புத்தரின் படுகொலை!-சிறப்புஎழுத்துகள்-எம்.ஏ.நுஃமான்

எம்.ஏ.நுஃமான்

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.
‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்……
என்றனர் அவர்கள்.
‘சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை’
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

0000000000000000

பிணமலைப் பிரசங்கம்

பின்னர்
அவர் பிணமலையை நோக்கிச் சென்றார்
பிணங்கள் விழுந்து கிடந்த தெருக்களில்
இடறி விழுந்தவாறு
அகதிகள் அவரைத் தொடர்ந்தனர்
புதைப்பதற்கு இடமின்றியும்
எரிப்பதற்கு விறகு இன்றியும்
குவிந்து கிடந்த பிணமலையில்
அவர் ஏறினார்
அகதிகளைப் பார்த்து
அவர் பின்னர் பேசினார்

பொறுமை இழந்தவர்கள் என்னுடன் வாருங்கள்
அடிபணிய மறுத்தவர்கள் என்னுடன் வாருங்கள்
துப்பாக்கியின் எதிரிகள் என்னுடன் வாருங்கள்
வாழ்க்கையின் ரசத்தை உங்களுக்குப் பருகத் தருகிறேன்
பூலோக சுவர்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்
உங்கள் கழுத்தில் மிதித்துக்கொண்டு
உங்கள் விடுதலைக்காகப் போரிடுவோரை
நம்பாதீர்கள்

பிறரின் உரிமையைப் பறித்தவனுக்கு ஏது உரிமை
பிறரின் சுதந்திரத்தை மதியாதவனுக்கு ஏது சுதந்திரம்
பிறரின் சமத்தவத்தை மறுத்தவனுக்கு ஏது சமத்துவம்
துப்பாக்கிக் குழாயிலிருந்துதான்
அரசியல் அதிகாரம் பிறக்கிறது
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அதே குழாயிலிருந்துதான்
அடிமைத்தனமும் பிறக்கிறது
வன்முறைதான் விடுதலையின் மருத்துவச்சி
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
விடுதலையின் கருச்சிதைவும் அதுதான்
துப்பாக்கியை நேசிப்போரை நேசியாதேயுங்கள்
துப்பாக்கியின் பாசையைப் பேசாதேயுங்கள்
அவர் பிரசங்கம் முடியுமுன்
அவரது பிடரியைக் குறிபார்த்து நின்ற
துப்பாக்கி வெடித்தது
பிணமலை இன்னும் ஓர் அடி உயர்ந்தது

1991

0000000000000000000000

மரித்தோரின் ஆன்மா

சிங்கமும் புலியும்
கடித்துக் குதறிய
மனிதத் தசையும்
குருதியும்
எலும்புக் குவியலும்
சிதறிக் கிடக்கின்றன நிலமெங்கும்
தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது
இதயம் கிழிந்துபோயிற்று
உணர்வு மரத்துவிட்டது
நீ கேட்கிறாய்
யார் போர்க் குற்றவாளி என்று
கடவுளே
இந்த விலங்குகளிடமிருந்து
எங்களை ஏன் உன்னால்
காப்பாற்ற முடியவில்லை
என்று புலம்புகிகிறது
மரித்தோரின் ஆன்மா

2009

எம்.ஏ.நுஃமான்-இலங்கை 

எம்.ஏ.நுஃமான்

(Visited 387 times, 1 visits today)