தேசத்துரோகி-கவிதை-கோ.நாதன்

கோ.நாதன்

வன்முறைகளை அறியாத
என் மகன்
ஒவ்வொரு காலையும்
புத்தகங்களைப் பைகளில் நிறைப்பதும்,
வாசற் கதவடிக்கு சென்று மீளத் திரும்புவதும்,
பின்
அறைக்குள் அடங்கி விடுவதும் வழமையாக்கி கொண்டான்.

000000

பள்ளிக்கூடத்தில்
நிறைவு செய்ய முடியாமல் போன
பாடப் புத்தகங்களினால் நொந்தவன்
பரீட்சைக்கான தேடலின் மனப் பிறழ்வில்
சுவரெல்லாம் ஓவியம் வரைய முற்பட்டவன்
போரோவியம் சார்ந்ததும்,
சமூக ஓவியம் சார்ந்ததும்,
மத ஓவியம் சார்ந்ததும்,
அதுவும்
ஒடுக்கப்பட்டவர்களின் தீயிட்ட வரலாற்று வலியாகவே இருந்தது.

000000

தனிமை நேசிக்கும் அவன்
வீட்டுத் தோட்டத்து
பூக்களோடும்,
இலைகளோடும்,
பறவைகளோடும்,
பூச்சிகளோடும்,
ஞானத்தின் மென்மையை பெற்றவனாய்.
அமைதி வழியே போதிக்க இறங்கினான்.

000000

பக்கத்து வீட்டு மாற்றினத்தின்
பால் சோறுக்கும்,
சம்பலுக்கும் ஈர்க்கப்பட்டவன்.
ஒரே தேசம்,
ஒரே மொழி,
ஒரே கொடி,
ஒரே மக்கள் கோஷத்தில் மூழ்கி
தனது
மதத்தையும்,
இனத்தையும்,
கலாசாரத்தையும் விரிவுபடுத்த தொடங்கினான்.

000000

சக இனப் போராட்டம்,
ஆயுதம் மௌனித்து போனதும்
இனப் படுகொலையை
வீதி தோறும் வெடில் கொளுத்தி
கொண்டாடியவர்களுடன் ஜக்கியப்பட்டவன்.
குருதி ஈரக் காயங்களில்
வெற்றி துவேசச் சொல்லை
போர் ஒரு சாத்தான்
என்றே அறை கூவல் விடுத்தான்.

000000

நெறி நூல் கோர்ப்பில்
வையகம் எங்கும் மிதவாத போக்கை
மதத்தின் அடிப்படைவாத கொள்கைக்கு
திசை திரும்பியவன்
கட்டுடைந்த பின்னர் அடையாளம்
தெரியாத பாதையில்
புதைந்து நரகத்தை தேடி
தற்கொலையில் வீழ்ந்து
போனான்.

000000

என் மகன் ஒரு வன்மத்தை,
ஒரு துரோகத்தை,
சூழ்ச்சியை,
வன்செயலை,
என் தேசம் மீது கட்டவிழ்த்தனால்,
நானும்,சமூகமும்
தேசத் துரோகி ஆக்கப்பட்டோம்.?

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ நாதன்

 606 total views,  1 views today

(Visited 208 times, 1 visits today)