புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும்-ஒருநோக்கு-நிவேதா உதயராஜன்

நிவேதா உதயராஜன்கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் பண மரங்கள் குவிந்து கிடப்பதாக கற்பனையில் வீடுவாசல் எல்லாம் விற்று கடன்பட்டு வெளிநாடு வந்து சேர்ந்தனர். இது எல்லாரும் அறிந்ததுதான் எனினும் பலரின் வாழ்வு தடம்மாறியதும் இங்குதான்.

இதற்கு முன்னர்  உயர் கல்வி கற்பதற்கு என்று  வெளிநாடு வந்த ஒரு கூட்டம் தமிழை மறந்து தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணியபடி ஆங்கிலம் கதைத்துவிட்டால் தங்கள் ஆங்கிலேயர்கள் என எண்ணியபடி இங்கிலாந்தில் தம் பிள்ளைகளும் தமிழை அறியா வண்ணம் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டுமல்ல புலம்பெயந்த அனைத்து நாடுகளில் வாழும் சில தமிழர்களின் நிலை இன்றுவரை இதுதான். அவர்கள் தம்மைப் பற்றிய சிந்தனை மட்டும் கொண்டவர்களாக சுயநலவாதிகளாக இருந்ததனால், அவர்கள் எமது நாடு பற்றியோ அல்லது தாம் இழந்தவை பற்றியோ எள்ளளவும் கவலை கொள்ளாது இன்றுவரை மகிழ்வாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

ஆனால் 84 ம் ஆண்டுக்குப் பின்னர் வந்தவர்களில் சிலரிலும் இவர்களின் குணங்கள் இருந்தாலும் பலரும் எமது தேசம், விடுதலைப்போராட்டம், பண்பாடு, தமது வாழ்வு, ஈழத்து உறவுகளின் எதிர்கால வாழ்வு என்று பன்முக அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து மனஅழுத்தத்தோடும் அபிலாசைகளோடும் ஏமாற்றங்களோடும் மனவலி சுமந்தவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

போர் காரணமாக எம் தாய்மண்ணுக்கும் போக முடியாது உறவினர்களை பார்க்கமுடியாது, பெற்றோர் உற்றோரின் மரணச்  சடங்குகளைக்கூடக் காலங்கடந்த செய்திகளாக வாங்கித் தம்முள் உழன்று, பருவவயது கடந்தும் தன் உறவுகள் சொந்தங்கள் என்று உழைத்துக் களைத்து, எமக்கென்று ஒரு நாடு வரும், அங்கே நின்மதியாக வாழலாம் என்னும் நினைப்பிலும் மண்விழ, எல்லாம் இருந்தும் அகதிகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

பலர் உழைத்ததில் ஒருபங்கு நாட்டுக்கும் மறுபங்கு வீட்டுக்கும் கொடுத்து தான் ஒட்டாண்டியாய் நிற்பது ஒருபுறம், பலர் ஒழுங்காகத் தின்னாமல் குடிக்காமல் சொத்துச் சேர்த்து அதை அனுபவிக்காது நோயில் விழுவது ஒருபுறம், ஒருவரைப் பார்த்து மற்றவர் ஏட்டிக்குப் போட்டியாய் பணம் கார், வீடு என்று கடன்பட்டுக் காலம்கழிப்பது ஒருபுறம், மற்றவருக்கு கொடுக்காது அல்லது அதிட்டவசமாகப் பணம் சேர்க்கும் சிலர் செய்யும் கூத்துகளும் ஆடம்பர விழாக்களும் கோமாளித்தனங்களும் “அற்பருக்குப் பவுசுவந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பர்” என்னும் பழமொழியை அப்பட்டமாக நிறுவிக்கொண்டிருக்கின்றது.  

புலம்பெயர் நாடுகளில் மற்றைய கலாச்சாரங்களுடன் ஈடுகொடுக்க முடியாது பலர், அக்கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்ட பலர், ஓட்டவும்  விலகவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவே ஏக்கத்துடன் கிடந்து அல்லாடும் சிலருமாக வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. நாகரிக ஆடைகள், போதிய பணம் என்பன இருந்தும்கூட ஏக்கத்துடன் இன்னும் எமது நாட்டையும், உறவுகளையும், வாழ்ந்த வாழ்வையும் என்று இழந்தவர்களை எண்ணி எமது மனம் திருப்தியுறா நிலையிலேயே ஓடிக்கொண்டிருப்பது ஒருபுறம். உயிர்ப் பயம் காரணமாக போதிய பணம் இருந்தும் எம் நாட்டில் போய் வாழும் துணிவு இன்றிய பலர் ஆண்டுதோறுமோ அன்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையோ எம் நாட்டுக்குச் சென்று தம் ஆசைகளைத் தீர்த்துத் திருப்தி கொள்கின்றனர்.

ஆனால் சில காலமாக புலம்பெயர் தமிழரிடம் எழுந்துள்ள முணுமுணுப்பும் சலிப்பும் சொல்ல முடியாதது. தம்மைப் பெற்றவர் அங்குஉயிருடன் இருக்கும் வரை தான் நாம் அங்கு செல்வோம். அதன் பின் அந்தப்பக்கம் போகவே மாட்டோம் என்னும் வெறுப்புக்குரிய வார்த்தைகள் ஏன் வந்தது என்று பார்த்தால், புலம் பெயர்ந்த மக்கள் மட்டும் மாறவில்லை. தாயகததில் இருக்கும் எமது உறவுகள், நாம் ஆசையாசையாகக் காணவேண்டும் என்று துடித்த அயலவர்களும் சொந்தங்களும் கூட நிறையவே மாறிவிட்டார்கள்.

தாம் துன்பம் கொள்வதுபோல் தமது உறவுகள் துன்பம் கொள்ளாது வசதியாக வாழட்டும் என எண்ணிய புலம்பெயர் உறவுகள் கண்மூடித்தனமாக, சிந்தனையில்லாது அனுப்பும் பணம்தான் எமது ஊர்களில் பலரை வசதியாக ஆடம்பரமாக வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது. சிலர் இன்னும்கூட வாழத்தெரியாமல் ஊரிலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பது வேறு கதை.

உறவினர்கள் அனுப்பும் பணத்தில் பிள்ளைகள் கேட்கும்  மோட்டார்  வண்டிகள், கைத்தொலை பேசிகள், வெளிநாட்டு உணவகங்களில் உணவு, மதுபானங்கள், நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் என்பவற்றால் கல்வியை உதறிவிட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சீரழியும் சமூகமாக எமது தமிழ் சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது எமது கலாச்சாரங்களை மதிக்காது பண்புகளை மறந்து வெளிநாட்டினர் போல் அக்கம் பக்க வீடுகளுடன் தம் அயலவர்கள் சொந்தங்களுடனும் கூட ஒருஅன்னியத் தன்மையைப் பேணிக்கொண்டு தொலைக்காட்சிகளில் மூழ்கி தனி வாழ்வு வாழ்ந்துகொண்டும் பலரிருப்பது எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை எமக்கு நன்றாகவே காட்டுகின்றது. சிற்ரூர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் காணப்படும் மக்கள் தொகையும் விழாக்களும் இவற்றுக்குச் சாட்சி.

வெளிநாடுகளிலிருந்து செல்லும் உறவுகளை உண்மை அன்போடும் அக்கறையோடும், ஆசையோடும் எதிர்கொள்ளும் புலத்து உறவுகள் மிகச் சொற்பமே. பெரும்பாலானவர்கள் வரும் உறவுகள் என்ன அங்கிருந்து கொண்டுவருகின்றனர், அவர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அத்தனையும் கறந்துவிட்டு விடவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படி அவர்கள் எண்ணவும் எதிர்பார்க்கவும் அவர்கள் மட்டும் காரணமல்ல. 

வெளிநாடுகளில் இருந்து போகும் பலர். தங்க நகைகளை அடுக்கிக் கொண்டு போவதும், கடன் வாங்கியாவது அங்குள்ளவர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களை வாங்கிச் செல்வதும், போன இடத்தில்  சாதாரணமாகத் திரியாது எதோ வாகனத்துடனும் ஏசியிலும் பிறந்தவர்கள் போல் வான் வாடகைக்குப் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றுவது,  அங்கு சென்றும் காசை உறவினர்களுக்கு கொட்டி இறைத்துத் தான் பெரிய காசுக்காரன் என அங்குள்ளவர்களை நம்பவைத்து போன்ற கோமாளித்தனங்களையும் செய்வதால் வெளிநாடு என்றால் பணம் கொழிக்கும் இடம் தான் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

விடுமுறையில் சென்று இப்படி செய்பவர்கள் மீண்டும் வெளிநாடு வந்து தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகளில் அந்தக் கடனை அடைத்து முடிப்பது வேறு கதை.

இவை எல்லாம் தெரியாத புலத்துப் பெற்றோரும் பெண்களும் கூட வெளிநாடு சென்றால் மகிழ்வாக வாழலாம் என எண்ணியபடி வெளிநாட்டு மாப்பிளைக்காகக் காத்திருக்கின்றனர். மாப்பிள்ளைக்கு பத்து பதினைந்து வயது கூடினால் என்ன, படிப்பறிவு இல்லை என்றால் என்ன, முதலில் ஒரு திருமணம் செய்து மண விலக்குப் பெற்றவர் என்றால் என்ன, வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் சரி என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு சென்று திருமண வாழ்வு சரிவரவில்லை என்றால் விவாகரத்துப் பெற்று வேறு யாரையும் மணமுடித்து வாழலாம் என்றும் பலர் தீர்மானமாக இருக்கின்றனர். இங்குள்ள சட்டங்களும், அரசஉதவிகள் பற்றிய செய்திகள் மட்டுமல்ல இந்தக் கடையில் இந்தஉடை இன்ன விலையில் வாங்கலாம் என்பதுவரை அங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 

நாம்  இங்கு விலை உயர்ந்த ஆடைகள் எமது பணத்தில் வாங்குவதற்கு பலமுறை யோசனை செய்வோம். அங்குள்ளவர்கள் எந்த விதக கூச்சமோ யோசனையோ இன்றி “என் பிள்ளை விலை குறைந்த சேர்ட் எல்லாம் போடமாட்டான். ஆனபடியால் நல்லதா, பெயருள்ளதாக வாங்கி வாருங்கள்” என்று கூறுமளவு புலத்து மக்கள் தெளிவாக உள்ளனர்.

இன்றும்கூட அங்கு வாழும் எம் உறவுகளுக்குப் பணத் தேவைகள் முடிந்தபாடில்லை. பெற்ற தாயே பிள்ளை எக்கேடு கேட்டுப் போனால் என்ன. எப்படியாவது பணம் அனுப்பினால் போதும் என்னும் மனநிலையில் உள்ள கேவலத்தை எங்குபோய்க் கூறி அழுவது ???

எத்தனை ஊடகங்களில் இவைபற்றிய செய்திகள் வந்தாலும்  அவைபற்றிக் கவலை கொள்ளாது பதின்நான்கு மணி நேரம் ஒருநாளில வேலைசெய்து  இரவுநேர உணவு மட்டும் உண்டு, உடல் வலியோடு மனவலியும் சேர்ந்தாலும் நான் அனுபவிக்கவில்லை, என் தம்பி அனுபவிக்கட்டும் என்று பணம் அனுப்பும் அண்ணன்கள் பலர் கண்முன்னால் இருக்கின்றனர். அந்த அண்ணன் ஒரு மாதம் தாயகத்தில் போய் நின்றால்  எப்ப திரும்பப் போகிறாய் அண்ணா என்பதுதான் முதற் கேள்வியாக இருக்கும்.

சரி அதை விடுங்கள் வெளிநாடுகளில் இருந்து நாம் சென்றால் எம்மைச் சக மனிதராக நினைத்துப் பார்க்காது எதிரிகளை பார்ப்பதுபோன்று ஒரு எள்ளலுடனும், வன்மத்துடனும்  பலர் பார்ப்பதை அவதானித்துள்ளேன். நாம் எப்போதும் அப்படி ஒரு மனநிலையுடன் எம் உறவுகளை பார்த்தோமா? எதனால் அவர்களிடம் இப்படியான ஒரு மனநிலை வளரவேண்டும்? நாங்கள் நாட்டை விட்டு ஓடிப்போனோம் என்றா? சரி ஓடிப்போனது தவறுதான் இல்லை என்று கூறவில்லை. அது பெரிய குற்றமா என்ன?

சரி குற்றம்தான் என்று நீங்கள் கூறினால் எதற்காக நாம் அனுப்பும் பணத்தில் வாழ்க்கையை நடத்துகிறீர்கள், வீடுவாசல் கட்டுகிறீர்கள், படிக்கிறீர்கள், குடிக்கிறீர்கள், வாகனம் வாங்கி ஓடுகிறீர்கள்? உங்களிடமிருந்து எமக்கு எதுவும் வேண்டாம் என்று அப்போதே எம்மை ஒதுக்கியிருக்கலாமே? உங்களிடம் நாம் உரிமையையும் அன்பையும் மட்டும்தானே எதிர்பார்த்தோம்!

போர் முடிந்த பின் எத்தனை ஆசை ஆசையாக எம் நாடு என்று ஓடி வந்த எமக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றமும் தோல்வியும் தான். பலர் இனி அங்கு போய் இருக்கலாம் என எண்ணியவர்கள்  எல்லாம் கூட உறவுகளின், தமிழ் சமூகத்தின் நிலை கண்டு நாம் இங்கேயே இருந்துவிடுவது மேல் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளின் பின்னர் யார் தாய்நாட்டைத் தேடி ஓடப்போகின்றனர்? அதன் பின்னான உறவுகள் தொடர முடியாத நிலையை உண்டுபண்ணிவிட்டீர்களே!

எம் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்றும், எம் நாட்டில் நாம் நின்மதியாக வாழலாம் என்னும் நினைப்பில் இடி வீழ்ந்து அந்தக் காயம் ஆற முன்பே  உறவுகளின் அலட்சியமும், பாராமுகமும் புலத்து, புலம்பெயர்  மக்கள் பலரிடையே ஒரு பெரிய இடைவெளியைத் தோற்றுவித்துவிட்டது. அதை எவராலும் நிவர்த்திசெய்யவே முடியாது. சில நல்ல உறவுகளால் ஒரு நூலிழை ஒன்று ஒட்டியபடி இருக்குமே தவிர மற்றப்படி இருவேறு இனங்களாக நாம் மாறிக்கொண்டிருப்பதை இல்லை என்று யாராலும் கூற முடியாது.

நாம் எத்தனை இடர்கள் சுமந்து இங்கு வாழ்ந்தாலும்  நாம் நின்மதியாக உயிர்ப்பு பயமின்றி வாழ்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எமது பிள்ளைகள் பெரும்பாலானோர் கல்வியில் பலபடிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதும் நாம் புலம் பெயர்ந்ததனால்த்தான். சரியாக வாழ்த்தெரிந்தவர்கள் பலரும் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பதும்  புலம்பெயர்ந்ததனால்த்தான். ஆனாலும் எம் குழந்தைகள், எம் கலாசாரம் பண்பாடு மறந்து, வேற்று இனத்தவரை மணந்து, மேற்கத்தேய நாகரிகத்துள் மூழ்கி பெற்றவர்களுடன் கூட அந்நியோன்யத்துடன் வாழமுடியாத ஓர் சந்ததியாக மாறிக்கொண்டிருப்பது கண்கூடு.

நாம் எமக்கு அடுத்த தலைமுறையை மட்டும் எதோ ஒருவிதத்தில் எம்மோடு பிடிதது வைததிருக்க முடியும். ஆனால் அடுத்த தலைமுறை  தமிழ் தெரிந்த, எம் கலாச்சாரம் தெரிந்த சமூகமாக  இருக்கும் என்று அடித்துக் கூற முடியுமா? எம் பிள்ளைகளின் தலைமுறையுடன் எம் உறவுகளும் முடிந்துபோய் புலத்துத் தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்குமான ஒரு தொடர்பு முற்றிலும் இல்லாதுபோகப் போகிறது. எம்மொழியும் இல்லாது அதனுடனான தொடர்பாடாலுமற்று எம்மினம் இடம்பெயர்ந்து வந்த ஓர் கலப்பினமாகப்  புலம்பெயர் தேசங்களில் வாழப்போகிறது. அடுத்த தலைமுறை தாண்டி புலம்பெயர்ந்து வாழும் உறவுகளே தம் உறவுகளைத் தொலைத்து முகம் தெரியாது வாழப்போவதை நாம் எப்படியேனும் தடுக்க முடியாதா?

நிவேதா உதயராஜன்-பெரிய பிரித்தானியா 

நிவேதா உதயராஜன்

(Visited 76 times, 1 visits today)