கவிதை-ஜெம்சித் ஸமான்

ஜெம்சித் ஸமான்

ஒரு புல்லின்
தனிமை விட்டு
மறு புல்லிற்கு தாவுகின்றது
வெட்டுக் கிளி.

00000000000000000000

ஜன்னல்கள் திறந்து கிடக்கின்றன
காகங்கள் கா கா என்று கத்துவதால்
காற்று வரப் போவதாக
எல்லோரும் நம்புகின்றனர்.

00000000000000000000

வழி தப்பியபாதை
பள்ளத் தாக்கில்
பாதுகாப்பாக இறங்கிச் செல்கிறது

00000000000000000000

பறவையொன்றை வரைந்துவிட்டு
தூரிகையை நீரில் கழுவுகின்றேன்
ஓரிறகு மிதக்கிறது.

00000000000000000000

வளர்த்த நாய்
முகத்தை பார்ப்பதைப் போல
தினம் தினம்
என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது நிலவு.
நான் எப்போதாவதுதான்
ரசிக்கிறேன்.

000000000000000000000

நேற்றிரவு
கனவில் பற்கள் விழுந்தன
உம்மா பதட்டத்துடன் கூறினார் யாரோ இறக்கப் போவதாக
அந்த யாரோவுக்குள்
உம்மாவும் இருந்தார்
அந்த நிமிடத்திலிருந்து
இதுவரை
நினைத்திராத முகங்களெல்லாம் நினைவிற்கு வருகின்றன
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமான
பிரிதலின் வாதைகளை
தந்து செல்கின்றன
மனச் சுவரில் ஏறியிறங்கும்
ஊமைப் பல்லியே
உனக்கும் தெரியாதா
முகங்களை
முகர்ந்து பார்த்து திரும்புகின்றாய் அய்யோ…
நான் நினைக்காத யாராவது விரைவாக இறந்து தொலையுங்கள்.

00000000000000000000

பச்சை ஆடைகளை
களைந்தெறிந்து விட்டு நிர்வாணமாய்
உதிரத் தயாராகும் இலைகளை ஊர்ந்து கடக்கிறது
மயிர் கொட்டி தடவிப் பார்க்கிறது காற்று
நானும்
உதிரக் காத்திருக்கும்
ஓரிலைதான்.

0000000000000000000000

பொழுதுபோக்காக
கரையில் வரைந்த மீன்குஞ்சு
நீந்திச் சென்று
கடலை திறக்கிறது.

ஜெம்சித் ஸமான்-இலங்கை

ஜெம்சித் ஸமான்

(Visited 55 times, 1 visits today)