ஆசை மனதளவு-சிறுகதை-நிவேதா உதயராஜன்

 

நிவேதா உதயராஜன்காலை இள வெயில் எங்கும் இருள் விரட்டி ஒரு கதகதப்பைத் தந்துகொண்டிருந்தது.  கடந்த ஆறு மாத குளிரின் பின் இன்றுதான் வெப்பநிலை இருபது பாகை செல்கியசுக்கு வந்துள்ளது. மரங்களில் தளிர்களின் பசுமை இங்கொன்றும் அங்கொன்றுமாயும் பார்க்கவே மனதிலும் ஒரு உற்சாகத்தையும்  புன்னகையைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இனியாள் எதையுமே பார்க்கப் பிடிக்காது படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள். மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர். மனிதாபிமானமும் மனச்சாட்சியும் அற்றுப்போய் எல்லாம் பணமாகி, கூச்சம் எதுவுமற்று …… அவளுக்கு நினைக்கத் தன்மேலேயே கூச்சம் எழுந்தது.

நான் கூடக் கூச்சமற்றவள் தானே. உயிருக்காக இப்படி ஒன்றைச் செய்யப் போய்த் தானே இப்படி ஒரு சுழலில் மாட்டி நிற்கிறேன். அங்கேயே இருந்திருக்க வேண்டும். இத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் தானே போரின் வடுச்சுமந்து, காயங்களை இன்னுமே ஆற்ற முடியாது, மீண்டு எழவே முடியாத சகதிக்குள் சிக்கி……ஒருவிதத்தில் நானும் சுயநலம் கொண்டவள் தான்…. எண்ணிக்கொண்டு இருக்கும் போதே கைத்தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவள், தமக்கையின் எண் என்றதும் கோபத்துடன் தொலைபேசியை முற்றிலும் அணைத்துவிட்டு மேசையில் வைத்தாள்.

இவள் எப்பிடி எனக்கு அக்காவாகப் பிறந்தாள் என்று கோபம் எட்டிப் பார்த்தது. தான் தவறு செய்ததுமல்லாமல் என்னையும் செய்யும்படி தூண்டுவது எத்தனை தவறு. என்னால் முடியாது என்று எத்தனை தடவை அழுத்தம் திருத்தமாகக் கூறிய பின்னும்  சீச் சீ..வெளிநாடு  வந்து கொஞ்சம் பணமும் சேர்ந்தால் இப்படியா நடப்பது என்று எண்ணியவள், உடனேயே அந்த எண்ணமே தவறு என்றும் எண்ணிக்கொண்டாள். ஒருத்தியை வைத்து  மற்றவர்களையும் அப்படி எண்ணுவது தவறு என்று எண்ணிய மாத்திரத்தில் ஜீவா அண்ணா தான் மனதில் வந்தார். அவரும் இல்லை என்றால் நான் சிலவேளை தற்கொலை தான் செய்திருப்பேன் என எண்ணிக்கொண்டே படுக்கையை விட்டு எழ மனமின்றி மறுபுறம் திரும்பிக் குறுகிக் கொண்டாள் இனியாள்.

0000000000000000000000000000

எங்கும் ஒரே புகை மூட்டமாகக் காட்சியளிக்க ஓடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுடன் அவளும் சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். அங்கங்கே குண்டுகள் பட்டு எரிந்துகொண்டிருக்கும் கட்டடங்களும் நிலம் செடி கொடிகள் எல்லாம்….ஐயோ…. அவள் பின்னால் பிணங்கள் எல்லாம் எழுந்து ஓடிவருவதுபோல் இருக்க அவற்றிலிருந்து தப்பிப்பதற்காய் இன்னும் வேகமாக ஓடியோடி கால்கள் ஒய்ந்துபோக அத்தனையும் இவளை வந்து மூடியதில் மூச்சே விடமுடியாது இவள் கத்திய சத்தத்தில் நந்தினி ஓடிவந்து இவளை உலுக்கியதில் இவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்தது. இப்பிடித்தான் கடந்த ஆறுமாதமாக போர் தந்த சுழலில் சிக்கி வெளிவர முடியாது தவிப்பவளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்து வெள்ளவத்தையில் வைத்திருக்கிறாள் நந்தினி.

இனியாளின் சகோதரி ஒருத்தி லண்டனில் இருக்கிறாள். அவள் எப்பிடியும் இனியாளைக் கூப்பிடுவதற்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி அவள் செலவுக்கு கொஞ்சப் பணமும் அனுப்பியிருக்கிறாள். பணம் அனுப்பாவிட்டால் கூட நந்தினி அவளிடம் அதை எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான். கொழும்பில் ஒரு பத்திரிக்கை நிருபராக இருப்பதனால் இயல்பாகவே நந்தினியிடம் இருக்கும் துணிவுதான் அவளைத் தன்னுடன் வைத்திருக்க உதவியது. இயக்கத்தில் இருந்த ஒருத்தியை, காம்பில் ஆட்களோடு ஆட்களாய் தப்பிப் பிழைத்து வந்தவளை தன்னுடன் கூட்டிக்கொண்டு வர அவளாக ஆசைப்படவில்லைத்தான். ஆனாலும்” நந்தினி இவள் இனியாளை உன்னோட கூட்டிக்கொண்டு போய் வச்சிருந்து பாஸ்போட்டும் எடுத்துக் குடுத்தால் மூத்தவள் எப்பிடியும் வெளியில எடுத்துப் போடுவள். இங்க இருந்தால் இவள் யோசிச்சு யோசிச்சே செத்துப்போவள். வெளியில சனத்தை நம்பிப் போகவும் ஏலாது. இந்த உதவியை மட்டும் செய் நந்தினி ” என்று பெரியம்மா கெஞ்சிய கெஞ்சில் இப்ப  நான்கு மாதங்கள் இனியாள் நந்தினியுடன் தான்.

எப்போதும் எங்கோ வெறித்தபடி படுத்துக் கிடப்பதே இனியாளின் நிலையாக இருக்க, அவள்மேல் இரக்கப்பட்டு நந்தினியும் எதுவும் சொல்வதில்லை. இவளாவது எத்தனை குடுத்துவைத்தவள். தப்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வந்துவிட்டாளே. பிடிபட்டிருந்தால் என்ன கதி. பாவம் எமது பெண்போராளிகள் என மனதுள் மற்றவர்களுக்காக கவலை கொண்டு பெருமூச்சை மட்டும் தான் விட முடிந்தது நந்தினியால்.

இத்தனை மிருதுவானவள் எப்பிடி இயக்கத்தில் சேர்ந்தாள் என்று நந்தினிக்கு இன்றுவரை வியப்பாகவே  இருந்தது. அதிர்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாதவள். கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினாறு வயதில் இயக்கத்துடன் இணைந்துவிட்டாள். பெரியம்மா அழுதழுது எத்தனையோ காம்பில் கேட்டும் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதி யுத்தத்தம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு நாட்களுக்கு முன் தாயாரிடம் வந்து சேர்ந்தபோது ஒரு நிமிடம் தாய்க்கே அவளை அடையாளம் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளில் இனியாளிடம் நிறைய மாற்றங்கள். நந்தினி அவள் இயக்கத்தில் இருந்தது பற்றி எத்தனையோ தடவை கேட்டும் வாயே திறக்கவில்லை அமசடக்கி. இவளிடம் தமக்கை நேற்றுக் கூறியதை எப்படிக் கூறுவது என்று யோசனையோடுதான் நந்தினி நேற்றிலிருந்து இருக்கிறாள். எப்படியும் இன்று இவளுடன் கதைத்துவிடவே வேண்டும் என்று முடிவு கட்டியபடி ” இனியாள் எழும்பிச் சாப்பிடும். உம்மோட முக்கியமாய் ஒரு கதை கதைக்கவேணும்” என்றபடி தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

00000000000000000000000000

இரண்டு ஆண்டுகள் எப்பிடி ஓடிப்போனது என்று வியப்பாக இருந்தது இனியாளுக்கு. இந்த  இரண்டு ஆண்டுகளில் அவள் தன் இழப்புக்களையும் வேதனைகளையும் மறந்தாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் லண்டன் வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு விட்டாள். ஜீவா அண்ணனின் கடையில் வேலை கிடைத்தது தான் செய்த அதிட்டம் தான் என்று அவள் வலுவாக நம்பியதற்கிணங்க அவர் தான் அவளின் விசா அலுவல் தொடக்கம் லோயரிடம் கதைப்பதுவரை செய்கிறார். எத்தனையோ நாட்கள் விசாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவளை, திரும்பிப் போனால் அவள் மட்டுமல்ல அவள் தாயும் சந்திக்க நேரும் துன்பங்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி அவள் மனதை மாற்றியவரும் அவர் தான்.

பெண்கள் என்றாலே படுக்கை மட்டுமே லண்டனில் வசிக்கும் தமிழ் ஆண்களுக்கு நினைவுவரும் என்று அவள் நூறுவீதமாக நம்பியதை, இல்லை நல்லவர்கள் தான் பலரும் என்று நிரூபித்தவர் ஜீவா அண்ணனும் அவர் நண்பர்களும். இவளை லோயரிடம் அழைத்துப்போய் இவள் கேசை இத்தனை தூரம் கொண்டு வருவதற்கு உதவிய பலரை அவள் மனம் நினைத்துப் பார்க்கிறது.

உண்மைக்குப் புறம்பாக எப்படிப் பேசுவது என்று அவள் முரண்பட்ட நேரம் எல்லாம் நன்மைக்காகப் பொய்யும் சொல்லலாம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அவனின் பேராசைக்குத்தானே இத்தனையும் என்று ஜீவா அண்ணா பல தடவை சொல்லித்தான் அவள் கோட்டில் சாட்சி சொன்னது.

அன்றைய நாளை நினைத்தால் இப்பகூட அவளுக்குக்குலை நடுங்குகிறது. சிவா என்னும் அந்த மிருகத்திடமிருந்து தான் தப்பியது தான் செய்த புண்ணியம் தான் என்று அவள் கடவுளை நம்பத் தொடங்கியதும் அதன் பின்னர் தான்.

00000000000000000000000000000

சிவா இனியாளைப் பதிவுத் திருமணம் செய்யக் கொழும்பு வந்திருந்தான். காலையில் இனியாளை எழுப்பி, வேண்டா வெறுப்பாக அவள் குளித்து சேலை உடுத்து,  இனியாளைத் தயார் செய்யவே நந்தினிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. உதுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டன் என்று அடம்பிடித்தவளை எவ்வளவோ சொல்லித்தான் சம்மதிக்கவைக்க வேண்டியிருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமக்கை கூறிய விபரங்களின் படி லண்டனிலிருந்து வந்து சேர்ந்தவனுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். அவனைப் பார்த்ததும் நந்தினிக்கு அவனை நம்பலாம் போல் தான்  இருந்தது. இனியாள் அவனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் எதுவும் பேசாமலே இருந்தாள். கடைசி இருவருக்கும் இருபது வயதாவது இடைவெளி இருக்கும். தமக்கைக்குத் தெரிந்தவன் என்று இவனை நம்பி இவளைக் கூட அனுப்ப முடியுமா என்று யோசித்தபடியே அவனை அளக்கப் பார்த்தாள் நந்தினி. தன் தாயிடம் கூட இந்த விடயம் பற்றிக் கூற வேண்டாம் என்று தமக்கை கூறியதில் காதும் காதும் வைத்ததுபோல் இதை முடிக்க வேண்டி இருந்தது.

சிவாவுடன் கதைத்த மட்டில் நன்றாகத்தான் கதைக்கிறான். பெண்கள் என்று எம்மிடம் வழியவும் இல்லை. நேர் பார்வையுடனும் இருக்கிறான். தமக்கை லண்டனில் தானே இருக்கிறாள். இவள் போய் இறங்கியவுடன் தமக்கையுடன் தானே இருக்கப் போகிறாள். இங்கு வைத்து இவளை நெடுகப் பாதுகாக்க முடியாது என எண்ணியபடியே சாதாரணமாக அலங்கரித்து முடிக்கவே பெரும்பாடானது. எதுக்கு அலங்காரம் ? என்று அடம் பிடித்தவளை நாங்கள் சாதாரணமாப் போய் நின்றால் நொத்தாருக்கே சந்தேகம் வந்திடும் என்று ஒருவாறு கூட்டிப்போய் திருமணப் பதிவை முடித்து சரியாக ஒன்றரை மாதத்தில் அவளுக்கு விசாவும் கிடைத்தது இனியாளின் அதிட்டம் என்றுதான் நந்தினி எண்ணினாள்.

லண்டன் வந்து ஒரு மாதம் வரை அவள் சகோதரியின் வீட்டில் தான் தங்கியிருந்தாள். ஒவ்வொருநாளும் அந்த சிவா, இவளின் வெளிநாடு வருகைக்காக மட்டும் என்று திருமணப்பதிவு செய்து இவளை லண்டன் அழைத்து வந்தவன், பல்லிளித்துக்கொண்டு அடிக்கடி தமக்கை வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவன் வரும்போதெல்லாம்  இவள் உடனேயே அறைக்குள் சென்று இருந்துவிடுவாள். தமக்கை அவனை விழுந்துவிழுந்து உபசரிப்பது கேட்கும். அதன்பின் இருவரும் எதோ குசுகுசுப்பதும் கேட்கும். அத்தானும் கூட எதுவும் சொல்லாதது இவளுக்கு இன்னும் கோபத்தை வரவழைக்கும். சொந்த அக்காவே இவள் வாழ்வில் மண் அள்ளிப் போட எண்ணுகையில் அத்தான் பாவம் என்ன செய்வார் என்று அவர் மேலும் இரக்கம் எழும்.

தமக்கை அன்று வெளியே சென்று சிறிது நேரத்தில் கதவு தட்டுப்பட, தமக்கை தான் வந்து தட்டுகிறாள் என்று இவள் எழுந்து சென்று கதவைத் திறந்தால் அந்த சிவா இவளைத் இடிப்பதுபோல் உங்களோட கதைக்க வேண்டும் என்று உள்ளே வந்துவிட்டான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முன் “என்னை ஏன் உமக்குப் பிடிக்கேல்லை. என்னட்டை அழகு இல்லையோ, காசுபணம் இல்லையோ, உம்மை நான் சந்தோசமா வச்சிருப்பன்”  என்று அவன் ஏதேதோ பினாத்த, எல்லாம் தன் தமக்கையின் சதி தான் என்று அவளுக்குத் தெளிவாகப் புரிய கோபம் வார்த்தைகளாய் வந்து விழுந்தது. வெளியில போடா. பெண்டில் பிள்ளையோட இருக்கிற உனக்கு நான் கேட்குதோ. விசாவுக்கு எண்டு சொல்லித்தானே என்னை கூட்டி வந்தனி. அக்கா காசு தந்திட்டாள் தானே. உடனடியா வெளியில போகாட்டிப் போலீசைக் கூப்பிடுவன் என்று கத்தியவளை அவன் சிரிப்பு நிறுத்த, யோசனையோடு அவனைப் பார்த்தாள் இனியாள்.

உன்ர அக்கா எனக்கு இன்னும் காசு தரேல்லை. நீ சட்டப்படி என்ர மனிசி. நான் மனம் வச்சா உன்னை உடனே திருப்பி அனுப்பலாம். நான் மனம் வச்சாத்தான் நீ தொடர்ந்து இங்க இருக்க விசாவும் தருவாங்கள். எதோ சுத்தபத்தமான ஆள்போல நால்லாத்தான் பிறியம் விடுறாய். ஆமிக்காரர் உன்னைச் சும்மாவே விட்டிருப்பாங்கள்”   என்றபடி எழுந்து அவளருகில் வர, எப்பிடித்தான் அவளுக்கு அந்தக் கோபமும் பலமும் வந்ததோ  அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவனிடம் அகப்படாமல், கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடி, ஜீவா அண்ணன் வீட்டு வாசல் மணியை அடித்துக்கொண்டே நிக்க, கதவைத் திறந்த ஜீவா அண்ணனின் மனைவி சுகி வீட்டு உடுப்போடு காலில் செருப்பும் இல்லாமல் இவள் நின்ற நிலையைப் பார்த்து “உள்ள வாரும்” என்று இவள் தோளைப் பிடித்து அழைக்க என்னைக் காப்பாத்துங்கோ அக்கா என்று அவள் தோழில் சாய்ந்து குளறி அழுபவளை அழுது முடியும் மட்டும் அணைத்து முதுகு தடவி அசுவாசப்படுத்திவிட்டு சோபாவில் அமரச் செய்தார் சுகி.  வெறுங்காலுடன் ஓடி வந்ததில் காலில் எதுவோ குத்தி இரத்தம் வடிந்ததைக் கூட சுகிதான் கண்டு காலைக் கழுவிவித்து மருந்து போட்டுக் கட்டி, கணவனின் வருகைக்காகக் காத்திருக்கவாரம்பித்தார்.

000000000000000000000000000

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின் தமக்கை தேடி வந்தபோது இவள் பார்க்க மறுத்துவிட்டாள். அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என ஜீவா அண்ணன் எச்சரித்து இருந்ததையும் மீறி இப்ப வந்து நிற்கும் தமக்கையை எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கும் அவளைப் பார்க்க தமக்கையின் வாயும் தன் வேலையை ஆரம்பித்தது. உனக்கு விசரோடி. சிவா உனக்கு விசா எடுத்துத் தராட்டி நீ சிலோனுக்குத்தான் போகவேணும். அங்க போய் என்ன செய்வாய். ஒரே ஒருக்கா அவனுடன் நீ இருந்தாப் போதும். அவன் விசா எடுத்துத் தருவான் என்று சொன்னதுதான் தாமதம்,” நீ எல்லாம் ஒரு பொம்பிளையோ? இந்த இரண்டு வருசமா வேலை செய்து உன்ர காசு தந்திட்டன். உனக்கு வேணும் எண்டா நீயே அவனோட படுத்து காசைக் கழிச்சுக் கொள்”  என்றதும் தான் தாமதம் ” எளிய நாயே, எனக்குச் சொல்லிறியோ. ஜீவா அண்ணா தான் உன்னை வச்சிருக்கிறார் போல என்று சொல்லி முடியும் முன்பே தமக்கையின் கன்னத்தில் இனியாள் அடித்த அடி இடியாய் இறங்க, விதிர்த்துப் போய்க் கன்னத்தைத்ப் பிடித்துக்கொண்டு நின்ற தமக்கையை பிடித்துத் தள்ளிக்கொண்டு போய் கடையின் வெளியே விட்டு, உனக்கும் எனக்கும் இனி எந்த உறவுமில்லை. இந்தப் பக்கம் வந்தால் அக்கா என்று பார்க்க மாட்டன் என்று உறுமும் இனியாளைப் பயத்துடன் பார்த்தபடி நகரும் தமக்கையை எப்படி நீ எனக்குத் தமக்கையாகப் பிறந்தாய் என்று வெறுப்புடன் பார்த்துக்கொண்டே நின்றாள் இனியாள்.

00000000000000000000

இன்று தீர்ப்புச் சொல்லும் நாள். இருவருக்கும் விவாகரத்துக்கு பதிவுசெய்து அவனின் சொத்துக்களிலும் இவளுக்குப் பங்கு தரவேண்டும் என்று இவள் பக்கம் வாதாடும் லோயர் வழக்குப் போட்டபின் தான் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடி வந்தான் சிவா. அப்ப கூட அவனின் தடிப்பும் கோபமும் குறையவில்லை. “நீ என்னோட ஒண்டா இருக்கேல்லை எண்டு கோட்டில சொல்லுவன் ” என்றதற்கு, “அப்பிடிச் சொன்னால் உன்னைத்தான் முதலில் உள்ளே பிடித்து ஏழு வருடம் போடுவார்கள். தாராளமா உள்ள போய் இருக்கலாம் ” என்று இவள் தனக்கும் சட்டங்கள் பற்றித் தெரியும் என்று அவனுக்கு உணர்த்தக் கூறியவுடன் அவன் எதுவும் கூறாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனதை நினைக்க இப்பவும் சிரிப்பு வந்தது இனியாளுக்கு. ஜீவா அண்ணன் சொல்லியிராவிட்டால் இவளுக்கு இந்த நாட்டுச் சட்டங்கள் பற்றி எப்பிடித் தெரிந்திருக்கும்.

லோயர் சொன்னபோது இனியாளுக்குக் கூட அவனின் சொத்தில் பங்கு கேட்பதில் எந்தவித உடன்பாடும் இல்லை. நீங்கள் சும்மா இருங்கோ பிள்ளை. உப்பிடியான ஆண்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேணும் எண்டு லோயர் சொன்னதில் அவளும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனின் ஐந்து அறைகள் கொண்ட வீட்டின் பெறுமதியில் அரைவாசியை அவளுக்கு வழங்கவேண்டும் என்று தீர்ப்பானதும் அவன் எரித்து விடுவதுபோல் பார்த்த பார்வை இவளை ஒன்றுமே செய்யவில்லை.

“அவர் எதோ தெரியாமல் செய்துபோட்டார் பிள்ளை. எங்களுக்கும் மூண்டு பிள்ளைகள். இப்பிடிச் சொத்தைக் கேட்டால் எப்பிடி ” என்று  சிவாவின் மனைவி வந்து அழுது மாய்மாலம் விட்டும் இவள் மசியவில்லை. “கேவலம் காசுக்காக இப்பிடி புருஷனை விவாகரத்துச் செய்துவிட்டு ஒண்டா இருக்கிறதாலதான் மற்றப் பெண்களையும் உங்கள் கணவன் கேவலமாக நினைக்கிறான். நான் ஒண்டும் செய்ய ஏலாது ” என்று முகத்திலடித்தாற் போல அறைந்து கதவைச் சாற்றிய பின் அப்படிச் செய்ததனால் தானே நீ இன்று இங்கு நின்றுகொண்டிருக்கிறாய் என்று கேள்வி கேட்ட மனதை அலட்சியம் செய்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இரண்டு மாதங்களின் பின் அவனிடமிருந்து இன்னும் இரண்டு மாதகால அவகாசம் கேட்டு அவளுக்கு வந்திருந்த கடிதத்தை லோயரிடம் கொடுக்கும் போது “தங்கச்சி கவலைப்பட வேண்டாம். இரண்டு மாதத்தில அவர் உங்களுக்குக் காசு தராட்டால் கோட் அவற்றை சொத்தை தானே வித்து உங்களுக்கு வரவேண்டிய காசைத் தரும்” என்று கூறி ஒன்றரை மாதத்தின் பின்னர் லோயர் இரண்டு லட்சம் பவுன்சை இவள் வங்கிக் கணக்குக்கு மாற்ற, அடுத்த நாளே சிவாவின் வீட்டுக்கு ஜீவா அண்ணனுடன் இவள் சென்று அவனின் மனைவியின் வங்கிக்கணக்கு இலக்கத்தை வாங்கி வந்ததோடு அல்லாமல் அத்தனை பணத்தையும் சிவாவின் மனைவியின்  பெயருக்கு மாற்றியபின் தான் அவளால் நின்மதியாக மூச்சே விட முடிந்தது.

“கொஞ்சக் காசை வச்சுக்கொண்டு மிச்சத்தைக் குடுத்திருக்கலாம்” என்று ஜீவா அண்ணா கூறியதையும் அவள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. “அவனின் காசை நான் எடுத்தால் நானும் விபச்சாரி ஆகிவிடுவன் அண்ணா. இப்ப நான் சுதந்திரமானவளாய் சுத்தமானவளாய் ஆனது போல இருக்கண்ணா. நானே உழைச்சுச் சாப்பிட எனக்குத் தெம்பும் இருக்கண்ணா” என்று கூறிவிட்டுச் செல்பவளை பெருமையாகப் பார்த்தபடி நின்றார் ஜீவா.

நிவேதா உதயராஜன்-பெரிய பிரித்தானியா

(Visited 100 times, 1 visits today)