தர்மினியின் கவிதைகள்

 

தர்மினி

இத்தீக்கோழி
கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பார்த்தது
புறவுலகின் பயங்கரங்கள்!
வெற்றியின் கயிறை அறித்தெறியும் வேகத்தோடு
தன் நீளக்கால்களால் ஓடுகிறது
முடிவின் வண்ணமொன்றைத் தேடும் கண்கள்
எல்லையற்றதான தோற்றங்காட்டும் அவ்வெளியில்
என்ன செய்யப் போகிறது?
படபடத்த கடுதாசிகளைத் துரத்தும் காற்றின் சத்தம்
கடூரம்!
புத்தகங்களுக்குள் தலையைப் புதைத்த மூளை
எதைக் கொத்துகிறது?

0000000000000000000000000000

தற்செயலாகத் தான் முறைத்துப் பார்த்தது போல
சற்று நேரத்தில்
செயற்கையாகப் புன்னகைத்தனர்

என்னவோ யோசினையில்
கைகள் முட்டி விட்டதாக
தொட்டுக்கொண்டனர்

இரு குவளைகளுக்கான நீர் கொதித்துவிட்டது
மேசையில்
அவர்களுக்கு நடுவில்
வெறுந்தேநீர் ஆவிவிட்டபடி

இப்போது
அமைதியாக நிறைவேறியது ஒப்பந்தம்
கசப்பின்றி அருந்த
அவரவருக்கான சீனியை அவரவர் போடட்டும்

கோப்பைகளில் பறவைகளது படங்கள்
அங்குமிங்கும் தத்தித் தாவி
விளிம்புகளில் தடுமாறி…

00000000000000000000000

மறுதலிப்புகளுக்கு மூன்று முறையென்ன?
இப்போது மிக இலகு.

Likes தின்று வாழ இதென்ன சத்தற்ற உலகமா?
கைபேசியில் விரல் நுனியால்
பெயரைத் தொட்டு Unfriend ஆக்கலாம்
Profile Photos குற்றவாளிகளது பட்டியலாக
மறு தோற்றம் காட்டுகின்றன
மலை,குகை,காடு தேடி
ஓடிப்போன மனிதர்கள் ஏன் நினைவுக்கு வருகின்றனர்?
மூலை மடிக்கப்பட்ட புத்தகத்தின் அப்பக்கம்
இது மனநோயின் அறிகுறி என்கிறது

தர்மினி-பிரான்ஸ்

தர்மினி

 

(Visited 161 times, 1 visits today)