவாக இருந்தான். அவள் அப்போது அவனை அவனது சகபாடிகளுக்கு மத்தியில் கவனிக்கத்தக்க ஆளாக மாற்றி இருந்தாள்.

ஆனால் கடந்தகாலத்தை நோக்குகையில், அவளது இறப்புக்கு முன் அவனுக்காக அவள் வாங்கிய கடைசிப் பொருள் இந்த சப்பாத்துக்கள்தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அவள் அந்த சப்பாத்துகளை வாங்கி தனது பைக்குள் வைத்துக்கொண்டு மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது  மழையில் நனைந்திருந்தாள். அதனால் ஏற்பட்ட குளிர்தான் இறுதியில் அவளது உயிரையே காவுகொண்ட நிமோனியாவுக்கு இட்டுச் சென்றது.

“எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நிறமென்ன?”

அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு தலையை ஆட்டினாள்.  அவள் ஃப்ராடு செய்கிறாள் என்பதை அறிந்துகொண்டதை உறுதிப்படுத்துவது போல் அவன் தலையை ஆட்டினான்.

“அப்போது இந்த நேரம் நீங்க திடுக்குறு கனவுகள் காணுவிங்க”. அவள் மென்மையான குரலில் தொடங்கினாள்.

முகத்தில் கடுப்பை வரவழைத்துக்கொண்டு அதனை ஞாபகிப்பதற்காக கடுமையாக யோசித்தான்.

“என்னால் தகவல்களை ஞாபகப்படுத்த முடியவில்லை” என்றான்.

அவள் தொடர்ந்தாள் :

“ஆனால் நான் நினைக்கிறேன் நீங்க ஒருநாள் கெட்டப்பொல்லால் ஒரு பல்லியை அடிச்சிங்க. அது உங்களது தூக்கத்தில் ஆவியாக வந்து உங்களை அச்சங்காட்டும் என நான் எச்சரித்தேன்”

‘ஓ அதுவா…” என உணர்ச்சி மேலிடக் கூறினான். அந்த சம்பவம் பற்றி சொல்லச் சொன்னான். அவர்களின் ஞாபகப் பதிவுகளிலிருந்து அவள் பல்வேறு தரவுகளை சிறு துண்டுகளாக முன்வைத்தாள்.

அவன் பள்ளிக் கூடத்தில் சண்டைக்குப் போய் ஒரு பையனின் மூக்கை உடைத்த சம்பவத்தை குறிப்பிட்டுச் சொன்னாள். அவள் அவனை அறைக்கு எப்படி அழைத்துச் சென்றாள் என்பதையும், அவனது தலையில் பலதடவை குட்டியதையும் சொன்னாள். பிறகு அதற்கு எதிர்வினையாக அவன் சாப்பிட மறுத்ததையும் சொன்னாள். அவனும் அதை மீட்டிப்பார்த்தான்.

“இந்த விசயங்களெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அவள் தனக்குத் தெரியாது என்பதைப் போல் தன் தோள்களை உயர்த்திக் காண்பித்துவிட்டு தன் தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியைப் பார்த்தாள்.

“எனக்குத் தெரியாது. நான் சும்மா ஊகிக்கிறேன்” என்றாள்.

அவனது கூட்டுக்குடும்பத்தின் பழைய குழுப் போட்டோ ஒன்றை அவளிடம் அவன் காண்பித்த போது விசயங்கள் மாறின. அந்தச் சிறுமியால் அவனது தந்தையை சரியாக அடையாளம் காண முடியவில்லை. அவள் வேறொரு நபரைச் சுட்டிக் காட்டினாள்.

“உனக்கு எனது தந்தையைத் தெரியாதா?” அவநம்பிக்கையாகக் கேட்டான்.

அவள் நீண்ட நேரமாக போட்டோவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக அவள்“எனக்கு அவர் முகம் ஞாபகம் வருதில்லை” என தலையை ஆட்டினாள்.

அவளது கையிலிருந்த புகைப்படத்தை வெடுக்கெனப் பறித்துக் கொண்டு கோபமாக எழுந்தான். அவனது சீற்றப் பார்வையிலிருந்து விலகும் வகையில் அவள் தனது தலையை குனிந்துகொண்டாள்.

“நீ ஒரு சிறிய ஏமாற்றுக்காரி” அவன் சீறினான்.

“திரும்பவும் என் கண்ணில் நீ சிக்கினால் உன் கழுத்தை நெரித்துவிடுவேன்”

அவன் சொல்ல வேண்டியதைச் சொல்ல வெளிக்கிட்டான் :

“வாழ்க்கை நிழல் போல வருகிறது…”

அவள் தொடங்கினாள் :

“ஆனால் மாலைநேர மங்கலான ஒளியையும், மூடுபனியும் போன்றதேயன்றி அது வேறெதுவுமில்லை”.

அவனுக்குப் பரிச்சயமான அந்த சொற்களை கேட்டபோது அவன் தன் பேச்சை இடைநிறுத்தினான்.

“அவை உங்களது தந்தையின் வார்த்தைகள். அவர் தத்துவார்த்தரீதியாக சிந்திக்கும் போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?”

அவனுக்கு அது ஞாபகம் இருந்தது. அவன் ஏதேனும் தவறுகள் செய்யும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அந்த வார்தைகளை அவனது தந்தை சொல்லி இருக்கிறார். அவன் அவளுக்கு முதுகைக் காட்டி நின்றதனால் அவளால் அவனது முகத்தைப் பார்க்க முடியவில்லை.

“பழைய சந்தைப் பக்கம் நீங்கள் செல்லும் போது, கீழ் வீதியால் சென்று பார்த்தால் அங்கே ஒரு சிறிய வீடிருக்கும். அதன் முன்னால் அவகாடோ மரம் இருக்கும். அங்கே ஒஸியோமா வை சந்திக்க வேண்டும் என்று சொல்லுங்க. அவர்கள் உங்களை என்னிடம் அழைச்சி வருவாங்க”

அவளது முகத்துக்கு நேரே நர்த்தனமாடிக் கொண்டிருந்த அவளது வண்ணத்துப்பூச்சிகளுள் ஒன்றை அவன் கோபமாகத் தட்டிவிட்டான்.

“உனது முட்டாள்த்தனமான விளையாட்டுக்கு எனக்கு நேரமில்லை. நான் அங்கு போகமாட்டேன்”.

“அந்திப் பொழுதையும், மூடுபனியையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்”

அவன் மாலைப்பொழுதானதும் அங்கிருந்து நகர்ந்து சென்றான். ஆனால் அவனது ஆன்மாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் பிறப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்னர் அவனது வாழ்க்கையில் நடந்த அவனது அம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருந்த சம்பவங்கள் அவளுக்கு எப்படித் தெரியும் என்ற ஆச்சரியம் அவனைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. இரண்டு வாரங்களையும் தாண்டி அந்த ஆச்சரியம் அவனைத் தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் மாலை வேளையில், பழைய சந்தைப் பக்கமாக பொடி நடையாக சென்றுகொண்டிருந்த போது, அவகாடோ மரம் ஒன்று முன்னாலிருந்த அந்த வீட்டின் அருகே வந்தபோது அவனுக்கு சிறிய வெள்ளை நிற பட்டாம்பூச்சிகளுடன் வந்திருந்த அந்த சிறுமியைப் பற்றி அறிந்துகொள்ள நினைத்தான். அவன் நீண்ட நேரமாக வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருந்தான். பின்னர் வீட்டை நோக்கிச் சென்றான். அவனை ஒரு முதிய பெண் வரவேற்றாள். அவளது நரைத்த தலை மயிர் அவள் அணிந்திருந்த ஸ்கார்ஃபுக்கு கீழாகத் தெரிந்தது. அவள்தான் அந்த சிறுமியின் வளர்ப்புத் தாய். அவள் அவனுக்கு உட்காருவதற்காக முற்றத்தில் ஒரு கதிரையைப் போட்டாள்.

“நீங்கள் டாஜியா?”

அவன் ஆம் என தலையசைத்தான். அவள் அறைக்குள் சென்று ஒரு பொதியுடன் திரும்பி வந்தாள்.

“எனது மகள், ஒஸியோமா நீங்கள் வருவீர்கள் என்று சொன்னாள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

“அவள் இதை உங்களிடம் கொடுக்கும்படி சொன்னாள். அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்”

“என்னால் அவளுடன் பேச முடியுமா?”

அவள் சோகமாக தலையசைத்து மறுத்தாள்.

“இந்தப் பொருளைத் தேடி அவள் மார்க்கெட் முழுவதும் அலைந்து திரிந்தாள். இது உங்களிடம் இருக்க வேண்டும் என விரும்பினாள். இதை அவள் கண்டடைந்த அன்று விபத்தொன்றில் சிக்கி இறந்து போனாள். ஒரு கிழமைக்கு முன்னர் தான் நாங்கள் அவளை அடக்கம் செய்தோம்”.

அவன் திகைத்துப் போய் நின்றிருந்தான். அவனால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

“இந்தப் பொதி உங்களிடம்தான் இருக்க வேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள். அவள் உங்களைப் பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பாள். அந்திப்பொழுதும் மூடுபனியும் என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்”.

அவன் அந்தப் பார்சலைத் திறந்து பார்த்தான். அதனுள் ஏழு சைஸ் அடிடாஸ் சப்பாத்துகள் இருந்தன.

0000000000000000000000000000000000000

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

 

ஜிஃப்ரி ஹாஸன்அபூபக்கர் ஆடம் இப்றாஹிம் ஆங்கிலத்தில் எழுதி வரும் நைஜீரிய எழுத்தாளர். இவரது ‘The Whispering Trees’ எனும் சிறுகதைத் தொகுப்பு ஆபிரிக்க இலக்கியத்துக்கான விருதின் குறும்பட்டியலில் இடம்பெற்றது. இலக்கியத்துக்கான நைஜீரியன் தேசிய விருது உள்ளிட்ட முக்கியமான விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரது ‘Season of Crimson Blossoms’ (தீக்கொன்றை மலரும் பருவம்) என்ற நாவல் உலகளவில் அதிக கவனிப்பைப் பெற்றது. இந்நாவல் தமிழிலிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

0000000000000000000000000000000000000

ஜிஃப்ரி ஹஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

 

 649 total views,  1 views today

(Visited 142 times, 1 visits today)