எனது பாட்டியின் வீடு-கவிதை மொழிபெயர்ப்பு-ஜிஃப்ரி ஹாஸன்

எனது பாட்டியின் வீடு

கருணாகரன்

முன்பொரு காலத்தில்
எனக்கு அன்பு கிடைத்த வீடு
இப்போது தொலைவிலிருக்கிறது……
அந்தப் பெண் இறந்து
வீடே அமைதிக்குத் திரும்பிவிட்டது
புத்தகங்களுக்கிடையே
பாம்புகள் ஊர்ந்து திரிகின்றன
நான் அப்போது புத்தகங்களை
வாசிக்கக்கூடத் தெரியாதளவு
மிகவும் சிறியவளாக இருந்தேன்.
என் இரத்தம் சந்திரன் போன்று
குளிர்ச்சியாக மாறியுள்ளது.
நான் அங்கு செல்வது பற்றியே
அடிக்கடி யோசிக்கிறேன்
யன்னலின் வழியே உற்று நோக்குவதற்கு
அல்லது உறைந்த காற்றின்
ஓசையைக் கேட்பதற்கு
அல்லது
மிகக் கடுமையான இழப்புணர்வில்
எனது படுக்கையறையின்
கதவுக்குப் பின்னால்
அசௌகரியத்துடன்
ஆழ்ந்த கவலையுடன் படுத்துக்கிடக்கும்
ஒரு நாயைப் போன்ற
ஒரு கைப்பிடியளவு இருளையே
என்னால் இங்கு கொண்டு வர முடிந்தது
உங்களால் நம்ப முடியாது
அன்பே,
நான் அப்படியானதொரு வீட்டில்
வசித்தேன் என்றும்
அது எனக்கு பெருமையாக இருந்தது
மேலும் அதையே நான் நேசித்தேன்
என்றும் உங்களால்
நம்ப முடியுமா?
எனது பாதையை இழந்த நான்
இப்போது அன்பை பெறுவதற்கு
அந்நிய வீடுகளில் யாசகம் கேட்கிறேன்
குறைந்தபட்சம்
ஒரு சிறிய மாற்றத்தையேனும்!

0000000000000000000000000000000000

கவிஞர் பற்றிய குறிப்பு :

ஜிஃப்ரி ஹாஸன்கமலாதாஸ் சுரைய்யா கேரளா மாநிலத்தின் தென்மலபாரில்  ‘புன்னயூர்க் குளம்’ என்ற ஊரில் 1934 மார்ச் 31 இல் ஓர் இந்துத்துவ செல்வாக்குக்குட்பட்ட அதே நேரம் இலக்கியத்தினை வீட்டுப் பாவனையாக கொண்டிருந்த ஒரு குடும்பத்தில்  பிறந்துள்ளார். கமலாதாஸின் அப்பா வீ.எம். நாயர் “மாத்ருபூமி” என்ற மலையாள நாளிதழின் நிர்வாக இயக்குனர். தாய் நளபத் பாலா மணியம்மா, மலையாளத்தில் புகழ்பூத்த ஒரு பெண் கவிஞை. கமலதாஸினுடைய மாமாவும் ஒரு கவிஞர். இவ்வாறு இவரது குடும்ப சூழல் ஓர் இலக்கிய பின்புலத்தைக் கொணடது.

இவ்வாறான குடும்ப சூழலையுடைய கமலதாஸ் தனது கல்வி மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். பம்பாயிலும் கல்கத்தாவிலும் அவர் பயின்றார். கல்வி மொழி ஆங்கிலமாகவிருந்தது. தாய் மொழி மலையாளம். அவருடைய குடும்பம் இந்துத்துவ செல்வாக்குக்குட்பட்டிருந்ததால் அவருக்கு சிறுவயதிலே திருமணமாகியது.

அவரது இயக்கம் வெறுமனே கவிதைகளுக்குள் மட்டும் சுருங்கியதல்ல. சிறுகதைகள், நாவல் என்று பல தளங்களை நோக்கியும் விரிவடைந்திருக்கிறது. மாதவிக்குட்டி எனும் பெயரில் மலையாளத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரது ‘பாட்டியின் வீடு’ எனும் இக்கவிதை அவர் இழந்துவிட்ட அவருக்குப் பிரியமான பாட்டி வீட்டுடனான உறவையும், அதன் பிரிவையும் நினைந்துருகும் அவரது கவிதைக் குரலின் பதிவாக உள்ளது.

ஆங்கிலத்தில்: கமலாதாஸ் சுரைய்யா

தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

 

(Visited 168 times, 1 visits today)