புற்றின் வேர்கள்- எம்.ஏ.ஷகி

 

எம்.ஏ.ஷகி

அணுத்திரள் பிறழ்வுகளால்
அக்கினித்துகள்கள்
மையத்தில் குவிய
உடற்பொறிக்குள்
அழன்றதொரு
தணற்பூ

மரணவிருட்சத்தின்
விழுது
தசையங்களைத்
துளைத்து
இழையங்களில்
வேர்விட்டுப்
படர்ந்தது
தீநாக்குகளின்
பெரும்பசியுடன்

திசுக்கள் சிதைந்து
நலிய எதிர்ப்பின்
வீரியம் நீர்த்து
கலங்களைத் தின்று
கிளைத்தது
ஒற்றைத் தனத்தில்

காலப்பறவையின்
சிறகிலிருந்து
எனதான
ஆயுள் றக்கைகளை
ஒவ்வொன்றாய்
இடுங்கி
தசைவிராண்டிச்
சுகித்தது
சாவின் விரல்கள்

வேதித்திரவத்தில்
நரம்பிழைகள்
பொசுங்க
எரிக்கப்படும்
கலங்கள்
பதறியுளைய
எலும்பு மச்சைகளில்
செந்நீர் வற்ற
உயிர்
சிறுகக்கரையும்
வலியில்
அமிழ்ந்திருந்தேன்

மயிர்கள் உதிர்ந்த
உரோமக்கால்களின்
விரல்மேவி
வெற்றுத்தடம்
துளாவித் தளர
எரிந்தவுடலின்
எச்சமாய்
கருநாவலென
மெய்
தோய

ஆயாசமுற்ற
மனம்
காலத்தின்
விரக்தியில்
பற்றற்றுச்சரியும்

கங்குகளுதறிச்
சிலிர்த்தெழுதலின்
எதிரொலியை
ரணப்பேழையில்
ஊறிக் காய்ச்சிக்
காயப்போட்ட
மனவெளியெங்கும்
நிரவி

மீள்தலின்
எல்லையில்
படர்ந்திருக்கிறேன் மெல்ல

எம்.ஏ.ஷகி- இலங்கை

எம்.ஏ.ஷகி

(Visited 91 times, 1 visits today)
 
எம்.ஏ.ஷகி

வதை-கவிதை-எம்.ஏ.ஷகி

  எதிர்கொள்கிறேன் நேரில்வா… நீ முதன்முதலில் முத்தமிட்ட இதே நெற்றிப்பொட்டில் ஆரம்பி குறி பார்த்து … அணுவும் பிசகாமல்.. ஒரே ஒரு தோட்டா போதும் சுடு ஆலகாலம் கொப்பளிப்பதாய் தெரியும் […]