ஷேக்ஸ்பியரின் காதலி- லறீனா அப்துல் ஹக்

ஷேக்ஸ்பியரின் காதலி

லறீனா

 

தொடுதிரை வழியே இருவேறு முனைகளில்
நிகழ்ந்தபடி இருந்தது உரையாடல்
அனேகமான எல்லாக் கவிதை வரிகளும்
அங்குதான் எழுதப்படலாயின

இன்னும் சற்றைக்குள் அவள் அதன்வழி ஊடறுத்து
அவனை சந்திக்கப் போகிறாள்
மேசைக் கடிகார நேரத்தை நேர்ப்படுத்தினாள்
கடிகார முள் தான் கடவுச் சொல்

இரண்டு மணித்தியால அவகாசம் மட்டுமே
அதற்குள் அவள் திரும்பி வந்துவிட வேண்டும்.

“டிக்” எனும் ஓசையோடு கெடு தொடங்கிய கணப்பொழுதில்
கரைந்து திரைக்குள் நுழைந்தாள்
மறுபக்கம் காதலின் தவிப்பு தாளாமல்
குறுக்கும் நெடுக்குமாய் அவன் நடந்தபடி இருந்தான்

இதற்காகவே காத்திருந்ததுபோல்,
அவள் வெளிப்பட்ட அபூர்வத் தருணம் முதல்
தழுவியும் முத்தமிட்டுமாய்
காதலின் ஆவேசக் கணங்கள் இழைகோத்து மணிகளாயின

இனி பிரிவதற்கான நேரம்
ஐந்து நிமிட அவகாசம் எஞ்சி இருக்கிறது
இன்னுமொருமுறை அழுந்தி முத்தமிட்டு
ஆடைகளை அள்ளி நேர்செய்தபடி புறப்பட ஆயத்தமானாள்

எங்கிருந்துதான் அவள் அறைக்குள் நுழைந்ததோ அந்தச் சாம்பல் பூனை
பழுப்பு நிற விழிகளால் அங்குமிங்கும் மேய்ந்தபடி
குறுக்கே பாய்ந்த அக்கணத்தில் கடிகாரம் உருண்டு வீழ்ந்து
இயக்கம் நின்றது
தனது கணினித் திரைக்கு எதிரில்
மீண்டும் வர முடியாமல்
இடையில் தொலைந்து போனாள்

நீங்கள் வாசிக்க நேரும் ஏதேனுமொரு கவிதைக்குள்
அவளைச் சந்திக்க நேர்ந்தால்
என் முகவரியைச் சொல்லி அனுப்புங்கள்
தலையணை உறைக்கு போடவேண்டிய பூவேலைப்பாடு
முடிக்கப்படாத குறையில் அப்படியே இருக்கிறது.

சில வேளை, கடவுச் சொல்லை
இடைநடுவே நகராமல் நிறுத்திவிடும்படி
பூனையிடம் அவள் சொல்லியிருக்கலாம்
என உங்களுக்குச் சந்தேகம் வருகிறதா
எனக்கும்தான்.

லறீனா-இலங்கை

லறீனா

(Visited 111 times, 1 visits today)