பூனைமை-கவிதை-அனார்

 

 

அனார்

புகையிலைத் தோட்டங்களுக்குள்
புதைந்திருக்கும்
கல்லறை வாசியான பூனை
மடிந்த குறுவால் சுழற்றி
தன் தோற்றங்களை பன் மடங்காக்குகின்றது
ஆந்தையின் கண்களில் விடிந்திருக்கின்ற
பௌர்ணமியைப் பிராண்டுகின்றது

கரும் சுருள்களாய்
முகில்கள் சூழும் வேளை
ஆபத்தான சமிக்ஞைகளை
கூறுபோடும் தந்திரங்களை
வேட்கை வாடைகளை மோப்பம் பிடிக்கின்றது

பார்வைக் கூர்மையால்
மன உறுத்தலை அறியும்
பச்சைக் கண் பூனை
பலியின் இரத்தத்தை விடாய் கொண்டு நக்கிடும்

கைகளால் வருடி அளைதல் பொழுதுகளில்
உள்ளங்கை மேலே
மென் பாதம் பதிந்து
“மியா“ என்கின்றது மென்மையாக……

நீல இருளில் உலவும்
வசீகரப் பேயுருப்பூனை விசுவாசமற்றது

அனார்-இலங்கை 

அனார்

 261 total views,  1 views today

(Visited 73 times, 1 visits today)
 
அனார்

உன் ஜன்னலால் உன்னைப்பார்ப்பது-அனார்

இரவாலும் பகலாலும் மூடப்பட்ட ஆடை கதை கேட்பவளின் காதுகளைத் தொட்டுப்பார்க்கின்றது மறுபக்கமாய் சுழல்கிறது பால்வெளி நீ சொற்களின் கதவுகளைத் திறந்து விடுகின்றாய் ஆன்மாவின் சுவரிலிருந்த ஒரே ஒரு ஜன்னலையும் திறந்த […]