ஒரு பேராற்றின் நகர்தல்-கவிதா லட்சுமி

 

கவிதா லக்ஷ்மி

ஆழ் மனதுள்
எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது
ஒரு கவிதை

பிரபஞ்சத்தின் மையப்புள்ளிக்கும்
விரல்நுனிக்கும் உள்ள தூரமாய்
மிக நீண்டதாக

கடிகார முட்களின் சுழற்சியென
முடிவிலியாக

சற்றுமுன் விழுந்த
செம்மஞ்சள் இலை போல
என் காலங்களை மிதக்கவிட்டு
பேராற்றின் நகர்தலென
இதற்கும் மேல்
ஆயிரமாயிரமாய் உடைத்துணரும்
அந்த நொடிகள் செய்யும் மாயமும்
அதில் பித்தாகிய தருணங்களைக்
கோடிப் பிரதிகளாய்
பிரசுரிக்கும் இந்த மழையும்…

வேறென்ன
அத்தனையும் கொத்தி விழுங்கும்
என் தோட்டப் பறவைக்கு
இனி ஆண்டாண்டுக்கும்
அடைமழை!

00000000000000000000000000

மழைக்காடு

பெருங்காட்டின்
கிளைகளைப் போல
திசைகளெங்கும் பரந்து
வெளிநிறைக்கிறது மனம்
விசித்திரமாக

ஆயிரம் இரகசியங்களைத்
தன்னுள் புதைத்த
அடர் நிலமென
எண்ணிலடங்கா
உயிர்களைச் சுமக்கும்
காட்டுத்தரையின்
வனப்பு மிகுதென் மனம்.

இலக்கற்ற
குரங்கொன்றின் பாய்ச்சலில்
கட்டுப்பாடற்று திரியுமோர்
உயிர் சுமந்து
திக்குகளின்றிக் பாய்ந்து
பரவுகிறது காடு.

கைபிடித்து
மார்போடு அணைக்கும்
அந்தச் சூரியனின் பிடிக்குள்
பச்சைபச்சையாய்
ஓங்கி வளர்கிறதென்
முரட்டுக்கானகம்

ஆதிமனுசி வரம் வேண்டி
இருட்டைப்பிழிந்து
கண்ணில் ஊற்றுகிறது
ஆழ்மனதுள்
கனவுக்கொடி பின்னும்
மாயை இவ்வனாந்திரம்

வானம் கைதொட
தன் நிலைமறந்து
சந்திரக்கண்களின்
சிற்றொளியில் சிலிர்க்கிறது
பின்
பெருமழை பற்றி
எரிகிறதென் மழைக்காடு

000000000000000000000000

வீணையின்
மூன்றாவது தந்தியில் உதிர்ந்திருக்கிறது
கொடுக்கப்படாத
அந்த முத்தம்

கருநீல வண்ணாத்தியின்
சிறகில்
படபடத்துக் கொட்டும்
முத்தங்களால்
என் தோட்டத்துச் சிற்றிலைகள்
நனைகின்றன

பனிதுளியின் மென்மையோடவை
இலைநுனியில் ஒளிர்வதைக்
காணுற்றது மனம்

அவை சொட்டும் இடமெல்லாம்
செவ்வந்திப் பூக்களின்
தரிசனம்

கொள்ளிவாய்
பிசாசுகள் போல பரவி
மனமெங்கும் பற்றி எரிகிறது
முத்தக்காடு

கனவிலும் முளைக்கின்றன
காடுகள்

செவ்வந்திப்பூக்கள் மொய்த்து
உடல் நிறைத்து
சுவாசம் உறிஞ்சி
உயிர்க்கிறது அடர்கனவு

கொடுக்கப்படாத
அதே முத்தங்கள்
சமயங்களில்
சிலந்திவலையுள்
சிக்கிய துளிகளாய்
நரம்பெங்கும்
கோர்த்துக்கிடக்கிறது

நீ இல்லாத பொழுதெங்கும்
வர்ணம் உடைத்து
மஞ்சளாய் சிவப்பாய் நீலமாய்
எக்கணமும்
எரிதணலாய்த் தகிக்கிறது
கொடுக்கப்படாத முத்தங்கள்
மாயங்கள் செய்வன

மேகமேறி
அவை துளிதுளியாய் துமிக்கின்றன

உன்னோடான பொழுதுகளில்
மண்ணுறிஞ்சிய மழையாய்
முத்தங்கள் மரணித்து
ஒரு கவிதையாய்
என்னோடு
உன்னை மட்டும் விடுகிறது

கவிதா லக்ஷ்மி – நோர்வே

கவிதா லக்ஷ்மி

(Visited 60 times, 1 visits today)
 

One thought on “ஒரு பேராற்றின் நகர்தல்-கவிதா லட்சுமி”

Comments are closed.