இறுதித் தினங்களுக்கான ஒற்றை ரோஜா – (மெரிட், 2003)-மொழிபெயர்ப்புக்கவிதை-லறீனா அப்துல் ஹக்

 

லறீனா

அவமானப்படுத்தப்பட்ட யாசகனைப் போல
ஒற்றைக் காலுடன் நொண்டுகிறேன்
திறந்து மூடும் அரைக்-கதவுகளை
கொடிக்கம்பங்களில் இருந்து கீழிறக்கப்பட்ட
கொடிகளைத் தாண்டி…
நடைபாதை எப்போதுமே
எனக்கானதாய் இருந்ததில்லை
என்றாலும்
கசப்பும் கடுமையும் நிறைந்த
அழுகை தோய்ந்த பொழுதுகளில்
அது என்னை அரவணைத்துக் கொண்டது.

எனது நாட்டில்
சிப்பாய்கள் போருக்குச் செல்கின்றனர்
அவர்கள் ஒருபோதுமே போரிட்டதில்லை.
ஒவ்வொரு காப்பிக்கடையிலும் சதுக்கத்திலும்
நோயாளிகளின், துயருழந்தோரின், பித்தர்களின் காலடியில்
தாதியரின் கனிவுக்காய் எறியப்பட்ட
ஒரு ரோசாவின் தடயத்தைச் சட்டெனக் காணலாம்
புலம்பல்கள் நிறைந்திருக்கும் தனித்த அறைகளில்
ஒரு ரோசா இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது.

அந்தக் கார் இன்னும் நிறுத்தப்பட்டிருக்காது
என்றுதான் நம்புகிறேன்
ஒரு வீறிடலைப் போல
அதிலிருந்துதான் நான் விழுந்தேன்
எனக்குத் தெரியும்
மின்தூக்கி இயக்குபவன்
வேலிக்கு மேலால் பாயவேமாட்டான்
நான் நெடுநேரமாய்ச் சுற்றியலைந்திருந்த போதிலும்
அந்தக் கற்பாறைகள் என்னைக்
காயப்படுத்தியவண்ணமே இருந்தன

ஒற்றைப் பாதத்துடன்
மரணம் வரும்
தன் தலையுயர்த்திப் பார்க்கும்
அதை எதிர்கொண்டு, இம்மனிதனை இறுகத்தழுவுவேன்
அவன் கரங்களில் என்
எல்லாக் கவிதைகளையும் திரட்டிக் கொடுப்பேன்
அவனின் உஷ்ண மூச்சுக்களினிடையே
என் எலும்புகளை நொறுக்குவேன்
என் நுரையீரல்கள் இரு குழாய்களாகும்
என் பாதங்கள் ஒரு போர்க்களம்
என் இதயம் ஒரு தூக்குக்கயிறு
நான் உண்மையில் செத்திருக்கிறேனா?
சற்று நேரத்துக்கு முன்னர்தான்
நான் தாய்நாட்டின் வாசனையை முகர்ந்திருந்தேன்.

00000000000000000000000000

நாய்கள்கூட கடக்க அஞ்சும்
வெறுமையான அத்தெருக்களை
வெறுங்கரங்களுடன் நீ கடப்பாய்
உனக்குத் துணையாய் வராத உன் நிழலோடும்
மிகக் கனக்குமொரு காதலோடும்
நீ பேசுவாய்
உன் பெற்றோரைப் பற்றி
திடீர்ச் சாவு தரும் அதிர்ச்சியைப் பற்றி
தனிமையை ஒருபோதும் குறைத்திடாத
மின்விளக்கு ஒளிர்கையில்
என் விழிகள் நிறைகின்றன
உன் முன்னால் நிற்கையில்
என் காற்சட்டை ஈரலிக்கிறது
நீயொரு செய்திப் பத்திரிகையை
உன் மார்பின் மேலிருந்து எடுப்பாய்
உன் கண்களில் இருந்து
ஒரு கண்ணாடியையும்தான்
நான் அவற்றைப் பார்க்கலாம்
இப்போது நான் வெளியில் போகலாம் என்பதை
அதிலிருந்து உணரலாம்.

0000000000000000000000000000

முழுக் கிராமங்களையும் மூழ்கடித்த
ஒரு பழைய வெள்ளம் தோற்றுவித்த
சதுப்புநிலங்களில் ஒன்றில்
கருணைக் கொலைக்காய்க் காத்திருக்கும்
முறிந்த சிறகுள்ள
ஒரு பறவையைப் போல் நான் பாய்வேன்
கோழியைப் போன்ற பின்புறத்தை விரும்பும்
ஒரு பறவையால்
தொடர்ந்தும் பறக்க முடிவதில்லை
துப்பவும்தான்.
ஒவ்வொரு தடவையும் அவன் ஏறுவதைப் போல
அவன் விழிகள்
உறங்குகையில் மூடிக்கொள்வதுமில்லை
ஒரு துளிக் கண்ணீரைச் சிந்துவதுமில்லை
ஆனால், எல்லாப் பறவைகளும் உடன்பட்டே உள்ளன
இப்போதோ இனி எப்போதுமோ அவனால் சுடப்படுவதற்கு
அவன் சுடுவது தன் களிப்பின் பொருட்டா, வலியினாலா
என்பதைப் பற்றி யாருக்கும்
சரியாகத் தெரியாது.
அவனைப் போன்ற ஒரு துயரப் பறவையால்
ஒரு நீண்ட இருளைப் பற்றிக்
கனவு காண மட்டுமே இயலும்

000000000000000000000

என் மரணத்தை நான் நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
யாரேனும் ஒருவர் இறக்கின்றார்
கவிதைகள் தாமாகவே
எழுதிக்கொண்டிருக்கின்றன

0000000000000000000000

நான் எவரையும் தழுவவில்லை
என் காலடிகள் நானின்றியே கடந்துசெல்கின்றன
வீட்டின் கை என்னை எரிக்கிறது
என் வரலாற்றில் உறங்கும் நபர்
ஒருபோதும் எழுந்திருப்பதேயில்லை
இரவில் அவன் காலடிகள்
என்னை அழுத்துகின்றன
காலையில் அவன் மார்பின் மேல்
பயத்தோடு எழுகிறேன்
அவன் என்னிடம் சொல்கிறான்,
‘நான் முன்பிருந்த நானல்ல’ என்று.
அவன் சிகரட் புகைக்கிறான்
போரிலிருந்து திரும்பியவனைப் போல
அதனால் பாதிப்புற்றவர்களின் சரியான எண்ணிக்கை பற்றி
அவனறிவான்
களவாகப் பார்த்த பார்வைகளுக்கும்
அவனின் சுவாச ஒலிக்கும்
இடையில் நான்,
அவனிடமிருந்து தொலைந்த
ஒரு கடிதம் பற்றி அறிவேன்.

00000000000000000000000000000000000

கவிஞர் பற்றிய சிறுகுறிப்பு :

லறீனா ரானா அல் துன்ஸி

1981 ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்த இவர், கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் அரபுக் கற்கைகளுக்கான துறையில் தனது பட்டப்படிப்பினை நிறைவுசெய்தார். தற்போது கெய்ரோவில் உள்ள பிரித்தானியப் பாடசாலையில் கற்பித்து வருகிறார். இவர் இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  That House from which the Music Comes (கெய்ரோ, 1999), A Rose for the Last Days (மெரிட், கெய்ரோ 2003) , A Country Called Desire (மெரிட், கெய்ரோ 2005) என்பனவே அவையாகும்.

ஆங்கிலத்தில்: சினான் அந்தூன்

தமிழில்: லறீனா 

லறீனா 

(Visited 139 times, 1 visits today)