விசிறி வால் தங்க மீன் அல்லது தூண்டில்-ஷமீலா யூசுப் அலி

விசிறி வால் தங்க மீன் அல்லது தூண்டில்

ஷமீலா யூசுப் அலி

அசைவற்ற நீர்ப்பரப்பில் எழுவதும் அமிழ்வதுமாய்
பாசிபடர்ந்த கிணற்றில் வழுக்கிச்செல்லும்
விசிறி வால் தங்க மீன்

இரசமிழந்த மந்திரக் கண்ணாடிக்குள்
நீண்ட கூந்தலைச்
சிடுக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள்

விரல்கள் வெள்ளி நூல் சுற்றும்
மாயச் சீப்பு வீணை…
தழுவத் தழுவ
உருகும்
ஒரு சுரவிசை கசிகிறது.

கடல் செழும்பின் பச்சை படர்ந்து
உன்மத்தம் கொண்டலையும்
அவள் கண்கள் மயிலிறகு.

தலை சாய்த்த பார்வை
இளங்காலைச் சூரியனையும்
பின்னிரவின் ஒற்றை நட்சத்திரத்தையும்
ஒரு சேர ஞாபகப்படுத்துகிறது.

வேலிக்குள் மேலால் படர்கின்ற
சிப்பிக் காளான்கள்
வரம்பின்றி பூத்து உதிர்கின்றன

நெடுநேரமாய் ஒரு
இரைக் கொல்லி பருந்து
வெளிமுன்றலில் காத்திருக்கிறது.

மீன்களெல்லாம்
தங்களை தூண்டில்களென்று
கர்வித்துக் கொண்டிருந்தன.

00000000000000000000000000

பராதீனம்

கண்ணாடி ஜாடியில் நீந்தும்
மஞ்சள் செவ்வந்திப் பூக்கொத்தின்
இலைகள் களைத்திருக்கின்றன.

ஜன்னல் வெளிப்புறம்
பனிப்புகார்க் குளிர் உறைகிறது

கட்டில் கூட்டுக்குள்
அனலெனத் தகித்துச் சுருள்கின்ற
உடம்பு.

தூரத்தில் ஓடுகின்ற ரயில் சத்தம்
அண்டவெளியெங்கும் இருள் விழுங்கிப் படர்கின்ற
அந்தகாரம்.

புளிப்புத் தேடும் நாக்கில்
உருண்டோடுகின்ற பச்சை ஒலிவ் காய்கள்.

மார்பில் கனத்து வலிக்கின்ற
நிச்சயமின்மைகள்.

ஒரு தூக்கத்தை கலைத்துப் போட்டபடி
குந்தியிருக்கிறது
தனிமையின் துயரார்ந்த பாடல்…

வீடெங்கும் விசிறிக் கிடக்கிறன
முத்துக் குமிழ் மணிகள்
பாலேட்டு நிறத்தில்…

000000000000000000000000000000

தணற்கொழுந்து நேசம்

நிறங்களே அற்ற
வெறுங்கோட்டு வெளியில்
எறிந்தேன்
நம் தோழமையை

செங்குத்து பாறைப் பொருக்கில்
திக்கற்றுச் சரிந்திறங்கியது.

அழன்றெழும் தணற்கொழுந்து
பனிக்கட்டியாய் குளிர்ந்திறுகியது.

வலி என்பது
அன்பின் சிட்சை

நட்பின் நிறம்
மழை பெய்தோய்ந்த முன்னிரவில்
பருகும் ஏலக்காய் தேநீர்
சாயத்தடம்

பதைபதைக்க வைக்கும்
கொடிய புயல் அதை
அள்ளிப் போயிற்று

அது சுழன்றாடி நீலக்கருங்கடல் தாண்டி
நீர்த்தேவதையின்
பவளக்கல் கண்ணாடியில்
இரகசியமாய் உறைந்தது.

ஆழ்கிணற்றின் இடுக்கில்
வெண் ஆம்பல் பூவாய்…
துயரத்தின் நூறாண்டு கழிந்தது

எண்ணற்ற வேனில் பகல்கள்
முகிலார்ந்த மாரிக்கால அந்திகள்
கடந்தோய்ந்தன.

பின்னரோரந்திக் கருக்கல்
………
அது
என் காலடியில்
சிவப்பில் நீலம் தோய்த்த
சிறு குருவிச் சிறகாய்
வருடியபடி ஆடிக் கொண்டிருந்தது

ஷமீலா யூசுப் அலி-ஐக்கியஇராச்சியம்

 

ஷமீலா யூசுப் அலி

(Visited 137 times, 1 visits today)