கடவுளைச் சுமக்கும் குழந்தைகள்-மாலினி

ஊர்வசி

மாலினி

 

எனக்கு
உலகம் புரியத்தொடங்கிய காலத்தில்
நான் ஊர்வசியைப் புரிந்து கொள்ள
முயன்று கொண்டிருந்தேன்.

ஊர்வசியின்
ஆத்மா இறந்த உடலைக் கொழுத்தி
குளிர்காயக் கொடுத்த பொழுதுகளில்
அவளது கணவன்
கசத்தின் கபத்தை
காறித் துப்பி விட்டு
பாணி மருந்தை
மேசைக்கரண்டியில் சரித்து விழுங்குவான்

ஊர்வசியின் உடல்
குதறிப் புசிக்கப்பட்டு
துவண்டு கிடந்த நாட்களில்
அவளது குழந்தைகள் பசியைப் பற்றி
மூச்சு விடாமல்
களிப்போடு உண்டு விட்டு
உறங்குவார்கள்
சிருங்காரி
என்று ஒதுக்கப்பட்ட
அளவுக்கதிகமாக
அலங்கரித்துக் கொள்ளும்
ஊர்வசிக்கு,
எல்லோரையும் போல்
நோய் வந்து வருத்துமா
பசி குடலைப் பிடுங்குமா
தூக்கம் கண்களைத் துவட்டுமா
கண்ணீர் உடைப்பெடுக்குமா
என்பதெல்லாம் ஆச்சரியமான
கேள்விக்குறிகளாக எனக்குள்
அடங்கிக் கிடக்க அவள் எப்போதும்
புன்னகையின் புதிராக இருந்தாள்.

அப்படியாகப்பட்ட ஊர்வசி
புகைமண்டிய ஓவியம் போலாகி
ஒருநாள்
ஒருக்களிந்து ஓய்ந்து போன போது,

கசத்தோடு கிடந்தவன்
கபத்தை காறி
ஊர்வசியின் பக்கமாகத் துப்பி விட்டு
அடுத்த வேளை மருந்துக்கு
யாரிடம் போவதென்பது பற்றி
கணக்குப் பார்க்கத் தொடங்கியிருந்தான்,

எப்போதோ
கால் முளைத்துக் கடந்து விட்ட பிள்ளைகள்
அன்னையெனும் முகவரியை
அந்தஸ்துக்குப் பலியிட்டிருந்தார்கள்.
அந்தரங்கத்தில்
அவளோடு ஆடியவர்கள்
அம்பலத்தில்
புழுநெளியும் ஒரு கூட்டைப் போல
முகஞ்சுழித்து விலகிப் போனார்கள்

ஆனாலும் …..
ஆத்மாவைக் கொன்று
தினம் தினம் கட்டையில்
எரித்துக் கொண்டிருந்த ஊர்வசியை
புதிதாய் எரிக்கும் சக்தி
எந்த அனலுக்கும் இருந்திராது என்பதாய்த்தான்
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்

00000000000000000000000000

கடவுளைச் சுமக்கும் குழந்தைகள்

மாலினி

இப்போதெல்லாம்
பகல்களாலும்
விடியவைக்க முடியாத இருளும்
செவிபறை தெறிக்கும் கூச்சலுமான
இந்தப் பிரபஞ்ச தோஷத்திலிருந்து
விடுபட்டுக் கொள்ளவே
பிரயத்தனம் செய்கிறேன்.

உலக வரைபடத்தில்
தெறித்துப் பெருக்கெடுக்கும்
செவ்வாற்றின் பாதைகள் மூலமே
எல்லைகள் வரையறுக்கப் படுகின்றன.
என்பதால் ,
எல்லை வகுப்பதற்காகவே
வெட்டிச் சாய்த்துப் பாயவைக்கப்படுகின்றன
செந்நதிகள்.

பாரதிரும் வெடியோசைகளில்
விழிகள் நிலைகுத்தி அதிர்ந்த
குயில்களின் கானங்கள்,
தொண்டைக் குழிக்குள்
சமாதி கட்டப்பட்டு
மௌனத்தால் அஞ்சலிக்கப்படுகின்றன

பிணத்தையும் புணருமொரு
பெயரிடப்படாத ஜந்தினத்திற்குப் பயந்து
பிறப்புறுப்பை மறைத்துக் கொண்டு
மரங்களிலும் பற்றைகளுக்குள்ளும்
பயத்துடன் பதுங்கிக் கொள்கின்றன
காதலின் வேதமுணர்ந்த
விலங்குகளும் பறவைகளும்
மற்றும் இன்ன பிறவும்.

மதங்களுக்கு மதம் பிடித்து
மனிதர்களைக் கொறிக்கும் மண்ணில்
கடவுள் பதறிப்போய்
குழந்தைகளின் இதயத்துக்குள்
அடைக்கலம் கேட்கிறது.

கடவுளைச் சுமக்கும் குழந்தைகள்
குதறி வீசப்படும் பூமியெங்கும்
தெரித்துக் கிடக்கிறன
கடவுளின் இரத்தமும்
மலரப் பயந்தது உதிர்ந்த மொட்டுகளும்
விடியல் மீதான அவநம்பிக்கைகளும்

பூக்கள் பூக்க மறுத்த
குயில்கள் கூவ மறந்த
மழலைகள் சிரிக்கத் தயங்கும்
கடவுள் கொல்லப்பட்ட
நிணம் நாறும் இந்தப் பூமியும்
ஓர்நாள் விரும்பியே இறந்து போகும்

ஆதலினால்……..

மாலினி -ஜெர்மனி

01.02.19

மாலினி

(Visited 40 times, 1 visits today)