நான் வேதம் முணுமுணுத்ததில்லை-கவிதை மொழிபெயர்ப்பு-யாழ்வாணன் விக்னராஜா

நடு குழுமம்

நான் வேதம் முணுமுணுத்ததில்லை
என்று யாவரும் அறிவர்
நான் என்னுடைய தவறுகளை என்றுமே மறைத்ததில்லை
என்றும் யாவரும் அறிவர்
ஒரு உயர்வான நீதிபதியும்
ஒரு உயர்வான கருணையும்
இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
ஆயினும்
நான் என்றும் போல எனக்கு உண்மையாக இருப்பதனால்
பூரண நம்பிக்கையோடு இருக்கிறேன்;.

000000

நீ எதைவிரும்புகிறாய்?
மதுக்களஞ்சியத்தினுள் அமர்ந்திருந்து
உன்னையும் உன் மனசாட்சியையும் ஆராயவா?
அல்லது
உன் ஆன்மாவின் பங்களிப்பின்றி ஓர்
தேவாலயத்திலோ மசூதியிலோ முழந்தாளிடவா?
எமக்கென்றோர் எசமானன் இருந்திருந்தால்
எம்மை அவர் என்ன செய்வார் என்றோ
அப்படி ஒருவர் இருக்கிறாரா இல்லையா
என்றோ நான் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை

000000

உன்னிடமும் பலவீனங்கள் உண்டென்பதைத் தெரிந்து கொள்
அதி குடிகாரர்களைக் காருண்யத்துடன் நோக்கு
நீ
சாந்தியுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டுமெனில்
தம் ஊழ்வினைப் பயனைச் சுமக்கும் அங்கவீனர்களையும் ஏழைகளையும் பார்
அவர்களை விட
எவ்வளவு அதிர்ஸ்டசாலி நீ என்பதைத் தெரிந்து கொள்!

000000

உன் அறிவும் நீதி நெறியும்
மற்றவருக்குப் பிரச்சினை ஆகாதபடி வாழ்ந்து கொள்
நிதானத்துடன் உன்னை நீ அறிந்துகொள்
ஆவேசம் உனை ஆட்கொள்ள விடாதே
உண்மையில் நீ சமாதானத்துடன் வாழ விரும்பினால்
உன் விதியையெண்ணிப் புன்னகைசெய்

000000

இன்று மகிழ்வாய் இரு,
நாளை எதைக் கொண்டு வருமென்று நீயறியாய்.
நிலவொளியில் அமர்ந்திருந்து,
திராட்சை ரசம் அருந்தியபடி கூறு
நாளை உனக்கு அந்த நிலவும் வீணாய்த் தெரியும் என்று

0000000

எப்போதாவதொரு முறை
குர் ஆன் வாசிப்பதில் தவறில்லை
ஆனால்
தினமும் அதை அக்களிப்புடன் யாரால் செய்ய முடியும்?
நாம் அருந்தும் ஒவ்வொரு துளியையும் சுவைப்பதற்காய்
ஓவ்வொரு கிண்ணத்தின் வாய் விளிம்பிலும்
ஞானத்தின் ரகசிய வரி எழுதப்பட்டுள்ளது

00000000

எம் பெரும் பொக்கிசம் ?
எமது மாளிகை?
திராட்சை ரசம்! மதுக்களஞ்சியம்.
எமது உண்மை நண்பர்கள்?
தாகமும் மது போதையும்.
எமதுள்ளமும், எமதான்மாவும்,
எம் கிண்ணங்களும் எம் கந்தல் துணிகளும்
நீர், நெருப்பு, சேறு, தூசு என்பவற்றிற்கு அஞ்சத் தேவையில்லை
என்று அறிந்ததனால்
நாம் கவலை கொள்வதில்லை.

0000000000000000

நண்பர்கள் சொற்பமாய்
இருப்பதையிட்டு மகிழ்ச்சி கொள்
அவர்களுக்கு அளவிலா
அனுதாபம் காட்ட வேண்டுமென உணராதே
ஒருவரை நண்பராக்க நீ நினைக்கு முன்
கைலாகு நீ கொடுக்கு முன்
ஒரு நாள் உன்னை
அடிக்கக் கூடிய கையுடன்
நீ கைலாகு கொடுக்கவில்லை
என்பதை உன்னிடம் நீ கேட்டுக் கொள்

0000000

அக்கறையிலா ஆரணங்கொருத்தி மேல்
காதல் வசப்பட்டுத் துன்புறும்
ஆடவனொருவனின் சாம்பலால்
இம் மட் குவளை செய்யப்பட்டிருக்கலாம்
குவளையின் வளைந்த விளிம்பு?
அது தன் காதலியின்
கழுத்தினை அரவணைத்திருக்கும் அவன் கரம்

0000000

காதலின் போதையினை அறியாத இதயமும்
காதலிக்கத் தெரியாயதோர் இதயமும் பரிதாபமானது.
கண்ணைக் குருடாக்கும் கதிரொளியையும்
மாலை மதியின் மென்னொளியையும்
காதல் வசப்படாவிடில் உன்னால் ரசித்திடத்தான் முடியுமா?

000000000000000000000000000000000

கவிஞர் பற்றிய குறிப்பு:

ஜிஃப்ரி ஹாஸன்உமர் கயாம் கி.பி 1048ம் ஆண்டு வைகாசி மாதம் 18 நாள் ஈரானில் பிறந்தார். கியாத் அல் தின் அபுல் பாத் உமர் இபின் இப்ராஹிம் அல் நிசாபுரி அல் கயாமி என்பதே உமர் கயாயமின் முழுப் பெயராகும். கூடாரம் அமைப்போர் குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், தனது பிள்ளைப் பராயத்தின் ஒரு பகுதியை வட ஆப்கனிஸ்தானின் பால்க் நகரில், செய்க் முகமது மன்சூரியிடம் கல்வி பயில்வதில் செலவிட்டார். பின்பு கொராசன் பிராந்தியத்தின் பேராசானாகக் கருதப்பட்ட இமாம் மொபாபக் நிசாபுரியிடம் கல்வி பயின்றார். வடிவியற் கணிதம், குறிப்பாக விகிதாசாரக் கோட்பாடு ஆகியவற்றில் உமர் கயாமின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருக்கின்றன.

இவர் பாரசீகத்தின் பல்துறை வித்தகரும், கணிதவியலாளரும், வானியலாளரும், மருத்துவரும்,தத்துவஞானியும், கவிஞருமாக இருந்தார். இவர், இசையியல், இயக்கவியல், புவியியல் ஆகியவற்றுக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மனுக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல் அதிகம் உள்ளுணர்வுகளின் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு சமாந்தரங்களின் வெளிப்படையை அணுகும் முறை பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வுக் கட்டுரை உமர் கயாமின் ஆய்வுக் கட்டுரை எனக் கருதப்படலாம். மனுக் கோட்பாட்டின் அடிப்படை பற்றியதான கூற்றுகளை நிரூபிப்பதற்கான கிரேக்க மற்றும் பாரசீகக் கணிதவியலாளர்களின் முன்னைய முயற்சிகள்  தவறெனக் கயாம் நிரூபித்ததுடன்,  இயக்கவியலில் அசைவின் பாவனையையும் நிராகரித்தார்.

உமர் கயாமே பொது ஈருறுப்புத் தேற்றத்தின் முக்கியத்துவத்தினை அவதானித்த கணிதவியலாளர் ஆவார். கயாம், பொது ஈருறுப்புத் தேற்றத்தினைக் கொண்டிருந்தார் என்பதனை வலுப்படுத்தும் வாதமானது, கணித மூலங்களைப் பிரித்தெடுக்கக்கூடிய அவரது திறனை அடிப்படையாhகக் கொண்டிருந்தது. பாரசீக நாட்காட்டியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய குழுவிலும் கயாம் இடம்பெற்றிருந்தார். 1079ம் ஆண்டு பங்குனி மாதம் 15ம் திகதி, இச் சீர்திருத்தப்பட்ட நாட்காட்டியை பாரசீகத்தின் உத்தியோகபூர்வ நாட்காட்டியாக சுல்தான் மலிக் ஷா ஏற்றுக்கொண்டார்.

கணிதவியலில் கயாமுக்கிருந்த புகழைக் கவியாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு மறைத்து விட்டது. இவர் ஏறத்தாள 1000 நாற்சீர் விருத்தங்களை யாத்துள்ளார். “உமர் கயாமின் ருபாயத்”; என்ற பெயரில் 1809-1883 வரையான காலப் பகுதியில் வாழ்ந்த எட்வேர்ட் பிற்ஸ்ஜெரால்ட் என்பவரால் ஆங்கிலத்தில் மொழியெர்க்கப்பட்ட இவரது கவிதை; தொகுப்பு உமர் கயாமை மேற்குலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. இறுக்கமான கட்டுப்பாடுடைய சமய அமைப்பையும் மரணத்திற்குப் பின்னான வாழ்வின் இலக்கியச் சார்பான கருத்தியலையும் நிராகரிக்கும் காயமினது கவிதைத் தொகுப்பு அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இபின் சினாவின் தத்துவத்தைப் பல தசாப்தங்களாகக் கயாம் கற்பித்து வந்தார், குறிப்பாக அவர் பிறந்த ஊரான நிசாபூரில் தனது மரண பரியந்தம் அதனைக் கற்பித்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதியின் சமூக நிலை, அறிவுசார் நிலை ஆகியவை சம்பந்தமான இவரது வேலைகள் மற்றும் இவர் யாத்த ருபாயத் ஆகிய இரண்டு தனித்துவமான ஆதாரங்கள் வாயிலாக, தத்துவஞானி கயாமை நாம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

பேஹாக்கி, நெசாமி அரூசி, ஸாமக்ஷாரி போன்ற தத்துவஞானிகள், அறிஞர்கள் மற்றும் அத்தார் நிசாபுரி, நெஜ்மெடின் ராசி போன்ற சூபிக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் மதிப்பீடுகள், இவர் வாழ்ந்த  காலப்பகுதியின் சமூகநிலை அறிவுசார் நிலை சம்பந்தமான இவரது வேலைகளை எடுத்தியம்புகின்றன.

கணிதவியற் தத்துவத்திற்குக் கயாம், ஒரு கணிதவியலாளராக அடிப்படைப் பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக இவரது பங்களிப்பு, பாரசீகத் தத்துவஞானிகளும் விஞ்ஞானிகளுமான, இபின்சினா, பிரூணி, மற்றும் ரூசி போன்றவர்கள் சம்பந்தப் பட்டிருக்கும் பாரசீகக் கணிதவியல், பாரசீகத் தத்துவவியல் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உமர் கயாம், இன்று ஈரான் என்று வழங்கப்படும் பாரசீகத்தின் நிசாபூர் நகரில், 1131ம் ஆண்டு மார்கழி மாதம் 4ம் நாள் இறைபதமடைந்தார்.

தமிழில் : யாழ்வாணன் விக்னராஜா-கனடா

(Visited 70 times, 1 visits today)