நிவேதா உதயராஜன்-கவிதைகள்

நிவேதா உதயராஜன்

மலிந்துமெலிந்தும் இருக்கிறது காலத்தின் கணிப்பீடு
மனிதவளங்களும் குறியீடுகளும் மதிப்பிழந்து
மின்கதிர்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றன
உறவுகளிடையேயான உணர்வுப் பின்னல்கள்
உணரப்படாமலே உருக்குலைந்து போகிறது
போலிகளை மெய்யென நம்பி மாந்தர்
போதைகளோடு நடமாடுகின்றனர் எப்போதும்
பொய்களின் புணர்வுகளோடு நிறைக்கப்படுகிறது
புரிந்துணரப்படா உறவுகளின் வார்த்தைகள்
உய்த்துணரப்படமுடியா உறவுச் சிக்கல்கள்
ஊரெங்கும் உலைமூட்டப்படுகின்றன
வர்ணங்கள் இழந்த வானவிற்களாய் மனிதர்
வாழ்வை வார்த்தைகளால் நிறைக்கின்றனர்
வசந்தகாலங்களின் பச்சைக்களற்ற மரம்போல்
வாழ்வின் வசந்தங்கள் குறைந்துகொண்டே வர
மாற்றமுடியாத நோய்களின் வீரியத்துடன்
மனிதமனம் நிறைவுற முடியாது அலைகிறது
தற்காத்துக்கொள்ளத் தகுதிகளற்றதாய் உறவு
தளம்பல்களுடன் தரணியெங்கும் வழிகின்றது
நுண்கதிர்களின் நுணுக்கங்கள் எமையாள நாம்
ஏதுமற்றதாய் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

0000000000000000000000

அன்பினால் நெய்யப்பட்டிருந்தது என் வீடு
அலங்காரமற்ற வார்த்தைகளின் நெகிழ்வில்
எண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு
எந்நேரமும் சிரிப்பொலி கேட்டபடி
கவலைகளற்று கனிந்திருந்தது

மகிழ்வே அவ்வீட்டின் அடையாளமாக
நிரந்தர நினைவுகள் நெகிழ்தலுற்று
நிகழ்வின் கனங்கள் ஏதுமற்று
நிமிடங்கள் நிர்மலமாய் கடந்ததில்
நெகிழ்தல்களில் கரைந்தது மனது

கர்வம் கொண்டே நானும்
கனவில் மிதந்தபடி கண்ணயர்ந்தேன்

காலக்கணக்குத் தவறியதில்
கனவே நினைவுகளாய் நிரம்ப
நிரந்தரமற்ற நிகழ்வுகளில் அசைவில்
நிறுவமுடியா நிர்ப்பந்தங்களுடன்
நிம்மதியும் குலைந்துபோனது

விதியின் விடமேறிய பார்வை
விதியற்று என்மேல் வீழ்ந்ததில்
வீட்டின் அலங்காரம் குலைந்து
எண்ணங்கள் எதிர்மறைகளாகி
ஏக்கங்கள் சுமந்து ஏகாந்தமானது

தவிப்புகள் நிறைந்த மனது தினம்
உடன்பாடற்று எதிர்மறையாய்
தழும்புகள் மேல் கீறல்களை
தாராளமாய் விதைத்தபடி நகர
காலக்கணக்கில் மீண்டும் மனம்
கனவு கலைந்து தானாய் எழுந்தது

மானிடமனது மேன்மை கொண்டது
மனதின் மகத்துவம் வெற்றி கொண்டது
அன்பின் ஆளுமை வெற்றி கண்டிட
அகந்தை அகன்று மாயை அகன்றிட
மற்றவை எல்லாம் மாசு என்றறிந்து
மதியின் கணக்கை விதி வென்றிட
மானுடம் வென்று மகிழ்வுகண்டது

நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்

(Visited 123 times, 1 visits today)