வதை-கவிதை-எம்.ஏ.ஷகி

 

எம்.ஏ.ஷகி

எதிர்கொள்கிறேன்
நேரில்வா…
நீ முதன்முதலில் முத்தமிட்ட
இதே நெற்றிப்பொட்டில் ஆரம்பி
குறி பார்த்து …

அணுவும் பிசகாமல்..
ஒரே ஒரு தோட்டா போதும் சுடு
ஆலகாலம் கொப்பளிப்பதாய் தெரியும்
என் உதடுகளைப்பார்
பழக்கதோஷத்தால்
உன் இதழ்களால் நெருங்கிவிடாதே

விரல்களால் நிமிண்டி முறுக்கி
காயம்செய்
கடைவாயிலிருந்து வழியட்டும்

நெஞ்சுநிறை வலி..

வெறியுடன் கீழிறங்கு ..
முகம் புதைக்கத்தூண்டிய கழுத்து,
குரல்வளைநாண்கள்  புடைத்திருப்பதைக் காண்பாய்
மோவாயை உயர்த்தி
இறுகப்பற்று சுவரில் சாய்த்து
சங்கைக்குதறு ;சடக்’கென முறி
சற்றுக்கீழே வா..
ஆடை கிழித்தெறி

முலைகளை கொய்துகசக்கி வீசு
நடுவே நீளும் சிறுவழியின்
சாய்வாய் உன் குறுவாளை
ஆழ இறக்கு கீழ்நோக்கி
அழுத்தி நெஞ்சக்கூட்டை
பிளந்து ரெண்டாக்கு
விம்மித்துடித்து ஓயத்தயாராகும்
இதயம் அறு,

அத்தனை ரணங்களும் சுமந்து
ஆற மறுத்த சதைப்பிண்டமதை
உள்ளங்கைக்குள் கசக்கிப்பிழிந்து
சொட்டச்சொட்ட வழியும்
உன் காதல் கலந்த ரத்தம் குடி
ரெளத்திரம் அடங்குகிறதா பார்
அடங்காது  எனக்கு அப்போதும்
அடங்காது
சோர்ந்துவிடாதே
அடிவயிற்றைக்கிழி
உன் விந்தை கருவாக்க
காந்திருந்த கருப்பையை
துண்டாக்கி வீசியெறி
நீ புணர்ந்த குறியில்
துரோகத்துடன் மின்னும்
வாளை உட்செலுத்து
உன்னை குற்றவுணர்வுக்கு ஆளாக்கிய
அந்தப்புணர்ச்சியின் ஆத்திரம் தீர்
காலால் மிதி, காறிஉமிழ்

போதாது…இன்னும் ஏதாவது செய்
ஞாபகம் வருகிறதா
உன்னை வாரிஅணைத்த
இந்தக் கைகள் ?

வெட்டு..

கோர்த்துக்கன்னம் வருடிய
கைவிரல்களையும் ,
நீ நீவி சொடுக்கெடுத்துவிட்ட
கால்விரல்களயும் நறுக்கு
இன்னும் இன்னும் வெறுப்பைக் கக்கு
எகத்தாளமிட்டு சிரி..சிரி ..

ஆனால் ,

உலர்ந்து வெறித்துநிலைகுத்தி நிற்கும் கண்களை மட்டும்
மறந்தும் நேருக்கு நேர் சந்தித்துவிடாதே
பஷ்பமாவாய்
உன் சாம்பலை
மண்ணும், காற்றும் ,
கடலும்கூட
ஜீரணிக்காது போ

எம்.ஏ.ஷகி-இலங்கை 

எம்.ஏ.ஷகி

 

(Visited 188 times, 1 visits today)
 
எம்.ஏ.ஷகி

புற்றின் வேர்கள்- எம்.ஏ.ஷகி

  அணுத்திரள் பிறழ்வுகளால் அக்கினித்துகள்கள் மையத்தில் குவிய உடற்பொறிக்குள் அழன்றதொரு தணற்பூ மரணவிருட்சத்தின் விழுது தசையங்களைத் துளைத்து இழையங்களில் வேர்விட்டுப் படர்ந்தது தீநாக்குகளின் பெரும்பசியுடன் திசுக்கள் சிதைந்து நலிய எதிர்ப்பின் […]